ப. காளிமுத்துவின் இக்கவிதையை பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறது:
"மழைத் துளிகள் கூட்டாகி
திரண்டு கீழிறங்குகிறது
அவைகள் துளித்த போதிருந்த தெருக்குழாய் வசைக்கதைகள் கோணல்மானலாக மாறிக் கூட்டாகத் துவங்கியது
அதன் துளிகள் முன்னுக்குப் பின் மாறி இத்தெருக்காரியின் பெயர்
அடுத்த தெருக்காரனின் பெயரென திரட்சியில் மாட்டிக் கொண்டது
அதனடி ஓயாது ஒலியெழுப்பிக் கொண்டிருந்த வெள்ளைக்கோழி அங்கு ஒதுங்கியிருந்த கிழவனாகியிருந்தது அம்மழைத் திரட்டு தரையில் விழுந்து சிதறிய சமயம் சிறு விசும்பல்கள் மேலெழ அதை மறுப்பதாய் சில தென்னம்பூக்கள் பரவிக் கிடந்தன."
காளிமுத்துவிடம் ஒரு அபாரமான கவி ஒழுக்கு (poetic flow), சரளத்தன்மை, காட்சிபூர்வமான மொழிநடை இருக்கிறது. வண்ணதாசனின் மென்னுணர்வு, கற்பனாவாதம், முகுந்த நாகராஜனின் வளர்ந்தவர்களின் அன்றாட உலகில் உள்ள குழந்தைமை, அது சார்ந்த ஒரு விளையாட்டு உள்ளது. இந்த இரண்டு கவிகளின் தாக்கத்தை அதிகமாக நான் காளிமுத்துவிடம் காண்கிறேன்.
அடுத்து, காளிமுத்துவின் படைப்புலகின் ஒரு பிரதான வசீகரமாக அதன் துல்லியமான காட்சி ஒழுங்கு - கிட்டத்தட்ட சினிமா மொழியை நினைவுபடுத்துகிற காட்சி செறிவு - உள்ளது.
அவரை ஆட்கொள்ளுகிற ஒரு அக்கறை, கேள்வி மனிதர்களிடையே தோன்றும் தொடர்புக் கண்ணிகள் எப்படி தொலைவிற்கு அப்பாலும் அண்மையாக உள்ளன என்பதே. அதாவது நெருங்கி இருந்தாலும் தொலைதூரமாவது, தொலைவில் அகன்றிருந்தாலும் அருகாமையில் உணர்வது. இந்த முரணை அவர் அன்றாட உலகின் காட்சிகள், பொருட்கள், இயற்கை வழியாக பரிசீலிக்கிறார். சில இடங்களில் நமது திணைக்கும், நாம் புழங்கும் உலகுக்கும், உடலுக்கும், மனதுக்கும் ஒரு அறுக்க முடியாத பிணைப்புள்ளதைக் காட்டுகிறார். ஒரு கவிதையில் திருமண வீட்டுக்கு வருவோருக்காக வைத்திருக்கிற வெற்றிலை, பாக்குகளை மனித உடல்களாக பாவித்து சிலாகிப்பாக எழுதுகிறார். எனக்கு இது தஸ்தவஸ்கியின் "வெள்ளை இரவுகள்" நாவலில் அவர் காலி செய்யப்பட்ட வீடுகளைப் பற்றி சொல்வதை நினைவுபடுத்தியது.