“ஆறு பெருகி வரின் அணை போடலாகும்
அன்பின் பாதையில் அணை இடலாமோ?”
“கண்ணும் கண்ணும் கலந்து” பாடல், “வஞ்சிக்கோட்டை வாலிபன்”
“மதத்தின் குரூரத்திற்கென ஒரு நெடிய ஏணி உள்ளது; அதன் பல படிகளில் மூன்று முக்கியமானவை. மனிதர் தமது கடவுளர்க்கு என நரபலி கொடுத்ததுண்டு, தாம் மிகவும் நேசிப்பவரைக் கூட பலிகொடுத்ததுண்டு … அதன் பிறகு மானுட அறத்தின் காலகட்டம் தோன்றிய போது அவர்கள் தமது வலுவான உள்ளுணர்வுகளை, தமது ‘இயல்பை’, தமது கடவுளுக்கு தியாகம் செய்தனர் … இறுதியாக: தியாகம் செய்ய என்ன மிச்சமிருந்தது? … மனிதர் தமது கடவுளரையே தியாகம் செய்தனர், கற்களை, முட்டாள்தனத்தை, புவியீர்ப்பை, விதியை, தம் மீதான உச்சபட்ச குரூரத்தின் வெளிப்பாடாக இன்மையை எல்லாம் வழிபட நேரவில்லையா?”
- நீட்சே, “Beyond Good and Evil”, அத்தியாயம் III, 1886
“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உள்ளது. இது உண்மையல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனுக்கும் தான் அதை முழுங்குவதை தவிர்க்க முடியாத தூண்டில் இரை ஒன்று உள்ளது. ஒவ்வொருவரையும் தம் வசப்படுத்த அந்த இரைக்கு மானுடத்தின், பெருந்தன்மையின், மென்மையின், தியாகத்தின் பளபளப்பை மட்டும் கொடுத்தால் போதும்; பிறகு அவர்கள் எதையும் முழுங்குவார்கள். அவர்களுடைய ஆன்மாக்களுக்கு இவையே ஐஸிங், உணவுத்துண்டு; வேறு ஆன்மாக்களுக்கு வேறு விசயங்கள் இப்படி உண்டு.”
- நீட்சே, “Human, All Too Human: A Book for Free Spirits”
உலகில் மிக ஆபத்தான விசயம் பாசம், அதுவும் ரத்த பாசம் - இது தான் அண்மையில் நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம். அது ஒரு கூர்மையான இருமுனைக் கத்தி, நம்மைப் பாதுகாப்பதாக தோற்றம் அளித்தபடியே இருக்கும் அது ஒருநாள் நம்மை அறுக்கவும் கூடும். கூர்மையான கத்திகளுக்கு என்று ஒரு மனம், பிரக்ஞை உண்டு. அது நம்மை செலுத்தியபடியே இருக்கும் என சொல்லுவார்கள். அது பாசத்துக்கும் பொருந்தும்.
பாசத்தின் அடிப்படையில் அல்லாமல் மனிதர்களை அவர்கள் இருக்கிற சந்தர்ப்பம், அவர்களுடைய அப்போதைய நோக்கம், நாட்டத்தின் அடிப்படையிலே மதிப்பிட வேண்டும். எனக்கு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒன்று தேவைப்படுகிறது, அந்த சூழலானது சினிமாவில், நாடகத்தில் வருகிற ஒரு காட்சியை ஒத்தது. நோக்கம் ஒரு பாத்திரத்தின் தேவையை ஒத்தது. இந்த இரண்டும் எப்படி ஒரு பாத்திரத்தை குறிப்பிட்ட வசனங்களை பேச வைக்கிறதோ, எப்படி குறிப்பிட்ட விதமாக நடந்து கொள்ள வைக்கிறதோ அப்படியே மனிதர்களையும் அவர்களுடைய சூழலும் நோக்கமும் வழிநடத்துகிறது. இந்த இரண்டையும் கடந்து மனிதனுக்குள் எதுவுமே இல்லை.
சுயநலத்தின் உச்சபட்சமான வடிவமே குடும்ப அமைப்பு. ஆனால் அந்த உண்மை புலப்படாமல் இருக்கும் பொருட்டே பாசம் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படுகிறது. தியாகம் எனும் மற்றொரு போலித்தனமும் அடுத்து முகமூடி அணிந்து கைகால்களை உதறியபடி வருகிறது. படத்தின் பின்னுள்ள தன்னலத்தை நாம் கண்டுபிடிக்கும் போது நமது கவனத்தை சிதறடிக்க தியாகம் குறுக்கே வருகிறது. தியாகம் ஒரு அப்பாலைத் தன்மை கொண்ட கட்டமைப்பு (a metaphysical construct). நீங்கள் ஒன்றாக இருந்தபடியே மற்றொன்றாக மாறுவதாக உங்களை ஏமாற்றுகிற தந்திரம். நீங்கள் உங்கள் காதலியின் மகிழ்ச்சிக்காக நெடுந்தூரம் பயணித்து செல்கிறீர்கள். அப்போது தியாக உணர்வு தோன்றி நீங்கள் உங்களைக் கடந்து மற்றொருவருக்காக வாழ்வதாக, நீங்கள் நீங்கள் அல்லாமல் ஆவதாக ஒரு உணர்வை அளிக்கிறது. ஜிவ்வென்ற உணர்வு அது. தினமும் அலுப்பாக வேலைக்கு சென்று வரும் ஒருவருக்கு தீடீரென என் குழந்தையின் படிப்புக்காக உழைக்கணும் எனும் முனைப்பு வந்தால் பிறகு வேலை செய்வதே ஒரு உன்னதமான கடமை ஆகி விடும். நாளை அந்த குழந்தை வளர்ந்ததும் அதற்காக கடனை வாங்கி அதைத் தீர்க்க போராடும் போதும் இந்த தியாகி உணர்வே உங்களை மகிழ்ச்சியாக்கும். அந்த குழந்தை நீங்கள் இனி தன் வாழ்வில் வேண்டாம் என சொல்லும் போது தான் முதன்முதலாக ஜெர்க் ஆகி நிற்பீர்கள். ஏனென்றால் அங்கே தியாகத்துக்கு இடமில்லாமல் போய் விடும். கணவன்-மனைவி, அம்மா-மகன் ஆகிய உறவுகளிலும் இதுவே நடக்கிறது. ஆளாளுக்கு நான் தியாகம் செய்கிறேன், நீ செய்யாதே எனத் தவிக்கிறோம். ஏனென்றால் இல்லாவிட்டால் உண்மை பல்லிளிக்கும். ஏனென்றால் நாம் நாமாக இருந்தாக வேண்டும். அதில் நமக்கு ஒரு பயம் உள்ளது.
இதற்குப் பதிலாக மனிதர்களை தியாகமும், பாசமும் அற்றவர்களாக அந்தந்த சமயத்தில் சந்தர்பத்தில் தேவைப்படுகிற காரியங்களுக்காக ஓடுகிறவர்களாகக் கண்டால் வாழ்க்கை தெளிவாக இருக்கும். பாசத்தை, தியாகத்தை எதிர்பாராதவர்களிடத்தே மனிதர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். என்னதான் நாம் பண்பாட்டளவில் பாசக்காரர்கள் என்றாலும் உள்ளுக்குள் அது ஒரு பாசாங்கு என்று நமக்குத் தெரியும். நமக்கு அந்த மூச்சுமுட்டுதல் இல்லாத நிஜமான உறவுகள் தேவைப்படுகின்றன.
பாசத்தை, அன்பைக் காட்டும் போது, ஒரு வேலையை செய்து கொடுக்கும் போது “இது இப்போதைக்கு தேவையிருக்கிறது, அதனால் செய்கிறேன்” என உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மிக உஷாராக இருந்தால் ஒழிய நாம் நொடியில் இந்த பாசச்சேற்றில் புதைந்து விடுவோம்.
யாராவது ‘நான் உனக்காக வாழ்கிறேன்’ என்று சொன்னால் அவர்களிடம் இருந்து ஓடி வந்து விடுங்கள். ஆபத்தானவர்கள் அவர்கள்.