Skip to main content

தமிழில் கிரிக்கெட் எழுத்து - தினேஷ் அகிராவின் வருகை



எனக்கு நீண்ட காலமாக ஒரு வருத்தம் இருந்தது. நமது சிறுபத்திரிகை மரபில் அப்போது படைப்பாளிகள் இலக்கியம், கலை, அழகியல் தாண்டி எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என ஒரு எழுதப்படாத விதி இருந்தது. அதையும் கடந்து போகிறவர்கள் ஓவியம், செவ்வியல் இசை பற்றி எங்கோ ஒரு ஓரமாக இருந்து எழுதினார்கள். இன்னொரு பக்கம், அரசியல் கோட்பாட்டு எழுத்தாளர்கள் இருந்தார்கள். அன்றாட வாழ்வில் சாப்பாடு, விளையாட்டு, சினிமா இசை, ராக் இசை, மெட்டாலிக்கா, தொலைக்காட்சி, சினிமாவின் அழகியல் என எவ்வளவோ ரசிக்கத்தக்க விசயங்கள் உண்டு. இவற்றை ஏன் எழுத்தாளர்கள் பரிசீலிக்காமல் பனிமலையின் சிகரத்தில் ஒற்றைக்கால் தவம்புரியும் ஜடாமுனிகளைப் போலிருக்கிறார்கள் என விசனித்திருக்கிறேன். தமிழில் டென்னிஸ், உதைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட படைப்பாளிகள் இருந்தார்கள், ஆனால் அவர்கள் அவை பொதுமக்களின் துய்ப்புக்கான சங்கதி என நினைத்து தம் எழுத்தில் அவற்றைப் பற்றி எழுதாமல் ‘வெள்ளிக்கிழமை விரதம்’ அனுசரித்தார்கள். இது உடைந்தது இணைய எழுத்து, சமூகவலைதளங்கள் தோன்றிய பின்னரே. சினிமா இசை, சாப்பாடு, கிரிக்கெட், வெகுஜன படங்கள் என பலவற்றைப் பற்றி சீரியஸான கட்டுரைகள் வெளியாகின.

 அப்போதும் கிரிக்கெட் சற்று வளர்ச்சியற்ற குழந்தையாகவே எஞ்சியது. அரவிந்தன் கிரிக்கெட் பற்றி இலக்கிய பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இன்னொரு பக்கம் நான் இந்த இலக்கியவாதிகள் இப்படி இருக்கிறார்களே, சரி நான் எழுதிக் காட்டுகிறேன் எனும் வீம்பில் கிரிக்கெட் பற்றி அதிகமாக எழுதவும் ஒரு புத்தகம் கொண்டு வரவும் செய்தேன். அதன் பிறகு தினேஷ் அகிரா வந்தார்.


என்னையும் அரவிந்தனையும் விட தினேஷுக்கு ஒரு கூடுதல் சிறப்பு அவர் தன்னை ஒரு கிரிக்கெட் எழுத்தாளராகவே உணர்கிறார் என்பது. அவர் அதற்காக ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கிறார். ஆட்டத்தை உற்று கவனித்து தொழில்நுட்பரீதியாக கற்றுக் கொள்கிறார். தன் வாசிப்பின் வழி ஒரு நல்ல தமிழ் நடையைக் கொண்டிருக்கிறார். நான் எழுதத் தொடங்கிய போது line, length , pitch, leg spin, bouncer போன்ற பல கிரிக்கெட் சொற்களுக்கு தமிழில் இணைச்சொற்களை கண்டறிய திணறினேன். அப்படியே ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தினால் அது தமிழ்க்கட்டுரை போன்றே இராது. தமிழ்ப்படுத்தினாலும் கரடுமுரடாக இருக்குமோ எனும் அச்சம். ஆனால் இன்று தினேஷின் காலத்தில் நமக்கென ஒரு தனி கிரிக்கெட் சொல்லாட்சி தோன்றி விட்டது. அவர் ஒரு சரளமான மொழியை உண்டாக்கி விட்டார்.


 ஒரு கிரிக்கெட் வீரரை நாம் ஒரு எழுத்தாளனை விமர்சனத்தில் அறிமுகப்படுத்துவதைப் போன்றே அவர் அறிமுகப்படுத்துகிறார் - அவருடைய வாழ்க்கை, அதில் உள்ள சவால்கள், அவருடைய இயல்பு, அவருக்கான இடம் இப்படி ஒவ்வொன்றாக படிப்படியாக ஒரு அழகிய சித்திரத்தை அளிக்கிறார். குறிப்பாக பந்து வீச்சைப் பற்றி தினேஷ் எழுதிய பல கட்டுரைகள் மிகவும் சிலாகிப்பானவை. நான் பலமுறை அவற்றை மீளப் படித்திருக்கிறேன். உடனடியாக் நினைவுக்கு வருவது நெயில் வாக்னர் பற்றின அபாரமான கட்டுரை. அவ்விதத்தில் தமிழின் ஒரு முதல் முழுமையான கிரிக்கெட் எழுத்தாளராக தினேஷ் அகிரா உருவாகி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவர் இந்த சிறந்த கிரிக்கெட் கட்டுரைகளை எழுதி இணையதளங்களிலும் பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொண்ட போது கிரிக்கெட் கட்டுரைகளை சில ஆண்டுகளாக எழுதாமல் தவிர்த்து வந்த எனக்கு மீண்டும் தீவிரமாக அதைப் பற்றி எழுத ஊக்கமளித்தது. கிரிக்கெட்டை தொழில்நுட்ப ரீதியாக அணுகி அலசி சில கட்டுரைகளை இந்த கட்டத்தில் நானும் எழுத அவருடைய இருப்பு உதவியது. நானும் அவருமாக பந்து வீச்சாளர்கள் பற்றி ஒரு நூலை இணைந்து எழுத திட்டமிட்டோம். ஆனால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் தன்னுடைய கிரிக்கெட் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வாசக சாலை வெளியீடாக கொண்டு வருகிறார். நான் அந்நூலைப் பற்றி இன்று சென்னையில் பேச வேண்டியது. ஆனால் நான் பெங்களூரில் இருப்பதாலும், வேலை நெருக்கடி அதிகமாகி விட்டதாலும் பயணிக்க முடியாமல் அவ்வாய்ப்பை தவற விட்டேன். இருந்தாலும் அந்த நூல் பெரும் வெற்றி பெற என் இதயபூர்வமான வாழ்த்துக்களை இந்த சந்தர்பத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


கிரிக்கெட் பத்திகளுக்கு உள்ள முக்கியத்துவம் இன்றும் வெகுஜ ஊடகங்களுக்கும் விளங்கவில்லை. நான் குமுதத்திலும் தினேஷ் அகிரா விகடனிலும் கிரிக்கெட் பத்திகள் எழுதினாலும் இப்போதும் கிரிக்கெட் கட்டுரைகளை அதிகமும் அந்த விளையாட்டில் பிரத்யேக ஆர்வமோ வாசிப்போ இல்லாத ரிப்போர்ட்டர்களே எழுதுகிறார்கள். (இது சினிமா எழுத்தில் உள்ள பிரச்சனையும் தான்.) கிரிக்கெட் எழுத்துக்கு என ஆங்கிலத்தில் தனி இடமுண்டு. கிரிக்கெட் ஒரு ஆங்கிலேய விளையாட்டு என்பதால் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே கிரிக்கெட் எழுத்து அங்கு அரும்பு விடத் தொடங்கி விட்டது என நினைக்கிறேன். காலனியாதிக்கம் மூலம் உலகெங்கும் கிரிக்கெட் பரவிட ஆங்கிலேயர்களுக்கு ஓரளவுக்கு இணையாக கறுப்பினத்தவர்கள், ஆசியர்களும் கிரிக்கெட் பற்றி எழுதினார்கள். குறிப்பாக இந்தியாவில் ஆங்கில அச்சு ஊடகம் கிரிக்கெட் எழுத்தில் வல்லுநராக இருப்பவர்களுக்கு தனி இடம் அளித்தது. ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களிலும், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் போன்ற வார இதழ்களிலும் பல நல்ல கிரிக்கெட் கட்டுரைகள் ஆட்டத்தின் நுணுக்கங்களை, அழகியலை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதம் வெளியாகின. நான் அவற்றைப் படித்து தான் (ஆட்டத்தை பார்த்து அல்ல) கிரிக்கெட் மீது காதலுற்றேன். இன்று அந்த இடத்தை இணைய இதழ்களிலும் கிரிக்இன்போ போன்ற செயலிகளிலும் வரும் கட்டுரைகள் எடுத்துள்ளன. கிரிக்கெட் எழுத்தில் ஆர்வமுள்ள என்னுடைய நண்பரான டேவிட் வெஸ்லி கிரிக்கெட்டை எழுத்தில் ரசிப்பதும் ஒரு பார்வையாளனாக அரங்கில், டிவியில் ரசிப்பதும் இருவேறு அனுபவங்கள் என்று சொல்வார். நான் பார்ப்பதை விட கிரிக்கெட்டைப் பற்றி விவாதிப்பது, படிப்பது, கற்பனை செய்வது இன்னும் மேலான ஆழமான சுவையான அனுபவம் எனக் கருதுகிறேன். 


கிரிக்கெட் எழுத்தில் ஆங்கிலத்தில் பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன. கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு கலாச்சார, அரசியல் அனுபவமாக முன்வைக்கும் சி.எல்.ஆர் ஜேம்ஸின் Beyond a Boundary, இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றைப் பேசும் கவாஸ்கரின் கட்டுரைகள், கிரிகெட் வாழ்க்கை வரலாற்று நூல்களில் நசீர் ஹுசேனின் Playing with Fire, அகாஷ் சோப்ராவின் Beyond the Blues, சஞ்சய் மஞ்சிரேக்கரின் Imperfect, கங்குலியின் A Century Is Not Enough, டேரன் காபின் Dazzler, ஷோயப் அக்தரின் Controversially Yours, ஸ்டீவ் வாஹின் Out Of My Comfort Zone, மெக்ராத்தின் வாழ்க்கைக் கதையான Line and Length, காம்பிளியின் வாழ்க்கைக் கதையான Vinod Kambli: The Lost Hero ஆகியவை நான் படித்தவற்றில் பிடித்தமானவை. கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தமட்டில் ராமசந்திர குஹாவின் A Corner of the Cricket Field சுவாரஸ்யமானது. கிரிக்கெட் நாவல்களில் எனக்கு பிடித்தது ஷேஹன் கருணதிலகாவின் Chinaman: The Legend of Pradeep Mathew. நான் இன்னும் வாசிக்காத எத்தனையோ முக்கியமான கிரிக்கெட் நூல்கள் ஆங்கிலத்தில் மலை போல் குவிந்து கிடைக்கின்றன. என்னுடைய ஒரு ஆசை இந்த நூல்கள் தமிழில் மொழியாக்கப்பட்டு வெளியாக வேண்டும், இதைப் போன்ற நூல்கள் தமிழிலும் எழுதப்பட வேண்டும் என்பது. அதற்கு வெகுஜன இதழ்களில் தீவிரமான விரிவான கிரிக்கெட் எழுத்துக்கு இடமளிக்கப்பட வேண்டும். தமிழ் டிவி கிரிக்கெட் வர்ணனையில் தினேஷ் அகிராவைப் போன்றோர் கால் பதிக்க வேண்டும். தினேஷின் பாதையில் இன்னொரு பத்து கிரிக்கெட் எழுத்தாளர்கள் தோன்ற வேண்டும். (தமிழில் ஒரு கிரிக்கெட் நாவலை எழுத வேண்டும் எனும் ஆசையும் எனக்குண்டு.)


 நான் மேலே ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது போல நாளை ஒரு வாசகர் / விமர்சகர் தமிழில் வந்துள்ள முக்கிய கிரிக்கெட் நூல்களை பட்டியலிட வேண்டும் அடுத்த கால் / அரை நூற்றாண்டில் அது நிச்சயமாக நிகழும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...