ஜெயமோகனுடனான காதல் அனுபவம் பற்றி அருண்மொழி நங்கை எழுதிய அழகிய கட்டுரையைப் படித்தேன். இது இயல்பாக ஏற்படுவது தான், பெண்களை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தை, ஆளுமையை வைத்து கவர்வது ஆச்சரியமான ஒன்றல்ல. அபெண் வாசிக்கக் கூடியவளாக, ரொம்ப எழுதாதவளாக, களங்கமற்ற மனம் கொண்டவளாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த எழுத்தாளன் அறியப்பட்டவனாக, வலுவான ஆளுமை, தன்னம்பிக்கை, உணர்வுவயப்பட்ட இயல்பு கொண்டவனாக இருந்தால் போதும். எல்லாரிடம் இருந்து ஒதுங்கி எழுத்தில் ஈடுபடுகிற எனக்கே அப்படி மூன்று காதல் அனுபவங்கள் உள்ளன. எழுத்தாளன் மீதான ஈர்ப்பு என்பது உறவின் முதற்படி மட்டுமே. பெரும்பாலும் அப்பெண்கள் அடுத்தடுத்த மாதங்கள், வருடங்களில் அவனது படைப்புகளை பொருட்படுத்த மாட்டார்கள், ஆனால் பேச்சை, நடவடிக்கைகளை, ஆளுமையை மட்டும் ரசிப்பார்கள். அப்படியே நகர்ந்து நகர்ந்து அவன் வெறும் ஆணாகவும் அவள் வெறும் பெண்ணாகவும் எஞ்சுவார்கள் என நினைக்கிறேன். (விதிவிலக்குகளும் உண்டு.) இதில் கவிஞர்கள் ஒரு தனிவகை - ஓரளவுக்கு சமூகமாக்கல் செய்பவர்கள் எனில் வருடத்திற்கு சில காதல்களாவது வெற்றிகரமாக அவர்களுக்கு நிகழும். ஒரு கவிஞருக்கு மாதம் சில...