5.
“These give rise to those,
So these are called conditions.
As long as those do not come from these,
why are these non-conditions?”
“இவை அவற்றை தோற்றுவிக்கின்றன,
அதனால் இவை நிலைகளாய் அறியப்படுகின்றன [என்கிறார்கள்].
அவை இவற்றில் இருந்து அவை தோன்றாத வரையில்,
இவை ஏன் அ-நிலைகள் அல்ல?”
இந்த ஸ்லோகம் நிச்சயம் குழப்பமானதாகத் தெரியும் படி எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும்
இது ஒரு சுவாரஸ்யமான வாதம், ஒருவித தலைகீழ் பின்னோக்கு வாதம். முதல் இரு வரிகள் நாகார்ஜுனரின் எதிரணியினர் எழுப்புவன - “ஒரு விசயத்தை அதன் நிலைகள் தோற்றுவிக்கின்றன, அதனாலே அவை நிலைகள்” என அவர்கள் சொல்லுகிறார்கள். ஆமாம், அதுக்கென்ன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உற்று நோக்கினாலே இதிலுள்ள விஷமத்தனம் புரியும் - ஒன்று மற்றொன்றின் நிலையாக இருப்பதானாலே அது தன்னளவில் சாராம்சமான ‘நிலை’ ஆவதில்லை. ஹைடெக்கர் இருத்தல் (being) பற்றி சொல்லும் போது சுத்தியலை உதாரணமாகக் காட்டுகிறார். சுத்தியலால் ஒருவன் ஆணியை சுவற்றில் அடிக்கிறான். அந்த தருணத்தில் சுத்தியல், அதைக் கைக்கொண்டிருக்கும் அவன், அவனது கரம், அடிக்கப்படும் ஆணி, அது இறங்கும் சுவர் எல்லாம் ஒரே புள்ளியில் இணைகின்றன. இவற்றில் ஏதோ ஒன்று தனித்து பார்க்கப்பட்டால் சுத்தியலால் அறைவதே சாத்தியமில்லை. சுத்தியல் அப்போது அவனது கரத்தின் நீட்சியாக, ஆணி அந்த சுத்தியலின் மற்றொரு பாகமாக, அது துளைக்கும் சுவரின் அதன் நீட்சியாக மாறுகிறது. இதனாலே ஒருவன் சுத்தியலால் ஒரு பெண்ணின் தலையில் அடித்துக் கொன்றால் செய்தியில் he hammered her to death என வருகிறது என ஹைடெக்கர் கூறுகிறார். இங்கு சுத்தியல் அறையப்படுவதற்கு அதை ஓங்கி செலுத்துகிற அசைவிலிருந்து, அசைய வேண்டும் என்கிற நோக்கத்திலிருந்து, தான் சுத்தியலால் அறைகிறோம் எனும் எண்ணம், அதனால் தான் சுத்தியலை அறைகிறவர் ஆகிறோம் எனும் பார்வை அவனுக்குள் தோன்றுகிறது, அவன் பார்க்கிறவனாகவும் பார்க்கப்படுகிறவனாகவும் ஆகிறான், இப்படி பல நிலைகள் அவனை சுத்தியலைக் கொண்டு அறையச் செய்கின்றன. ஆனால் அதனாலே சுத்தியலை எடுத்து அறைகிற அந்த (செயலூக்க நிலை) அசைவானது அந்த செயலை தானாக நிகழ்த்துவதில்லை. அவனுக்கு உடம்பில் அதற்கான வலு இருக்க வேண்டும், அது இருந்தாலும் அந்த சூழல் அதற்கு சாதகமாக இருக்க வேண்டும், அங்கு சுவர் இருக்க வேண்டும், சுவர் ஆணியால் அறையப்பட தோதாக இருக்க வேண்டும் ... இப்படி பல நிலைகள் இந்த நிலைகளுக்கு பின்னுன்று செலுத்துவதைப் பார்க்கிறோம்.
அடுத்து இங்கு காலம் குறித்த ஒரு சிக்கல் வருவதையும் நாகார்ஜுனர் உணர்த்துகிறார். சுத்தியலால் அறைய வேண்டும் எனும் நோக்கம் அது ஏற்படும் முன்பு என்னவாக இருக்கிறது? சுத்தியலை வீசும் அசைவாகிய அந்த செயலூக்க நிலை அதற்கு முன்பு என்னவாக இருக்கிறது? இப்போது அது நிலை என்றால் அப்போது அது அ-நிலையா என நாகார்ஜுனர் கிண்டலாக வினவுகிறார். ஏனென்றால் ஒன்றைக்கொண்டு அதை சாராம்சமான நிலையாக நாம் கட்டமைக்கும் போது அது காலத்தில் முன்னோ பின்னோ மற்றொன்றாக இருக்கையில் அது அ-நிலையாகவே இருந்தாக வேண்டும். ஆனால் ஒன்று சாராம்சமற்று ஒன்றை தோற்றுவிக்கும் போது மட்டுமே நிலையாக இருக்கிறது என நாம் சொல்லும் போது இச்சிக்கலோ அபத்தமோ ஏற்படுவதில்லை.
