"எனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. மனிதர்களில் உயர்வு, தாழ்வு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஆணவப்படுகொலை தவறானது. ஆரம்பத்தில் நாம் இனக்குழுக்களாக இருந்தோம். அதன் நீட்சிதான் சாதி சங்கங்கள்." - மாலன், ஆனந்த விகடன் பேட்டி
# எனக்கு இந்த பார்வையுடன் உடன்பாடில்லை. இனக்குழுக்கள் ஐரோப்பா, அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்காவிலும் இருந்தன. ஆனால் அங்கே ஏன் சாதியமைப்பு இல்லை? சாதியமைப்பு ஒரு பிரத்யேகமான கருத்தியல் அமைப்பு. அது மொழியை சார்ந்திருக்கும் ஒரு குறியீட்டு அமைப்பு. அது இயற்கையில் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக அதைக் குறித்த விதிமுறைகளை நாம் ஸ்கிருதிகளில் காண்கிறோம், தொன்மக் கதைகளை இதிகாசங்களில் காண்கிறோம். அம்பேத்கர் இதன் வேர்களை வேதங்களில் கண்டடைகிறார்.
இங்கு தான் இனக்குழுவுக்கும் சாதிக்கும் சுவாரஸ்யமான வேறுபாடு வருகிறது - ஒரு சூத்திரனும், தலித்தும், பிராமணனும் இருந்ததாக அகழ்வாராய்ச்சியில் கண்டறிய முடியாது, ஆனால் எழுத்தில் ஆதாரங்களைப் பார்க்க முடியும். அதுவும் வைதீக மதம் சார்ந்தே இவ்விதிமுறைகள் தோன்றுகின்றன.
அடுத்து, ஒரு இனக்குழு மற்றொன்றாக மாற முடியாது. இன்றும் கூட. ஆனால் சாதிகள் மேல் கீழாக உருமாறுகின்றன - தலித்துகளைத் தவிர (அதற்கான காரணம் அவர்களை இந்து மதம் ஏற்பதில்லை, அவர்கள் பூர்வபௌத்தர்கள் என்பது.)
அடுத்து, இதை வைதீகத்தின் பிரச்சினை என்று மட்டும் கூற முடியாது. சாஸ்வதத்தை, சாராம்சத்தை ஏற்கும் எந்த மதம் இந்தியாவுக்கு வந்தாலும் அதற்குள் சாதி புகுந்து கொள்கிறது. அதனாலே இதை வைணவம், பிராமணர் என்று பார்க்காமல் சாராம்சப்படுத்தப்படும் எல்லா கருத்தியல்களுக்கும் இடமளிக்கும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு என நினைக்கிறேன். கிறித்துவம் சாதியை முழுமையாக உள்வாங்கியது, இஸ்லாம், சீக்கியத்தில் கூச ஓரளவு சாதி புகுந்திருப்பது இதைக் காட்டுகிறது. அதாவது இது மதமாக மட்டுமன்றி ஒரு பண்பாடாக, சிந்தனையாக நம் செயல்களில், சிந்தனைகளில் உயிர்க்கிறது. நினைவுபடுத்தலுக்காக மட்டும் மனு ஸ்மிருதிகளும் கோயில்களும் இருக்கின்றன. நீங்க எந்த மத்தை இங்கு கொண்டு வந்தாலும் அது இந்துவயப்படுகிறது, அடுத்து உடனே சாதிவயப்படவும் செய்கிறது. கொரோனா கிருமி உருத்திரிவதைப் போல்.
இதனாலே அம்பேத்கர் இதை ஒரு gradation சார்ந்த அமைப்பு என்கிறார். சாராம்சவாதத்தை, கடவுளை, படிநிலையை ஏற்கும் எந்த மனிதனும் சாதியை உள்வாங்கவே செய்வான். ஐரோப்பாவை சேர்ந்த இந்தியவியலாளர்கள் (மாக்ஸ் முல்லரில் இருந்து இன்றைய ஐரோப்பிய சமஸ்கிருத ஆய்வாளர்கள் வரை) சமஸ்கிருதம், வேதம் ஆகியவற்றில் இருந்தே இந்திய பண்பாட்டின் தோன்றுகிறது என நம்புகிறார்கள். தம்மை அறியாமலே பிராமணியத்தை ஆதரித்து, இஸ்லாமிய வந்தேறிகள் கோட்பாட்டை முன்னெடுக்கிறார்கள். இவர்கள் ஒருவித கிறித்தவ வைதீக இந்துக்களாக இருக்கிறார்கள்.
அடுத்து, சாதி ஒரு வர்க்கரீதியான, உற்பத்தி உறவினால் தோன்றிய அமைப்பும் அல்ல.
கடைசியாக, வரலாற்றுக்கும் சாதிக்கும் ஒரு இறுக்கமான நெடிய தொடர்பு உள்ளது. சாரம்ச எதிர்ப்பு மரபு தோற்கடிக்கப்பட்டு சாராம்சவாத வைதீக மரபு சாம்ராஜ்ஜியங்களின் தோற்றத்துடன் நிலைகொண்டதே சாதியமைப்பின் வெற்றி வரலாறு என்கிறார் அம்பேத்கர். இந்த வரலாறு இல்லாமல் சாதி இல்லை. இதனாலே ஒவ்வொரு கதையிலும் இதிகாசத்திலும் சடங்கிலும், "தாசி", " மயிராண்டி" போன்ற சொற் பயன்பாடுகளிலும் வரலாறு மீள மீள நினைவுபடுத்தப்படுகிறது. இதனாலே சாதி இழிவில் இருந்து வெளியேற விரும்புவோர் தம் வரலாற்றை மட்டும் வைதீக பெருவரலாற்றுக்குள் திருத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள் - அப்படி சூத்திர சாதிகள் தம்மை சத்திரியர்களாக மறுவரையறை செய்கிறார்கள். அல்லது முழுக்க இவ்வரலாற்றில் இருந்து வெளியேறி மாற்றுவரலாற்றை உருவாக்குகிறார்கள் - அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றோர் இதற்கு உதாரணங்கள்.
ஆக, எப்படி மனிதன் செய்யும் குற்றங்களுக்கு குரங்கை பொறுப்பாக்க முடியாதோ, அதைப் போல் இனக்குழுவை வைத்து சாதியை நியாயப்படுத்த முடியாது. இரண்டுக்கும் தோற்ற ஒற்றுமை இருக்கலாம். ஆனால் இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உள்ளன.
சுருக்கமாக, சாதி என்பது ஒரு மதப்பிரச்சனை, வெறும் குழுவாதம் அல்ல. சாதி இந்திய வைதீக, சாராம்சவாத மரபின் குழந்தை. அது பௌத்தர்களை ஒடுக்க வைதீகர்கள் எடுத்த ஆயுதம். இன்று சர்க்கஸ் சிங்கங்களைப் போல நாம் அதன் சாட்டைக்கு பணிந்து கொண்டிருக்கிறோம். சாராம்சவாதத்தை ஒழிக்காமல் சாதியை வீழ்த்த முடியாது. புத்தரே நமக்கான ஒரே ஒளி!
- ஆர். அபிலாஷ்