இன்று ஒரு தெருச்சண்டையை பார்த்தேன். ஒரு கடையின் அகன்ற வாசல், அதை ஒட்டிய அகலமான நடைபாதை. ஒரு பக்கம் இருபது பசங்க. எதிரில் இன்னொரு கூட்டம் பசங்க. நடுவில் சண்டையிடும் ரெண்டு இளைஞர்கள். ஒரு பையன் புல் ஓவர் அணிந்திருக்கிறான். இன்னொருவன் பார்மலாக ஆடையணிந்திருக்கிறான். முதல் பையன் இவனை மூஞ்சியிலே நான்கைந்து குத்துகள் குத்துகிறான். இவனோ எகிறி எகிறி முன்னே போய் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள். இங்கு ஒதுங்கி நிற்கும் போதும் அவனுடைய முகம் சிவந்திருக்க கையை முறுக்கிக் கொண்டு என்னை விடுறா என்று கூறுகிறான். "எதற்கு போய் திரும்பவும் முகத்தில் குத்து வாங்கவா?" என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
நான் அந்த பையன் அடிவாங்காதிருக்க என்ன பண்ணியிருக்க வேண்டும் என யோசித்தேன்:
அவன் செய்த முதற் தவறு முன்னே முன்னே சென்று கொண்டிருந்தது. ஒருவர் நம்மை அடிக்க வரும் போது வலதுகாலை வலப்பக்கமாக நகர்ந்திட வேண்டும். இப்போது அடிக்கிறவரின் குத்துக்கள் மிஸ் ஆக அவர் தன் சமநிலையை இழப்பார். வேண்டுமென்றால் அவருக்கு ஒரு உதை கொடுத்து கீழே தள்ளலாம். அல்லது ஓடி வந்து விடலாம்.
அடுத்த தவறு முன்னே போகும் போது கைகளை தாழ்வாக வைத்திருந்தது. எப்போதுமே கைகள் தோள் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதே - அவன் ஓரளவுக்கு பயிற்சி பெற்றவன் என்றால் - பிளாக் செய்தபடியே திரும்ப சில குத்துக்கள் கொடுத்திருக்க முடியும். கைகள் தாழ்வாக இருக்கும் போது அவனுடைய முகம் அடிக்க தோதாக தடுப்பின்றி இருப்பதுடன் திரும்ப அடிக்கணும் என இவன் நினைக்கும் போதே முகத்தில் குத்துக்கள் விழுந்து கொண்டே இருக்கும்.
மூன்றாவதாக அவன் வலப்பக்கமாக விலகி அந்த குத்துக்களை மிஸ் பண்ணி விட்டு ஒரு வலதுகை ஹூக்கை அடித்திருக்க வேண்டும். அப்போது எதிராளி சமநிலை இழந்து முன்னே தடுமாறிப் போயிருப்பான். அடி தலையின் வலப்பக்கமாக விழுவதால் லேசாக தலைசுற்றும். அந்த அவகாசத்தை பயன்படுத்தி அவனுக்கு முன்னே போய் - எதிராளியின் தலை அப்போது தாழ்வாக இருப்பதால் - ஒரு அப்பர் கட் அடித்து அவனுடைய தாவாக்கட்டையை தாக்கிட வேண்டும். அடுத்து உடனே மற்றொரு வலதுகை ஹூக். அவ்வளவு தான் அந்த பையன் அரைமயக்கத்துக்கு போய் விடுவான். 3-4 வினாடிகளுக்குள் நாக் அவுட் ஆகியிருக்கும். ஆனால் இந்த அடிவாங்கின பையன் அவமானத்தில் அடுத்த சில நாட்களுக்கு மறுகிக் கொண்டே இருப்பான். கோபத்தை தீர்க்கத் தெரியாமல் மனதுக்குள் பழிவாங்க கற்பனை பண்ணிக் கொண்டிருப்பான். சரக்கடிப்பான். ஆனால் இனி அதனால் என்ன பயன்?
சண்டை முடிந்த பிறகு அந்த முகத்தில் குத்தின பையன் எங்கே என்று பார்த்தேன். அவன் அடிகொடுத்த கிளர்ச்சியில், சிறிய பதற்றத்தில், சிரித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான்.
