Skip to main content

பிக்பாஸின் ‘மாற்று’ அன்பு



கடந்த சில பல வாரங்களில் பிக்பாஸ் அர்ச்சனா அன்பின் பொருளையே தலைகீழாக மாற்றி விட்டார். எந்தளவுக்கு என்றால்நீ ஏன் என்னோட அன்பை புரிஞ்சுக்க மாட்டேங்குற?” என யாராவது கேட்டால் பிக்பாஸ் வீட்டுக்குள்இவன் ஏதோ திட்டமிடுறாண்டா?” என கேட்கிறவருக்கு இப்போது தோன்றும். அன்பு எனக் கேட்டால் நமக்கெல்லாம் பல் கூசும் அளவுக்கு, ஆனால்நீ ஏன் என் அன்பை புரிந்து கொள்ள மறுக்கிறாய்எனும் கேள்வி ஒரு மனுஷ்யபுத்திரன் கவிதையில் வருகிறதென்றால் அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும்! இரண்டுக்கும் இடையில் அன்பு என்பதன் பொருளே பெரிதாக கடந்த பத்தாண்டில் மாறியிருக்கிறது என்பதே சுவாரஸ்யம்.

 பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், கார்ப்பரேட் வேலையிடங்கள், மிகையை மேலும் மிகையாக்கி காலி பண்ணுகிற ஊடகங்கள் அன்பு, பிரியம், வாழ்த்துகிறேன், வருந்துகிறேன், இரங்கல் போன்ற எத்தனையோ கனத்த சொற்களை கனமற்ற சோரம் போன சொற்களாக்கி விட்டன. “தோழிஎன்ற சொல்லை எடுங்கள் - “புது வசந்தம்படம் வந்ததில் இருந்து இன்று வரை அந்த சொல் எப்படியான அதிரிபுரியான மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. இன்றுதோழிஎன ஒலித்தாலேஆல் பர்பஸ் அங்கிள்கள் வந்திட்டாங்கஎன பெண்கள் உஷாராகி விடுகிறார்கள். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அப்பா, அம்மா, இணக்கமான சில நண்பர்கள், ஒரு சில முன்னாள் காதலிகள் இருந்த இடத்தில் இப்போது போலியாக பல அண்ணன்கள், தம்பிமார், அக்காக்கள், தங்கைகள், கூடவே சில அப்பா, அம்மாக்களும் (ஆம் இப்போது பலரும் ரத்த தொடர்பு இல்லாதவர்களைக் கூட சுலபத்தில் அப்பா, அம்மா என கொஞ்சுவதைப் பார்க்கிறோம்), பற்பல முன்னாள் காதலிகள் வந்து சேர்ந்து விட்டார்கள்.


 இது ஒரு விதத்தில் இன்றைய சூழலில் அவசியமாகவும் உள்ளது. யாரெல்லாம் நன்றாக சமூகமாக்கல் செய்கிறார்களோ அவர்களே கூடுதல் தொடர்புகளைப் பெற்று, வாய்ப்புகளை அடைந்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்பதைக் காண்கிறோம். இயல்பாகவே யாரைப் பார்த்தாலும்சித்தப்பா”, “அண்ணேஎன கையைப் பற்றிப் பேச வராதவர்கள் கூட அப்படி செய்யும்படி தள்ளப்படுகிறோம். குறைந்தபட்சம்சகோ”, “புரோமாதிரியான சொற்களுக்குள் மறைந்து கொள்கிறோம். தற்காலிகமான சன்னமான இந்த சமூக உறவுகளுக்கு ஒரு எஞ்சின் ஆயில் போல இந்தஅன்புபயன்படுகிறது. இத்தகையோர் தம் அன்பை படாடோபமாக முன்வைக்கிறார்கள்; இவர்கள் வெள்ளாந்தியான, இயல்பிலேயே பிரியம் சொட்டும் அன்பாலான பிறவிகளாக நமக்குத் தோன்றுகிறார்கள் - ஒரே வித்தியாசம் அன்பு தரும் பொறுப்பை, பிரிவு தரும் கசப்பை இவர்களுடைய எந்த உறவிலும் பார்க்க முடியாது. அதாவது, முன்பு நமது நண்பர் ஒருவர் ஏமாற்றினால், காயப்படுத்தினால் அதை நினைத்து ஒரு மாதம் மனதுக்குள் புலம்புவோம், பிற நண்பர்களிடம் சொல்லி ஒப்பாரி வைப்போம், பிறகு மீண்டும் அதே நண்பரிடம் சமாதானமாவோம், அல்லது சண்டை போட்டு பிரிவை இன்னும் வலி மிக்கதாக்குவோம். இன்று ஒரே நாளில் மிக நெருங்கிய நண்பனாக்கி மறுநாள் காலையில் அந்நண்பன் உயிருடன் இருக்கிறானா என்பதையே மறந்து போகிறோம்.  

நான் முன்பு வேலை செய்த ஒரு நிறுவனத்தில் ஒரு தோழி இருந்தார். அவருடன் எப்போதும் சுற்றித்திரிகிற ஒரு சில தோழிகள். ஒருநாள் அத்தோழிக்கு வேலை போய் விட்டது. இந்த செய்தியை தோழி என்னிடம் மட்டுமே சொல்லியிருக்கிறார் என்பதை ஒரு மாதம் கழித்து அவரது இறுதி நாளின் போது நாங்கள் அந்த வளாகத்தை சுற்றி வந்து நினைவுகளை அசை போட்டபடி இருக்கும் போது அத்தோழிகள் எங்களை எதிர்கொண்ட போது தான் நான் உணர்ந்தேன். “எங்கே சுத்திக்கிட்டு இருக்கீங்க?” என அவர்கள் விசாரிக்க, நான் விசயத்தை சொல்ல, அவர்கள் எந்த வியப்பும் இல்லாமல்நிஜமாகவே இன்னிக்குத் தான் கடைசி நாளா? வேலையை விட்டுட்டீங்களா?” என தோழியிடம் கேட்டு விட்டு சிரிப்பு மாறாமல் அணைத்து அவரிடம் அன்பைக் காட்டினார்கள். தோழி ஏன் தன் நெருக்கமான நட்புகளிடம் இந்த முக்கியமான சேதியை சொல்லவில்லை என நான் யோசித்தேன் - என்னை விட அதிகமாய் பிரியம் காட்டினாலும் அதிக நேரம் அவருடன் அவர்கள் செலவிட்டாலும் அவர்களுடையது ஒரு போலியான உறவு என அவருக்குப் பட்டிருக்கிறது. ஒரு துயரமான சேதியைச் சொன்னால் அவர்களுக்கு வலிக்காது என அவருக்குத் தெரிந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள், இன்றைய வேலையிடங்களில் ஒரு துயரத்தை பரிமாறிடவே நமக்கு ஆளில்லை. மகிழ்ச்சியைப் பரிமாறிட நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். அணைத்து, கைகுலுக்கி வாழ்த்தி விட்டுட்ரீட் எப்போ?” எனக் கேட்டபடி வருவார்கள்.


 நட்பின் இலக்கணமே இன்று ஒரு வியூகமாக மாறி விட்டது. தொடர்பு, பயன், தேவை தான் இன்றைய நட்பின் நீடிப்பை தீர்மானிக்கிறது. இது எவ்வளவு சுயநலமானது என்பதையும் நாம் யோசிப்பதில்லை. ஏனென்றால் அன்பே சுயநலமானதுதானே, அதில் என்ன தப்பு என நினைக்கத் தொடங்கி விட்டோம். அன்பு என்பது ஈகோவைக் கடந்து செல்வது என மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பரிசீலிக்குமென்றால் வண்ணதாசனின் கதைகளில் அன்பு சிறுமைகளைக் கடந்து சிந்திக்கும் மனவிரிவாக இருக்கிறது; இவர்களுக்கு முன்பே பல மானுடவாதிகள் அன்பை சுயநலம் கடந்த ஒரு உணர்வோட்டமாக சித்தரிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அன்பு என்பது குடும்பத்துக்குள், நண்பர்கள் இடையே நிலவிய ஒரு பரிசுத்தமான பந்தமாக இருந்தது. இன்று இந்த அன்புக்கு ஒரு போலியான மாற்று தோன்றியுள்ளது - குறிப்பிட்ட சில சுயநலமான நோக்கங்களின் அடிப்படையில் தோன்றுகிற, இந்த குறுகின வரையறையை வெளிப்படையாய் ஏற்கிற ஒன்றாக இது உள்ளது. ரயில் பயணங்களின் போது தோன்றுமே, ஒரு தற்காலிகமான பிணைப்பு, இது நீடிக்காது, இதில் உண்மையில்லை எனத் தெரிந்திருந்தும் அதனாலே கூட ஆசுவாசமாய தோன்றுமே ஒருஅன்பு’, அதுவே இந்த மாற்று அன்பு.   


பிக்பாஸை நான் இன்றைய மாறி வரும் சமூகத்துக்கான ஒரு கதையாடலாக, உருவகமாகவே பார்க்கிறேன். அதனாலே இந்த மாற்று அன்பை அர்ச்சனா அங்கு பறைசாற்றி அதை ஒரு வியூகமாக மாற்றுகிறார். ஒரு கட்டத்துக்கு மேல் நமக்கு அது எரிச்சலூட்டுகிறது. ஏன்?


 ஏனென்றால் அவர் சொல்வதில் உண்மை நிறைய உள்ளது. கிளாசிக்கான அன்பு குறித்து நாம் கொள்ளுகிற பாவனைகளை வேல் கேங்கின் மாற்று அன்பு பிரகடனம் கலைக்கிறது. ஒருநாள் அர்ச்சனா பாலாவை தன் மகன் என பாவிக்கிறார். அதன் பிறகு பாலா தன் வசம் அடிமையாக தங்கியிருக்க மாட்டார் எனத் தோன்றியதும் அவரைப் பழிக்கிறார். பாலாவுக்கு எதிராக சதியாலோசனையை தன் லவ் பெட்டில் செய்கிறார். ஆனால் பாலாவுடன் மோதல் வரும் போதெல்லாம் மீண்டும் பாசத்தை பிழிகிறார். பாலா உங்கள் அன்பு போலியானது என்றால்இனிமேல் என்னை அக்கா என அழைக்காதேஎனத் தெரிவிக்கிறார். அம்மா எப்போது அக்காவானார்? அக்கா எப்படி ஒருநொடியில் சகபோட்டியாளர் ஆக முடியும்? சரி, பாலாவுக்கே வருவோம். அவர் தனது ஒவ்வொரு அசைவும் ஒரு வியூகமே என வெளிப்படையாகவே சொல்கிறவர். ஆனால் அர்ச்சனா தன்னை மகனாக வரித்துக்கொண்ட போது தான் உணர்வுரீதியாகலாக்ஆனதாக, அது தன் ஆட்டத்தை பாதித்ததாக சொல்கிறார். எனில் அவர் எப்போது தெளிவாக ஆடுகிறார், எப்போதுலாக்ஆகிறார்? எப்போது ஷிவானியுடன் கேம் ஆடுகிறார், எப்போதுலாக்ஆகிறார்? ரியோ இன்னொரு பக்கம் இப்படி அன்பாக, கூட்டிணைவாக இருந்து ஆடுவதில் என்ன தப்பு எனக் கேட்கிறார். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும் - அன்பு vs வியூகம் எனும் எதிரிணை அங்கு இல்லை. மாறாகவே விளையாட வேண்டும், ஜெயிக்க வேண்டும் (குறைந்தது தாக்குப்பிடிக்க வேண்டும்) எனும் விழைவே அவர்களை அன்பை ஒரு வியூகமாக எடுத்து பயன்படுத்தத் தூண்டுகிறது. ஒரு போட்டியாளராக இருக்கும் வரையில் நீங்கள் அங்கு அன்பையும் வியூகத்தையும் இரண்டிரண்டாக தனித்துப் பார்க்கவே முடியாது. மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் பிக்பாஸ்களில் எல்லாம் நிலைமை இதுதான். ‘விளையாட்டை நாங்கள் தனித்தாடுகிறோம்என்பதேஅன்பாலே அழகாகும் வீடுஎன்பதற்கு ஈடான மற்றொரு பொய் தான்.


ஏன் அர்ச்சனா, ரியோ, சோம் குழு கடுப்பேற்றுகிறார்கள் என்றால் இந்த அன்பு எனும் வியூகத்தை தனிமனிதப் போட்டி எனும் வியூகம் அளவுக்கு அவர்களால் மறைத்தாட முடியவில்லை என்பதாலே. இந்த கேங்க் மட்டுமல்ல கேங்குக்கு எதிரானவர்களுக்கும் இவர்களுக்கும் கூட ஒரு மறைமுக கூட்டணி உள்ளது புலப்படுகிறது. மறைத்தாடத் தெரியாத அளவுக்கு இந்த பங்கேற்பாளர்கள் தத்தியாக மக்காக இருக்கிறார்கள் என்பதே பிரச்சனை. அப்படி வெளிப்படையாக ஒரு எதிரிடையை கட்டமைத்து, அதனுள் தம்மை தனிமனிதர்களாக முன்வைக்கிறவர்களும் மற்றொருகேங்குக்குள்மாடிக் கொள்கிறார்கள். உருவற்ற கேங்க் இது.

 அனிதா ஏன் தனது கணவரைப் பற்றி கேமரா முன்பு சிலாகிக்க வேண்டும்? கணவர்கள் மட்டுமல்ல, மனைவி, குழந்தை, நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாமே அங்கு ஒரு ஆவி வடிவிலான அன்புருவங்களாக (spectres of love) இருக்கின்றன. இந்த ஆவியுருவங்கள் ஒரு தோற்றமயக்கமாக உள்ளன. அர்ச்சனா இருக்கிற ரியோவிடம் நடத்துகிற நாடகத்தை ஓவியாவில் இருந்து அனிதா வரையிலான தனிமனிதவாதிகள் அங்கு புலப்படாத ஒருரியோவைவைத்து செய்கிறார்கள்; அல்லது பிக்பாஸ் எனும் ஆவியுருவை ஒரு வேல் கேங்காக மாற்றுகிறார்கள் (கேமராவிடம் பேசுவது, பிக்கி பாஸ் என கொஞ்சுவது). அல்லது பாலா, ஆரி போன்றோர் ஒரு எதிர்மறை தரப்பை கற்பனை பண்ணி அதனுடன் மோதிக்கொண்டு கேம் ஆடுகிறார்கள். ஆனால் எங்கு சுற்றினாலும் அவர்களால் தனிமையில் ஆட முடிவதில்லை. பிக்பாஸுக்குள் இப்படி அனைவருமே போலியாக உள்ளார்கள்; அந்த விளையாட்டே அப்படித்தான்; நேர்மறையோ எதிர்மறையோ, சிலரால் இந்த விளையாட்டை சாமர்த்தியமாகவும் சிலரால் அலுப்பூட்டும் வகையில் ஆடப்படுகிறது என்பதே ஒரே வித்தியாசம்.


சுச்சி விடைபெறும் போது கமலிடம் வேல் கேங் பற்றி ஒரு சுவாரஸ்யமான குற்றச்சாட்டை வைத்தார் - ரமேஷ், ரியோ, சோம் ஆகியோரின் துணிமணிகளை நிஷா, அர்ச்சனா போன்றோர் துவைத்துப் போடுகிறார்கள். இத்துடன் மடியில் படுக்க வைப்பது, விபூதி போட்டு விடுவது, மசாஜ் பண்ணுவது என இந்த ஆண்களை இவர்கள்லாக்செய்து வைத்துள்ளதாக சுச்சி சொன்னார். இன்னொரு பக்கம் ரமேஷின் அப்பா ஒரு தயாரிப்பாளர் என்பதால் சினிமா வாய்ப்புகளுக்காக வேல் கேங் அவருக்கு தனியான கவனிப்புகள் வழங்கி, நாமினேஷனில் இருந்து பாதுகாப்பதாக சொன்னார். இப்படி வேல் கேங் அன்பு வியூகத்தை மோசமாக ஆடுவதாலே பிக்பாஸ் இந்த தகவல்களை இப்போது அம்பலப்படுத்தி அவர்கள் மீது அழுத்தத்தை செலுத்தி இருக்கிறார்.

  முந்தைய பருவங்களில் ஐஷ்வர்யா-யஷிகா, ஶ்ரீனிஷ்-பெர்ளி மாணி (மலையாள பிக்பாஸ்) போன்றவர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் அன்பை ஒரு வியூகமாக பயன்படுத்தி விட்டு பின்பு நடைமுறை வாழ்க்கையில் உண்மையாக்கியவர்கள். மற்றவர்கள் காதல் நாடகத்தை எவிக்‌ஷனுக்கு அடுத்த நொடி மறந்து விடுகிறவர்கள்.


 இந்த பாவனைகள் நமது சமகால சமூக உறவாடல்களில் உள்ளவையே; பிக்பாஸ் அதை அம்பலப்படுத்தும் போது அன்பென்றால் என்ன, அது மொத்தமாகவே போலியா எனும் பயம் நமக்கு வருகிறது. அர்ச்சனாவை, ரியோவை வில்லன்களாக்கி இந்த கேள்வியில் இருந்து தப்பிக்கிறோம். இந்த பிடிப்பற்ற, பொறுப்பற்ற அன்பையே நாம் இன்று விரும்புகிறோம். இதில் இருந்தல்ல, இதை வைத்தே இனி நமது விடுதலையை நமது பெற முடியும்



Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...