4.
Power to act does not have conditions.
There is no power to act without conditions
There are no conditions without power to act.
Nor do any have the power to act.
“ஒன்றை செயல்படுத்தும் ஆற்றலுக்கு நிலைகள் அவசியமில்லை [எனப்படுகிறது].
[ஆனால்] நிலைகள் இன்றி செயல்படுத்தும் ஆற்றலே இல்லை.
செயல்படுத்தும் ஆற்றல் இல்லாத நிலைகளே இல்லை.
அதேநேரம் செயல்படுத்தும் அதிகாரம் அவற்றுக்கு இல்லையும் தான்.”
கொஞ்சம் குழப்பமாகத் தெரியும், ஜாங்கிரி சுற்றுகிற ஸ்லோகம் இது என்றாலும் இதன் வாதம் எளிதானது, வலுவானது.
ஒரு விசயத்தை நிகழ்த்துவதற்கான ஆற்றல் அதிலேயே உள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஒரு தேர்தலின் போது செலுத்தப்படும் வாக்கை எடுத்துக் கொள்வோம். மக்களின் வாக்குக்கு நாட்டின் அதிகாரத்தை மாற்றும் சக்தி உண்டு எனப்படுகிறது. ஆனால் அந்த ஆற்றல் வாக்குச்சீட்டின் ஆற்றல் அல்ல. வாக்கின் ஆற்றல் அதை பதிவு செய்வதில் மட்டுமே உள்ளது. அதைக் கடந்து நிகழ்கிற செயல்கள் தம்மளவில் அதிகாரம் பெற்றவை அல்ல. அவை பல உபநிலைகளை சார்ந்து ஆற்றல் பெறுபவை. ஒரு வாக்கு அதன் ஆற்றலைப் பெற அதை செலுத்துகிறவரின் அடையாளம், அவர் வசிக்கிற பகுதி, அவர் வாக்கை செலுத்துகிற காலம், அவர் வாக்கை சரியாக செலுத்துகிற பாங்கு, அவ்வாக்கு எந்திரத்தில் சரியாக பதிவாகி எந்த தில்லுமுல்லும் நடக்காதிருப்பது, மற்ற வாக்குகளின் ஆற்றல்கள், அதற்கும் பின்னால் மற்ற நேரங்களில் சாமான்ய அடையாளம் (வாக்களிக்காதவராக) பூணும் அவர் அப்போது தன்னை வாக்காளராக உணர்வது, வாக்கு செலுத்த வேண்டும் எனும் விருப்பத்தை அவர் கொள்வது பல நிலைகள் பின்னிருந்து இயக்கி அந்த அதிகாரத்தை தோன்ற செய்கின்றன. அதனாலே இரண்டாவது வரி ‘நிலைகளே நிகழ்த்தும் ஆற்றலின் காரணம் ஆகின்றன’ என்கிறது.
இந்த நிலைகளும் ஆற்றல் இன்றி வெற்றாய் இருப்பதில்லை. ஆனால் அதன் பொருள் இந்த நிலைகள் தம்மளவில் ஒன்றை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்பதல்ல. அவை நிலைகளாக செயலைத் தூண்டுவதற்கு பல உபநிலைகள் பின்னிருந்து இயக்கியாகி வேண்டும். அதனாலே அவற்றுக்கு ஆற்றல் உண்டு, ஆனால ஆற்றல் இல்லை என முரணாகத் தோன்றுகிற இறுதி வரிகளை நாகார்ஜுனர் எழுதுகிறார் - அவரது அக்கறையெல்லாம் இந்த நிலைகளுக்கு தனிப்பெரும் முழுமுதல் ஆற்றல் உண்டு என எதிர்முகாமினர் புதிய கதையை கட்டக் கூடாது என அதற்கும் அவர் இங்கு ஒரு தடுப்பை வைக்கிறார்.
