வீட்டு உரிமையாளர்கள்-வாடகையாளர்கள் நீயா நானா விவாதத்தைப் பார்த்த போது ஒரு முக்கியமான அவா எனக்கு ஏற்பட்டது.
இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அரசு - இந்த வாடகை வீடுகளை முறைப்படுத்தி தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அதாவது நகரத்தின் மையத்தில் உள்ள வீடென்றால் 30,000 வெளியே உள்ள வீடென்றால் 8000 எனும் பாரித்த வேறுபாடு இருக்கக் கூடாது. ரெண்டாயிரத்துக்கு மேல் வீடுகளின் வாடகையை இடத்தின் பொருட்டு உயர்த்த அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அடையாறில் வேலை பார்த்தாலும் அயப்பாக்கத்தில் வேலை பார்த்தாலும் உங்களுடைய சம்பத்தில் 20,000 வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் மாறப் போவதில்லை. அரசு ஒரு இணையதளம் ஆரம்பித்து அதில் உரிமையாளர்களும் வாடகையாளர்களும் தம்மைப் பதிவு பண்ணி வரிசை முறையில் வீட்டை மென்பொருளே ஒதுக்கீடு செய்ய வேண்டும். புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். வீட்டை அடிப்படையான விதிமுறைகள் ஒழிய வேறு காரணங்களுக்காக மறுக்கும் உரிமையை பதிவு பண்ணியுள்ள உரிமையாளர்களுக்கு மறுக்க வேண்டும். அதே போல வாடகையையும் முன்பணத்தையும் இணையதளம் மூலம் செலுத்தி அதை அவ்வழியே உரிமையாளரும் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அட்வான்ஸை சரியான நேரத்தில் திரும்ப வாங்குவதும் வாடகையாளர்களுக்கு சுலபம் ஆகும். இப்போது நடப்பதைப் போல அட்னாவ்ஸ் பணத்தை வாங்கி வட்டிக்கு, ரொட்டேஷனுக்கு விடும் வழக்கம் இல்லாமல் ஆகும். அரசின் கையிருப்பில் அட்வான்ஸ் இருந்தால் அது பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
அதே போல இருதரப்புகளின் குறைகளை சரிசெய்யும் நடுவராக அரசே செயல்பட வேண்டும். நகரத்தின் மத்தியில் வசிப்பதில் உள்ள மிகப்பெரிய சிரமமே அதிக வாடகை தான். அரசு இதை நெறிப்படுத்தினால் அது நீண்ட தூரம் பயணித்து வேலைக்கு வரும் சிரமத்தை குறைக்கும். பணக்கார, மேல் மத்திய, மத்திய வர்க்க வாரியாக மக்கள் பிரிந்து கிடக்கிற பாரபட்சம் இல்லாமல் ஆகும். சாதி, மதம், சைவம், ஒழுக்கக் கட்டுப்பாடு, குறுக்கீடுகள், ஆதிக்க சுபாவம் என வீட்டு உரிமையாளர்கள் பண்ணுகிற அட்டூழியங்களும் ஒரு முடிவுக்கு வரும். மக்கள் மீதுள்ள பொருளாதார அழுத்தம் குறையும். நான்கு வீடுகளைக் கட்டிப்போட்டு அநியாய வாடகைப் பணத்தில் உட்கார்ந்து தின்னுகிற, மென்பொருள் துறை கவிழ்ந்ததும் ஆள் கிடைக்காமல் அந்த வீடுகளைப் பூட்டிப் போட்டு உட்கார்கிற அவல நிலை இல்லாமல் ஆகும். வாடகை கடைகளை எடுத்துக் கொண்டாலும் வாடகைப் பணமே அங்கு விற்கப்படும் சேவை அதிகமாக ஆவதற்கு முக்கிய காரணம். அதையும் சீராக்கினால் அங்குள்ள சேவையின், பொருட்களின் விலையையும் குறைக்கும் படி அரசால் கட்டளையிட முடியும். இதுவும் மத்திய வர்க்கம் மீதான அழுத்தத்தை குறைக்கும்.
