Skip to main content

இந்தி திணிப்பு எனும் இந்துத்துவ புரோஜெக்டை எதிர்க்கும் சு. வெங்கடேசன்


வாழ்த்துக்கள் சு.வெங்கடேசன். 





இந்த இந்தித் திணிப்பு பிரச்சனையை, இதன் வரலாற்றை நான் எனது “நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?” நூலில் பேசி உள்ளேன்.


 இந்த விசயத்தில் காங்கிரஸ், பாஜக அரசுகள் ஒரே மாதிரியே இருந்துள்ளன என வரலாறு காட்டுகிறது. காங்கிரஸாவது கொஞ்சமாவது மாற்றுக்குரல்களை காதுகொடுத்து கேட்கும் மாண்பு கொண்டது, அவ்வப்போது சமரசம் பண்ணிக்கொள்வது. ஆனால் பாஜக ஒரு ரௌடி அரசு. “சொல், கேட்காவிட்டால் அடித்து பணிய வை” என்பதே அவர்களின் அணுகுமுறை. இந்த முரட்டுத்தனத்தின் விளைவாகவே மாநில உரிமை குறித்த விவாதங்கள் அண்மையில் அதிகமாகி உள்ளன. அதன் நீட்சியே சு.வெங்கடேசன் இப்போது மத்திய அரசுடன் எழுப்பி உள்ள பிரச்சனையும் அவரது எதிர்ப்பு அரசியலும். 


இன்னொரு விசயம்: இந்தி மையமான இந்துக்களின் இந்தியா எனும் கருத்தாக்கம் நமது தமிழ் தேசிய வரலாற்றை விட நெடியது தான். அது ஜெர்மானிய, பிரஞ்சு, ஆங்கிலேய Indology ஆய்வாளர்கள் ஆசியா, அதன் மதம், கலாச்சாரம், மொழி வரலாறு குறித்து ஆய்வு செய்த காலத்திலேயே துவங்கி விட்டது. சிலர் இந்த வரலாறு யுவான் சுவாங் இந்தியாவுக்கு பயணம் வந்து குறிப்புகள் எழுதிய காலத்திலேயே துவங்கி விட்டது என்கிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு தமது பண்பாட்டுக்கு, மத நம்பிக்கைகளுக்கு இணக்கமான ஒற்றை அடையாளம் கொண்ட ஒரு பண்பாடாக, மக்கள் தொகையாக இந்தியாவை வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தது. அப்படியே சமஸ்கிருத அடிப்படையிலான வைதீக மதம் அவர்களுக்கு அணுக்கமாகத் தோன்றியது. சமஸ்கிருதம், ஆரியவாதம் ஆகியவை ஐரோப்பியர்களுக்கு உடனடியான ஒரு இனவாத நெருக்கத்தை அளித்தது என நினைக்கிறேன். சமஸ்கிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்குமான ஒற்றுமை, ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தது, கிறித்துவத்தைப் போன்றே இந்தியாவுக்கும் ஒற்றைக் கடவுள், ஒற்றை மதத்தின் அடிப்படையிலான ஒரு நிறுவனத்தை இந்தியாவுக்கு அளிக்கும் விழைவும் போன்றவை மற்ற காரணங்களாக இருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பதினாலாவது நூற்றாண்டில் இருந்தே கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சிலுவைப் போர்கள் இஸ்லாமியர் குறித்த ஏற்படுத்திய ஒரு கசப்பான நினைவுச்சரடு. விளைவாக, இஸ்லாமிய வெறுப்பு, ஆரிய சார்பு சித்திரம் ஒன்றை இந்த இந்தியவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து விவாதித்து உருவாக்கினார்கள். இதைக் கொண்டு, இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து இந்துக்களை காப்பாற்றும் பாதுகாவலர்களாக காலனிய அரசுகள் தம்மை நினைத்துக் கொள்வது சுலபமாக இருந்தது.

 இப்படித்தான் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவை மையமிட்டு கிறித்துவத்தின் அடிப்படையில் இந்து மதத்தை உருவாக்கி, இஸ்லாமிய விரோத தேசமாக நம்மை உருமாற்றும் ஒரு முயற்சி சுதேசி அரசியல்வாதிகளிடம், இந்திய வலதுசாரிகளிடம் தோன்றியது. அதற்கு அவர்கள் கையில் எடுத்தது தான் இந்தி எனும் உருது கலப்பில்லாத, சமஸ்கிருத சார்பு கொண்ட புதிய மொழி. இந்தி மொழியின் கண்டுபிடிப்பை, வளர்ச்சியை கில்கிறிஸ்ட் எனும் வெள்ளைக்காரர் ஒருவர் நேரடியாகவே ஒருங்கிணைத்தார். அதற்கு பிரித்தானிய அரசு நிறைய நிதியளித்தது. இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் உருது பேசும் இஸ்லாமிய மக்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கும் மறைமுக ஆதரவு அளித்து பிரித்தாளும் அரசியலை முன்னெடுத்தது. (விளைவாக இந்தியா-பால் பிரிவினை ஏற்பட்டு, கொடுமையான, ரத்தக்களறியான கலவரங்களில் பல லட்சம் பேர் மரித்த வரலாற்றை அறிவீர்கள்.)


 இந்த இந்தி-வைதீக இந்தியா கதையாடலில் சுவாமி தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சாவார்க்கர், காந்தி, நேரு துவங்கி பலரும் மயங்கிப் போயினர். அதனாலே இந்தியா தன்னாட்சி பெற்றதும் இந்தியை அரசு மொழியாக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று பரவலாக வட இந்தியா எங்கு ஏற்கப்பட்டது. தென்னிந்தியாவில் தமிழர்கள் மட்டுமே வெளிப்படையாக இதை எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பு பின்னாளில் வலுக்க நேரு ஒரு சமரசத்துக்கு முன்வந்தார் - ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடரும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் போகப் போக காங்கிரஸ் அரசு தனது இந்தி முன்னெடுப்பு, சமஸ்கிருத ஆதிக்க அரசியலை தீவிரமாக தொடர்ந்தது. ஏகப்பட்ட பணத்தை இதற்கு செலவு செய்தது. 2014இல் காங்கிரஸின் இந்த சமஸ்கிருத சார்பு அரசியலே பாம்பாக மாறி அதைக் கொத்தியது, பாஜக அதை பயன்படுத்தி இந்தியாவை முழுக்க முழுங்கியது என்பது வேறு கதை. அதை ஓரளவுக்கு உணர்ந்து கொண்டதே “தென்னிந்தியர்கள் மேம்பட்ட அரசியல் உணர்வு கொண்டவர்கள்” என ராகுல் காந்தி அண்மையில் கேரளாவில் பேசியது காட்டுகிறது. ஆனால் இப்போது ரொம்பவே தாமதமாகி விட்டது. 

இப்போதும் வெளிப்படையாக சு.வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்ற தமிழக எம்.பிக்களே பிரித்தானிய காலனிய அரசு ஆரம்பித்த இந்துத்துவ புரோஜெக்டை எதிர்த்து நிற்கிறார்கள். இது வெறுமனே ஒரு மொழிப்பற்று அரசியல் அல்ல. இது ஒரு காலனிய, நவகாலனிய எதிர்ப்பரசியல்! சு.வெங்கடேசனுக்கு நமது ஆதரவை, அன்பை தெரிவிப்போம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...