Skip to main content

இந்திய அணி - அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலை



தென்னாப்பிரிக்க தொடர் சுபிட்சமாக முடிந்திருக்கிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்றும், ஒருநாள் தொடரை 3-0 என்றும் இழந்திருக்கிறோம். இதற்கு யார் பொறுப்பு?

வீரர்களை பழிசொல்லவே நமக்கு முதலில் நாவெழும். ஆனால் நிஜமான காரணம் இந்திய கிரிக்கெட் அணி இத்தொடருக்கு முழுமையாக தயாராக இருக்கவில்லை, அரைமனதுடனே, நிறைய குழப்பங்கள், கவனச்சிதறல்களுடன் ஆடினார்கள் என்பது. ஆனால் இன்னொரு பக்கம் தென்னாப்பிரிக்காவோ ஒரே அணியாக ஆடினார்கள்.

இந்தியாவுக்கு இருந்த முக்கியமான பிரச்சனை வேறெப்போதும் இல்லாத அளவுக்கு அணித்தலைமை குறித்த நிச்சயமின்மைகள் இம்முறை இருந்தது என்பது. கடந்த டி20 உலகக்கோப்பையின் போதே இந்த நிச்சயமின்மை ஆரம்பித்திருந்தது.
 உலகக்கோப்பைக்கு முன்பே கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தது வீரர்களின் ஒற்றுமையை, ஈடுபாட்டை குலைத்தது. ஆளாளுக்கு ஒரு திசையில் ஆடினார்கள். அதன் பிறகு ரோஹித்தை டி20 தலைவராக அறிவித்து அணி ஓரளவுக்கு நிலைப்பெற்று அவருக்குக் கீழே நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் தீவிரமாக ஆடினார்கள். கோலி ஓய்வுக்கு போனதால் முதல் டெஸ்டை ரஹானேயின் கீழ் அடுத்து ஆடினோம். வெல்ல வேண்டிய போட்டியை டிரா செய்தோம். அதற்கு அடுத்த போட்டியில் கோலி திரும்ப வந்து வென்று தந்தார். அதாவது இரண்டு தொடர்களில் மூன்று தலைவர்கள். டிராமா இத்துடன் முடியவில்லை.

ஒருநாள் அணித்தலைவர் யாரெனும் குழப்பம் நீடித்தது. தென்னாப்பிரிக்காவில் நடக்கப் போகும் ஒருநாள் தொடரில் ரோஹித்தே தலைவர் என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. ஆனால் அதற்கு கோலி தயாராக இல்லை. அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாகவே ஒருநாள் போட்டிக்கான தலைமையை பிடுங்க வேண்டி இருந்தது. அவர் மிக உணர்ச்சிவசப்பட்டு ஒரு குழந்தையைப் போல கொந்தளித்தார். கிரிக்கெட் வாரியத்துக்கும், தேர்வாளர்களுக்கும் எதிராக தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கோலிக்கும் கங்குலிக்குமான உறவு கசந்தது. ஏற்கனவே கிரிக்கெட் வாரிய செயலரான ஜெய் ஷாவுக்கும் கோலிக்குமான உறவு மோடிக்கும் சசிகலாவுக்கும் இடையிலானதைப் போல இருந்தது. விளைவாக, கோலியின் சாதனைகளை அங்கீகரித்து அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை கிரிக்கெட் வாரியம் வெளியிட மறுத்தது. கோலியின் ரசிகர்கள் கங்குலியையும் ஷாவையும் கடுமையாக தாக்கி ஏகப்பட்ட மீம்களை வெளியிட்டனர். ஒரு வாரம் முழுக்க இவர்களும் இருவரும் டுரோல்களின் முக்கிய இலக்காகினர். தன் பெயரைக் காப்பாற்றுவதற்காக கங்குலி ஒரு அறிக்கை விட்டார். அதில் கோலியிடம் தான் தலைமை மாற்றம் குறித்து விவாதித்திருந்ததாக கூறினார். கோலியோ தனக்கு அப்படி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார். விளைவாக, கங்குலி ஒரு பொய்யர் எனும் பிம்பம் ஏற்பட்டது.
இன்னொரு பக்கம், கோலி தன் பதவியை இழந்ததற்கு அணித்தலைவர் ராகுல் திராவிடும் காரணம் என சதித்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. 

ஆனால் இந்த நீயா நானா வாள்சண்டைகளுக்கு மத்தியில் கோலியின் இடத்தில் ஆட வேண்டிய ரோஹித் ஷர்மாவின் உடற்தகுதியைப் பற்றி யோசிக்க தேர்வாளர்களும் கங்குலியும் தவறினார். அதுதான் அவர்கள் செய்த உச்சபட்ச தவறு. ரோஹித் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் ஆட மாட்டார் என்று திடீரென செய்தி வந்தது. ஆனால் அவர் ஒருநாள் தொடரில் தலைவராக பங்கேற்பார் என தேர்வாளர்கள் கூறினார். அதுவும் மீசையில் மண்ணொட்டவில்லை என்று காட்டத்தான். டெஸ்ட் தொடர் முடிந்த பின் ரோஹித் ஒருநாள் தொடரிலும் ஆட மாட்டார் எனத் தெரிந்தது. அவசரகதியில் எந்த தலைமைப் பண்போ, அனுபவமோ இல்லாத கே.எல் ராகுல் அணித்தலைவராக்கப்பட்டார். அவரது தலைமையில் இரண்டாவது டெஸ்டை இந்தியா இழந்தது. அவர் அடுத்து ஒருநாள் போட்டித் தொடருக்கும் தலைவராக்கப்பட்டார். அத்தொடரையும் இந்தியா இழந்தது.
 டெஸ்ட் அணியில் அப்போதும் ரஹானே ஆடினார். அவர் நிச்சயமாக ராகுலை விட மேலாக தலைமை தாங்கி இருப்பார். ஆனால் அவர் போதுமான ரன் அடிக்காததால் அவருடைய துணைத்தலைவர் பதவியை பிடுங்கி ரோஹித்துக்கு கொடுக்க நினைத்த தேர்வாளர்கள் ரோஹித் இல்லாததால் அதை ராகுலுக்கு கொடுத்திருந்தனர். கோலிக்கு காயம் ஏற்பட்டு அவரால் இரண்டாவது டெஸ்டை ஆட முடியாமல் போகும், ஒருநாள் தொடரிலும் தலைமையின் குறைபாட்டால் நாம் தொடரை இழக்க நேரிடும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனென்றால் ரோஹித்தின் காயத்தை கருத்திற் கொண்டு ரஹானேவுக்கு நாம் இன்னும் சில தொடர்களில் தலைவராக ஆட வாய்ப்பளித்திருக்க முடியும். அல்லது அஷ்வினை துணைத்தலைவராக தற்காலிக டெஸ்ட் தலைவராகவும் அறிவித்திருக்கலாம். கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கடைசி நேரத்தில் மணப்பெண் இல்லை என்பதைப் போலாகி விட்டது நிலைமை.

இவ்வளவு குழப்பங்களும் உள்ளடிகளும் மிகுந்த சூழலில் ஒரு அணி எப்படி கவனமாக வெறியுடன் ஆட முடியும்? இருந்தாலும் கோலியின் தலைமையின் கீழ் தென்னாப்பிரிக்க பயணத் தொடரின் முதற்போட்டியை இந்திய அணி வென்றது. ஆனால் கோலி டெஸ்ட் தொடரின் முடிவில் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் பதவி விலகுவதாக ஒரு குண்டைத் தூக்கி போட்ட நிலையில் இப்போது இந்திய அணிக்கு தலைமைப் பொறுப்பேற்க தகுதியாக ஆளில்லாமல் போய் விட்டது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என ஊரில் சொல்லுவார்கள். அதே போல ரோஹித்தை நம்பி வீராப்பாக கோலியை பொடனியில் அடித்து துரத்தினால் இப்போதும் கோலியும் இல்லை ரோஹித்தும் இல்லை, ராகுலை தலையில் கட்டிக் கொண்டு அழ வேண்டும் எனும் நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது கோலியே தேவலை என ரசிகர்கள் கருதுகிறார்கள். கடல் நிறைய வெள்ளம், ஆனால் ஒரு தாகத்துக்கு ஒரு துளியை கூட அருந்த முடியாது.

கோலியை வெள்ளைப் பந்து வடிவங்களின் தலைமையில் இருந்து நீக்க நினைத்ததில் தவறில்லை. ஆனால் அதை அவர்கள் பொறுமையாக செய்திருக்க வேண்டும். ரோஹித்தின் உடற்தகுதியைப் பற்றி பரிசீலித்து விட்டு அவரால் தொடர்ந்து ஆட முடியாதெனில் (கடந்த சில ஆண்டுகளாக அவர் அடிக்கடி காயம்பட்டு ஆடாமல் போகிறார் என்பதால்) ரிஷப் பண்டை தலைவராக உருவாக்க முயற்சி எடுத்திருக்கலாம். இலங்கை, வங்கதேசம், ஐயர்லாந்து போன்ற அணிகளில் சிறிய தொடர்களை ஏற்பாடு செய்து அதற்கு ஒரு மாற்று அணியை பண்டின் தலைமையில் அனுப்பியிருக்கலாம். பண்ட் வேண்டாம் ராகுல் போதுமென்றாலும் கூட இதையே செய்து அவரை மெல்ல மெல்ல பயிற்றுவித்திருக்கலாம். சொல்லப்போனால் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்குப் பின்னரே இந்த முயற்சிகளை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் இந்த முன்தயாரிப்பு, திட்டமிடலில் தான் இந்திய கிரிக்கெட் வாரியமும் தேர்வாளர்களும் சொதப்பி விட்டார்கள்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் நிறைய சர்ச்சைகள், சிக்கல்களில் உழல்கிறது. ஆனால் டெஸ்ட், ஒருநாள் அணிகளைப் பொறுத்தமட்டில் தலைமையில் எந்த குழப்பமும் இல்லை. யார் யார் ஆடுவார்கள், யார் தலைமை தாங்குவார்கள் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். அதனாலே வென்றார்கள். ஆனால் இந்தியாவோ தலையில்லாத முண்டமாக மாறி விட்டது. தனது மோசமான தயாரிப்பு, நிர்வாக கோளாறுகள், மனிதவள தகிடுதித்தம், முக்கியமாக வாரியத்தின் தலைமையை வகிக்கும் கங்குலி, ஷா இருவரின் அகங்காரம் காரணமாக இந்தியாவை அதல பாதாளத்தில் தள்ளி விட்டனர்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...