இம்முறை யுவ புரஸ்கார் விருதைப் பெறும் ப காளிமுத்துவை வாழ்த்தி விட்டு இவ்விருது குறித்து இரு வேண்டுகோள்களையும் வைக்கிறேன்:
ஒன்று என் எழுத்துலக சகாக்களில் சிலருக்கு:
குறும்பட்டியலில் உள்ள சில நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்காதது காளிமுத்துவின் தவறல்லவே! நாம் அவரை புறவயமாக அவரது படைப்புகளை வைத்து தானே மதிப்பிட வேண்டும்? அதுதானே நியாயம்? நான் படித்த வரையில் விருதுபெறும் தகுதி அவருக்கு உண்டா எனில் உண்டு என்பேன். அதற்காக மற்றொருவருடன் ஒப்பிட்டு அவரளவுக்கு தகுதி உண்டா எனக் கேட்க அவசியம் இல்லை. குறும்பட்டியல் என்று ஒன்று உள்ளதாலே இது ஒரு போட்டி ஆகி விடாதே. மேலும் இலக்கியத்தில் என்ன மேல் கீழ் மதிப்பீடு?
ஆகையால் முன்பு மனுஷி பாரதிக்கு யுவ புரஸ்கார் கிடைத்த போது தம் நண்பர்களுக்கு கிடைக்கவில்லையே எனும் ஆற்றாமையில், எரிச்சலில் அவரை ஆளாளுக்கு கரித்துக் கொட்டி மறுத்ததைப் போல காளிமுத்துவுக்கும் செய்ய வேண்டாம். நாம் படைப்புகளை வைத்து பேசுவோம், படைப்பாளிகளை ஒப்பிட்டு வெறுப்பரசியல் பண்ண வேண்டாம். அதனால் நாம் மேலும் தனிமைப்படுவோம். ஒரு இளம்படைப்பாளியை சோர்வுறச் செய்வோம். அது தவறு!
இப்படி எதிர்மறையாக செயல்படாமல் ஜெயமோகன் செய்வதைப் போல நாம் முக்கியமெனக் கருதும் படைப்பாளிகளைப் பற்றி பல பக்கங்கள் எழுதிக் குவிப்போம். அவர்களுக்காக கருத்தரங்குகள், கூட்டங்கள், விவாதங்கள் நடத்தி ஒரு கலாச்சார அழுத்தத்தை ஏற்படுத்துவோம். அது அப்படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி மேலும் வெறித்தனமாக செயல்பட வைக்கும். மாறாக, எதிர்மறைக் கருத்துக்கள் நம்மை முடக்கிப் போடும்!
அடுத்து, சாகித்ய அகாடெமிக்கு:
ஒவ்வொரு ஆண்டும் குறும்பட்டியலில் இடம்பெற்று மயிரிழையில் பரிசு வெல்லாதவர்கள் வயது வரம்பைக் கடந்த பின்னர் அவ்விருதைப் பெறும் வாய்ப்பை முழுமையாக இழக்கிறார்கள். அடுத்து பிரதான சாகித்ய அகாடெமி விருது தான் ஒரே வாய்ப்பு. ஆனால் அதற்காக அவர்கள் மேலும் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. இது கொடுமை இல்லையா?
இதை சரி செய்யும் பொருட்டு, இளம் படைப்பாளிகளில் ஒருவருக்கு மட்டும் கொடுக்காமல் புனைவு, கவிதை, அபுனைவு என வருடத்திற்கு மூன்று யுவ புரஸ்கார் விருதுகளை கொடுக்கலாமே? தேசிய திரைப்பட விருதுகள் இப்படி தனித்தனியாகத் தானே வழங்கப்படுகின்றன? இலக்கியத்தை ஒரு கூட்டு முயற்சியாகக் கொண்டால் அதில் கவிதை, கதை, நாவல், கட்டுரை என ஒவ்வொன்றும் நடிப்பு, பாடல், இயக்கம் போலத்தானே?
இவ்வாறு செய்தால் அடுத்த பத்தாண்டுகளில் 30 இளம் படைப்பாளிகள் யுவ புரஸ்கார் பெறுவார்கள். மேலும் பலர் ஊக்கம் பெற்று எழுத வருவார்கள். ஏற்கனவே எழுதுவொரும் நாம் வயது வரம்பு காரணமாக தவற விட்டோமே என ஆயுசுக்கும் வருந்தத் தேவையிருக்காதே. செலவென்று பார்த்தாலும் கூட ஒரு லட்ச. ஆகப் போகிறது. அது இன்றைய காலத்தில் ஒரு பெரிய செலவா? பின்னர் இந்நடைமுறையை பிரதான சாகித்ய அகாடெமி விருதுக்கும் பரிசீலித்துப் பார்க்கலாம்.