ரஜினிக்கும் அண்ணாமலை ஐ.பி.எஸ்ஸுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதில் ஒன்று இப்படி நாவில் நஞ்சைத் தடவிக் கொண்டு சாந்த சொரூபமாக முகத்தை வைத்தபடி பேசுவது. இவரைப் போன்றவர்களின் உடம்பில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுத்தால் அதைக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பூச்சி மருந்தைத் தயாரிக்கலாம்.
அவர் பேசுவதை கவனியுங்கள்:
1) இட ஒதுக்கீட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பாஜக இட ஒதுக்கீட்டை மறுப்பதை கண்டிக்க மாட்டேன்.
2) பாஜகவின் அடிமட்டத் தலைவர்கள் சரியில்லை. அவர்கள் சரியான கருத்தை தலைமைக்கு கொண்டு செல்லாததாலே பாஜக இப்படி தவறாக முடிவெடுக்கிறது.
3) நான் அரசியல்வாதி அல்ல, சாமான்யன். ஆகையால் அரசியல் பேச மாட்டேன்.
இப்போது என் எதிர்வினைக்கு வருகிறேன்:
1) பாஜகவின் இந்துத்துவ கொள்கை என்பதே வர்ணாசிரமம் சார்ந்தது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது. இதை 'சிங்கம்' அண்ணாமலை அறிய மாட்டாரா? அறிவார். ஆனால் இப்போதைக்கு அவரது ஆசான்கள் குருமூர்த்தியும் ரஜினியும் என்பதால் பாஜகவை விமர்சிக்கக் கூடாது என கவனமாக இருக்கிறார். முடிவெடுப்பது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கும்பல், நிறைவேற்றுவது பிரதமர் ஜி. ஆனால் அண்ணாமலை மொத்த பழியையும் உள்ளூர் அடிமட்ட பாஜக தலைவர்கள் மீது போடுகிறார். இந்த மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
2) அதென்ன எதற்கெடுத்தாலும் 'நான் சாமான்யன், அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கு நான் முதலில் ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டும் அல்லது கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என இவர் சொல்கிறாரே என நீங்கள் யோசிக்கலாம். நாமெல்லாம் என்ன கட்சி உறுப்பினர்களா? அரசியலை விமர்சிக்கவில்லை? தமிழகமெங்கும் மூலைக்கு மூலை அரசியல் பேசுகிறார்களே மக்கள், அவர்கள் என்ன கட்சி உறுப்பினர்களா? இங்குதான் நீங்கள் ஒரு சூட்சுமத்தை கவனிக்க வேண்டும்:
நம்மைப் போல அரசியல் விமர்சனம் செய்யும் சமூகவலைதள போராளிகளை, மற்றொரு (news18) பேட்டியில், இதே அண்ணாமலை 'தலையில்லாத மக்கள் திரள்' என்கிறார். இவர்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், இவர்களை காவல்துறை கட்டுப்படுத்தாதனாலே பல புரட்சிகள் வெடிக்கின்றன, கடந்த சில ஆண்டுகளில் இப்படி மக்கள் அரசுக்கு எதிராக திரண்டு போராடுவது உலகம் முழுக்க ஒரு பெரும்போக்காக மாறி உள்ளது, இது ஆபத்தானது என்கிறார். அதாவது என்னையும் உங்களையும் போன்றவர்களைப் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்கிறார். ஏனென்றால் நாமெல்லாம் 'சாமான்யர்கள்', அரசியல் விமர்சமனம் செய்யக் கூடாது, அப்படி செய்தாலும் ஆளுங்கட்சியை விமர்சிக்கக் கூடாது, அது கட்சிக்காரர்களின் வேலை மட்டுமே என்கிறார். இந்த கருத்துநிலையின் சாராம்சமே 'நான் சாமான்யன், அதனால் அரசியல் பற்றி கருத்து சொல்ல மாட்டேன்' என்பது.
இது "பேசுவதற்கு நாங்க இருக்கோம், சூத்திரர்கள் வாயை மூடி இருங்கடா" எனும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் திமிர்த்தனம். அண்ணாமலையும் ரஜினியும் இந்த பார்ப்பனத் தலைமையின் ஊதுகுழல்கள்.
தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்த போது, எளிய மக்கள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போது ரஜினி ஆற்றிய எதிர்வினையும் மக்கள் தெருவுக்கு வந்து போராடி சட்டம் ஒழுங்கை கெடுக்கக் கூடாது, போலிசார் சுட்டதில் தப்பில்லை என்பதாகவே இருந்தது என்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.
அடிப்படையில், இவர், ரஜினி, ஹெச்.ராஜா போன்றோர் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். சிஸ்டம் சரியில்லை, அதை சரி செய்தால் பிரச்சனையே இராது, நாடு வளரும் என்று இவர்கள் சொல்வதன் பொருள் நாட்டை ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாற்ற வேண்டும், பாசிஸ்டுகள் ஆண்டாலே நாம் வளர்வோம் என்பதே.
மிக மிக ஆபத்தானவர்கள் இந்த அண்ணாமலைகள்!