Skip to main content

ரஜினி ஏன் வரவில்லை என்பது குறித்த புளுகுகள்



ரஜினி உடல்நலமின்மையால் அரசியலுக்கு வரவில்லை என்பது சுத்தப் புளுகு என நினைக்கிறேன். அது தெரியும் என்பதாலே பாஜகவினர் புலம்புகிறார்கள். பிரவீன் காந்த் கூட ரஜினியின் அறிவிப்புக்கு ரத்தக்கொதிப்பு காரணமல்ல என்கிறார். ஏன் புளுகு என்பதற்கான சில நடைமுறை நியாயங்களைப் பார்ப்போம்:


1) ஆம், ரஜினி ஒன்றும் புரூஸ் லீ இல்லை. ஆனால் அதே நேரம் இன்றைய நிலையில் அவர் ஊர் ஊராகப் பயணித்து மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. காணொலி மூலமாக அவ்வப்போது அறிவிப்புகளை விட்டால் போதும். அவர் நீண்ட நேரம் பேசினால் அது அவருக்கே பாதகமாகும் என்பதால் சுருக்கமாக ஒன்றிரண்டு வசனங்களைப் பேசி விட்டு மிச்ச வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சியை நடத்தும் மாஜி பாஜக தலைவர்கள், தமிழருவிகளிடம் விட்டு விடலாம். ஆக, உடல்நிலை காரணமாக விலகுகிறேன் என்பது இந்த இணைய அரசியல் காலத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.


2)  சன் நியூசில் குணசேகரன் கேட்டதைப் போல இந்த உடற்பிரச்சனைகள், கொரோனா ஆபத்து எல்லாம் முன்பே இருந்தது. ஒருநாள் பி.பி எகிறினதும் ஏன் ரஜினி வேலியை எகிறிக் குதித்து ஓட வேண்டும். ஆக இந்த முடிவுக்குப் பின்னால் ஏதோ அரசியல் / பொருளாதாரக் காரணம் இருக்கிறது. அதை நியாயப்படுத்தவே அவர் இரண்டு நாள் அட்மிட் ஆகி மருத்துவ சான்றிதழ் எல்லாம் வாங்கி இருக்கிறார். என்னதான் வளர்ந்து கழுதை வயசானாலும் ரஜினி ஒரு குழந்தை தான்.


3) ரஜினியின் முடிவுக்குப் பின்னால் பாஜக கொடுத்த அழுத்தம் தான் என்கிறார்கள். இது சரியாக இருக்க முடியாது - ரஜினி எப்போதுமே பாஜகவுக்கு இணக்கமானவர். அவர்களது மனதை நோகடிக்கக் கூடாது என தாங்குவாரே தவிர அவர்களை நினைத்து அஞ்சவோ எரிச்சலாகவோ மாட்டார். மாறாக, இதன் பின்னால் அதிமுக தலைமை இருக்கலாம். ரஜினி களத்தில் இருந்து நீங்கியது அதிமுகவுக்கே பெரிதும் பயனளித்துள்ளது. இனி சசிகலாவை களமிறக்கி மட்டுமே பாஜகவால் அதிமுகவை கழுத்தை நெரிக்க முடியும். சசி எனும் அஸ்திரமும் எந்தளவுக்கு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்குமென சொல்ல முடியாது. ஏவின ஆளையே வந்து தாக்கினாலும் தங்கலாம். இப்போதைக்கு சீட் பேரத்தில் அதிமுகவின் கையே ஓங்கியிருக்கிறது. 20 இடங்களை பொத்திக் கொண்டு வாங்க வேண்டியது தான். பாஜகவை இதுவே கடுப்பேற்றியிருக்கும் - தப்பான நேரத்தில் ரஜினி கைவிட்டதில் தாமரை சகதியில் விழுந்து விட்டது. ஆனால் எடப்பாடியார் எதைக் காட்டி “அண்ணாத்தையை” மிரட்டியிருப்பார் என்பது தான் தெரியவில்லை.


4) வீட்டில் உட்கார்ந்து காணொலியில் பிரச்சாரம் பண்ணுவதற்கு இல்லாத உடற்தகுதி ரஜினிக்கு படம் நடிக்க மட்டும் இருக்கிறதா? அவர் “அண்ணாத்த” படபிடிப்பில் இருந்து பின்வாங்கவில்லை, கவனியுங்கள். 


5) கமல் எத்தனையோ தப்பான படங்களில் ரிஸ்க் எடுத்து பணத்தைக் கொட்டி சொதப்பி இருக்கிறார். எந்தளவுக்கு என்றால் வலது காலை வைத்தால் கையால் தங்கிக் கொள்வார்கள், இடது கால் என்றால் கண்ணிவெடி எனச் சொன்னால் அவர் இடதுகாலை தான் வைப்பார். அப்படித்தான் அவர் அரசியலிலும் களம் இறங்கினார். கமலின் இந்த  ரஸ்கைப் போல ரிஸ்கைக் கடிக்கும் தெகிரியம் தலைவருக்குக் கிடையாது. அவர் மிக மிக யோசித்து தான் படத்தேர்வுகளையே செய்வார். 

ரஜினி அவ்வளவாக ரிஸ்க் எடுக்க விரும்பாத மத்திய வர்க்க மனநிலை கொண்டவர் என்பார்கள். அதனால் தான் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம் என சந்துபொந்தில் எல்லாம் புகுந்து வரி ஏய்ப்பு பண்ணுகிறார். அந்தளவுக்கு “கஞ்சம்”. அவர் தன் “எதிர்கால” திரைவாழ்வு அரசியலினால் பாதிக்கப்படக் கூடாது என நினைக்கலாம். எப்படியும் ஏதாவது ஒரு கழகக் கட்சியே ஆட்சிக்கு வரும். எதற்கு மூன்று மாத பிரச்சாரத்தினால் இரண்டு தரப்பையும் பகைத்து தன் படவெளியீட்டை முடக்க வேண்டும் என கொஞ்சம் அற்பமாகவே கவலைப்பட்டிருக்கலாம். 


எது எப்படியோ ரஜினியின் பின்வாங்கல் தான் 2020இன் மிகச்சிறந்த சேதி. 

(அ) இனி அவரது அரசியல் உளறல்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் (உளறத் தான் போகிறார்) நடிப்பை ரசிக்கலாம். 

(ஆ) பேரங்களில் பாஜகவின் கரம் தாழ்வது எப்போதுமே தமிழகத்துக்கு நலன் பயக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...