“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை” (குறள் 964; பால்: பொருட்பால்; அதிகாரம்: மானம்)
இது ஒரு எளிய குறள் - தலையில் இருக்கும் போது அழகாக கம்பீரமாகத் தோற்றம் தரும் மயிர். ஆனால் அது உதிர்ந்தால் எந்த மதிப்பும் இல்லை. இந்த தலைமயிருடன் வாழ்வின் உயர்நிலையை இணையாக்கும் வள்ளுவர், தாழ்வு நிலையை உதிர்ந்த மயிர் என்கிறார். இதன் பொருள் என்ன? “மதிப்பில்லாத ஒன்றுக்கு நீங்கள் தான் அதிக மதிப்பை அளித்து தலையில் வளர்த்து அலங்கரித்து பெருமை கொள்கிறீர்கள். ஆனால் அதன் மதிப்பும் பெருமையும் நிலையற்றது, பல விசயங்களை சார்ந்தது, அப்படியே தான் வாழ்க்கையில் அந்தஸ்து, சமூக மதிப்பு, சமூக அதிகாரம் எல்லாம். அதைப் பெறுவதற்கு நீ செய்யும் முயற்சிகள் வீணானவை. அதை இழந்ததை நினைத்து இரங்கி நீ கொள்ளும் கவலைகள் அபத்தமானவை. நீ மட்டுமாக அதை உண்டு பண்ணவில்லை, நீ மட்டுமாக அதை இழக்கவில்லை, அது உருவானதற்கான பல்வேறு காரணிகளில் ஒன்றே நீ, அக்காரணிகள் சாரமானவை அல்ல, உண்மையை புரிந்து கொண்டால் நீ துக்கத்தில் இருந்து விடுபடுவாய்.”
இதை மொட்டையடித்த ஒரு பௌத்த பிக்கு சொல்வதாய் கற்பித்துப் பாருங்கள், தெளிவாக விளங்கி விடும்.
இதையே நம் குறள் உரையாசிரியர்கள் வீழ்ச்சியடைந்த ஒருவரது தாழ்வுற்ற நிலை அவலமானது, அதை உதிர்ந்த மயிரைப் போன்றது என வள்ளுவர் கூறுவதாய் கதைகட்டுகிறார்கள். அதில் எந்த தர்க்கப் பொருத்தமும் இல்லை - ஏன் அந்த அவலத்தைக் காட்டுவதற்காக ஒரு குறளை அவர் எழுத வேண்டும்?
மானம் என்றால் சமூகப் பெருமை, மரியாதை, குலப்பெருமை எனப் புரிந்து கொள்வதானால் வேறு குறள்களில் வள்ளுவர் சொல்லும் கருத்துக்களுடன் அது பொருந்துவதில்லை எனக் காணலாம். குறள் 961இல் இன்றியமையாதது எனினும் அதனால் உங்கள் நிலை தாழும் எனில் செய்ய வேண்டாம் என்கிறார். 962இல் புகழ் கிடைக்கும் எனினும் அப்புகழுக்கு ஊறுவிளைவிக்கும் ஒன்றை, மனத்திடத்தை (பேராண்மையை) குலைக்கிற ஒண்ற செய்ய வேண்டாம் என்கிறார். அந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தனது சமூகத் தேவையை ஒட்டியே செயல்பட்டான் என வைப்போம். ஒருவன் தன்னை தன் சமூகத்தின் போக்குகள், நம்பிக்கைகள், முடிவுகளில் இருந்து மாறுபடுத்திப் பார்க்காத காலம் அது. அப்போது இன்றியமையாதது என்பது சமூகம் கோருகிற ஒன்றாகவே இருக்க முடியும். சமூக பிம்பத்தை தக்க வைக்க துக்கத்தில் போய் விழாதே என்பதே சரியான விளக்கமாக இருக்க வேண்டும். சமூகப்பெருமையை அழித்தால் உதிர்ந்த மயிரைப் போலாகி விடுவாய் என்பதல்ல.
சமூகப்பொருளாதார கலாச்சாரத் தேவைகளுக்காக உன் நிலையை தாழ்த்திக்கொள்ளாதே என முதல் குறளில் சொல்லுபவர், அடுத்ததில் புகழுக்காக புகழையே இழக்காதே என்கிறார். புகழுக்காக எப்படி புகழை இழக்க முடியும்? முடியும் - புகழுக்கு வள்ளுவர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறார் எனில். பொருளாதார சமூக, அரசியல், பொருளாதார, மரபுசார் தேட்டலினால் தோன்றும் புகழ் ஒன்று, இவை நிலையற்றவை, சாரமற்றவை என உணரும் போது வரும் புகழ் அடுத்தது. முதல் புகழுக்காக இரண்டாவதை தொலைத்து மனத்திண்மையையும் கைவிடாதே என்கிறார் வள்ளுவர் என்பதே பொருத்தமாக இருக்கிறது.
இந்த அதிகாரத்தில் வரும் ஒவ்வொரு குறளும் இந்த நோக்குடன் இணங்கியே வருகிறது.
“பெருக்கத்து வேண்டும்...” என ஆரம்பிக்கும் குறள் 963 உயர்வின் போது பணிவும் தாழ்வின் போது உயர்வும் ஒரு மனிதனுக்கு வேண்டும் என்கிறது. உயர்வு சமூக அந்தஸ்தே, பொருள் வளர்ச்சியே எனில் இது எப்படி சரியாக வரும்? முந்தின குறளில் வரும் இரண்டாவது அர்த்தத்திலே இங்கும் உயர்வு, தாழ்வு எனும் நிலைகளைப் புரிந்து கொள்வது சரியாக இருக்கும்.
965வது குறளில் இதே போன்ற இரட்டை அர்த்த விளையாட்டை (குன்று-குன்றுதல்) வள்ளுவர் செய்கிறார் - குன்றைப் போல் உயர்ந்து நிற்பவரும் தாழ்விலும் தாழ்வான ஒரு காரியத்தை செய்து குன்றிப் போகலாம் என்கிறார். மானம், சமூகப்புகழ், உயர்வு, நற்பெயர் இவையெல்லாம் மனிதனின் பிறவிக்குணம், ஆதாரக் குணம் (சாதியினால் கிடைப்பது) எனப் பார்ப்பவர்களால் இக்குறளை ஏற்க முடியாது. எந்த உயர்குணமும் தன்னளவில் உயர்ந்தது அல்ல, அது வேறு பல சந்தர்ப்பசூழ்நிலைகளால், காரணிகளால் உயர்நிலையை அடைகிறது, அப்படியே எப்போது வேண்டுமெனிலும் உயர்குணம் படைத்தவர் ஒரு இழிவான செயலை செய்யலாம் (“குன்றின் அனையாரும் குன்றுவர்”), செய்து தன்னை தாழ்த்திக்கொள்ளலாம் (“குன்றுவ குன்றி அனைய செயின்”) என்கிறார் வள்ளுவர்.
இது கூட குலச்சிறப்பு, குடும்பப் பெருமை, உயர்குலத்தாரின் ஆதாரமான நிலையான மேல்நிலை போன்ற நம்பிக்கைகளை நொறுக்குகிற பார்வை தான். சந்தேகமே வேண்டாம். அந்த காலத்தில் தோன்றின வர்ணாசிரம பாகுபாடுகள் மீதான நுட்பமான ஒரு விமர்சனம் இதனுள் உள்ளது. ஒரு அந்தணன் ஒரு நொடி பிசகினால் ஒரு கொடுஞ்செயலை செய்யக்கூடும், எதுவும் நிலையானதோ சாரமானதோ அல்ல, ஆகையால் படிநிலைகள் அபத்தமானவை என வள்ளுவர் குறிப்புணர்த்துகிறார்.
“ஒட்டார்பின் சென்றொருவன்” என ஆரம்பிக்கும் குறள் 967 கூட சமூக உறவாடலால் தான், பிறரது செயலுடன் ஒட்டுறவாடுவதால் தான், ஒருவர் கெட்டுப் போகிறார் என சொல்கிறது - அதாவது ஒருவன் பிறப்பிலேயே கெட்டுப் போவதில்லை, இழிவடைவதில்லை, அவனது தற்போதைய இழிநிலை கூட தற்காலிகமானதே என்கிறார் வள்ளுவர். (ஒட்டாமையின் தத்துவப் பரிமாணத்தையும் நான் மறுக்கவில்ல.)
என்னை சற்று குழப்பியது கடைசிக் குறள்:
“இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு”
பெரும்பாலான உரையாசிரியர்கள் “இளிவரின்” என்பதை இளிவரல், இகழ்ச்சி எனும் பொருள்கொண்டு இக்குறளை இகழ்ச்சியற்ற மானம் பொருந்திய நிலையை கொண்டோரை உலகம் போற்றும் என மிகத்தட்டையாக விளக்கி உள்ளார்கள். சற்று ஆய்வு செய்து இளிவரின் எனும் சொல்லின் மாற்று அர்த்தங்களைப் புரிந்து கொண்ட பின்னரே இக்குறள் பற்றின தெளிவு கிடைத்தது.
இளிவரல் என்பதை விட இளி + வரின் என பிரித்து பொருள்படுத்துவதே சரியாக இருக்கும். இதற்கு முந்தின குறளில் வள்ளுவர் “மானம் வரின்” எனக் கூறுகிறார் - மானம் இழந்தால் என இதற்குப் பொருள் எனும் போது “வரின்” எனும் சொல்லுக்கு இழப்பது என்பதே பொருத்தமான அர்த்தமாக இருக்கும். இளி என்றால் என்ன? அகராதிப் பொருள் பொருந்துதல், இணங்குதல், இணைதல். நமது தமிழிசை மரபில் ஏழு ஸ்வரங்களில் ஒன்று இளி. ஒரு கருவியை குரலுடன் பொருந்தி இசைப்பது.
இளிவரின் என்பதை இப்படிப் பொருள்படுத்தினால், வாழ்வினோடு பொருந்தி போகாத, பல்வேறு காரணிகளால் தற்காலிகமாய், நிபந்தனைக்குட்பட்டு உருவாகிற இருப்புமட்டுமே “தான்” எனப் புரிந்து தன்னை மட்டும் பெரிதாகக் கருதி “இணங்காமல்” இருக்கிற ஒருவன், தன்னை முழுமுதல் இருப்பாக கருதுகிற, தன்னாலே எல்லாம் சாத்தியமாகிறது என அகந்தை கொள்கிற ஒருவன் துக்கத்தில் உழல்வான், அவன் தன்னை, இந்த இருப்பை பல நிபந்தனைகளுக்கு ஆட்பட்ட, அந்நிபந்தனைகளுக்கு இணங்குற ஒரு தற்காலிக விசயம் எனப் புரிந்து கொள்வான் ஆயின் அவன் புத்தரைப் போல மாறுவான். ஆகையால் இவ்வுண்மையைப் புரிந்து கொண்டவர் புத்தர், அவரது ஒளியை இவ்வுலகம் தொழுது அமையும் எனப் பொருள் வருகிறது. பௌத்த மரபில் மனம் என்பது ஒளியால் ஆனது, அதை மேகங்கள் மூடினாலும் முழுமையாக மறைக்க முடியாது எனச் சொல்கிறார்கள்; ஒளி என்பது பௌத்ததில் ஒரு முக்கியமான உருவகம். அப்படித்தான் “ஒளிதொழுது” எனும் பிரயோகம் இங்கே வருகிறது.
வள்ளுவர் ஒரு பௌத்தர் என்பதற்கு இதைப் போல பல நூறு உதாரணங்களை திருக்குறள் முழுவதிலும் இருந்து நாம் எடுத்தியம்ப முடியும். உரையாசிரியர்களுக்கு மட்டும் இது ஏன் கண்ணில் படவில்லை என்பது தமிழ் அறிவுலகின் புதிர்களில் ஒன்று.



