இந்த புத்தகத்தை நான் சிறுகுறிப்புகளாக கடந்த சில ஆண்டுகளாக எழுதி வந்தேன். ஆனால் ஒரு முழு புத்தகமாக தொகுக்கும் போது ஒரு பயம் எட்டிப்பார்த்தது. அந்த பயம் ஒரு பெரும் அச்சமாக உருவெடுத்தது.
நான் இந்நூலை எழுத ஆரம்பித்த போது இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் கண்டிக்கப்படுவதும் மிரட்டப்படுவதுமே நடந்தது, அது பின்னர் விசாரணை, சிறைவாசம், படுகொலைகள் என பலவிதமான தண்டனைகளின் வடிவெடுத்தது, இப்போது எதிர்க்கிறவர்கள் எல்லா இடங்களில் இருந்தும் முழுமையாக காணாமல் அடிக்கப்படுகிறார்கள். இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் இன்று தேசத்தை எதிர்க்கிறவர்களாக, ஒரு பொது துரோகியாக கட்டமைக்கப்படுகிறார்கள்; மக்கள் இந்த கட்டமைத்தலை எந்தளவுக்கு உள்வாங்கி உள்ளார்கள் என்றால் அதைத் தமது இயல்பான சுபாவமாக மாற்றிக்கொண்டுள்ளார்கள். நான் இப்போது வாழ்ந்து வரும் மாநிலத்தில் இந்த அரசை விமர்சிக்கிறவர்களை முன்பை விட மிக மிகக் குறைவாகவே காண்கிறேன். முன்பு வெளிப்படையாக சாடியவர்கள் இன்று அமைதி காக்கிறார்கள். அவர்கள் தம்மை யாரோ கண்காணிப்பதாக உள்ளுக்குள் பதறுகிறார்கள். அரசின் கண்காணிப்பை அவர்கள் தமக்குள் உணர ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தம்மையே கண்காணிக்கிறார்கள். அவர்கள் தெரியாமலே சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டால் உடனே தம்மைச் சுற்றி ஒரு கவலையுடன் பார்க்கிறார்கள். பாதியிலேயே பேச்சை முறிக்கிறார்கள். நானும் மெல்ல மெல்ல இந்த மௌனத்தில் ஆழ்ந்துவிட்டேன்.
இது ஒரு தனிமனித மௌனம் அல்ல, இது ஒரு கூட்டு மௌனம். இந்த சமூகம் மெல்ல மெல்ல பாஜக முகமூடிகளுக்கு ஏற்ப தன் முகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. அது மெல்ல மெல்ல பாஜகவின் குரலை மிமிக்றி செய்வதே தனக்குப் பாதுகாப்பு எனும் நினைக்கத் தொடங்கியுள்ளது. மோடியை எதிர்ப்பதை நம்முடன் இருப்பவர்களே இன்று தந்தையை அடிப்பதைப் போல, தாயைப் புணர்வதைப் போல ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குக் காரணம் மோடியை விமர்சிப்பவர்கள் தனது பிளவுபட்ட மனத்தின் அடக்கி வைக்கப்பட்ட குரலே என இந்த சமூகம் புரிந்து கொள்வதில்லை என்பதே. வரலாற்றில் நாம் இவ்வளவு நோயுற்று முன்பு இருந்ததில்லை. இந்த சமூகத்திடம் போய் மோடியை விமர்சித்து உரையாடுவது அதை அம்பலப்படுத்துவதற்கு சமானமானது. அது இந்த சமூகத்தை கடுமையாக சீண்டும். அப்போது இச்சமூகம் வன்மத்துடன் எதிர்வினையாற்றும். சட்டத்தின், போலீசின் கரங்களில் இருந்து தப்பிக்கிறவர்களை இச்சமூகம் இனி மென்னியை நெரிக்கும் எனத் தோன்றுகிறது. இங்கிருந்து கொண்டு இந்நூலை வெளியிடுவது ஆபத்தானது எனத் தெரிந்தே தான் நான் செய்கிறேன்.
