Skip to main content

எதிர்விமர்சனமா பாராட்டுரையா?



கார்ல் மார்க்ஸ் இன்று பேஸ்புக் நேரலையில் வாசகர்களின் இலக்கியக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது “ஏன் இலக்கிய நூல்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவதில்லை?” எனும் கேள்வி வந்தது. அதற்கு கார்ல் அளித்த பதிலுடன் எனக்கு உடன்பாடில்லை. அதைப் பற்றியதே இப்பதிவு.


கார்ல் எதிர்விமர்சனங்கள் பொதுவெளியில் அவசியமில்லை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் இரண்டு:

1. ஏற்கனவே வாசகர்கள் குறைவு. எதிர்மறையாய் பேசி அவர்களையும் ஏன் வாசிக்க விடாமல் பண்ணனும்?

2. மேடை நாகரிகம் கருதி ஒரு புத்தக விமர்சன / வெளியீட்டு அரங்கில் எதிர்க்கருத்துகள் சொல்லத் தேவையில்லை. அதுவே மாண்பு, தமிழரின் கலாச்சாரம்.


நான் பொதுவாக எழுத்தாளர்கள் எழுதும் விமர்சனங்களைப் படிப்பதில்லை. முன்பு பத்திரிகைகளில் அதிகமாக கவிதைத்தொகுப்புகளுக்கு விமர்சனம் வரும். இப்போது புனைவு, அபுனைவு நூல்களுக்கு அதிகமும் வருகிறது. ஒன்று பொத்தாம்பொதுவாக அந்நூலின் கருத்துக்களை சுருக்கிச் சொல்லி, எந்த மதிப்பீடும் இல்லாமல் இருக்கும். அல்லது, புத்தகத்தை எழுதியவர் பெண் எனில் விதந்தோம்பி எழுதுவார்கள். பேஸ்புக் வரும் முன்பு மிகப்பெரிய டேட்டிங் வெளியாக விமர்சனப் பக்கங்களே இருந்தது என நினைக்கிறேன். இப்போது அவர்கள் இன்பாக்ஸுக்கு நகர்ந்து விட்டார்கள். ஆண்கள் எழுதிய நூல் எனில் எழுத்தாளரை காயப்படுத்தக் கூடாது எனக் கருதி தடவித் தடவி எழுதுவார்கள். இப்படியாக நமது விமர்சனப் பண்பாட்டு பொய்ப்புரட்டு வெளியாக மாறி விட்டது. கார்லும் இதை ஒப்புக் கொள்கிறார். தனிப்பட்ட உரையாடல்களில் மட்டுமே உண்மையை விமர்சகர்கள் சொல்லுவர்கள், அப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார். என்ன ஒரு அவலமான சூழல்!


இதன் விளைவு என்னவென்றால் ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் ஒரு நல்ல பேச்சாளரோ மூத்த எழுத்தாளரோ ஒரு புத்தகத்தை பாராட்டி மனம் நெகிழ்ந்து பேசி முடிக்கையில் நிறைய பேர் அரங்கம் அதிர கைதட்டுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்பு நான்கைந்து பேரே புத்தகத்தை வாங்குவார்கள். கைத்தட்டியவர்களில் பாதி பேர் வாங்க முன்வந்தால் பதிப்பாளர் கைவசம் புத்தகம் இல்லாமல் பதறிப் போவார். வாங்க வேண்டும் என நினைத்து வந்தவர்கள் மட்டுமே வாங்குகிறார்கள். இவர்கள் அவரது வாசகராகவோ, நண்பராகவோ இருக்கலாம். ஏன் மிச்ச பேர் வாங்குவதில்லை என்றால் - கார்ல் சொல்வதைப் போல - அது ஒட்டுமொத்தமாக பொய்களின், மிகைகளின் தொகுப்பு என அவர்கள் அறிவார்கள். பெரும்பாலான வெளியீட்டு உரைகளின் நிலை இதுவே. இவற்றின் ஒரே பயன் ஒரு சிறிய கவனத்தை புத்தகத்தின் மீது ஏற்படுத்துகிறது என்பது தான். நானும் கூட புத்தகங்களை வெளியிட்டு பேசியிருக்கிறேன். “இது தான் உலக இலக்கியத்திலேயே மகத்தான எழுத்து” என எப்போதும் நான் கூவியதில்லை. எதிர்மறைக் கருத்துக்களை தவிர்க்கலாம், ஆனால் அதே நேரம் மிகையான புகழ்ச்சியையும் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒட்டுமொத்தமாக விமர்சனங்கள் மீதே அவநம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துகிறது.


இன்னொரு பிரச்சனை ஏன் புகழ்கிறார்கள் என்பது - மேடை நாகரிகம், தமிழர் பண்பாடு மட்டுமல்ல ஒரு மோசமான அரசியலும் இதன் பின்னால் உள்ளது. நீங்களே அடுத்த முறை கவனியுங்கள்: ஒரு வெளிநாடு வாழ் எழுத்தாளர் புத்தகம் வெளியிட்டால் மூத்த எழுத்தாளர்கள் தவறாது போய் வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளிக் குதித்து பாராட்டுரை வாசிப்பதை காணலாம். எப்படியாவது ஒரு வெளிநாட்டு பயணத்தை அவர் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனும் நோக்கம் இதில் உள்ளது வெளிப்படை. இதை தனிப்பட்ட முறையில் அந்த எழுத்தாளரிடம் இவர்கள் கேட்கலாமே, ஏன் இப்படி ஊருக்கு முன் அம்பலப்பட வேண்டும்?

அடுத்து, இப்படியாக புகழப்படுகிற எழுத்தாளர் மூத்த எழுத்தாளரின் குழுவில் பண பலமும், செயலூக்கமும் மிக்கவராக இருக்கலாம். ‘பாசத்துக்குரிய தம்பியாக’ இருக்கலாம். புரவலர்களுக்கான இந்த தவிப்பு ரொம்ப ஆபாசமாக இருக்கிறது. இந்த இரண்டையும் நாம் தவிர்க்க வேண்டும்.


நான் பொதுவாக பேஸ்புக்கில் எழுத்தாள பாவனை இல்லாத வாசகர்கள் எழுதுகிற நூல் விமர்சனங்களை மட்டுமே நம்பி வாசிக்கிறேன், பெரும்பாலும் இந்த நூல்களை உடனே ஆர்டர் செய்து வாங்கி விடுகிறேன். அந்நூல்கள் என்னை ஏமாற்றினாலும் கவலையில்லை, ஏனென்றால் உள்நோக்கமின்றி அவர்கள் நேர்மையாக தம் கருத்தை சொல்லி இருக்கிறார்கள், என் அழகியல் நோக்குடன், அரசியலுடன் அது உடன்படவில்லை என சமாதானப்பட்டுக் கொள்கிறேன். ஆனால் பெரிய பின்புலம் உள்ள எழுத்தாளர்கள் விமர்சனம் (பாராட்டுரை) எழுதினால் நான் கட்டாயமாக அந்நூலை தவிர்த்து விடுவேன்.

 என் கோரிக்கை இது மட்டுமே: விமர்சனத் துறையை பொய் சொல்லாத வாசகர்களிடமே விட்டு விடுங்கள்! பிடிக்காத நூல்களைப் புகழாதீர்கள். தாண்டி சென்று விடுங்கள். பிடித்த நூல்களைப் பற்றி மட்டும் பேசுங்கள், எழுதுங்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...