தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவை ஒட்டி இருவரைப் பற்றியும் வெளிவந்த தகவல்கள் நமது சமூக சூழலில் திருமண உறவுக்குள் அதிகார சமநிலையை தக்க வைத்து, குடும்பம் நிலைபெற செய்ய இரண்டு விசயங்கள் அவசியம் என்பதைக் காட்டின:
1. சாதிய அதிகாரம்: நீங்கள் பணம், சமூக அந்தஸ்தைப் பொறுத்து ஒரே தட்டில் இருந்தாலும் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் எனில் பிரச்சனை கதவைத் கட்டிக்கொண்டு வரும். தனுஷுக்குப் பதில் ஐஸ்வர்யா தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மணமுடித்திருந்தால் மாமனார், மாமியாரை பொருட்படுத்தாமல், கணவனின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருப்பாரா? மாட்டார். இயல்பாகவே “அத்தை, மாமா” என்று ஒட்டிக் கொண்டிருப்பார். அவரே அதை செய்ய விரும்பாவிடினும் அவரது குடும்பமும் உறவுகளும் அப்படி மரியாதை கொடுக்கும்படி அழுத்தம் செலுத்தி இருப்பார்கள்.
2. இந்த கருத்து சற்று பிற்போக்கானதாகத் தெரியும். ஆனால் இதுவே எதார்த்தம் - ஒவ்வொரு நிலப்பகுதியை அல்லது சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கும் எதிர்பாலினத்தை எதிர்கொள்வதில் ஒரு குறிப்பிட்ட இயல்பு உண்டு. உ.தா., குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு - அவர்கள் எச்சமூகத்தை சேர்ந்தவர்கள் எனினும் - வீட்டுக்குள் கணவனை ஆதிக்கம் செய்யும் இயல்பு உண்டு. கேரளாவிலும் அப்படியே. இந்த ஊரிலுள்ள ஆண்களும் மனதளவில் இதை விரும்புகிறார்கள், வெளியே வேறுவிதமாக கெத்தாக தம்மை காட்டிக் கொண்டாலும். தாய்வழி சமூகங்களாக அப்பகுதியினர் முன்பு இருந்தது ஒரு காரணமா? வங்காள, வட-கிழக்கு மாநிலத்து பெண்களும் ஆண்களும் இவ்வாறானவர்களே. வீட்டுக்குள் ஒரு பாலினத்தின் அதிகமான ஆக்ரோஷமான, ஆதிக்கம் செலுத்தும் உளவியல் மற்றொரு பாலினத்தின் சற்று பணிவான மனநிலையை ஈடு செய்து விடுவதால் பிரச்சனைகள் பெரிதாக வளர்வதில்லை. தமிழக பிராமண சமூக ஆண் பெண்களிடத்தும் - அவர்கள் என்னதான் தாழ்வழி சமூகம் அல்லவெனினும் - இந்த சுபாவத்தை பார்க்கலாம். (இங்கு ஒரு வசதிக்காக பொதுமைப்படுத்துகிறேன் என்பதால் விதிவிலக்குகளும் இருக்கலாம்.) இந்த வகையான பெண்களும் சுதந்திரமானவர்களாக, தன்னிச்சையாக முடிவெடுப்பவர்களாக, குடும்பத்தை சுயமாக நிர்வகிப்பவர்களாக இருப்பார்கள். சில நேரம் அதிகார தொனியுடன் நடந்து கொள்ளவும் செய்வார்கள். இவர்களை மணம் புரியும் ஆண்கள் (அதே சமூகத்தினராக இல்லாத பட்சத்தில்) ஒரு பக்கம் போதுமான சமூக, பொருளாதார அதிகாரம் கொண்டிருந்தபடி வீட்டுக்குள் அடங்கி செல்கிறவர்களாக இருக்கும்பட்சத்தில் பிரச்சனை இருக்காது. ஆனால் அதே அளவுக்கு ஆண் அதிகாரத்தை செலுத்தினால், கோபத்தை காட்டினால், தன்னிச்சையான சுபாவத்தை வெளிப்படுத்தினால் அது பிரிவுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மனநிலை உண்டென்பதல்ல என் பார்வை. ஆனால் தாய்வழி சமூகங்களில் பாலினங்களின் மனப்பான்மை தந்தைவழி சமூகங்களில் இருந்து மாறுபட்டதாக உள்ளது என்கிறேன்.
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விசயத்தில் கருத்து சொல்வது நமது வேலை அல்ல. மேற்சொன்னவை பொதுவான அனுமானங்கள் மட்டுமே. அவர்களுடைய தனிப்பட்ட விழைவுகள், குடும்ப சூழல் என வேறு காரணங்களும் பிரிவுக்கு முக்கியமாக இருந்திருக்கலாம்.
எது எப்படியோ ஆண்-பெண் உறவில் அதிகார சமநிலையானது இருவரும் ஒரே அதிகாரத்துடன் இருக்கையில் சாத்தியமாவதில்லை. மாறாக, ஒரு கை ஓங்க மற்றொரு இறங்குகையிலே அது சாத்தியமாகிறது. ஒரு சந்தர்பத்தில் இப்படி ஆதிக்கம் செலுத்தும் கை மற்றொரு சந்தர்பத்தில் இயல்பாகவே இறங்குகையில் மறு கை உயர்கிறது, இப்போது அதன் காயம்பட்ட ஈகோ தணிகிறது. இப்படி அமைவது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தான் என்றாலும், ஒருவருடைய பெற்றோரின் மனவமைப்பு, ஊர் பின்னணி, தாய்வழி / தந்தைவழி சமூகமா ஆகிய விசயங்களை வைத்து, நமக்கு நேரெதிரான மன இயல்பை கொண்டவர்களை ஓரளவுக்கு சரியாக தேர்வு செய்யலாம்.
நவீன திருமண உறவில் ஒரு பெரிய முட்டுக்கட்டை சமத்துவம் குறித்த எதிர்பார்ப்புகள் - வெளியே மிக அசமத்துவமான பால்நிலை இருக்கையில் உள்ளே மட்டும் எப்படி நீங்கள் சமத்துவமாக நடந்து கொள்ள முடியும். ஒருவர் அப்படியே சமத்துவத்துக்காக பணிந்து போனாலும் மற்றவர் அதை பயன்படுத்தி கூடுதலாக ஆதிக்கம் செலுத்தவே வாய்ப்பதிகம். இது சமத்துவ விரும்பியான முதலாமவரை காயப்படுத்தும். மற்றொரு விசயம் காமம் எப்போதும் ஆதிக்கம் செய்வதற்கான முயற்சிகளில், மறைமுகமான வன்முறையில் உயிர்க்கிறது என்பதால் ஆண்-பெண் உறவில் இந்த அதிகார ஊசலாட்டம் இருந்தபடியே தான் இருக்கும். சைக்கிள் பெடலைப் போல ஒன்று அழுத்தப்பட மற்றது உயரும். அப்படி நடக்காமல் இரண்டுமே நகராமல் ஜாம் ஆகிவிட்டால் பிறகு பெடல் உடைவது தான் ஒரே வழி.
மீண்டும் சொல்கிறேன் - இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.