நீங்கள் வேலையில்லாமல் இருக்கலாம், தொடர் தோல்விகளால் துவண்டிருக்கலாம், ஒரு மோசமான உறவில் மாட்டிக் கொண்டிருக்கலாம், முதுமையின் கடலை எப்படி நீந்திக் கடப்பது என தெரியாமல் தவிக்கலாம், அல்லது இப்போது நான் அனுபவிப்பதைப் போல நீதிமன்ற வழக்கொன்றில் சிக்கி வருடக்கணக்காக அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். எப்படியாயினும் நமக்கெல்லாம் ஒரே ஆறுதல் துன்பம் சூழ்நிலைகளிலிருந்தே வருகிறது, நம்மிலோ பிறரிலோ இருந்தல்ல என்பது. ஒரு ஸ்விட்சைப் போட்டது போல சூழல் ஒரு நாள் மாறும், அன்று வெளிச்சம் எங்கும் நிறையும், மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும். அதுவரை அமைதியாக சகித்துக் கொள்வதே நம்மிடம் உள்ள சிறந்த தீர்வு. அதே நேரம் அநீதி நடந்தால் பொறுக்காமல் எதிர்த்துப் போராடுவதும் அவசியம். ஆனால் ஒரு போது நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பிடிவாதமாக நம்புதல் கூடாது. அது நம்மை கடுமையான அழுத்தத்துக்குள் தள்ளி விடும். காலம் தானே கனியட்டும் என பொறுமை காத்திடல் வேண்டும். புரூஸ் லீ மூங்கில் மரங்களைப் பற்றி சொல்லுவார் - “எவ்வளவு பெரும் புயல் வீசினாலும் அதை எதிர்த்து நிற்கும் மரங்கள் உடைந்து விடும், வேரோடு பிடுங்கி வீசப்படும், ஆனால் மூங்கிலோ வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்ளும். மனிதன் தேவையான போது மூங்கிலைப் போல இருக்க வேண்டும்.” நம்பிக்கை என்பது நம்மால் முடியும் என்பதல்ல, பெரும்பாலான நேரங்களில் நம்மால் எதுவும் முடிவதில்லை. நம்பிக்கை என்பது நம்மால் தாங்கிக் கொள்ள முடியும் என்பதே.
இதற்கு விதிவிலக்கு நோய் உள்ளிட்ட உடற் பிரச்சனைகள் மட்டுமே. அவற்றை நாமே முயன்று சரி செய்ய வேண்டும்.
மாற்றம் என்பது நாம் மாறுவதல்ல, மாற்றம் என்பது காலம் மாறுகையில் அதனோடு சூழலும் மாறுவதே. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் அந்த மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தகவமைப்பது மட்டுமே.