Skip to main content

ஊடகவியலாளர்கள் மீதான சங்கிகளின் தாக்குதல்




நியூஸ் 18 சேனலின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து குணசேகரன் விலகுகிறார் எனும் செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். ஹசீப் முகமதைப் போன்றே இவரும் பதவி விலக வற்புறுத்தப்பட்டாரா அல்லது வேறு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஹிந்துவின் என்.ராம் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல நியூஸ் 18 நிர்வாகத்துக்கு இவர்களை நீக்கும்படி தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே நேரடியாக ஆணை வருகிறது. அதாவது சில சமூக நோக்கும் நேர்மையும் கொண்ட ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்க கால்கள் நமது ஜியின் வரவேற்பறையில் இருந்து நீள்கின்றன. முதலில் ஹசீப் முகமதுக்கு என்ன நடந்தது என அறிவோம். இப்போது குணசேகரனுக்கும் அது நடக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்துத்துவாவை எதிர்த்துப் பேசும் அனைத்து நெறியாளர்களும் வெளியே அனுப்பப்பட வேண்டும் எனும் திட்டம் அவசரமாய் நிறைவேற்றப்படுகிறது. விகடன் போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தவர்களுக்கும் இது நடந்தது. உயிர்மை இணையதளமும் பேஸ்புக்கில் பகிரப்படக் கூடாது என இவர்களால் முடக்கப்பட்டது. இதன் நோக்கம் தமிழக தேர்தலில் தமது கூட்டணிக்கு சாதகமாய் ஊடகங்களில் கதையாடல்களை உருவாக்குவதா அல்லது இங்கு ஆட்சி மாறும் முன் தம் எதிரிகளை தீர்த்துக் கட்டும் அவசரமா? தெரியவில்லை.


இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஒருதலைசார்பாக நடந்து கொள்கிறார்கள் என்பது. ஆனால் பாஜக சார்பாக இயங்கும் எந்த நெறியாளர் மீதும், பத்திரிகையாளர் மீதும் இக்குற்றச்சாட்டு எழுவதில்லை. இக்குற்றச்சாட்டை எப்படி வடிவமைக்கிறார்கள் கவனியுங்கள்:

1) பிரதமருக்கு எதிராக பேசுகிறார்கள்.

2) இந்துக்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

3) திமுக சார்பாக பேசுகிறார்கள்.

4) ஒருதலை பட்சமாக பேசுகிறார்கள்.


ஏன் தமக்கு எதிராகப் பேசுகிறார்கள் என ஒரு போதும் நேரடியாக இவர்கள் சொல்வதில்லை? ஏனென்றால் தாம் யாரென்பது, தாம் சங்கிகளின் தரப்பு என்பது மக்கள் முன் அம்பலமாகி விடுமே.


திமுக சார்பு கூட உண்மையில் ஒரு கட்சி சார்பு என நான் நினைக்கவில்லை - நாம் தப்பித்து செல்வதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டு தமிழகத்தில் ஒருஇன அழிப்புக்குபாஜக களத்தை தயார் செய்யும் போது நமக்கு உண்மையில் திமுகவின் பின்னர் அணி திரள்வதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை. ஒன்று எங்களுடன் சேர்ந்து விடுங்கள், அல்லது எங்களுடன் சேர்ந்து விடுங்கள் என்பதே சங்கிகளின் கோஷம். முன்பு எப்போதையும் விட அதிகமாய் திராவிட சார்பு குரல்கள் எல்லா பக்கமிருந்தும், ஊடகங்களில் இருந்தும் ஒலிக்கின்றன என்பது உண்மையே - ஆனால் இது ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் எனும் நோக்கத்தில் அல்ல, சங்கிகளை, தமிழகத்தின் உரிமைகளை நசுக்குகிற இந்த அந்நியர்களை எதிர்க்க வேண்டுமே எனும் நெருக்கடியில் ஒன்று திரள வேண்டிய நிர்பந்தத்தில் நிகழ்கிறது. எப்படி ஈழத்தில் ஒரு காலத்தில் தமிழர்கள் புலிகளை ஆதரிக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்களோ அப்படியோ இங்கும் நிகழ்கிறது. (புலிகளும் திமுகவும் ஒன்று என நான் சொல்லவில்லை.) இதன் பொருள் நாளை திமுக ஆட்சிக்கு வந்த பின் அவர்களை விமர்சிக்க மாட்டோம் என்றல்ல. அது வேறு, இது வேறு.

சங்கிகளால் திமுக சாயம் பூசப்படும் இந்த ஊடகவியலாளர்களில் பலரை நான் நேரடியாக அறிவேன் எனும் பட்சத்திலே சொல்கிறேன் - இவர்கள் கராறான திமுக ஆதவாளர்களோ கட்சி உறுப்பினர்களோ அல்ல. இவர்கள் திமுகவுடன் முரண்படுகிறவர்களும் தான். ஆனால் இப்போது இவர்கள் மக்களின் பெரும்பான்மை மன உணர்வுகளை பிரதிபலிக்கிறார்கள். அதனால் தான் மக்கள் இவர்களை கண்டிப்பதில்லை, விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழக சங்கிகள் மட்டுமே குதிக்கிறார்கள்


மக்களின் இந்த எதிர்-உணர்வுகளை பாஜக அஞ்சுகிறது - அதனால் வீட்டைப் பெருக்கிக் குவிப்பதைப் போல நம்மை திமுக பக்கம் குவிக்கப் பார்க்கிறார்கள். இப்படி ஒரு இருமையை - திமுக vs இந்துக்கள் - உண்டு செய்து தம் மீதான குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக வைக்க முயலுகிறார்கள். தேசிய அளவில் இந்துக்கள் vs ‘பயங்கரவாதஇஸ்லாமியர், இந்துக்கள் vs ‘தேசத்துரோகிகள்எனும் டெம்பிளேட் என்றால் இங்கு பயன்படுவது திராவிடர் vs இந்துக்கள் என்பது. அவர்கள் இப்போதைக்கு இரு நேர்மையான ஊடகவியலாளர்களை பெருக்கி இந்தஇருமையின்முறத்தில் அள்ளி குப்பைத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அடுத்தது இந்த துடைப்பம் நம்மை நோக்கித் தான் வரப் போகிறது.


ஆம் நண்பர்களே, மாரிதாஸ், அண்ணாமலை போன்றவர்கள் பேசுவதை வைத்து நான் கணிப்பது சரியாக இருந்தால் அடுத்த சில மாதங்களுக்குள் சமூகவலைதளத்தில் இந்துத்துவாவை விமர்சிப்பவர்கள், கிண்டலடிப்பவர்களில் சிலர்தேசவிரோதமாக’, ‘மத உணர்வுகளை புண்படுத்தும்படியாகநடக்கிறார்கள், ‘மத ஒருமைப்பாட்டை குலைக்கிறார்கள்எனச் சொல்லி கைதாவார்கள். முதலில் ஆதரவில்லாத எளிய சமூகவலைதள பதிவாளர்கள் மீது இந்த நடவடிக்கைகள் பாய்ந்து இவை செய்திகளில் முதலிடம் பிடிக்கும். இதில் பிறர் பயந்து ஒதுங்காவிட்டால் சற்றே பிரபலமானவர்களை குறி வைப்பார்கள். 2021 மார்ச் மாதத்துக்குள் தமக்கு எதிராய் ஒரு குரல் கூட எழ விடாமல் தமிழகத்தை மௌனமான சாட்சியாக்குவதே திட்டம். ஒருவேளை இது நிகழாவிடில், தேர்தலில் திமுக வெல்லும் எனும் நிலை உறுதியானால், பீகார் தேர்தலின் முடிவுகளை கருத்தில் கொண்டு, பாஜக இங்கு தேர்தலை நிறுத்தி வைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டு வரும் என்கிறார்கள். அப்போது எதிர்குரல்களை சிறையில் தள்ளுவது சங்கிகளுக்கு இன்னும் சுலபமாகும். அப்படியான முழுமையான பாசிச இருண்ட காலம் இங்கு வந்து விடக் கூடாதே எனப் பிரார்த்திக்கிறேன்.


இறுதியாக, இந்த ஒருதலைபட்சமாக இருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு ஊடகவியலாளர்களை எவ்வளவு நிலைகுலைய வைக்கக் கூடியது என்பதை கவனிக்க வேண்டும். அறிந்தே மாரிதாஸ் போன்றஅடியாட்கள்இதை முன்வைக்கிறார்கள். ஒருதலைபட்சமானவர்கள் எனச் சொல்லப்படும் போது இந்த ஊடகவியலாளர்கள் உண்மையிலே நிலைகுலைகிறார்கள், பதற்றமாகிறார்கள். ஏனென்றால் அது அவர்களின் அடிமடியில் - நம்பகத்தன்மையில் - கைவைக்கிற தந்திரம், மர்மத்தில் அடித்து வீழ்த்துகிற அடவு. ஹாசிப் முகமது குறித்த பேட்டியில் பேசிய என்.ராம்அவர் எவ்வளவு புறவயமாய் தகவல்களைத் தொகுத்துப் பேசுகிறார் பாருங்கள், ஒரு நேர்த்தியான சிறந்த ஊடகவியலாளராக இருக்கிறார்எனச் சொன்னதன் அரசியல் இதுதான். இந்த அஸ்திரங்கள் ஏன் வீசப்படுகின்றன என என்.ராமுக்குத் தெரியும்!


ஹாசிப், குணசேகரன், நெல்சன், செந்தில் போன்றோருக்கு நான் சொல்லிக் கொள்வது இது மட்டுமே - இந்த இருண்ட காலம் ஒரு முடிவுக்கு வரும். இதைவிட ஆயிரம் மடங்கு கொடுமைகள் நடந்த ஜெர்மனியிலே இனவாதிகள் முடிவுக்கு வந்தார்கள். அதே போல காலம் இவர்களுக்கான தண்டனையைப் பெற்றுத் தரும். ஆட்சி மாறும், கொடுங்கோன்மை வீழும். அதுவரை சகித்திருப்போம்! ஒன்றாக இருப்போம்! நீடிப்போம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...