நான் கவனித்த வரையில் இன்று ஐந்து விதமான கொலைகள் குடும்பத்துக்குள் நடக்கின்றன. அவை கீழ்வருமாறு:
- சொத்துக்கான கொலைகள்
- கள்ள உறவின் விளைவாக மனைவி கணவனையும் குழந்தைகளையும் கொல்லுவது, காதலனை வைத்து கணவனைக் கொல்லுவது, கணவன் மனைவியை மட்டும் கொல்லுவது.
- கணவனாலும் கள்ளக்காதலனாலும் நிராதரவான பெண்கள் தம் பிள்ளைகளைக் கொன்று விட்டு தற்கொலை பண்ணுவது (பெரும்பாலோ ஆற்றிலோ கிணற்றிலோ குதிப்பது).
- மனநலம் பாதிக்கப்பட்ட / கடனால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தில் கணவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொல்லுவது (தற்போதைய பல்லாவரம் கேஸில் நடந்தது); மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி குழந்தையையும் கொன்றுவிட்டு பெரும்பாலும் தப்பி ஓடவோ தற்கொலை செய்யவோ தலைப்படுவது.
- இது அரிதாக நடப்பதாலே அதிக கவனம் பெறுவது - கடும் அழுத்தத்தில் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் குடும்பம் மூடநம்பிக்கை, மந்திரவாதம் எனும் ஒரு வலைக்குள் சிக்கிக் கொண்டு ஒருநாள் எல்லாரும் பரஸ்பரம் கொன்று கொள்வது (ஒருவிதமான கூட்டுத் தற்கொலை) அல்லது குடும்பத்தின் தலைவரே மிச்ச பேர்களை கொன்று விட்டு தற்கொலை பண்ணுவது.
இந்த பட்டியலில் முதலாவது கொலைகள் மட்டுமே நடைமுறை பயனை நோக்கமாகக் கொண்டவை. மிச்ச நான்கு வகை கொலைகளும் உணர்ச்சி வேகத்தில் நடப்பவை அல்ல (அது தான் இவற்றை கோபத்தாலும் பழிவாங்கும் உணர்ச்சியாலும் நடக்கும் கொலைகளில் இருந்து வேறுபடுத்துகின்றன.) இவை சமூகப் பொருளாதாரக் காரணிகளால் ஏற்படும் நெருக்கடியும் பலவீனமான மன அமைப்பும் சேரும் போது தோன்றும் கடும் மன அழுத்தத்தின் விளைவாக நிகழ்பவை. இந்த கொலையாளிகள் / பலியானவர்கள் வெளியே பார்க்க இயல்பானவர்களாக இருப்பர். ஆனால் நான்கு சுவர்களுக்குள் அவர்களால் அழுத்தத்தை தாள முடியாமல் போகும். பிரெஷர் குக்கர் போல வீடு சூடாகிக் கொண்டே வரும். ரிலீஸுக்கு வாய்ப்பே இருக்காது. அப்போது தான் குக்கர் வெடிப்பது போல இந்த கொலைகள் / தற்கொலைகள் நிகழும். நாம் இவற்றை கள்ளக்காதலால், குடும்பத் தகராறால், கடன் பிரச்சனையால் நிகழ்வன என தவறாகப் புரிந்து கொள்வதாலே தீர்வு காண முடிவதில்லை. இதற்குப் பதிலாக ஏன் எத்தனையோ பேர் கள்ளக்காதல், குடும்பத் தகராறு, கடன் பிரச்சனையுடன் ஜாலியோ ஜிம்கானோ என வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள் என யோசித்தால் என்ன பிரச்சனை எனப் புரியும்.
இந்த உலகில் எல்லாரும் வலுவான, உருக்கு இதயம் கொண்டவர்கள் அல்ல. (இத்தகையோரை நாம் போலிகள், மேம்போக்கானவர்கள், மரத்துப் போனவர்கள் என நினைக்கிறோம். ஆனால் இவர்களே பெரிய சிக்கல்களில் இருந்து ஓடித் தப்பித்து வாழத் தெரிந்தவர்கள் என்கிறது உளவியல்.) பலவீனமான மன அமைப்பு, எளிதில் உணர்வுவயப்பட்டு தடுமாறுகிறவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். (எழுத்தாளர்களும் இந்த இரண்டாம் வகையினரே.) என்னுடைய அனுமானம் இவர்களே கள்ளத்தொடர்பு, உறவு முறிவு, கடன் பிரச்சனை, வேலை இழப்பின் அழுத்தம், அவமானம் காரணமாக மோசமான முடிவுகளை நாடுகிறார்கள். இவர்களுக்கு சரியான சமூக ஆதரவு, கவுன்சலிங் கொடுக்கப்பட்டிருந்தால் தப்பித்திருக்கக் கூடியவர்கள். நம்முடைய பிரச்சனை இந்த நவீனச் சிக்கல், தேவைகள் நம் கண்களுக்குப் படுவதே இல்லை.
மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஏராளமான மனநோயாளிகள் தோன்றினார்கள். ஏனென்றால் அங்கு மைக்ரோ குடும்ப அமைப்பு முன்பே தோன்றி மக்களை தனிமைப்படுத்தி இருந்தது. இந்தியாவில் இத்தனை நாட்களாக மரபான குடும்ப அமைப்பு நம்மைப் பாதுகாத்து வந்தது. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் அதுவும் நொறுங்க ஆரம்பித்ததில் மன அழுத்தம் ஒரு தொற்று நோயைப் போல மக்களிடையே பரவி வருகிறது. இதன் ஒரு விளைவு தான் அதிகமாகி வரும் விவாகரத்துகள். பெரும்பாலான விவாகரத்து கோரிக்கைகளில் நிஜமாகவே கணவனோ மனைவியோ உடல்ரீதியாக பரஸ்பரம் துன்புறுத்துவதில்லை; மாறாக பொருத்தமின்மை, மனரீதியான வன்முறை போன்ற காரணங்களை வைத்து விவாகரத்து கோருகிறார்கள். இந்த நிலைமை மேற்கில் ஐம்பது, அறுபதுகளிலேயே வந்து விட்டது; இந்தியாவுக்குப் புதிதாக இறக்குமதி ஆகி இருக்கிறது. ஏனென்றால் நவமுதலீட்டிய நம்மை தனிமைப்படுத்தி வைத்திருக்கவே, அதன் மூலமாக அதிக வேலை வாங்கி, அதிகமாக நுகர்வில் ஈடுபட வைத்து பொருளாதார வளர்ச்சியை தனக்கு சாதகமாக திருப்பி விடவே விரும்புகிறது. அதன் உபவிளைவு தான் இந்த நெருக்கடி, மன அழுத்தம், கொலை, தற்கொலை, விவாகரத்துகள். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கத்தை இதே நவமுதலீட்டிய அமைப்பே வைத்திருக்கிறது - மருத்துவ ஆலோசனை, கண்காணிப்பு. ஆனால் ஒரு பிரச்சனை மக்களுக்கு தமது பிரச்சனையை வெளியே சொல்லி தீர்வை நாட தயக்கம் அதிகம்; உளவியல் ஆலோசனைகள் செலவுபிடித்த விவகாரம் வேறு. ஆகையால் அரசே இதில் குறுக்கிட வேண்டும்.
முதலில் நகராட்சி, மாநகராட்சி அளவில் தனிக்குடும்பங்களாக (மைக்ரோ குடும்பங்களாக) வாழ்வோரை பட்டியல் எடுக்க வேண்டும். அவர்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு உளவியலாளர்களைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அதைப் பதிவு செய்து ஒரு டேட்டேபேஸில் வைத்திருக்க வேண்டும். கடும் அழுத்தத்தில் இருப்போரை தனியாக வகைபிரிக்க வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து (பொருளாதார தகுதியைப் பொறுத்து இலவசமாகவோ சிறு கட்டணத்துடனோ) ஆலோசனை, சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை கண்காணித்து வர வேண்டும். (இங்கு பூக்கோவின் நுண் அதிகாரம், கண்காணிப்பு கோபுரம் நினைவுக்கு வருகிறது என்றாலும் மக்களின் பாதுகாப்புக்கு இது அவசியம் என்பதால் தயங்காமல் எழுதுகிறேன்.) கொலை / தற்கொலையின் எல்லைக்குப் போகிறவர்களை தனிமைப்படுத்தி குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும்.
தனிக்குடும்ப உறுப்பினர்களுக்கு இதை கட்டாயமாக்க வேண்டும். அவர்களுக்கு பரிசோதனைக்கு உடன்படாவிடில் அவர்களுடைய வங்கிக் கணக்கு, ஆதார் எண், கடவுச்சீட்டு ஆகியவை முடக்கப்பட வேண்டும்.
இப்படியான நடவடிக்கைகளுக்கு மூன்று பலன்கள் உண்டு:
- நோய்க்கூறுகள் முதலிலே கண்டுபிடிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள், அவர்களுடைய குடும்பம் குறைந்த அழுத்தத்துடன், ஆரோக்கியமாக தொடர்ந்து வாழ வைக்கலாம்.
- குடும்பத்துக்குள் நடக்கும் கொலைகள், தற்கொலைகளைத் தடுக்கலாம்.
- இதனால் நிறைய உளவியல் ஆலோசகர்களுக்கு, இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். இன்று மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு கஜானாவுக்கும் நல்ல வருமானம் வரும்.
இதில் செய்யக் கூடாதவை:
- பரிசோதனை முடிவுகள், சிகிச்சை விபரங்களை அரசு ரகசியமாக வைத்திருக்க வேண்டும். தனிநபர் வேலை செய்யும் நிர்வாகத்துக்கோ பொதுசமூகத்துக்கோ தெரிவிக்கக் கூடாது.
- ஆவணங்களுக்காக மக்களை அங்கே இங்கே அலைய விடாமல் இணையதளம் மூலமும் அவர்களுடைய வீட்டுக்கு அரசு ஊழியர்கள் சென்றும் உதவ வேண்டும்.
- இந்த விபரங்களை வேறு குற்றவிசாரணைகளுக்கு பயன்படுத்தக் கூடாது, இவற்றை ஆளுங்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என சட்டம் போடப்பட வேண்டும்.
- இந்த தகவல்களை எந்த நீதிமன்ற வழக்கிலும் பயன்படுத்தக் கூடாது.
- இவ்விவரங்களை வைத்து பொதுமக்களுக்கு எதிராக அரசு எந்த சட்டநடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இதை மக்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லி புரிய வைக்க வேண்டும். இந்த அடிப்படை (அந்தரங்க) உரிமைகளை சட்டரீதியாக உறுதிப்படுத்த வேண்டும்.