Skip to main content

எழுத்தாளர்கள் ‘கௌரவிக்கப்படும்’ அவலம்





எனக்கு இந்த எழுத்தாளர் கௌரவிக்கப்படும் ஏற்பாட்டில் உடன்பாடில்லை. ஏன் என்று சொல்கிறேன்.


முதலில், நாம் ஒரு கூட்டத்தின் முன் அமர்ந்திருக்கிறோம். யாரோ நம்மைப் பற்றி சில சொற்களைக் கூறுகிறார்கள், பொன்னாடை அணிவிக்கிறார்கள், நம்மையும் பேசச் சொல்கிறார்கள், ஆனால் ஒரு பிரச்சனை நமக்கு முன் அமர்ந்திருக்கும் சில நூறு பேர்களுக்கு நீங்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்றே தெரியாது. இதைப் போன்ற ஒரு அவமானம் எங்காவது உண்டா? இதற்கு நீங்கள் பேசாமல் உங்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்


இப்போது இன்னொரு சூழலை எண்ணிப் பாருங்கள்: ஆடி நிறுவனம் ஒரு புது காரை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகிறார்கள். அதை உருவாக்கிய பொறியியலாளர்களின் தலைவர் வந்து மக்களிடம் அந்த காரைப் பற்றி பேச மாட்டார். அது அவரது வேலை அல்ல. முதலில் அந்த கார் பற்றின விளம்பரங்கள் வரும். அடுத்து அதைப் பற்றி சமூகவலைதளங்களில் பேசுவார்கள். இறுதியாக மக்கள் அந்த காரைத் தேடி வாங்குவார்கள். எந்த இடத்திலும் உருவாக்கியவரோ முதலீடு செய்தவரோ வந்துஹி ஹி நான் பண்ணின காருங்க. இதைப் பாருங்க. நான் யாருன்னு தெரிஞ்சுக்குங்கஎன்று நெளிய மாட்டார்கள்.


வாசிப்பு என்பது ஒரு அனுபவம் என்கிற அளவில் நுகர்வு அல்ல. ஆனால் புத்தகங்களை வாங்குவது நிச்சயமாக நுகர்வு தான். எழுத்தாளனின் அந்த நுகர்வுச் சந்தையில் உற்பத்தியாளன் தான். அவனுக்கும் புத்தகங்களுக்கும் இடையில் விளம்பரதாரர்கள், விற்பனையாளர்கள் இருக்க வேண்டும். புரொமோட்டர்கள் அவன் புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த புரொமோஷன் பணியை பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், பெரிய ஊடகங்கள், தலைவர்கள், ஏன் ஒரு அரசாங்கமே கூட செய்யலாம். ஒரு முதல்வர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தான் படிக்கும் புதிய நூல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதை சட்டமன்றத்தில் ஒரு நடைமுறையாகக் கொண்டு வரலாம் - விவாதங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் புத்தகங்களைப் பற்றி பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தி பேசலாம். ஒரு பிரதமர், மத்திய அமைச்சரவை என பலரும் இதைச் செய்யலாம். மேற்கில் இது போன்ற காரியங்கள் நடக்கின்றன. அப்போது எழுத்தாளன் மக்களுக்கு நன்கு அறிமுகமாகிறான். அவனைத் தேடி வாசகர்கள் வருவார்கள். அப்போது எழுத்தாள-வாசக சந்திப்புகளை ஏற்பாடு செய்யலாம். (அதற்கு பணம் செலுத்திப் போகிற வாசகர்களும் உண்டு.) உங்கள் முன் உங்களைத் தெரிந்தவர்கள் இருக்கையில் அது அங்கீகாரம், மரியாதை, உங்கள் முன்னால் ஒரு ஆட்டுக்கூட்டம் அமர்ந்திருக்கும் போது அது உங்களை செருப்பால் அடிப்பதற்கு சமம்.


அவர்கள் என்னதான் நம்மை எழுத்தாளன் என அடையாளப்படுத்தினாலும் அந்த சூழலில் நீங்கள் நிஜமாக ஒரு எழுத்தாளனாக இருக்க மாட்டீங்கள். பேச வந்துள்ள ஒரு சிறப்பு விருந்தினர் மட்டுமே. நீங்கள் அங்கு போய் பேசுவதால் உங்களுக்கோ அவர்களுக்கோ இலக்கியத்துக்கோ பயனில்லை.


இதனால் தான் நான் ஒரு கட்டத்தில் இந்த பொன்னாடை நிகழ்வுகளை தவிர்க்க ஆரம்பித்தேன். என்னை பேச அழைத்தால் அது சிறுபத்திரிகை கூட்டம் என்றால் மட்டுமே இலவசமாக செல்வேன். இல்லாவிட்டால் என்னை ஒரு பேச்சாளனாக மட்டுமே கருதி அதற்கு சன்மானம் கேட்பேன். இல்லையென்றால் போக மாட்டேன். என் சொந்த ஊரில் சில முறைகள் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த போதும் இதையே சொன்னேன் - நான் சொந்த பணத்தை செலவழித்து சிரமப்பட்டு சென்னையில் இருந்து ஊருக்கு வர மாட்டேன்; நீங்களாக வசதிகளைப் பண்ணித் தந்தால், அதற்கு சன்மானமும் தந்தால் வருவேன். எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. என்னுடைய ஊரில் என்னை ஒரு எழுத்தாளனாக அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு கவலை இல்லை. அங்கீகாரம், பாராட்டுரைகளாலும் எனக்கு பயனில்லை. என்னுடைய படைப்புகள் பரவலாக போய் சேர உதவுமென்றால் மட்டுமே எனக்கு பயனுண்டு. வைரமுத்து தன்னை கல்வி நிலையங்களில் பேச அழைத்தால் தனது புத்தகத்தை ஐநூறு பிரதிகள் வாங்க வேண்டும் எனக் கோருவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவே சரியாக அணுகுமுறை. இல்லாவிட்டால் அவர்களுடைய பொழுதுபோக்குக்காக, பெயருக்காக நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள். முடியும் போது நமக்கு அசிங்கமாக இருக்கும்.


இதற்குப் பதிலாக எழுத்தாளனைப் பற்றி பேசுவதற்கு விமர்சகர்களும் பேச்சுத்திறன் மிக்க வாசகர்களும் இங்கு உருவாக வேண்டும். பவாவைப் போல கதை சொல்லலாம். அவர்கள் ஒரு விற்பனைப் பிரதிநிதி போல இலக்கியத்துக்காக செயல்பட வேண்டும். என்னை வேறு படைப்பாளிகள் பற்றி பேசக் கூப்பிட்டால் நான் மகிழ்ச்சியுடன் சென்று பேசி வருவேன். ஒரே நிபந்தனை அந்த கூட்டத்தின் வருகையாளர்களுகு இலக்கிய ஆர்வம் இருக்க வேண்டும். இப்படி நாம் பிற எழுத்தாளர்களை முன்னெடுத்தால், அதற்கு ஊடகங்கள், அரசுகளின் பொருளாதார, உள்கட்டமைப்பு ஆதரவும் இருந்தால்யார் இந்த எழுத்தாளன்?” என பார்வையாளர்கள், வாசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் முழித்துக் கொண்டிருக்கும் நிலை வராது.


எழுத்தாளர்கள் கொலு பொம்மைகள் அல்ல!


பின்குறிப்பு: எழுத்தாள நண்பர் ஒருவர் தன் ஊரில் நடந்த இலக்கிய உரை ஒன்றின் போது தன் பெயர் உச்சரிக்கப்பட தன்னை ஒருவருக்கும் தெரியவில்லை என்று எழுதியதை ஒட்டி எழுந்த எண்ணங்கள் இவை.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...