பெற்றோருடைய அழுத்தத்தினாலோ, இதைவிட வேறொருவர் கிடைப்பார் என்றோ, சும்மாவே பிடிக்காமல் போனதாலோ காதலை முடித்துக் கொள்ளலாம் என ஒருவர் முடிவெடுக்கும் போது மற்றவர் அதை நாகரிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னதான் சிரமம் என்றாலும், கொலைவெறி, குரோதம் வந்தாலும் அதை அடக்கிக் கொள்வதே கண்ணியம். இதையே நம் சமூகம் நீண்ட காலமாக சொல்கிறது. ஆனால் அதே நேரம் நம் சமூகம் மற்றொன்றையும் சொல்கிறது: இந்த உரிமை பெண்ணுக்கு மட்டுமே உண்டு!
தன்னுடைய தாய், தந்தையர் வலியுறுத்திய காரணத்தால் அல்லது இதை விட அழகான பணக்கார பெண்ணை கட்டி வைக்கிறேன் என்று ஆசை காட்டியதாலோ ஒரு ஆண் தன் காதலியை கழற்றி விடுகிறான் என்றால் இந்த சமூகம் அவனைத் தூற்றும். அந்த பெண் அவனைப் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு பலாத்கார வழக்குத் தொடுத்தால் அவன் சிறைக்குப் போக வேண்டும். தந்தியில் 'பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் கைது' என படத்தோடு செய்தி போடுவார்கள்.
இதில் ஏதாவது லாஜிக் உள்ளதா?
உறவு முறியும் பொது ஏற்படும் காயம், வருத்தம், ஏமாற்றம், மன அழுத்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று தானே? பாலுறவு இருவருக்கும் இருந்திருந்தால் கூட அதில் கிடைக்கும் இன்பமும் இருவருக்கும் ஒன்று தானே?
சரி, பெண்ணுக்குத் தான் அதிக இழப்பு என கருதினால், காதலை முறிக்க அவள் முடிவெடுக்கவே இயலாதே? ஒரு உறவில் ஒரு பெண் தன் புனிதத்தை இழக்கிறாள், மற்றொருத்தி இழக்கவில்லையா?
இதில் வேறு சில அபத்தங்களும் உள்ளன: ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் ஆண் அவளைத் தாலி கட்டிய பின் மட்டுமே கைவிடக் கூடாது. தாலி கட்டிய அடுத்த நாளே அவன் விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் அவனை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். தலையிடவும் மாட்டாரக்ள். ஆனால் சமூகத்தின் பிரச்சினை ஒரு பெண் கைவிடப்படுவது அல்ல.
இருவர் உடலுறவு கொண்டால் அவர்களில் உறவை முறிகிற உரிமை பெண்ணுக்கு உண்டு, ஆனால் ஆணுக்கு இல்லை. இது தானே சமூக நியதி, இதுதானே சட்டம்? ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தினமும் உறவு கொள்கிறார்களே? நூறு நூறு முறைகள். எனில் அவர்கள் அப்போது விவாகரத்து செய்யும் உரிமையையும் தானே பல மடங்கு அதிகமாக இழக்கிறாரக்ள்?
சரி, இந்த இடத்திலும் பெண்ணுக்கு நாம் கழற்றி விடும் முழு சலுகையைக் கொடுக்கலாம் என்றால் ஆணுக்கு தான் உறவு கொண்ட பெண்ணை அவளுடைய விருப்பமில்லாமல் விட்டுவிட உரிமை இல்லைதானே? அது தான் இல்லை. நம் சட்டப்படி பிடிக்கவில்லை எனும் காரணத்துக்காகவும் விவாகரத்து கோரலாம். மனரீதியான துன்புறுத்தல் என்று காரணத்தைக் காட்டலாம். சிலர் வழக்கை இன்னும் வலுவாக்க இல்லாத பொய்களை இட்டுக்கட்டி சேர்ப்பார்கள். ஆனால் என்னவானாலும் சரி நீதிமன்றமோ போலீசோ பெண்ணின் விருப்பத்தை மீறி பிரிய எத்தனிக்கும் அந்த ஆண் மீது பலாத்கார வழக்கைப் போட முடியாது, பிரிவை மறுக்கவும் முடியாது.
அதே நேரம், இப்படி ஆளாளுக்கு சந்தைக்கு காய்கறி வாங்க வருவதைப் போல விவாகரத்துக்காக நீதிமன்றத்துக்கு வரக் கூடாது என்பதற்காக வருடக்கணக்கில் வழக்கை நீட்டிப்பார்கள் என்று என்னிடம் விளக்கினார் வழக்கறிஞர் நண்பர் ஒருவர். ஆனால் அதே நேரம் வலுவான காரணம் இன்றி திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் மறுக்காது.
கேரளாவின் திருச்சபை ஒன்றில் மற்றொரு நடைமுறை உள்ளது: விவாகரத்து பெற்று விட்ட ஜோடிகளுக்கு திருச்சபை மாதக்கணக்கில் விசாரணை நடத்தி, காரணங்களை ஆவணப்படுத்தி திருச்சபையின் பொறுப்பில் உள்ள குழு ஒன்றை அவற்றை ஏற்க வேண்டும், அதன் பின்னரே அடுத்த திருமணத்துக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று ஒரு நண்பர் அண்மையில் கூறினார். அதாவது நீதியைப் போன்றே மதத்தின் நோக்கமும் எப்படியாவது இந்த ஜோடிகளை அலைய விட்டு முடிவை மாற்ற வைக்கலாம் என்பதே. ஆனால் முடிவெடுத்து பிரிந்து வாழ்வோரை சில வருடங்கள் மேலும் வெறுக்கும்படி வழக்கு நடத்தவும் காத்திருக்கவும் வைத்தால் அவர்கள் மனம் மாறி விடுவார்களா? எங்குமே அப்படி நடப்பதில்லை. ஆனாலும் சில நேரங்களில் இவர்களை சமாளிப்பதற்கு என் கணவனே பரவாயில்லை என்று சில மனைவியர் விவாகரத்தில் இருந்து பின்வாங்குவதுண்டு என்றும் அதே வழக்கறிஞர் நண்பர் கூறினார். ஆனால் பெரும்பாலும் இந்த தாமதப்படுத்தும் 'தண்டனைகளால்' பலனில்லை.
திருமண பந்தத்தை சுலபத்தில் உடைய விடக் கூடாது எனும் அக்கறை நீதிக்கும் மதத்துக்கும் உள்ளது. ஆனால் கற்பைக் காப்பாற்றுவதற்கு இணையான தீவிரம் இவ்விசயத்தில் இல்லை. அதனாலே விவாகரத்தை ஒரு பதற்றத்துடன் நம் சமூகம் அணுகுகிறது. கையைப் பிசைந்து பார்த்துக் கொண்டு நிற்கிறது. அதே நேரம் தடுப்பதில்லை. உடனடியாக ஒப்புதல் கொடுக்காமல் அதே நேரம் மறுக்கவும் தெரியாமல் தத்தளிக்கிறது.
ஒரே செயல், அதை திருமணத்துக்கு முன் செய்தால் ஒரு சட்டம், பின் செய்தால் இன்னொரு சட்டம். ஒரு உறவை முறிக்கும் உரிமையை, பாதுகாப்பை தாலி தான் அளிக்கிறது.
திருமணத்துக்குப் பிறகு பரஸ்பரம் என்னவும் செய்யும், எந்த முடிவையும் எடுக்கும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டு என இந்த சமூகம் நம்புகிறது. தாலி - அது இறங்கிய பின்னரும் - ஒரு பெண்ணுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்து விடும் என சமூகம் நம்புகிறது. இது போன்ற சமயங்களில், சம்மந்தப்பட்டவர்கள் எந்தளவுக்கு காயப்படுவார்கள், உடைந்து போவார்கள் என சமூகத்துக்கு கவலையில்லை. "கல்யாணம் பண்ணி ஏமாற்றி விட்டான்" என்று செய்தி போட மாட்டார்கள்.
எனக்கு நமது சமூகத்துக்கு கற்பு குறித்துள்ள மூடநம்பிக்கையை சட்டமும், போலீஸும் நம் மீது திணிக்கிறது, கற்பு எனும் மூடத்தனத்தை ஏற்காத இன்றைய நவீன பெண்கள் காதல் முறிவை காதலன் ஏற்காத போது இந்த சட்டம் தரும் பாரபட்சமான பாதுகாப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது.
அடிப்படையில் நீதி நியாயத்தை விட, குடும்ப உறவுகள் நீடிப்பதை விட நம் சமூகம் பெண்ணின் உடலைக் குறித்து மட்டுமே கவலை கொள்கிறது. ஒரு கருப்பையில் ஒருவருடைய வாரிசே வளர வேண்டும் என ஆசைப்படும் சமூகம் அதைக் குறித்த ஐயத்துடன், பயத்துடன் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு கருப்பை 'களங்கமானால்' அதை சரி செய்ய முடியாது. தாலி ஏறி விட்டால் அந்த கருப்பை ஆணின் கட்டுப்பாட்டுக்குள் வரும். குறைந்தது அது சமூகத்தின் கவலை இல்லை. ஆனால் திருமணத்துக்கு முன்? நேரடியாக இன்றைய பெண்ணிடம் திருமணத்துக்கு முன்பான புனிதத்தைக் கோரினால் அநாகரிகமாக இருக்கும் என்பதால் அவளுக்கே முடிவெடுக்கும் உரிமையைக் கொடுத்து கருப்பையின் பவித்திரத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.
இது ஒட்டுமொத்தமாக அபத்தங்களின் பெரும் மூட்டை என்பதை சிலர் அறிவோம். வரும் நாட்களில் ஒருநாள் சமூகமும் இதை ஏற்கப் போகிறது. இன்று நகரங்களில் எத்தனையோ படிக்கும் இளைஞர்கள் வீடெடுத்து சேர்ந்து வாழ்கிறார்கள். முன்பைப் போல தாலி இருந்தால் தான் வீடு கொடுப்போம் என வீட்டுரிமையாளர்கள் வற்புறுத்துவதில்லை. இது வரப்போகும் மாற்றத்தை முன்னறிவிக்கிறது.
சமூகம் 'பக்குவப்பட்ட' பிறகு அது கருப்பை புனிதத்தை பெரிதாக எதிர்பார்க்காது. அப்போது 'காதலித்து ஏமாற்றி பலாத்காரம்' செய்ததாக ஆண்களை சிறையில் தள்ளாது. யார் உறவை முறித்தாலும் அது ஏமாற்றுவது அல்ல எனும் இடத்துக்கு சமூகம் வரும்.
இன்னொரு விசயம்: கருப்பை புனிதம் மீதான ஆவேசமே ஆண்களின் காதல் என்று எனக்குத் தோன்றுகிறது. வேறு எதையும் தாங்கிக் கொண்டு உறவை சகிப்பவர்கள் இதை மட்டும் ஏற்க மாட்டார்கள் எனும் போது பாலியல் உரிமை, கருப்பை உரிமை தான் காதலின் அடிப்படை என்று சொல்ல வேண்டும். ஆக, ஆண்களுக்கு ஒரு உறவை முறிக்க உரிமையளிக்காத ஒரு மூடநம்பிக்கை தான் அவர்களுடைய காதலையும் செலுத்துகிறது. அது தான் நாம் உரிமையானவள் என நினைக்கிற ஒருத்தி நம்மை வேண்டாம் என்று சொல்லும் போது கொலைவெறி கொள்ள வைக்கிறது. அது உன் வாரிசு உன்னுடையது அல்ல என்று தன்னிடம் சொல்லப்படுவதாக அவனை நினைக்க வைக்கிறது. (பெண்களுக்கு அது அந்தஸ்தை, காமத்தை, பொருளாதாரத்தை உத்தரவாதம் பண்ணும் ஒரு உடல் மீதான உடமை விருப்பமாகிறது; அது மறுக்கப்படும் போது அவர்களுக்கும் குரோதம் வருகிறது.)
சமூகம் 'பக்குவப்படும்' போது, காதலுக்கான குற்றங்கள் குறையும் போது, நாம் காதல் மீதான பரவசத்தை, மிகை நம்பிக்கைகளையும் இழந்து விடுவோம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் காதலின் உன்னதம் ரொம்ப அபத்தமான ஒன்றின் மீதே நின்றிருக்கிறது.
