Skip to main content

சர்வாதிகாரமும் வீட்டுரிமையாளர்களும்




சர்வாதிகாரமும் வீட்டுரிமையாளர்களும்
வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கும் குடியிருப்பவர்களுக்கும் இடையிலான இவ்வாரத்தைய நீயா நானா விவாதத்தைப் பார்க்கையில் ஒரு விசயம் புலப்பட்டது - இன்னும் வீட்டு உரிமையாளர்களுக்கு தம் வீட்டில் குடிவருவோர் தம் குடும்பமோ தமக்குக் கிழ் வாழும் மக்களோ அல்ல எனும் தெளிவு வரவில்லை, இயல்பாகவே ஒரு நிலக்கிழார் மனோபாவம் வந்து விடுகிறது. அதனாலே குடியிருப்போரின் நடத்தை, உணவுப்பழக்கம், அவர்கள் வீட்டுக்குள் பேசக் கூடிய ஒலியளவு என ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்துகிறார்கள். என் நண்பர் ஒருவர் சொன்னர். அவர் கீழ்த்தளத்தில் வசிக்கிறார். உரிமையாளர் மேற்தளத்தில். அவரது படுக்கையறைக்கு மேலே தான் உரிமையாளரின் படுக்கையறையும். அதனால் இவர் இங்கே இரவின் அமைதியில் மெதுவாகப் பேசினால் கூட மேலே இருக்கும் அவருக்குக் கேட்டு விடும். கொஞ்சம் சத்தமாக கணவனும் மனைவியும் பேசினால் அது நள்ளிரவென்றாலும் உடனே உரிமையாளரிடம் இருந்து போன் வந்து விடும். அதனால் படுக்கையறையில் கணவனும் மனைவியும் குசுகுசுவென்றே எப்போதும் பேசுவார்களாம். “இதெல்லாம் கூட பிரச்சினை இல்லையா… நைட்டு உறவு வைத்துக் கொண்ட பின் அந்த சத்தம் அவருக்குக் கேட்டு விடுமோ என இருவரும் ஒரு கவலையுடனே இருப்போம்.” இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை.
விரும்பியோ விரும்பாமலோ வீட்டுரிமையாளர்கள் ஒருவித தந்தை அல்லது தாயின், ஒழுக்கவாதியின், சர்வாதிகாரியின் மனநிலையுடன் செயல்படத் தொடங்கி விடுகிறார்கள். ஏனென்றால் அவர்களால் வீடு-குடும்பம்-வீட்டின் உரிமையாளனான ஆண் எனும் அமைப்பை மீறி யோசிக்க இயலவில்லை. ஒரு குடும்பம் என்றால் நான்கு சுவர்களுக்குள் ஒரு ஒழுங்குடன், சட்டதிட்டத்துக்கு ஏற்ப வாழ்பவர்கள். அதற்குள் சதா ஒரு கண்காணிப்பு இருக்கும். ஒருவர் தனது உபரி வீட்டை வாடகைக்கு விடும் போது அதையும் தன் குடும்பமே என உபமனதில் நினைக்கத் தொடங்குகிறார்கள். உரிமையாளர் ஆணோ பெண்ணோ அவர்களுக்கு தன் வீட்டில் இருக்கும் தனது பொறுப்பில் இல்லாத மற்றொரு குடும்பத்தின் மீது அதிகாரம் செலுத்தி சுவை பார்க்கும் விருப்பம் தம்மையறியாதே ஏற்படுகிறது. இதில் ஆண்களை விட பெண் உரிமையாளர்கள் இன்னும் மோசம். அவர்கள் ஒரு மாமியாரின் பாத்திரத்தை அந்த ‘வாடகை குடும்பத்தின்’ பால் எடுத்துக் கொண்டு சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் கண்டிப்புடன் கண்காணித்து கட்டுப்படுத்துகிறார்கள். சிலர் வாடகை செலுத்தும் குடும்பத்தின் பெண்களே பொதுவிடத்தை பெருக்கி சுத்தம் பண்ண வேண்டும், விளக்கை போட வேண்டும், கோலம் இடவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் (நீயாநானாவிலே சொன்னார்கள்). என்னுடைய சொந்த ஊரில் ஒரு வீட்டு உரிமையாளர் அம்மா நாள் முழுக்க தன் வாடகை வீட்டுக்காரர்களையே வேவு பார்த்துக் கொண்டிருப்பார். குறிப்பாக வாடகை வீட்டு ‘குடும்பத் தலைவன்’ வெளியே போன பின்னர் அங்கு யாராவது ஆண்கள் வருகிறார்களா என அந்த அம்மா கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருப்பாராம். வந்தால் - அவர்கள் பொது நண்பர்களாகவோ எதாவது வேலையாகவோ வந்திருப்பார்கள் - உடனே அந்த பெண்ணின் கணவனை அழைத்து போட்டுக் கொடுத்து விடுவார். அத்துடன் “இதோ பாருப்பா இது என் வீடு. இங்கே ஒழுக்கமா எந்த தப்பும் பண்ணாம வாழணும். இல்ல ஊர்ல என் மானம் போயிடும்” என வேறு சொல்லுவாராம். சென்னையிலும் இந்த வேலையை பக்கத்து வீட்டுப் பெண்களே செய்வதுண்டு என ஊடகங்களில் பணி செய்யும், தனியாக வசிக்கும் பெண்கள் சிலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த பெண்கள் சொந்த வீட்டுக்காரர்களாக இருப்பார்கள். இவர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு வாடகை வீட்டுப் பெண்கள் பாலியல் ஒழுக்கத்தைப் பற்றின பல புரளிகளைப் பரப்புவது, விசாரணை செய்வது என கண்காணிப்பு அரசியல் பண்ணுவார்கள்.
நீயா நானாவில் வாடகைக்காரர்கள் நாய் வளர்க்கக் கூடாது, அசைவம் சமைக்கக் கூடாது, சத்தமாக பேசுவோ புழங்கவோ கூடாது, ஆணி அடிக்கக் கூடாது, சுவரில் குழந்தைகள் கிறுக்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதிப்பதை, மாற்றுமதத்தவருக்கு வீடு மறுப்பதை, கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பதை குறிப்பிட்டார்கள். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள ஊர்களில் கைக்குழந்தை இருந்தால் வீடு கொடுக்க மாட்டார்களாம். இன்னும் சிலர் அப்பா, அம்மா, கொழுந்தனார், நண்பர்கள் வந்தால் எவ்வளவு நாட்கள் அதிகபட்சமாக தங்கலாம் என்பதற்கு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் கூட பரவாயில்லை - வாடகைக்காரர்கள் ஓட்டலில் இருந்து அசைவம் வாங்கி வந்து சாப்பிட்டாலும் அது வீட்டு உரிமையாளரை தொந்தரவு பண்ணுகிறது. ஏனென்றால் தான் சைவம் பின்பற்றும் மாதங்களில் தன் வாடகைக்காரர்களும் சைவமே சாப்பிட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஒரு சில வீட்டுரிமையாளர்களுக்கு தம் சொந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்களே தம் வீட்டில் வாடகைக்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் உள்ளது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இங்கு பெங்களூரில் வீட்டு உரிமையாளர்கள் சற்று முற்போக்காக இருக்கிறார்கள். வாடகையாளர்களை சற்று சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறார்கள். அதை மோசமாக சுரண்டுகிற வாடகைக்காரர்களும் உண்டு.
குறிப்பாக, இங்கே உள்ள மலையாளி இளைஞர்கள் வார இறுதிகளில் அடிக்கும் கொட்டம் மிக மோசமானது. சனிக்கிழமை இரவு ஆனால் ஆண்களும் பெண்களுமாக வீட்டுக்குள் பார்ட்டி பண்ணுவார்கள். அதிகமாக சத்தத்தில் இசை முழங்க வீட்டிலிருந்து ஆட ஆரம்பித்து அப்படியே தெருவுக்கு வருவார்கள். அதிக போதையில் கத்தி கூப்பாடு போடுவார்கள். ஊரே கேட்க நள்ளிரவில் பாட்டுப் பாடுவார்கள். நான் தூங்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறேன். குறிப்பாக ஒரு வீட்டில் ஐந்து இளைஞர்கள் வசிக்கிறார்கள். சனிக்கிழமை ஜுரம் ஏற்பட்டதும் அந்த வீட்டில் குறைந்தது ஆணும் பெண்ணுமாக 15 பேராவது திரண்டு பெரும் ஓசை எழுப்பி அலம்பல் பண்ணுவார்கள். தெருவில் உள்ள சொந்த வீட்டுக்காரர்கள் ஒன்று கூடி அடிக்கடி இவர்களை காவல் நிலையத்திற்கு புகார் செய்து இரவோட இரவாக கைது பண்ண வைப்பார்கள். உடனே அவர்களுடைய வீட்டு உரிமையாளர் நேரே காவல் நிலையம் போய் தன் வாடகையாளர்களுக்கு தான் ஜாலியாக இருக்க அனுமதி கொடுத்திருப்பதாக தெரிவித்து அவர்களை அழைத்து வந்து விடுவார். ஏனென்றால் அவரும் மலையாளி. இந்த இளைஞர்களுக்கு மதுப்பொத்தல்களை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு நட்பானவர். இப்படி பலவிதமான உரிமையாளர்கள் இங்கே இருக்கிறார்கள். அதை மோசமாக சுரண்டி தம் பெயரை கேரளத்து இளைஞர்கள் கெடுத்தும் வருகிறார்கள். சென்னையில் என்றால் ஒரே நாளில் இவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். ஆனால் இங்கே நேர்மாறான சூழல்.
ஒழுக்கமான கண்ணியமான வாடகைக்காரர்கள் உள்ள இடத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமையாளர்களும், ஆர்ப்பாட்டமும் சீர்கேடும் மிக்க வாடகைக்காரர்களைக் கொண்ட இடத்தில் உரிமையாளர்கள் ரொம்ப கனிவாகவும் இருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" போல அவர்கள் இங்கும் இவர்கள் அங்கும் இருந்தால் நியாயமாக இருக்கும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...