இன்றைய ஆங்கில ஹிந்து நாளிதழின் நடுப்பக்க கட்டுரையான "A Reform Wave Lakshadweep Could Do Without"இல் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லா ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தருகிறார். லட்சத்தீவுகளில் பிரபுல் படேல் அறிமுகப்படுத்தும் " சீர்திருத்தங்களில்" ஒன்று மாட்டுக்கறி தடை. இத்தனைக்கும் லட்சத்தீவுகளில் அரசின் பண்ணைகளில் தவிர எங்குமே மாடுகள் இல்லை. இந்த அரசின் கொள்கைகளில் மதவெறி எந்தளவுக்கு ஆழமாக இறங்கி உள்ளது பாருங்கள்; குறைந்த அளவுக்கு மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் உள்ள மாநிலங்களில் பாஜக மாட்டுக்கறி தடை கொண்டு வரும் நோக்கம் அந்த உணவை சாப்பிடுவதாக நம்பப்படும் சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி சட்டவிரோத கும்பலாகக் காட்டத் தான். அண்மையில் கர்நாடகாவில் மாட்டுக்கறி தடைச்சட்டம் கொண்டு வந்தார்கள், வயதான மாடுகளைத் தான் கறிக்கு விற்க வேண்டும் என்றார்கள். ஆனால் சட்டத்துக்குப் பிறகும் மாட்டுக்கறி அதே போலக் கிடைக்கிறது. அது யார் புண்ணியத்தால் எனத் தெரியவில்லை. நல்லவேளை உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நாம் காண்பது போன்று மாட்டுக்கறியை வீட்டில் வைத்திருந்ததற்காக மக்களை அடித்துக் கொல்லும் கலவர, கும்பல் வன்முறை அரசியல் இங்கு உருவாகவில்லை. இதற்கு எடியூரப்பாவைத் தான் பாராட்ட வேண்டும். அவரை கவிழ்த்து அவரிடத்தில் தேஜஸ்வி சூர்யா போன்ற கலவரம் தூண்டும் தலைவர்களை முன்னெடுக்கும் முயற்சிகள் மத்திய அரசின் துணையுடன் நடந்தேறி வருகின்றன. மக்கள் விழித்துக் கொள்ளாவிடில் ஒருநாள் கர்நாடகாவையும் உத்தர பிரதேசம் ஆக்குவார்கள்.
இப்போது அவர்களுடைய இலக்கு லட்சத்தீவுகளில் உள்ள இஸ்லாமியர்!