எனக்கு ரொம்ப நாட்களாகவே காங்கிரஸ் பாகஜவின் பி டீமோ எனும் சந்தேகம் உள்ளது. ஏனென்றால் பாஜகவை அகற்ற வேண்டும், பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது எனும் அவேசம் இந்துத்துவாவை விரும்பாத மக்களுக்கும், ஏனைய எதிர்க்கட்சியினருக்கும் உள்ளதைப் போல காங்கிரஸுக்கு இல்லை. இன்று நேற்றல்ல கடந்த பத்தாண்டுகளாகவே தான். நாம் ராகுல் காந்தியின் மோடி எதிர்ப்பை வைத்து மட்டும் காங்கிரஸை மதிப்பிடக் கூடாது என நினைக்கிறேன். காங்கரஸுக்குள் அவர் ஒரு தனிக்குரல் எனும் உணர்வு நமக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
மூன்று கேள்விகளைம் கேட்கிறேன் -
1) தமிழகத்தில் அதிமுகவை எதிர்ப்பதில் ஒரு எதிர்க்கட்சியாக திமுக காட்டிய முனைப்பில் நூறில் ஒரு சதவீதமாவது காங்கிரசிடம் பாஜகவை எதிர்ப்பதில் இருந்ததுண்டா? ஒரு பக்கம் ராகுல் காந்தி அறிக்கைகளாக விடுவார், மறுபக்கம் மற்ற காங்கரஸ் தலைவர்கள் இருட்டில் பாஜகவுடன் கைகோர்த்தபடி மோடியைப் புகழ்ந்தபடி இருப்பார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக மற்ற மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை விமர்சித்து இப்போது வரை நான் பார்த்ததில்லை.
அடுத்து, (2) கொள்கையளவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான வித்தியாசங்கள் கடந்த முப்பதாண்டுகளில் வெகுவாக குறைந்து விட்டது. ஆகையால் சித்தாந்த ரீதியாக பாஜகவை எதிர்க்க காங்கிரஸால் முடியாமல் போகிறதா? நமக்கு பெரியார், அண்ணா போன்று ஒரு தலைவர் உள்ளது போல காங்கிரஸுக்கு ஒரு இந்துத்துவ எதிர்ப்பு சித்தாந்தி உண்டா? காந்தியே ஒரு மென்வலதுசாரி எனும் போது அவரை வைத்து எப்படி பாஜகவை வீழ்த்த முடியும்? பாஜகவால் காந்தியை தன்வசப்படுத்த முடிகிறது, ஆனால் தமிழகத்தில் பாஜகவால் திராவிட தலைவர்களை அப்படி செய்ய முடிவதில்லை. சித்தாந்த ரீதியாகவே காங்கிரஸ் மிக பலவீனமான மென்வலதுசாரிக் கட்சியாக இருக்கிறது. அதனாலே அவர்களால் சித்தாந்த ரீதியாக பாஜகவை அடிக்க முடிவதில்லை. அதனாலே காங்கிரஸ் தலைமை கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் ஸ்டைலை போலச் செய்ய முயன்றது. தோல்வியும் உற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவின் பல மக்கள் விரோத முடிவுகளை காங்கிரஸால் தீவிரமாக எதிர்க்க முடியவில்லை. மக்களே தாமாக நின்று போராடி பாஜகவை பின்வாங்க செய்தனர். அப்போதெல்லாம் ராகுல் கூட தள்ளி நின்றே ஆதரவளித்தார். ஏன்? மக்களே பார்த்துக் கொள்வார்கள், நாம் புகுந்து நேரடியாக ஆதரவு கொடுத்தால் அதை பாஜக பயன்படுத்தும் என்றா? ஏன் அவ்வளவு தாழ்வுணர்வு? ஏன் ஒரு திமுகவுக்கோ கம்யூனிஸ்ட் கட்சிக்கோ அந்த அச்சம் இல்லை? கொள்கை அளவிலே இந்த முடிவுகளுக்கு பாதிக்கு பாதி இணங்கக் கூடிய கட்சியாகவே காங்கிரஸ் தலைமை உள்ளது என்பதாலா? காங்கிரஸ் தொடங்கிய திட்டங்களை, காங்கிரஸின் ஆலோசனைகளையே நாங்கள் செயல்படுத்துகிறோம் என பாஜக நியாயப்படுத்தியதில் உண்மை இல்லையா? அதெப்படி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒரே கொள்கை, நிலைப்பாடு சில முடிவுகளில் இருக்க முடியும்? போராடும் மக்களுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட இக்கட்சிக்கு இல்லை, காற்றடிக்கும் திசைக்கு வளைந்து கொடுப்பதைத் தவிர என்பதாலா?
3) இறுதியாக, பாஜகவினர் தொடர்ந்து விமர்சிக்கிற தலைவராக நேரு மட்டுமே ஏன் இருக்கிறார். காந்தியை, இந்திராவை, ராஜீவை, அட மன்மோகன் சிங்கைக் கூட இந்துத்துவர்கள் தீவிரமாக விமர்சிப்பதில்லையே? மோடி தனக்கு இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை உண்டென்று கூட சொல்லி இருக்கிறார். ஏன் வரலாற்றில் நேரு மட்டுமே அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறார்? சித்தாந்த ரீதியாக மற்ற காங்கிரஸ் தலைவர்கள் / பிரதமர்கள் தமக்கு இணக்கமானவர்கள் என பாஜக கருதுகிறதா?
ஆக காங்கிரஸ் இன்று பலவீனமான மாற்றுக் கட்சியாகத் தோன்றுவதற்கு காரணம் ராகுல் அல்ல தானே? அது காங்கிரஸின் அடித்தளத்தில் உள்ள விரிசல்களினால் அல்லவா?
வலதுசாரிகளுக்கு நேரெதிரான சித்தாந்த தலைமையாக தம்மை அறிந்து கொண்டு மக்களுக்கும் அவ்வாறே தம்மை முன்வைக்காமல் காங்கிரஸால் மோடியை வீழ்த்த முடியுமா? ஒரு ஏ டீம் இருக்கும் போது மக்கள் ஒரு பி டீமுக்கு வாக்களிப்பார்களா? அப்படி வாக்களித்தாலும் அது தொலைநோக்கில் இந்நாட்டுக்கு நல்லதா?
நேருவின் காலத்தில் காங்கிரஸ் தன்னை ஒரு இடதுதன்மை கொண்ட மையவாத கட்சியாக உருமாற்றியது. அதையாவது ராகுல் தலைமையில் இப்போதுள்ள கட்சியால் செய்ய முடியுமா?