கோலி ஒரு தலைவராக நிறைய சாதித்திருக்கிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது. அதைக் கொண்டே அவரது குறைகளையும் மதிப்பிட வேண்டும். எப்படி?
கோலி அணியில் இருந்து தற்காலிகமாக விலகும் போது ரோஹித் / ரஹானே தலைமையில் அதே அணி அதை விட மேலாக ஆடுவதைப் பார்க்கிறோம். இதை எப்படிப் புரிந்து கொள்வது?
என்னதான் ஒரு அணி அதன் தலைவரின் ஆளுமைப் பண்புகளால் தாக்கம் பெற்றாலும் அணித் தலைவர் அல்ல அணியே முக்கியம். அதனாலே தலைவர் என்பவர் ஒரு அணியின் சாதனைகளால் மட்டுமே மதிப்பிடப்படுகிறார் (a captain is as good as him team) என ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உள்ளது. அதாவது, அணியின் சாதனைகள் தலைவரைக் கொண்டு மதிப்பிடப் பட வேண்டும் என யாரும் சொல்வதில்லை.
தலைவரின் பொறுப்பு அணிக்கு ஒரு சரியான திசையைக் காட்டுவது, வீரர்களுடன் கலந்தாலோசனை செய்து சமயோஜிதமான முடிவுகளை எடுப்பது, சிறப்பாக மனிதவள மேலாண்மை செய்து வீரர்களின் உச்சபட்ச திறமையை வெளிக்கொணர்வது போன்றவையே என மைக் பிரெயர்லி தனது The Art of Captaincy நூலில் சொல்கிறார். அதாவது நாம் அணித்தலைவரை ஒரு கட்சித் தலைவரைப் போலப் பார்க்கலாகாது; கிரிக்கெட்டில் 10 வீரர்களை வழிநடத்திட நீங்கள் ஒரு நேருவாகவோ அண்ணாவாகவோ இருக்கத் தேவையில்லை. ஒரு சிறந்த மனிதவள மேலாளராக இருந்தால் மட்டும் போது. ஒரு அணியானது ஒரு நாட்டை பிரதிநுத்துவப் படுத்துவதாலே நாம் அணித்தலைவர்களை தவறாக நாட்டுத்தலைவர்கள் அளவுக்கு மேலே உயர்த்தி விடுகிறோம். அது அவசியமற்றது என பிரெயர்லி கருதுகிறார். ரெண்டாயிரத்தில் உலகின் தலைசிறந்த அணியாக விளங்கி தொடர்ந்து உலகக்கோப்பைகளாக வென்று தள்ளிய ஆஸ்திரேலிய அணியின் சாதனைகளின் சிற்பியாக அணித்தலைவர் ஸ்டீவ் வாஹ் கருதப்பட்டார். ஆனால் அவரிடத்தில் கில்கிறிஸ்ட் நியமிக்கப்பட்டு தலைமை வகித்த போதும் ஆஸி அணி அதே சிறப்புடன் ஆடியது. வார்ன் அணித்தலைவராக இருந்திருந்தால் ஸ்டீவ் வாஹை விட மிகச்சிறந்த தலைவராக இருந்திருக்க முடியும் என நான் நம்புகிறேன். ஆனால் இதெல்லாம் அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் தரத்தை பெரிதாய் மாற்றியிருக்காது. யார் தலைமை வகித்தாலும் ஆஸ்திரேலிய அணி ஒன்று தான் எனச் சொல்லுவார்கள். ஸ்மித்தின் இடத்தில் தலைவரான டிம் பெய்ன் ஒரு உதாரணம். ஸ்மித் போன பின் அதே அணியின் செயல்பாட்டில் எந்த பெரிய வித்தியாசத்தையும் நாம் காணவில்லை. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அணித்தலைமையை நாம் பல சமயங்களில் மிகையாக மதிப்பிடுகிறோம் என வலியுறுத்தத் தான்.
இதனாலே, கங்குலிக்குப் பின்னர் அந்த அணியை ராகுல் திராவிட் வழிநடத்திய போது அதை விட சிறப்பாக ஆடியது. திராவிட் பதவி விலகி, தோனி தலைவரான போதும் அணி தலைகீழாக மாறவில்லை. ஒவ்வொரு புதுத்தலைவர் வந்த போதும் ஏறகனாவே இருந்த குறைகளைக் களைந்து அணி மேம்பட்டதை கண்டோம். இதன் பொருள் ஒரு தலைவர் மோசமான முடிவுகளை எடுப்பதாலோ, அவரது மனிதவள மேலாண்மையில் குறை இருக்கும் போதோ அது அணியின் முன்னேற்றத்துக்கு தடையாகும் என்பதே. அவரிடத்தில் மற்றொரு சிறந்த மேலாளர் தலைவராகும் போது அணி சிறகுகளை விரித்து பரிமளிக்கும். விராத் கோலியின் இடத்தில் ரோஹித், ரஹானே போன்றோர் தலைவர் ஆகும் போது அணி மேலும் சிறப்பாக, தடையற்று ஆடுவதைப் பார்ப்பதை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
கோலியின் சாதனைகள் என்ன?
கோலியின் தலைமையின் கீழ் 56 டெஸ்ட் போட்டிகளில் 33 போட்டிகளில் வென்றிருக்கிறோம். ஆனால் தோனி 60 போட்டிகளில் 27 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறார். கோலி பாதிக்கும் மேல் தான் தலைமை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற, தோனியோ அதற்குக் கீழே தான் வெற்றி சராசரியைப் பெற்றிருக்கிறார். இதன் பொருள் கோலி ஒரு மேலான தலைவர் என்பதா?
இல்லை. (1) தோனியின் கீழ் நாம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றிருக்கவில்லை. தோனி வேகப்பந்து வீச்சை மேலாண்மை செய்வதில் சிறந்தவரும் அல்ல. அவர் அதிரடி ஆட்டத்தை விட நிதானமான, பாதுகாப்பான ஆட்டத்தையே விரும்பினார். அதனால் மிதவேகப்பந்து விச்சாளர்களையே அதிகம் தேர்வு செய்தார் என்பது ஒரு பார்வை. ஆனால் தோனியின் காலத்தில் நாம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்க வில்லை என்பதும் எதார்த்தமே. கோலி தலைவர் ஆன பிறகு அவர் வேகப்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்தார்கள், உள்ளூர் அளவிலும் வேகப்பந்துக்கு முக்கியத்துவம் அதிகமானது. இந்த விசயத்தில் நிச்சயமாக நாம் கோலிக்கு உரித்தான பாராட்டை வழங்க வேண்டும். அடுத்து (2) தோனியின் காலத்தில் உலகம் முழுக்க டெஸ்ட் ஆடுதளங்கள் தட்டையாக இருந்தன. ஆனால் கோலியின் காலத்தில் டெஸ்ட் ஆடுதளங்கள் வேகப்பந்துக்கு / சுழலுக்கு கூடுதல் ஆதரவளிக்கிறவையாக மாறின. போட்டிகளில் 3வது, 4வது நாளில் முடிவது சகஜமாகின. இதுவும் கோலியின் கீழ் ஒரு மேம்பட்ட வேகப்பந்து அணி தோன்ற, அவர் தோனியை விட அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற காரணமாகியது.
ஒருநாள் போட்டிகளைப் பார்ப்போம்:
தோனி 200 போட்டிகளில் தலைமை தாங்கி 110 போட்டிகளில் வென்றிருக்கிறார். ஆனால் கோலியோ 92 போட்டிகளில் 63 போட்டிகளில் வென்றிருக்கிறார். 70.55 கோலியின் வெற்றி சராசரி. ஆனால் தோனியின் சராசரியோ 59.52. இதனால் கோலி தோனியை விட மேலான ஒருநாள் தலைவரா?
இல்லை. ஏன்?
இதற்கு விடை காண நாம் வேறு சில தலைவர்களின் சாதனையையும் கவனிக்க வேண்டும். அசருதீன் ஒரு அணித்தலைவராக கொண்டாடப்படாதவர். ஆனால் அவர் 174 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி 90 போட்டிகளில் வென்றிருக்கிறார். வெற்றி சராசரி 54.16. அசருக்கும் தோனிக்கும் அணித்தலைமை சராசரியில் வித்தியாசம் 5%. மட்டுமே தன் காலத்தில் மிகச்சிறந்த அணித்தலைவராக மதிப்பிடப்பட்ட இலங்கையின் ரணதுங்காவின் வெற்றி சராசரி 48.37. மற்றொரு தலைசிறந்த அணித்தலைவரான நியுசிலாந்தின் பிளெமிங்கின் சராசரி 48.04. ஏன் இந்த விச்சியாசம்? மிக மட்டமான நிலையில் இருந்து தன் அணியை ரணதுங்கா உச்ச நிலைக்கு கொண்டு வந்தார்; ஆரம்பத்தில் பல தோல்விகள் அடைந்து பின்னர் மேலெழுந்து வந்தார். நியுசிலாந்தின் நிலையும் அப்படியே - சராசரியான அணியை ஒன்று சேர்த்து சிறப்பாக ஆட வைத்தவர் பிளெமிங். இந்த அணித் தரத்தை வைத்தே தலைவராக அவர்களை மதிப்பிட வேண்டும். ரிக்கி பாண்டிங் ஒரு சிறந்த அணித் தலைவர் அல்ல, ஆனால் அவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியா 230 போட்டிகளில் 165 போட்டிகளில் வென்று 76.14% வெற்றி பெற்றது. ரிக்கி பாண்டிங்கின் இடத்தில் ஒரு முத்துப்பாண்டி தலைவராக இருந்திருந்தாலும் அந்த அணியின் வெற்றி சாதனை வரலாறு வித்தியாசமாக இருந்திருக்காது என நான் சொல்வேன்.
தோனிக்கும் கோலிக்குமான அணித்தலைமை சாதனை வேறுபாட்டை (11%) இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் - தோனியின் காலத்தில் இருந்து கோலியின் காலத்துக்கு வந்த போது இந்தியாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு மேம்பட்டு, ஐ.பி.எல்லின் பங்களிப்பால் அதிக செல்வம் குவிந்து, இளைஞர்களுக்கு உயர்தரமான பயிற்சி கிடைத்து கிரிக்கெட் தரம் பெருமளவில் மேம்பட்டத்தால் ஒருநாள் அணியின் தரமும் உயர்ந்து நாம் உலகளவில் ஒரு முக்கியமான அணியானோம். ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா ஒரு சிறந்த ஒருநாள் அணியாக இருந்து பின்னர் இங்கிலாந்தின் எழுச்சியால் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கும், இந்தியா மூன்றாவது இடத்துக்கும் சென்றது. இந்த பின்னணியில் தான் நாம் கோலியின் தலைமை சாதனைகளை மதிப்பிட வேண்டும். கோலியின் பங்களிப்பானது தீவிரமான ஆட்டத்தை முன்னெடுத்ததும், உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததுமே.
கோலியின் குறைகள் என்ன?
1) கோலி ஒரு நல்ல மனிதவள நிர்வாகி அல்ல. அவருக்கு அதற்கான பொறுமை, நிதானம், புத்திசாலித்தனம் இல்லை. இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பலரது கவனத்தையும் பெற்றிருக்கும் ஷுப்மன் கில் சில வருடங்களுக்கு முன்பு நியுசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த போது அவர் ஒரு இளைஞராக தன்னை விட அதிக திறன் படைத்தவராக இருக்கிறார் என கோலி புகழ்ந்தார். உடனே அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளித்து அவர் முதல் சில போட்டிகளில் சொதப்பிட உடனடியாக அவரை நடுரோட்டில் விட்டுவிட்டுக் கிளம்பவும் செய்தார் கோலி. கோலி இப்படி அதிகப்படியாக ஒரு வீரருக்கு மதிப்பளித்து, சில நாட்களில் தலைகீழாக மதிப்பிட்டு அவரது ஆட்டவாழ்வை காலி செய்த வீரர்களின் பட்டியல் (அம்பத்தி ராயுடு, சாஹல்-குல்தீப் இரட்டையர், டெஸ்ட் வீரராக ரோஹித் ஷர்மா, ஒருநாள் வீரராக தினேஷ் கார்த்திக், ஜாதவ், ஜடேஜா என) நெடியது.
2) கள அமைப்பு, வியூகங்கள் போன்றவற்றில் கோலிக்கு ஒரு நீடித்த, நிலையான நிலைப்பாடில்லை. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று விதமாக யோசித்து முக்கியமான நேரத்தில் தவறான முடிவை எடுப்பது அவரது வழக்கம். 2019 உலகக்கோப்பை நியுசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் பண்ட், பாண்டியா, கார்த்திக் ஆகியோரை தோனிக்கு முன்னால் அனுப்பியது ஒரு உதாரணம். இப்படியான யாருமே புரிந்து கொள்ள முடியாத அபத்தமான முடிவுகளை ஏன் கோலி எடுக்கிறார்? முடிவெடுக்க வேண்டி வரும் போது கோலி இப்படியெல்லாம் யோசிப்பார்: “தோனி ஒரு அனுபவமிக்க திறமையான வீரர். அவரால் இப்போது சென்றால் நிதானமாக ஆடி விக்கெட் விழுவதைத் தடுக்க முடியும். ஆனால் தோனி பொறுமையாக ஆடி ரன் ரேட்டை குறைத்து பின்னால் வருகிற மட்டையாளர்களின் நிலையை சிக்கலாக்குவார். அது ஒரு பிரச்சனை இல்லையா? ஒருவேளை தோனி அவுட் ஆகி விட்டால் என்ன ஆவது?” இப்படி கோலி இரண்டு மூன்று விதங்களில் முன்னுக்குப் பின் முரணாக யோசித்து, பதற்றம் அதிகமாகி எதிர்மறையான விளைவுகளைக் கருதி மோசமான முடிவுகளை எடுத்து விடுவார். இதனாலே மிக முக்கியமான கட்டங்களில் இந்தியா ஆட்டத்தை இழந்து கோப்பையை பறிகொடுக்கும். இது கோலியின் மன அமைப்பின் பிரச்சனை. ஒரு மட்டையாளராக கோலியின் மனம் சீராக ஒரே போக்கில் சிந்திக்கும் என்றால் ஒரு அணிதலைவராக அவர் ஒரு குழப்பவாதி.
3) விராத் கோலி அணி மீது கடுமையான அழுத்தத்தை செலுத்துகிறார் - இது தென்னாப்பிரிக்க அணியைப் போல இந்திய அணியும் முக்கியமான கட்டங்களில், இறுதிப் போட்டிகளில் சில பத்து ஓவர்களில் choke ஆக காரணமாகிறது.2017இல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி தலைவராக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட போது ரஹானே தலைவரானார். தர்மஷாலாவில் நடந்த போட்டியில் அணி கூடுதல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு ஆஸ்திரேலியாவை முறியடித்தது. ஆனால் கோலியின் தலைமையின் கீழ் அதே அணி முந்தைய போட்டிகளில் சதா பதற்றத்துடன் ஆடி லயனின் சுழல்பந்துக்கு எதிராக தடுமாறி வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து எதிரணியுடன் வார்த்தை சமரில் ஈடுபட்டு மோதல் அணுகுமுறையில் ஈடுபட்டது அணிக்கு உதவவில்லை. இப்போது 2020இல் அதே போல ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் choke ஆக 36க்கு ஆல் அவுட் ஆனதைப் பார்த்தோம். ஒரு சர்வாதிகாரமான ஆசிரியர் கேள்வி கேட்கும் போது மாணவர்களுக்கு பதில் மறந்து நடுக்கம் ஏற்படுவதைப் போல கோலியின் கீழ் இந்திய அணி தடுமாறுகிறது என நினைக்கிறேன். இதனாலே கோலியின் கீழ் இந்தியாவால் பெரிய ஆட்டத்தொடர்களை வெல்ல முடியாமல் போகிறது.
4) கோலி எனும் அதிகார மையம் - முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்கிற ஒரு சர்வாதிகாரியாக கோலி மாறி உள்ளார். அனில் கும்பிளேவின் அவமானகரமான நீக்கம், அணித்தேர்வில் அதர்க்கமான முடிவுகள், தனது கிரிக்கெட் வீரர்கள் மேலாண்மை நிர்வாகம் ஒன்றின் கீழ் ஒப்பந்தம் செய்யாத வீரர்களுடன் கசப்புடன் செயல்படுவது, மனைவி அனுஷ்கா ஷர்மாவை அணியின் விசயங்களில் தலையிட அனுமதிப்பது, தனக்குப் போட்டியாக தோன்றும் வீரர்களை பிடிவாதமாக வெளிப்படையாக நீக்குவது (ரோஹித் ஷர்மா சர்ச்சை), அணித்தலைமையில் தனது போட்டியாளரான வீரர்களுக்கு அணுக்கமாக உள்ள சூர்ய குமார் யாதவ் போன்ற வீரர்களை வெளிப்படையாக அணித்தேர்வில் நிராகரிப்பது, தனது ஐபிஎல் அணி வீரர்களுக்கு மட்டும் இந்திய அணியில் முன்னுரிமை கொடுப்பது, தேர்வாளர்களை கோமாளிகளாக நடத்துவது என கற்பனை செய்ய முடியாதபடிக்கு அகந்தை மிக்கவராக அவர் மாறியிருக்கிறார்.
5) வசீகரமான அதிரடியான (charismatic) தலைவர்கள் பொதுவாக ஒரு சிறந்த அணித்தலைவராக நீடிப்பதில்லை என மைக் பிரெயர்லி தனது நூலில் குறிப்பிடுகிறார். சுயமோகமும், வசீகரமும் கொண்ட தலைவர்கள் உணர்வுரீதியாக பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் நிதானமான முடிவுகளை தொடர்ந்து எடுக்க, அணியை நிதானமாக வழிநடத்த முடியாமல் போகும் என பிரெயர்லி கூறுகிறார். இதற்கு 1980இல் இயன் போத்தம் ஒரு அணித்தலைவராக சொதப்பியதை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார். போத்தமால் தன்னைக் கடந்து அணியைக் காண முடியவில்லை; புகார்களை சுலபத்தில் எடுத்துக் கொள்ள முடியவில்லை. சீண்டப்பட்டால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார். இது கோலிக்கும் பொருந்தும். அவரது உணர்வுரீதியான ஏற்ற இறக்கங்கள், தடுமாற்றங்கள் அணியையும் பாதிக்கிறது. அவரால் அணியை ஒரு புள்ளியில் திரட்டி ஈர்த்து ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செலுத்த முடியும், ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதை தக்க வைக்க முடியாது.
ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவும், டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவும் இந்திய அணியின் தலைவர்களாக அடுத்த சில வருடங்களுக்கு நியமிக்கப்பட்டால் இந்தியா நிச்சயம் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும், டெஸ்டில் இங்கிலாந்து, நியுஸிலாந்தில் தொடர்களை வெல்லும் எனக் கூறலாம். மேல்நாடுகளில் கோலியின் கீழ் நன்றாக ஆடியுள்ள இந்திய டெஸ்ட் அணி இன்னும் சிறப்பாக ஆட வேண்டுமெனில் ரஹானேவின் தலைமை உதவும்.
