Skip to main content

தமிழர் vs மலையாளிகள் - ஒரு தெளிவுபடுத்தல்


நான் எங்குமே மலையாளிகள் சர்வநேரமும் இலக்கியம் வாசிப்பதாகவோ அவர்களில் பெரும்பாலானோர் வாசிக்கிறார்கள் என்றோ கூறவில்லை. என்னுடைய கருத்து அவர்கள் தமிழர்களை விட அதிக பண்பாட்டு ஓர்மை கொண்டிருக்கிறார்கள், உயர்கலைகளான இலக்கியம், இசை, தமது அடையாளமான நாட்டுப்புற கலைகள் (ஓட்டம் துள்ளல்) துவங்கி செவ்வியல் நிகழ்த்துகலைகள் (கதகளி, மோகினி ஆட்டம்) வரை அவர்கள் போற்றிப் பாதுகாக்கிறார்கள், அது மிக முக்கியம் என்பதே.


 நம்முடைய அடிமுறை இங்கிருந்து கேரளாவுக்கு சென்று களரிப் பயிற்று ஆக வளர்ந்தது; அவர்கள் களரிக்கென பயிற்சிக்களங்கள், பள்ளிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நம்மூரில் இருந்து அடிமுறை சீனாவுக்கு சென்று குங் பூவாகி, பௌத்த தத்துவத்தின் சாரத்தை உறிஞ்சி ஒரு அற்புதமான சண்டைப் பயிற்சியாகியது; உலகம் முழுக்க புரூஸ் லீ வழி அது பரவியது. நம்மவர்கள் அடிமுறை, சிலம்பக் கலையை சற்றாவது பொருட்படுத்தி இருக்கிறார்களா? இசையையும் நடனத்தையும் எடுத்துக் கொண்டால் கோயில் சார்ந்து இக்கலைகளை தமிழர்கள் (சில சமூகங்கள்) ஒரு காலத்தில் பயின்றிருக்கிறார்கள், ஆனால் வெள்ளைக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு தமிழகம் வந்ததும் இவை அழியத் தொடங்கின. தமிழர் இசை இன்னொரு பக்கம் கர்நாடகம், ஆந்திரம் எனப் பயணித்து வளர்ந்து, பிராமணர் வசம் சென்று செவ்வியல் இசையாக வளர்ந்தது; தமிழர் இசையெனும் அடையாளம் களையப்பட்டு கர்நாடக இணையானது; தமிழர் நடனமும் (சதிர்) தமிழரால் கைவிடப்பட்ட பின் பரத நாட்டியம் எனும் பக்தி மார்க்க நிகழ்த்து வடிவமானது. இந்த பிராமணர் இல்லையெனில் இவையிரண்டையும் நாம் முழுக்க மறந்திருப்போம். இக்கலைகளை அவர்கள் தமது பண்பாட்டு அடையாளமென வரித்துக்கொண்டு வழிவழியாக கற்றுத்தேர்ந்து நிதியளித்து நிறுவனங்கள் அமைத்து வளர்த்து பாதுகாத்தார்கள். கடந்த அரை நூற்றாண்டு தான் - ஆனால் அதற்கும் கர்நாடக சங்கீதத்தையும் பரத நாட்டியத்தையும் உச்சிகோபுரத்தில் கொண்டு போய் வைத்து விட்டார்கள்.


 இன்று தெருக்கூத்து கிராமங்களில் நடக்கிறது, ஆய்வாளர்களும் உள்ளூர் மக்களில் சிலரும் போய்ப் பார்க்கிரார்கள். ஆனால் கணிசமான மக்களுக்கு இந்த வடிவங்களே தமது பண்பாட்டுப் பெருமை எனும் உணர்வு இல்லை, அவர்கள் மானாடு மயிலாடு தாம் தமது அடையாளம் என நினைக்கிறார்கள். ஏன் பிராமணர்களுக்கு கர்நாடக இசை மீதுள்ள அக்கறை பொது தமிழ் சமூகத்துக்கு தம் இசை மீது இல்லை? உடனே எளிய தமிழரின், பொது தமிழ் சமூக நீரோட்டத்தின் கலைஞன் இளையராஜா என தூக்கிக் கொண்டு வராதீர்கள் - சினிமா ஒரு போது மரபான மக்கள் கலைகளுக்கு மாற்றாகாது; சினிமாவில் பண்பாட்டுக் கூறுகளுக்கு, நினைவுகளுக்கு இடமிருக்காது, தொடர்ச்சி இருக்காது, நேற்று செவ்வியல், நாட்டுப்புற இசை, அடுத்து கானா, அடுத்து ராக் இசை, அதற்கு அடுத்து வேறொரு இசைவடிவம் என கலந்து கட்டி அது போய்க்கொண்டே இருக்கும். சினிமா இசையே உங்கள் இசை என்றால் உங்களுக்கு பிரதிநுத்துவமே இருக்காது.

 எல்லாருமே அடிமுறை, சதிராட்டம், கூத்து ஆகியவற்றை பயின்று கோடிக்கணக்கான பேர் இவற்றை தினமும் பார்க்க வேண்டும் என நான் கோரவில்லை. ஆனால் இவற்றைத் தொடர்ந்து தம் அடையாளமாக தமிழ் சமூகம் முன்னெடுத்து பராமரித்து போற்ற வேண்டியது அவசியம் - அப்போதே தமிழருக்கு என ஒரு தனித்த நிரந்தர பண்பாட்டு அடையாளமும் ஓர்மையும் உருவாகும்.

தமிழ் தேசிய மரபு, திராவிட கழக இயக்க நடவடிக்கைகள் ஆகியவை இதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டன என்பதை நாம் மறக்க முடியாது, ஆனால் அவற்றை தமிழர் சரியாக உள்வாங்கித் தொடரவில்லை. கம்பராமாயணத்தின் இடத்தில் சிலப்பதிகாரத்தைக் கொண்டு வந்தது ஒரு முக்கியமான, புத்திசாலித்தனமான நகர்வு. அண்ணாவின் பெரும் மேதைமை என இதைச் சொல்வேன். ஆனால் நாம் இன்று எந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்? நமது முதல்வர் கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் எனச் சொல்கிறார். இப்படியான ஒன்று கேரளாவில் நடக்குமா? நீங்கள் பிணறாயி விஜயனின் பேட்டியைப் பாருங்கள் - அவருக்கு நல்ல வாசிப்பும், கலாச்சார புரிதலும் உள்ளது. ஆனால் நமது முதல்வரால் கோர்வையாக ரெண்டு வாக்கியம் பேச முடியுமா? ஜெயலலிதா எப்படி இருந்தார்? எழுதி வைத்துப் படித்தார். அவருக்கு தமிழில் சரளமாக வாசிக்க, பேசத் தெரிந்திருந்ததா? இல்லை. ரஜினியால் ஒரு வாக்கியத்தை தமிழில் எழுத முடியுமா? முடியாது. மலையாளத்தில் வாசிக்கவோ எழுதவோ தெரியாத ஒருவர் கேரளாவில் சூப்பர் ஸ்டார் ஆக முடியுமா? முடியாது. எடப்பாடியை விடுங்கள், அவரதுதெய்வமானஜெயலலிதாவுக்கும் கம்பராமாயணத்தை எழுதியது யாரெனத் தெரிந்திருக்காது. சிலப்பதிகாரம் என ஒன்றை கேள்விப்பட்டிருக்கவே மாட்டார். எம்.ஜி.ஆர்? அவர் பாரதிதாசனையாவது படித்திருப்பாரா? அவர் பள்ளிக்கு சென்று படித்திருக்கிறாரா? இல்லை. யோசித்துப் பாருங்கள் - கலைஞர் கேரளாவில் பிறந்திருந்தால் மலையாளிகள் அவரது புகழை இந்தியாவெங்கும் கொண்டு சென்றிருப்பார்கள்; அவரைப் போன்றதொரு பெரும் எழுத்தாள-பேச்சாள ஆளுமை அவர்களுடைய அரசியல் மரபிலேயே இல்லை என நினைக்கிறேன். ஆனால் நாம் என்ன செய்தோம் - எம்.ஜி.ஆரை ஜெயிக்க வைத்து கலைஞரை பின்னுக்குத் தள்ளினோம். ஒரு அடிப்படையான பண்பாட்டு, அரசியல் புரிதல் உள்ள சமூகம் எம்.ஜி.ஆரைப் போன்ற ஒரு தற்குறியை, மொழி, பண்பாட்டு ஓர்மை இல்லாத ஒருவரை தலைவராக ஏற்குமா? (இதில் அண்ணாவின் தவறும் உள்ளது, நான் மறுக்கவில்லை.) இன்றும் சமூகவலைதளங்களில் கலைஞரை இகழ்கிற பல தற்குறிகள் இருக்கிறார்கள். அவரது பண்பாட்டுப் பங்களிப்பை, அரசியல் அறிவை அறிந்தரவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். இப்படித்தான் தமிழ் தேசிய அரசியலின் முகத்தையும் நாம் தொலைத்தோம். (அதன் பிறகு வாக்குச்சிதறல் அரசியலுக்காக தமிழ் தேசியத்தை ஜெயலலிதா திரும்பக் கொண்டு வந்தது வேறு கதை.)


அடுத்து மதத்துக்கு வருகிறேன்:

தமிழருக்கு என ஒரு தனி மதம் இருந்திருக்கிறது - அது சைவமோ, வைணவமோ அல்ல; அவை வடக்கேயிருந்து வந்தவை. நம்மை அடிமைப்படுத்தி, சனாதனவாதத்தை நடைமுறைப்படுத்தியவை. இந்த மண் சார்ந்து தனித்துவமாக மலர்ந்த பௌத்தமே நமது மதம். அதை பூர்வ பைத்தம் என அயோத்திதாசர் சொல்லுகிறார் - சடங்குகள், மண்சார்ந்த நம்பிக்கைகளால் தோன்றின தனித்துவமான பௌத்தம் அது. ஆனால் அதைக் குறித்த ஓர்மையாவது நமக்குண்டா? அந்த ஓர்மையின்மையினால் தான் இங்கு இன்று சாதியம் கொடிகட்டிப் பறக்கிறது. அந்த ஓர்மையிருந்திருந்தால் வைதீகம் போன்ற வடக்கத்திய, சனாதன மரபுகளைத் துரத்தி இருப்போம். அந்த ஓர்மையுடன் பெரியாயிரியமும் இணைந்திருந்தால் தமிழகம் முழுமையான ஒரு முற்போக்கு மாநிலமாக மலர்ந்திருக்கும். அந்த ஓர்மை இல்லாததாலே அண்ணாஒருவனே தேவன்எனச் சொல்லும் நிலை, கோயில் கலாச்சாரம் திராவிட ஆட்சியிலும் தழைக்கும் நிலை ஏற்பட்டது.


தமிழர்களுக்கு எல்லாவித சிறப்புகளும் உண்டு, ஆனால் அவற்றை தக்க வைத்து மேலெடுப்பதற்கான பண்பாட்டு ஓர்மை மட்டும் இல்லை. 300-400 ஆண்டுகளாக நமது பண்பாட்டு ஓர்மை என்பதுநடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்தான். அவ்வப்போது விழித்துக்கொண்டுநாகராஜண்ணே, எப்படி இருக்கண்ணே, என்னண்னே துரும்பா எளைச்சிட்டேஎன துள்ளியெழுந்து அணைத்துக் கொள்கிறோம். அதன் பிறகு மீண்டும்என்னாச்சு?” தான்.


ஒரு சமூகம் எழுச்சிபெற, மேம்பட அரசியல், பண்பாடு, (அவைதீக) மதம் என மூன்று முகங்களுமே துலங்க வேண்டும். பண்பாட்டுப் பெருமை அல்ல ஓர்மையே முக்கியம் - அது பண்பாட்டை வளர்க்கும் நோக்கத்துக்காக அல்ல, அது ஒரு சமூகம் அறத்துடன், சமத்துவத்துடன், தெளிவுடன் வாழ அவசியம். யோசித்துப் பாருங்கள் - திராவிட இயக்கங்கள் வள்ளுவரை தமிழின் அரசியல் அடையாளமாக பெருமளவில் முன்னிறுத்தினர். ஒவ்வொரு பள்ளியிலும் திருக்குறளை கற்றுக்கொடுக்கிறோம், ஆனால் எப்படி? தப்பும் தவறுமாக. ஒரு பௌத்தப் பிரதியை வைணவப் பிரதியாக தலைகீழாக மாற்றி தப்பும் தவறுமாய் சொல்லித் தருகிறோம். இது ஒரு படத்தில் சேலைகட்டிய வடிவேலுவை கடத்தி வந்து முதலிரவு நடத்த முயல்வார்களே அப்படி ஆகி விட்டது.

 கடந்த நூறாண்டுகளில் எவ்வளவு கோளாறான உரைகளை குறளுக்கு எழுதியிருக்கிறோம்? .தா., “செவிச்செல்வம்என வள்ளுவர் சொல்வதை கேள்வி அறிவு என வேறெந்த சமூகமாவது இவ்வளவு முட்டாள்தனமாக தன் குழந்தைகளுக்கு சொல்லித் தருமா? இப்படிச் சொல்லித் தருவதாலே தெரிதா சொல்லுகிற பேச்சுமொழியின் இருப்பையும் வள்ளுவத்தையும் நம்மால் தொடர்புபடுத்த முடியாமல் போகிறது. அதனால் தான் மூடநம்பிக்கைகளை, தீட்டை, தீண்டாமையை நம்மால் ஒழிக்க முடியாமல் போகிறது. அண்ணா துவங்கி நமது தலைவர்கள் வைணவத்தை, சைவத்தை துரத்தி அதன் இடத்தில் பௌத்தத்தை வைக்கும் முயற்சியை எடுத்திருந்தால் அவர்களது இயக்கம் காத்திரமான நீடித்த வெற்றியை பெற்றிருக்கும். ஒரு பக்கம் வள்ளுவரை வைணவராக்க அனுமதித்துக் கொண்டே அதே தோற்றத்தில் சடாமுடி துறவியாக அவரது சிலையை எழுப்பினால் என்ன பயன்? மாறாக, கடவுள் மறுப்புக்கு, சாதி மறுப்புக்கு பௌத்தத்தை விட சிறந்த கருவியை, குறளை விட பெரும் ஆயுதத்தை அவர்களால் கண்டெடுக்க முடியுமா? பக்கத்திலே அதை வைத்து விட்டு கண்ணிருந்தும் குருடராக இருந்து விட்டார்கள்.


இருந்தாலும், நமது பண்பாட்டுச் சிக்கலின் பொறுப்பை திராவிட இயக்கத்தினர் மீது நாம் சுமத்த மாட்டேன். ஏனென்றால் அவர்கள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பிருந்தே நாம் பண்பாட்டு வறுமையுடன், ஓர்மையின்மையுடன், “மூன்றாம் பிறைஶ்ரீதேவி போன்று இருந்து கொண்டிருக்கிறோம்.  


நான் இந்த விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து தான் தமிழரின் இலக்கிய நிராகரிப்பை, பண்பாட்டு ஓர்மையின்மையைப் பார்க்கிறேன். அந்த ஓர்மையின்மையே நம் மாநிலத்தில் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, மூடநம்பிக்கை போன்ற பல தீமைகளை காரணமாக இருந்திருக்கிறது என்கிறேன். அதாவது பண்பாட்டு ஓர்மையென்பது வெறுமனே இலக்கியமோ, இசையோ அல்ல. அது வெறும் அலங்காரம் அல்ல, நீங்கள் எதுவாக இருக்கிறீர்கள், எப்படி சிந்திக்கிறீர்கள், அபிரகாம் லிங்கனின் பெயரை அபிராமி என்றெல்லாம் உச்சரிக்கிறவருக்கு, இனவாத உரையாடல்கள், அதன் வரலாற்றைப் பற்றி, கறுப்பரினத்தின் துயரங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதவருக்கு வாக்களிக்காமல் இருக்க உதவுகிற ஒன்று என்கிறேன்


மற்றபடி, கேரளம் தமிழகத்தை விட மேலான மாநிலம் என்றோ, மலையாளிகள் அனைவரும் இலக்கிய வாசகர்கள் என்றோ நான் கூறவில்லை. சன்னி லியோனைப் பார்க்க அங்கு மக்கள் திரண்ட செய்தி எனக்கு தெரியும். அங்கிருந்து தான் ஷக்கீலா வந்தார் எனத் தெரியும். விஜய்க்கு அங்குள்ள ரசிகர் படையைப் பற்றியும் தெரியும். ஆனால் அவர்களிடம் பண்பாட்டு ஓர்மை உள்ளதாலே சன்னி லியோனை மகாநடிகை என்று கூறவோ, நடிகர்களை முதல்வராக்கவோ மாட்டார்கள் என்கிறேன். அவர்களிடம் அந்த தெளிவு உள்ளதாலே யாரை எங்கு வைக்க வேண்டும் எனத் தெரிகிறது என்கிறேன். அங்கே செல்லூர் ராஜா மாதிரியான ஒருவர் அமைச்சராகி தெர்மோகோலை மிதக்க விட்டு காமெடி பண்ண முடியுமா? உங்கள் வீட்டில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையிருந்தால் அக்குழந்தையுடன் எடப்பாடியாரை ஒரு பொது அறிவுப் போட்டியில் கலந்து கொள்ளச் சொல்வோம். நான் நிச்சயமாகச் சொல்கிறேன் - அவர் தோற்று விடுவார். ஒன்றாம் வகுப்புக் குழந்தையுடன் தோற்றுப் போகிறவரையா முதல்வராக வைத்து வணங்குகிறோம்? எடப்பாடியார் என்றில்லை அவரது கணிசமான அமைச்சர்களின் நிலையும் இதுதான். இதை எண்ணி நாமெல்லாம் தூக்கில் தொங்காமல் எப்படி சுரணையில்லாமல் கெத்தாக சுற்றி வந்து கொண்டிருக்கிறோம் சொல்லுங்கள். GobackModi என ட்வீட் போட்டு மோடியை எதிர்ப்பதிலெல்லாம் என்ன அர்த்தம் உள்ளது? மோடி என்பவர் நல்ல பேச்சாளுமை கொண்ட மற்றொரு எடப்பாடி. அவ்வளவுதான். உத்தரபிரதேச மக்களுக்கு கல்வியறிவோ, பண்பாட்டு ஓர்மையோ இல்லாமல் ராமரை வழிபட்டு, கோயில் கட்டி, தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளில் அல்லல்பட்டு அதன் நீட்சியாகவே அடிப்படையான கல்வியறிவில்லாத ஒருவரை பிரதமராக கொண்டு வந்தார்கள். நாம் எடப்பாடியாருக்கு வாக்களித்து அவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறோம். நமக்கும் அவர்களுக்கும் சிறிய வித்தியாசம் தான்.


நான் திரும்பத் திரும்ப சொல்லுவது பண்பாட்டுப் பெருமை, ஓர்மை, நுண்ணுணர்வு ஆகியனவே அறம், அரசியல், சமூக மேம்பாடு, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றை தீர்மானிக்கிறது என்பது. இலக்கியவாதியை மதிப்பது என்பது இந்த சங்கதிகளின் ஒரு நீட்சி மட்டுமே. சாரு சொல்வதைப் போல நாம் உயர்பண்பாட்டை மதிக்காத மொண்ணையான சமூகமாக இருப்பதானது அதன் ஆழத்தில் நாம் பல சமூகத்தீமைகளில் முழ்கின ஒரு சமூகமாகவும் இருப்பதே. முட்டாள்கள் மட்டுமே இலக்கியத்தை வெறும் இலக்கியமாக, பண்பாட்டை வெறும் பண்பாடாகப் பார்ப்பார்கள். சாரு சொல்வதற்கு இவ்வளவு விரிவான ஒரு வரலாற்றுப் பின்புலம், சிக்கல் உள்ளது. (அதற்காக சாருவின் கருத்துக்களை எல்லாம் நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் என்று பொருளில்லை.)


சாதி மற்றும் அவைதீகத்தைப் பொறுத்து கேரளம் நம்மைக் கண்டு கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. ஆனால் அதை விட அதிகமாய் பண்பாட்டு ஓர்மையைப் பொறுத்து நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள உள்ளது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...