அம்பையை ஒரு பெண்ணியராக எப்படி வரையறுப்பது?
பெண்ணியத்தை உலகளவில் மூன்று காலகட்டங்களாகப் பிரிப்பார்கள். முதல் காலகட்டம் பால்நிலை சமத்துவத்தை நடைமுறையில், சமூக அரசியல் தளத்தில் பெறுவதற்கான போராட்டத்தால் ஆனது. பெண்களுக்கு வாக்குரிமை, ஆண்களுக்கு இணையாக வேலை செய்து ஊதியம் பெறும் உரிமை என இந்த காலகட்டம் நகர்ந்தது. அடுத்த காலகட்டம், பண்பாட்டு ரீதியானது. பால்நிலைக் கட்டமைப்புகள் எவ்வாறு பெண்களுக்கு விரோதமாக மொழி, பண்பாடு, குடும்பம் போன்ற சமூகக்கட்டமைக்களுக்குள் உள்ளது என இந்த காலகட்டத்தில் விவாதித்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் பெண்கள் இலக்கியத்தில், கலைகளில், ஊடகத்தில் தடம் பதிக்க வேண்டும், நுண்-அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும், அதற்காக போராட வேண்டும் எனும் உத்வேகம் தோன்றியது. ஆணாதிக்கம் vs பெண் நிலை என ஒரு இருமை சமூகத்தில் உள்ளது என்று கூறப்பட்டது. ஆண்-மைய சிந்தனை எப்படி நமது மொழியில், சிந்தனையில், சமூக அமைப்புகளில், தொன்மங்களில், மதத்தில் ஊடுருவி உள்ளது என் பெண்ணியவாதிகள் பேசினார்கள். ஆங்கில மொழிக்குள் இலக்கிய மொழி என ஏற்கப்படும் ஒன்று எப்படி ஆண்மொழியாக இருக்கிறது என விவாதித்த பிரித்தானிய எழுத்தாளர் வெர்ஜினியா வூல்பின் கட்டுரையான A Room of One’s Own இந்த பின்னணியில் முக்கியமானது. மற்றொரு கட்டுரையையும் குறிப்பிட வேண்டும் - பிரஞ்சு எழுத்தாளர் ஹெலன் சிக்ஸு எழுதிய The Laugh of the Medusa.
இவர்கள் இருவரும் இருவேறு அலைகளின் பிரதிநிதிகள் என்று சொல்ல வேண்டும். ஒன்று நடைமுறை சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை, அதிகாரமாக்கலை பிரதானமாக கருதிய ஆங்கிலேய ‘நேரடி பெண்ணிய’ முகாம். மற்றொன்று, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் அக்கறை செலுத்துகிற பிரெஞ்சு பெண்ணிய முகாம். இந்த பிரஞ்சு பெண்ணியமானது எளிதில் அடுத்த கட்டத்துக்கு சென்றது. ஆணதிகாரமானது வெறுமனே ஆணுடலில் இல்லை, அது மொழிக்குள், உளவியலில், பகுத்தறிவு சிந்தனையில் இருக்கிறது என்று பேசியது. ஆண்-பெண் எனும் இருமையை கடந்து நமது உடல் அதன் கலாச்சார குறிப்பான்களாலே பால்நிலை அடையாளத்தை நிகழ்த்துகிறது என்றது. ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ மட்டுமே உடலளவில் இருக்க அவசியமில்லை, பால்நிலை வெகு நெகிழ்வானது, ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் ஈர்ப்பு கொள்ளும் போதோ, ஆண் மற்றொரு ஆணை நேசிக்கும் போதே ஆணதிகாரம் அங்கு ஆணுடலைக் கடந்த மற்றொரு வடிவெடுக்கிறது என்று விவாதித்தது. இவ்வாறு பிரஞ்சு பெண்ணியத்தில் இருந்து ‘பின்னமைப்பியல்’ பெண்ணிய காலகட்டம் தோன்றியது. இது இன்றைய LGBT கருத்தியல்களை, அதை ஒட்டிய இலக்கியம் ஆகியவற்றை தோற்றுவித்தது.
அதே நேரம் ஆங்கிலேயே நடைமுறை பெண்ணியமானது இன்றும் வலுவாகத் தொடர்கிறது. இந்த பெண்ணியவாதிகள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறை பெண்ணியத்தை தாண்டி வராதவர்கள். அவர்களுக்கு பெண்விழை பெண்கள் (lesbian), ஆண்விழை ஆண்களின் (gay) உலகை விவாதிப்பதில் தயக்கமும் சிக்கலும் உண்டு. ஏனென்றால் உலகம் இன்றும் ஆண் உடல்களாலே ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அப்படி இருக்க, ஆணதிகாரமானது ஆணுடலில் மட்டும் இல்லை, அது பெண்ணுடலில் வெளிப்டலாம் (ஜெயலலிதா ஒரு உதாரணம்), ஆண்விழை ஆணொருவனுக்குள் பெண்மை இருக்கலாம், அது இவ்வுலகின் அத்தனை ஒடுக்குமுறைகளையும் சந்தித்து வெளியே சொல்லாதபடி நிகழலாம் எனும் பார்வை, பெண்நிலையானது ஆண்-பெண் இருமையைக் கடந்தது என சமகால பின்னமைப்பியல் பெண்ணியர்கள் பேசுவது தமது அரசியல் பிரச்சாரத்துக்கு இடையூறாகிறது என ‘நேரடி பெண்ணியவாதிகளின்’ புகார். ஆண் அதிகாரமிக்கவன், அவனை எதிர்க்க வேண்டும், அதற்கு பெண்கள் ஒன்றிணைய வேண்டும் எனும் முழக்கம் சுலபமானது. அதே போல இரண்டாம் தலைமுறை ‘நேரடி’ பெண்ணியத்தில் பெண்களை சதா பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே சித்தரித்து ஆண்களை குற்றவுணர்வுக்கு ஆளாக்க முயல்வார்கள். அது அதிகார பேரத்துக்கு பயன்படும் என நம்புகிறார்கள். எல்லா ஆண்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது, ஆண்களின் இடத்தில் பெண்களின் சகோதரத்துவம் ஒரு அமைப்பாகத் தோன்றி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே தமக்கு விடிவு கிடைக்கும் என நம்புவது இவர்களுடைய இயல்பு. இந்த தரப்பு பெண்ணியவாதிகளே குடும்ப அமைப்புக்குள் இருப்பது ஆணாதிக்கத்துக்கு தம்மை ஒப்புக்கொடுப்பதாகும் என நினைத்து திருமணமாகாமல் வாழ்வதை உன்னதமானது என நம்புகிறவர்கள் (ஆனால் அவர்கள் தனியாக வாழ்வதற்கு வேறு காரணங்களும் இருக்கும்).
தமிழில் அம்பை இரண்டாம் காலகட்ட பெண்ணியத்தை சேர்ந்தவர். 1944இல் கோவையில் பிறந்து மும்பையில் பெங்களூரிலுமாக வளர்ந்தவர், வாழ்ந்தவர். 1962இல் வெளியான “நந்திமலை சாரலிலே” அவரது முதல் படைப்பு. 1967இல் கணையாழியில் வெளியான “சிறகுகள் முறியும்” அவருக்கு வாசகர்களிடையே தனித்த கவனம் பெற்றுத் தந்தது. அவரது பிரசித்தமான சிறுகதைத் தொகுப்பு “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” 1988இல் வெளியானது.
அம்பை தான் வளர்ந்த காலகட்டத்தின் சிந்தனைகள், போக்குகள், வாழ்வனுபவங்களை ஒட்டி பெண்ணியத்தை புரிந்து கொண்டவர். இவ்வகையில் அம்பையின் இன்றைய நீட்சியாக கட்டுரைகளில் பெருந்தேவியையும், கதைகளில் தமயந்தி போன்றோரையும் காண முடியும். நாம் வேலையிடங்களில், வீட்டில், பொதுவெளியில், சமூகவலைதளங்களில் பார்க்கிற படித்த பெண்களில் அநேகமானோர் அம்பையின் ‘குழந்தைகள்’ தாம். அதே நேரம் அம்பை தன் படைப்புகளில் சித்தரித்த பெண்ணியத்துக்கு இன்றைய, பெருந்தேவி உள்ளிட்ட நவீனப் பெண்களின் பெண்ணியத்துக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு.
ஆண்கள் என்றாலே கண்ணிவெடி என அம்பையின் நவீன பெண்களின் மனதுக்குள் ஆழமாக பதிந்திருக்கும், அதே நேரம் பெண்ணை சரிவர புரிந்து கொண்டு அவளுக்காக சிந்திக்கிற ஆண்களையும் உள்ளடக்கியதாக அவர்களுடைய உலகம் இருக்கும். இந்த ஆண்கள் என்னதான் நல்லவர்கள் என்றாலும் அவர்களுக்கு பெண்ணுலகில் முழுமையான குடியுரிமை கிடையாது, பெண்களே பெண்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள விடுதலைக்காக போராட வேண்டும், ஆண்கள் அடியாட்களாகக் கூட கூட வர வேண்டாம் என அம்பையின் பெண் பாத்திரங்கள் நினைப்பார்கள் அல்லது கதைகளின் இறுதியில் புரிந்து கொள்வார்கள் (sisterhood). அதே நேரம் குடும்ப அமைப்பை துறப்பதில், இந்திய பண்பாட்டை கடுமையாக விமர்சிப்பதில் அம்பைக்கு உடன்பாடு இல்லை. இந்திய பெண்ணியம் என ஒன்று சாத்தியம் என நம்பும் அவர் நமது தொன்மங்களை மறுவரையறை செய்து சிறுகதை எழுத முயன்றது, ஸ்பேரோ அமைப்பை உருவாக்கியது, தனது பெண் பாத்திரங்களை குடும்ப அமைப்புக்குள் இருந்தபடியே தன்னதிகாரம் கொண்டவர்களாக உணர வைத்தது இதனால் தான். சொல்லப்போனால் இந்த மட்டுப்பப்பட்ட புரட்சிகரத் தன்மையும் , அதே நேரம் விமர்சனத்துடன் மரபார்ந்த ஆணுலகை அணுகுகிற, மதத்தை, குடும்ப அமைப்பை நோக்குகிற பார்வையுமே அம்பையை அவரது தலைமுறைப் பெண் வாசகருடன் இணக்கமாக்கியது என நினைக்கிறேன். இன்றும் அம்பையை படிக்கையில் நமக்கு மயிர்க்கூச்செறிவது அவரது பெண் பாத்திரங்களின் (காந்திய பாணியிலான) இந்த ‘உள்ளிருப்பு போராட்ட’ அணுகுமுறையினாலே.
இது போக, கதாபாத்திரங்களை பல அடுக்குகள் கொண்டவர்களாக கட்டமைப்பதில், நமது அன்றாட உலகம், அதன் சடங்குகள், வீட்டின், சமையலறையின் அமைப்பு எந்தளவுக்கு பெண்களுக்கு எதிராக இருக்கிறது எனக் காட்டுவதில் நிறைய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சித்திரத்தை போன்று இருக்கின்றன அம்பையின் கதைகள். அதாவது அவரது கதைகளை நீங்கள் ஒரு முடிவை, உணர்வெழுச்சியை நோக்கி செல்லுகிற படைப்பாக மட்டும் அல்லாமல், ஒவ்வொரு பத்தியாக, அதில் வருகிற நுட்பமான குறிப்புகளைக் கொண்டு விவாதிக்க முடியும். அந்தளவுக்கு கலைநுட்பமும் அரசியலும் பொதிந்த எழுத்து அவருடையது. சிவசங்கரி, அனுராதா ரமணன் போன்ற வெகுஜன கதையாசிரியர்களுக்கும் அம்பைக்குமான முக்கிய வித்தியாசமே இந்த அரசியல் தான். அம்பையின் கதைகளில் ஆண்-பெண் உறவை ரொமாண்டிசைஸ் பண்ணுகிற முனைப்பே இராது. முதல் வரியில் இருந்தே பால்நிலையின் அரசியல் ஆரம்பித்து விடும். பெண்களைத் தவிர அவர் யாரையும் மகத்துவப்படுத்துவதும் இல்லை. அவருடைய கோயிலில் ஒரே ஒரு தெய்வம் தான் - அது பெண். பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டதனால் மட்டுமே அங்கு மரியாதையுடன் வரும் ஆண் பக்தர்கள், அதைச் சுற்றியுள்ள குடும்ப அமைப்பு, குடும்ப அமைப்பின் மீது உருவாகியுள்ள சமூக அமைப்புகள் மீது அவரெழுத்தில் சற்றே மரியாதை உண்டு.
கடந்த ஆண்டு வெளியாகி பெருமளவில் விவாதிக்கப்பட்ட The Great Indian Kitchen படமானது அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதையின் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்து விரிவாக்கப்பட்ட படைப்பென்றால் பாருங்கள். அந்தளவுக்கு செறிவு படைத்தவை அவருடைய கதைகள். அம்பையின் மற்றொரு சிறப்பு அவர் இந்திய பெண்ணியத்தை உருவாக்க முயன்ற அதே நேரத்தில் மார்க்ஸிய இயங்கியலின் பார்வையில் நமது குடும்ப அமைப்பு எப்படி செயல்படுகிறது, இங்கு அன்பு, பரிவு, ஆதரவு, குழந்தை வளர்ப்பு ஆகியவை எப்படி பெண்ணுழைப்பால் உற்பத்தி ஆகின்றன, அந்த உற்பத்தியின் பிரதிபலனான அதிகாரம் பங்குபிரிக்கப்படுவதில் உள்ள அசமத்துவம் என்ன என தன் கதைகளில் பேசினார். சமையலறை எப்படி ஒரு தொழிற்சாலையாக திகழ்கிறது என சித்தரித்தார். இந்த மார்க்ஸிய-பெண்ணிய இணைவு அவருடைய மற்றொரு பங்களிப்பு.
அதே நேரம், அம்பையின் பிரச்சார நோக்கம், உலகம் ஆண்-பெண் என்று இருமையாக மட்டுமே காண்பது, உடல்ரீதியான பாலடையாளமே ஒருவருடைய பாலினம் என்று நம்புவது அவரது கதைகளை, குறிப்பாக அவற்றின் முடிவுக்கு வரும் போது, தட்டையாக்கி விடுகின்றன. அம்பையின் கதைகள் பாதி இலக்கியமாகவும் மீதி துண்டறிக்கையாகவும் சில நேரம் மாறி விடுகின்றன என்பதே அவருடைய பிரதான குறை.
எப்படி அம்பையின் ‘மகள்களாக’ இன்றைய பெண்ணியர் பல இருக்கிறார்களோ அவ்வாறே அவருடைய அடுத்த தலைமுறை பெண்ணியர்களும், அம்பையின் கடந்த ‘வாரிசுகளும்’ தமிழில் 2000க்குப் பிறகு அறிமுகமாயினர். குறிப்பாக இங்கு ஆண் மொழி, பெண் மொழி விவாதம் நடந்ததுடன், பெண்ணுடலை எழுதுதல் எனும் பிரஞ்சு பெண்ணிய லட்சியம் இளம் பெண் கவிஞர்களை ஈர்த்தது. குட்டி ரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, லீனா மணிமேகலை போன்ற கவிஞர்கள் பெண்ணுடலை எழுதி - ஹெலன் சிக்ஸுவின் பாணியில் செயல்பட்டு - தமிழ் கவிதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார்கள். இவர்களில் லீனாவும், மாலதி மைத்ரியும் மூன்றாம் காலகட்ட பெண்ணியத்தின் பின்நவீனத்துவத்தை சரிவர உள்வாங்கியவர்கள். துரதிஷ்டவசமாக, அம்பை தொண்ணூறுகளைக் கடந்து எழுதினாலும் கருத்தளவில், மனதளவில் தன்னுடைய காலகட்ட எழுத்துடனே நின்று கொண்டார். இந்த பெண்ணிய கவிஞர்களுடன் அவர் கைகோர்க்கவில்லை. விளைவாக, அம்பையின் பெண்ணெழுத்தில் பெண்ணுடல் ஒருவித உற்பத்தி எந்திரமாக மட்டுமே முடிந்து விட்டது. பாலுடலின் கட்டற்ற சாத்தியங்களை, விடுதலையை அவரால் பேச முடியவில்லை. ஒட்டுமொத்தத்தில், அம்பையின் எழுத்துலகில் உள்ளவை அசலான பெண்ணுடல்கள் அல்ல, ஒருவித அரசியல் உடல்கள் மட்டுமே எனலாம். இந்த தேக்கம் அவருடைய மற்றொரு குறை.
அம்பை சி.எஸ் லெக்ஷ்மி எனும் பெயரில் ஆங்கிலத்தில் சரளமாக எழுதக் கூடியவர். அதிகம் கவனிக்கப்படாத பெண் கலைஞர்களைப் பற்றி ஆய்வு செய்தும், பேட்டி கண்டும் எழுதியவர், பிரசுரித்தவர். ஆங்கிலத்தில் அவர் உருவாக்கிய பெண் துப்பறிவாளர் தான் சுதா குப்தா. அவர் துப்பறியும் மூன்று கதைகளின் தொகுப்பான A Meeting on the Andheri Bridge ஒரு ஜாலியான லைட்டான புனைவெழுத்து. அதே பாதிக்கப்படும் குரலற்ற பெண்கள், அவர்களுக்கு உதவும் துணிச்சலான படித்த நவீன பெண் எனும் வழக்கமான பாத்திரங்கள் தாம் இதிலும் வருகிறார்கள், ஆனால் துப்பறியும் கதையின் பரபரப்பான களத்தில்.
2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெறும் அம்பைக்கு வாழ்த்துகளும் அன்பும்!
அம்பைக்கு விருது வழங்கப்பட்டதன் நீட்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளின் சாகித்ய ஆகாடெமி விருதுகள் 2000இல் தமிழில் தோன்றிய, நான் மேலே குறிப்பிட்ட ‘உடலை எழுதிய’ பெண்ணிய படைப்பாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்விருது அதிகமான எண்ணிக்கையில் ஆண்களுக்கே வழங்கப்படுகிறது எனும் புகார் களையப்பட வேண்டும். அப்போதே நமது நவீன இலக்கிய படிநிலைகளுக்குள் ஓரளவுக்கு சமத்துவம் வரும்.