தினமணியில் வாராவாரம் வெளிவருகிற “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரை ஆரம்பித்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. இரு வருடங்களுக்கு முன்பு அதை நான்கு நூல்களாக தொகுத்து உயிர்மையில் வெளியிட்டேன். நான் இத்தொடர் ஒரு வருடத்திற்கு மேல் போகாது என நினைத்திருந்தேன். நான் முடிந்த வரையில் எனக்குப் பிடித்த துறைகளான தத்துவம், கோட்பாடு, அரசியல், சமூகம் என பலவற்றில் இருந்தும் சொற்களை எடுத்து அறிமுகப்படுத்துவேன். சமகால நடப்புகளை மறைமுகமாய் விமர்சிக்க, பகடி செய்ய, கருத்து சொல்ல இத்தொடரை பயன்படுத்துவேன். என் அதிர்ஷ்டம் இதுவரையில் நான் யாரை பகடி செய்கிறேன் என நிறைய பேருக்கு தெரிந்ததில்லை, அதனால் எடிட்டரிடம் இருந்து குறுக்கீடுகள், அறிவுரைகள் வந்ததில்லை. இது தான் பல லட்சம் பிரதிகள் அச்சாகும் இதழ்களில் எழுதுவதன் அனுகூலம்.
ஆனால் என்ன சிக்கல் என்றால் நான் எழுதிய தொடர்களிலேயே நான் மிகக் குறைவாக ரசித்து எழுதுவது இதைத் தான். ஏனென்றால் ஆங்கில இலக்கணம், ஆங்கில சொற்றொடர்கள், சொற்களின் வரலாறு, மொழி குறித்த சுவாரஸ்யமான கதைகள் இவற்றை எழுதுவதில் எனக்கு பெரிய சவால்கள் இல்லை. வெள்ளைக்காரன் மொழியைப் பற்றி தமிழில் எழுதுகிற அபத்தம் கூட உறைக்கிறது. இது நான் எழுத வேண்டியது அல்ல எனும் எண்ணம் எப்போதும் இருந்ததுண்டு. நியாயமாக இது எந்த வாசிப்பும், எழுத்துத் திறனும் இல்லாத, ஆங்கிலத்தில் பேசினால் ஒருவருக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விடக் கூடும் என நம்புகிற ஒரு பள்ளி ஆசிரியரோ விவேகானந்தா இன்ஸ்டிடியூட்டில் பாடம் எடுக்கும் ஒரு மாமாவோ எழுத வேண்டியது. என்னைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் ஒரு சாதாரணம் மொழி. எந்த மாக்கானும் அதைப் பேசலாம். இதை சுட்டுவதற்காகவே இத்தொடரில் ஒரு நாயின் பாத்திரத்தை உருவாக்கி அதை ஆங்கில அறிவு படைத்ததாக சித்தரித்தேன்.
ஆனாலும் தொடர்ந்து ஏழு வருடங்களாக எழுதுவதற்கு ஒரே காரணம் தான் - வேறு விருப்புரிமைகள் இல்லை.
தினமணி தவிர எனக்குக் கிடைத்த தொடர் எழுதும் வாய்ப்பு குமுதத்தில் தான். அதுவும் கிரிக்கெட் குறித்து தான் எழுதினேன். கிரிக்கெட் பற்றி எழுதுவதில் கூட ஆங்கிலம் பற்றி எழுதுவதை விட அதிக சுவாரஸ்யமும் சவாலும் இருந்தன. ஏனோ எனக்குப் பிடித்த துறைகள் (இலக்கியம், தத்துவம், சமூகம்) சார்ந்து எழுத வாய்ப்பு இந்த 13 ஆண்டுகளில் வெகுஜன இதழ்களில் ஒரு வாய்ப்பு கூட அமைந்ததில்லை. ஒன்று நானாக பெரிதாக முயலவில்லை. பத்திரிகையாளர்கள் இடையே நட்பு வட்டத்தை இதற்காக அமைத்து கேட்டுக் கொண்டே இருக்கவில்லை. இன்னொன்று, யாரையோ எங்கேயோ தொடர்ந்து என் கருத்துக்களால் எரிச்சல்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறேன்.
பரவாயில்லை எனத் தோன்றுகிறது.
நம்மிடம் ஒரு அழகிய வாள் இருக்கிறது. அதை வைத்து வெங்காயம் நறுக்க சொன்னால் நறுக்கி விட்டுப் போகிறோம். ஒருநாள் வெட்ட வாகாக ஒரு ‘நல்ல தலை’ கிடைக்காமலா போய் விடும்!
