முதுகுவலி ஒரு விசித்திரமான பிரச்சனை. கை, காலில் காயம் ஏற்பட்டால் ஓய்வு கொடுத்து சரி செய்வதைப் போல முதுகுக்குப் பண்ண முடியாது. மோசமான காயம் என்றால் மாதக்கணக்கில் படுத்துக் கொண்டிருக்கவும் இயலாது.
கை, கால் வலியைப் போல் அல்லாது முதுகு வலி கால்களுக்கும் பரவும். உங்களுடைய எல்லா வேலைகளையும் பரணில் தூக்கிப் போட வைக்கும். அதனாலே நான் முதுகுவலியை கடுமையாக அஞ்சுகிறேன். எனக்கு எல்லா தசை, எலும்பு காயங்கள் குறித்தும் பயம் அதிகம் தான், என்றாலும் முதுகுவலி தான் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். முதுகுவலி மிக லேசாக தென்பட்டாலும் நான் விடுப்பெடுத்துக் கொண்டு படுத்து ஓய்வெடுப்பேன். மருத்துவரை உடனடியாகக் காண்பேன். ஏனென்றால் சனியன் வந்தால் போகாது என அறிவேன். அதனால் அதை வாசலோடே நிறுத்தி அனுப்பி விடுவது என் வழக்கம்.
ஒரு எழுத்தாளனாக நான் என் கை, கண்ணுக்கு அடுத்தபடியாக முதுகையே மிக முக்கியமாக நினைக்கிறேன்.
முதுகுவலியின் மற்றொரு மர்ம சுபாவம் நமக்கு வேறு பிரச்சனைகள் உடம்பில் ஏற்பட்டாலும் முதுகுவலி மாறுவேஷத்தில் எங்கேயோ பதுங்கிக் கொள்ளும் என்பது. எல்லா பிரச்சனைகளும் வலிகளும் மறைந்த பின்னர் “ஹலோ சார்” என முதுகுவலி புதரில் இருந்து கைதூக்கிக் கொண்டு எழுந்து வரும். வந்தால் உங்களை ஓட ஓட விரட்டும்.
இந்த வலிகளில் மனவலியும் சேரும். நான் கடும் மனச்சோர்வில் இருக்கையில், தினமும் அழுது கொண்டிருக்கையில் முதுகுவலி மிகுந்த பரிவுடன் வெளியிலேயே பொறுமையாக நின்றிருக்கும். மனம் சாந்தி அடைந்ததும் அது என்னை ஆறுதல்படுத்தும் நோக்கில் ஒரு பூங்கொத்துடன் வீட்டுக்குள் வரும். இந்த நல்லியல்பை நீங்கள் வேறு வியாதிகளிடம் காண முடியாது.
முதுகுவலிக்கான மருந்து, சிகிச்சை செலவு பிடித்தவை. வலி நிவாரணிகள் என்பதால் சிறுநீரகத்தை பழிவாங்கக் கூடியவை. ஆனால் பிரச்சனை சரியாகும் எனும் உத்தரவாதம் இல்லாதவை. உங்களுடைய ஓய்வு, உடற்தகுதி, அதிர்ஷ்டம் ஆகியனவே காப்பாற்றும். எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு தோளில் காயம் ஏற்பட்ட போது மருத்துவர் பார்த்து விட்டு “சின்ன காயம் தாங்க, மூன்று மாதங்களில் சரியாகி விடும். ரொம்ப மாத்திரை எடுத்துக்க வேண்டாம்” என்றார். நானும் காத்திருந்தேன், காத்திருந்தேன், காலத்தின் எல்லை வரை காத்திருந்தேன். அண்மையில் தான் அந்த வலி சரியானது. எல்லா எலும்பு, தசை பிரச்சனைகளுக்கும் இந்த சிக்கல் உண்டு - உடம்பாகத் தான் அவற்றை சரியாக்க முடியும்.
மணவாழ்க்கை ஓராண்டு என்றால் விவாகரத்து முடிய ஐந்தாறு ஆண்டுகள் என்பதைப் போல் என் நண்பர் ஒருவருக்கு முதுகுவலியென்பது தீராத தலைவலியைப் போல கூடவே தொத்திக் கொண்டது. அவர் பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு நரம்பு / வர்ம வைத்தியரிடம் சென்றார். போனதும் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். அடுத்து அவரை ஒரு மேஜை மீது மல்லாக்க படுக்க வைத்து பெல்ட்டுகளைப் போட்டு மேஜையுடன் கட்டி விடுவார்கள். அடுத்து வைத்தியர் வருவார். சிஷ்யர்கள் என் நண்பரை இறுக்கப் பிடித்துக் கொள்ள வைத்தியர் தன் காலை மடித்து முதுகின் ஓரிடத்தில் வைத்து ஒரு அழுத்து. அவ்வளவு தான். மூன்றே நொடியில் சிகிச்சை முடிந்து விடும். எழுந்ததும் நண்பர் தன் உடல் ஒரு இறகைப் போல ஆகி விட்டதாக உணர்வார். வலியெங்கே என்று ‘ஸ்காட்லாண்ட் யார்டான’ நமது தமிழக் போலிசாரே வந்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. சில நேரம் இப்படி ஊரைப் பார்க்க போன வலி திரும்பாது. சில நேரம் நண்பர் ஓவராக வேலை பார்த்து தொல்லை கொடுத்தால் அது ஏதாவது ஒரு லாரியில் ஏறி திரும்ப வந்து அவரது முதுகில் தொத்திக் கொள்ளும்.
துரதிஷ்டவசமாக இந்த நரம்பு / வர்ம வைத்தியருக்கு பெங்களூருக்குள் சீடர்களோ மருத்துவமனைகளோ இல்லை. இருந்தால் அவர் இந்நேரம் கோடீஸ்வரராகி இருப்பார். எல்லா எலும்பு மருத்துவர்களும் ஊரை விட்டே ஓடியிருப்பார்கள். அல்லது இந்த நரம்பு / வர்ம வைத்தியர் நீண்ட தாடி வைத்து கார்ப்பரேட் சாமியாராகி இருந்திருந்தால் இந்நேரம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்.