(“திரள்” அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் நான் நிகழ்த்திய உரையின் குறிப்புகள்)
இலக்கியம் மக்களுக்கானதா அல்லது நுட்பமும் ஆழமும் மட்டுமே இலக்கியத்தின் நோக்கமா? கலை மக்களுக்காகவா, அல்லது கலை கலைக்காகவா?
இந்த கேள்வி ரொம்ப பழையது - கடந்த ஒரு நூற்றாண்டில் இக்கேள்வி காலாவதியாகி குப்பைத்தொட்டிக்கு சென்று விட்டது. கலை என்பது ஒரு மறுக்க முடியாத, முழுமுதலான மானுட உண்மையைப் பேசுவது எனும் நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது. இப்படி நம்பியவர்களில் இந்த உண்மையானது ஆன்மீக விடுதலைக்கு, மகிழ்ச்சிக்கானதா அல்லது மக்கள் விடுதலைக்கானதா (அகவயமானதா புறவயமானதா?) எனும் இரு முகாம்களாக பிரிந்து போரிட்டனர். இது தத்துவத்தில் சாக்ரடீஸ் காலத்தில் இருந்தே இருந்து வரும் பஞ்சாயத்துதான்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்த பார்வை ஒரு முடிவுக்கு வந்தது; உலகம் முழுமுதல் உண்மைகளை நிராகரிக்க ஆரம்பித்தது. அப்போது மொழியியல், அமைப்பியல் அறிஞர்கள் அனைத்தும் மொழியாலானது என வாதிட்டனர். எப்படி அர்த்தம் தோன்றுகிறது, அதன் அமைப்பு என்ன எனக் கேட்டார்கள். இந்த கோணத்தில் இருந்து இலக்கியத்தை அணுகினார்கள். இலக்கியத்தில் மானுட நேயம், தர்மம், அறம், சரி, தவறு, அன்பு, வெறுப்பு போன்றவையெல்லாம் இல்லை, அவை வெறும் குறிப்பான்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ‘தோற்ற மயக்கம்’ என்றார்கள். ஏழை என்றால் அது அச்சொல்லின் சப்தத்தால் உணர்த்தப்படும் “ஏழைத்தன்மை” என விளக்கினார்கள். இந்த ஒலி இல்லையென்றால் ஏழையே இல்லை. மொழி என்பது ஒரு பெரிய எந்திரம் - சிறு திருகாணிகள், பற்சக்கரங்கள் கச்சிதமாய் பொருத்தப்பட ஒரு எந்திரம்.
இந்த பார்வையை இயல்பாகவே இலக்கியம் என்பது அரசியலே, மக்கள் விடுதலைக்கானதே எனக் கோரும் விமர்சகர்கள் ஏற்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் மார்க்ஸிய முகாமில் இருந்தார்கள். மார்க்ஸியர்கள் தொடர்ந்து முன்வைத்த ஒரு வாதம் உற்பத்தியில் ஈடுபடும் மக்களை அடிமையாக வைத்திருக்க பணக்கார, அதிகார வர்க்கம் பயன்படுத்தும் கருவியே மொழி, கலை, கலாச்சார இயக்கங்கள் என்பது. மார்க்ஸ் இதை நம்பினார். ஒவ்வொரு அதிகாரக் கரமும் ஒன்று வன்வடிவமோ (போலீஸ், ராணுவம், அரசு அலுவலகம்), அல்லது மென்வடிவமோ (கல்வி அமைப்பு, மதம், கலை, ஊடகம், குடும்பம்) எனத் தோன்றும் என அல்தூசர் கூறியது இந்த கருத்தை விரித்தெடுத்து உருவான பிரசித்தமான ஒரு பார்வை.
ஆனால் மென், வன் அதிகார வடிவங்கள் எல்லாமே குறிப்பான்களால் அமைந்தவை எனும் போது கலை-சமூக இருமை இல்லாமல் ஆனது. அரசியல்-அரசியலற்றது எனும் எதிரெதிர் முகாம்களின் இருப்பு கவலைக்குரியதானது.
இதற்கு அடுத்து மார்க்ஸிய பாதையில் வரலாற்றை ஒரு அதிகாரக் கட்டமைப்பாக பார்க்கும் ஒரு போக்கை உருவாக்கினார் மிஷல் பூக்கோ. அவருக்குப் பிறகே எல்லாம் அரசியல் தான், அரசியலின்றி இங்கு ஒன்றுமே இல்லை எனும் இடத்துக்கு உலகம் வந்து நின்றது. அரசியல் என்றால் பூக்கோவின் மொழியில் அதிகாரப் பரிமாற்றம் எனப் பொருள். அவர் power play எனும் பதத்தை பயன்படுத்தினார் - இங்கு play என்றால் ஆட்டம், நாடகம் எனப் பொருள் இல்லை. அதிகார பயன்பாடு, அதிகாரத்துடனான உறவாடல், அதிகார விளையாட்டு என்றும் பொருளில்லை. Play என்றால் சற்று லூசாக, சரியாகப் பொருந்தாமல் லொடலொடவென ஒரு எந்திரப்பகுதி இருக்குமே அதுதான் play. ஏற்கனவே அமைப்பியல்வாதிகள் மொழியை ஒரு கச்சிதமான எந்திரமாகப் பார்த்தார்கள் என்றேன் அல்லவா, இதற்கு ஒரு மறுப்பாகத் தான் பூக்கோ சமூகத்தை உள்பாகங்களின் திருகாணிகள் லூசாகி விட்ட ஒரு லொடலொட எந்திரம் எனப் பார்க்க ஆரம்பித்தார். இந்த பாகங்கள் பிசிறின்றி ஒட்டியோடும் போது அதனால் எந்திரம் பயனடையும், வேலை செய்யும், ஆனால் அவை லூசாகும் போது பாகங்களுக்குள் ஆற்றல் ஒழுகி ஓடும், எந்திரத்தின் மையத்துக்குப் போகாது. சமூகத்திலும் அதிகாரம் இப்படியே இருக்கிறது என பூக்கோ கூறினார் - ஒரு கருத்து வழியாக ஒரு அதிகாரம் நிறுவப்படும் போது அதை பலவீனப்படுத்தும் ஒரு கருத்தாடலும் கூடவே தோன்றுகிறது. இரண்டுக்கும் இடையே ஒரு அதிகாரப் பரிமாற்றம் நிகழ்கிறது; இரண்டும் ஒன்றையொன்றை ரத்து செய்தபடியே தக்க வைக்கவும் முயல்கின்றன. அதிகாரம் ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் ஆறாக, சிற்றாறுகளாக, கிளை நதிகளாக, ஓடைகளாக பரவுகிறது. இதற்கு ஒரு உதாரணமாக பூக்கோ ஒரு நிறுவனத்தின் முதலாளியிடம் கீழ்நிலை ஊழியராக உள்ள ஒருவர் ஒரு பக்கம் முதலாளியைக் கண்டு அஞ்சி மதிப்பைக் காட்டியபடி தன் சகாக்களுடன் கதையடிக்கும் போது அதே முதலாளியை கலாய்ப்பதைக் குறிப்பிடுகிறார். இன்றைய சமூகவலைதளங்களின் மீம்களை பார்த்தால் பூக்கோ வெகுவாக மகிழ்ந்திருப்பார்.
பூக்கோ அவர் காலத்தைய (தெரிதா, டெலூஸ், கொத்தாரி, லக்கான், ஹைடெக்கர், ஹெலன் சிக்ஸூ ஆகிய) பின்னமைப்பியல் சிந்தனையாளர்களைப் போன்றே சிந்தித்தார் (அவர்களுடன் அவர் மாறுபட்டாலும் கூட). அர்த்தங்களும், அர்த்தங்களால் அதிகாரமும் நிலையாக இருப்பதில்லை, அவற்றுக்கு சாரம் இல்லை என்பதே அவர்களின் வாதமாக இருந்தது.
இப்போது ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் பல தரப்பிலான மக்கள் அதிகாரங்களின் மோதல் களமாக, மோதி மோதி இந்த அதிகாரங்கள் அழிந்து மீளத்தோன்றும் ஒரு பரப்பாக மாறியது. (பின்னை-மார்க்ஸிய இலக்கிய விமர்சனம் குறித்து நாம் பேச ஆரம்பித்தோம்.) இப்போது சமூகம் மட்டுமே அரசியல் களமல்ல, இலக்கியமும் தான், அதாவது நேரடியாக மக்கள் விடுதலையைப் பேசாத ஒரு படைப்பும் கூட அரசியல் களமாகி விடுகிறது. இலக்கியம் இலக்கியம் மட்டுமல்ல, அது ஒரு சாதாரண உரையாடல் மட்டுமே, மொழிக்குள் எந்த அதிகார பரிமாற்றமும் - அது படைப்பூக்கம் பெற்று அனைத்தையும் புலப்படுத்தும் போது - இலக்கியமாகலாம் எனும் இடத்துக்கு வந்தோம்.
இதன் நீட்சியாகத் தான் தமிழில் செய்திக்கட்டுரைகள், நாட்குறிப்புகள், அரசியல் பிரச்சாரங்கள், விளம்பரங்களின் மொழியில் இலக்கியத்தை எழுதிப் பார்க்க ஆரம்பித்தார்கள். எதார்த்தத்தின் இடத்தை மாய-எதார்த்தவாதம் எடுத்துக்கொண்டது. இலக்கியத்துள் ஒரு தரப்பை வலுவாக வைத்து பிரச்சாரம் செய்யலாம், எழுத்தாளனின் குரல் வெளிப்படலாம், அனுபவத்தை நேரடியாகவே எழுதலாம், கலையாக அதை உருமாற்ற, அபிப்ராயங்களை மறைக்க அவசியமில்லை எனக் கூறத் தொடங்கினோம். விளிம்புநிலை இலக்கியம் என்பது விளிம்புநிலைக் குரலுக்காகவே முக்கியத்துவம் பெற்றது, அக்குரலும் இலக்கியமும் வேறுவேறல்ல என்றோம். இலக்கியம் மட்டுமல்ல அரசியலும் உருவாக்கப்படுகிற ஒன்றுதான், அது பல சுயமுரண்களால் உருவானது, அதற்கு என உறுதியான அடித்தளம் இல்லை என்றோம் (அடித்தளமே பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முரணான நிச்சயமற்ற காரணிகளால் கட்டப்பட்டிருப்பதால்).
அதாவது நடைமுறை, கட்சி அரசியல் என்பது அரசியல் அல்ல என இன்று ஒரு குழந்தை கூட சொல்லி விடும். அரசியலின் பொருளே இன்று மாறி விட்டது. மற்றொரு தரப்பை நோக்கி சிந்திப்பவை, சொல்பவை, செய்பவை அனைத்தும் அரசியல்தாம். கலை இந்த அரசியலின் மற்றொரு பகுதி - பல தூய இலக்கிய விமர்சகர்களால் ஜீரணிக்க முடியாத பார்வை இது.
முன்பு சிறுபத்திரிகை, தீவிர கலை-சார்பு இலக்கியவாதிகள், முற்போக்கு எழுத்தாளர் குழாமை சேர்ந்த மக்கள்-விடுதலைத் தரப்பு இலக்கியவாதிகள் என ஒரு எதிரிணை இருந்தது. அது இன்று நொறுங்கி விட்டது. உடலைப் பற்றி, உணவைப் பற்றி, நோய்மையைப் பற்றி, கட்டற்ற இச்சையைப் பற்றி, பித்துநிலையைப் பற்றி, சமூகத்தைப் பற்றி, தன்னைப் பற்றி நேரடியாக இன்று சித்தரிக்கப்படும் எதுவும் இலக்கியமாகவும் அரசியலாகவும் ஒரே சமயம் இருக்கிறது.
எல்லாமே அரசியல் என்றால் எது கலையாகிறது?
எந்த அரசியல் பிரதியில் உள்முரண்கள் வலுவாக இயங்குகின்றனவோ அதுவே நம்மை அதிகம் தொந்தரவு செய்கிறது, அதுவே கலையாகிறது.
இமையத்தின் பல சிறுகதைகள், குறிப்பாக அவர் தலித்-மத்திய சாதி மோதல்களை சித்தரிக்கும் கதைகள், இதற்கு நல்ல உதாரணம். “எங் கதெ”யில் அவர் ஒரு தலித் ஆணை வன்முறையான, முரட்டுத்தனமான நிலையை எடுக்கும் பாத்திரமாக்குகிறார், ஒரு மேற்சாதி பெண்ணை பாதிக்கப்பட்டவள் ஆக்குகிறார்; அதே நேரம் இந்த பெண்ணின் மேல்சாதி அதிகாரம் அவளது பாதிக்கப்பட்ட நிலைக்குள் வெளிப்பட்டு அவளை ஒடுக்குகிறவளாக மாற்றுவதையும் காட்டுகிறார். இந்நாவல் நம்மவர்களை தொந்தரவு செய்தது, அதிகமான சர்ச்சைகளை பெண்ணியவாதிகள் இடையே ஏற்படுத்தியது. இதுவே பூக்கோ சொல்லும் play. இதுவே ஒரு நல்ல அரசியல் பிரதி - மறுக்க முடியாத ஒரு அரசியல் உண்மையை முன்வைக்கிற ஒரு பிரதியல்ல நல்ல அரசியல் பிரதி.
குட்டிரேவதியின் கவிதைகளில் நாம் ஒரே சமயம் நெகிழ்வான, தர்க்கத்தை மீறிய பெண் இருப்பையும், இச்சைக்கும் தர்க்கத்தும் உடன்படுகிற ஒரு ஆண் பார்வையையும் பார்க்கிறோம். குட்டிரேவதியின் கவிதைகளில் உள்ள ஆண் நோட்டம் (male gaze) அதிலுள்ள பெண்மையின் பரவசத்தால் தொடர்ந்து ரத்து செய்யப்படுகிறது. மனுஷ்யபுத்தினின் “காதலின் நூறு சம்பவங்கள்” மற்றொரு உதாரணம்.
அதிகாரத்தை எதிர்கொள்ள சிறந்த வழி அதிகாரத்துடன் விளையாடுவது, அதிகாரத்தை பல முரண்களால் குழப்புவது, அதன் டயர்களை பஞ்சராக்குவது, அது முன்வைக்கிற எதிரிடைகள், இருமைகளை காலி செய்வது என இன்று நம்புகிறோம். கெட்ட அதிகாரத்தை அழித்து விட்டு அங்கு நிரந்தரமாய் ஒரு நல்ல அதிகாரத்தை அமர்த்தலாம் என நாம் இன்று நினைப்பதில்லை. எந்த இருமையுமற்ற ஒழுக்குநிலையே இன்றைய சமூக அரசியல் மற்றும் கலைத் தேட்டமாக இருக்கிறது.
இப்படி நாம் இன்று அரசியலை முழுக்க வேறொரு பொருளில், நோக்கத்தில் பயன்படுத்துகிறோம்.

