Skip to main content

ஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை? (1)


இந்தியாவின் மாபெரும் ஊழல்களைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கேள்வி எழுந்தது - ஏன் மக்கள் எல்லா ஊழல்வாதிகளையும் ஒரே போல மதிப்பிடுவதில்லை? 55 அங்குல விரிமார்பு கொண்ட நமது ஜியின் ஆடம்பர மோகத்தை நாம் அறிவோம். தில்லியில் அவரது பங்களா பன்னிரெண்டு ஏக்கரில் ஐந்து பெரும் வீடுகளுடன் அமைந்துள்ளது; ஐம்பதுக்கு மேலான தோட்டக்காரர்கள், காரோட்டிகள், சமையற்காரர்கள் மற்றும் எலக்டிரீஷியன்கள் அங்கு வேலை செய்கிறார்கள்; வீட்டு செலவு மட்டுமே கோடிக்கணக்கில் ஆகிறது என சொல்கிறார்கள். ஜி வெளிநாட்டுக்கு பறந்ததற்கு ஏர் இந்தியா நிறுவனம் போட்ட பில் மட்டுமே 443.4 கோடிகள் வருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் அவரது பயண செலவோ ரெண்டாயிரம் கோடிகளுக்கு மேலே வருகிறது. தன்னுடைய (மற்றும் தன் அரசின் திட்டங்கள் குறித்த) விளம்பரத்துக்கு 2018 வரை அவர் 4,400 கோடிகள் செலவழித்தார்அவர் எங்கு போக வேண்டுமென்றால் தனியார் ஜெட்டில்தான் பறக்கிறார். அவர் அணியும் தன் பெயரை வரிவரியாய் நுணுக்கமாய் பொறித்த மோனோகிராம் சூட் பத்து லட்சம் மதிப்புள்ளது, அவரது குர்தா, பயன்படுத்தும் மோண்ட் பிளாங்க் பேனா, Bvlgari கண்ணாடி கூட, பல லட்சம் மதிப்பிலானவை. ஜி அளவுக்கு தோற்றத்தில் மிதமிஞ்சிய அக்கறை கொண்ட ஒரு தேசியத் தலைவர் நம் வரலாற்றிலேயே இல்லை - இந்த வயோதிக காலத்தில் ரஜினியே வழுக்கையுடன் தோன்றும் போது ஜி தலைமுடி மாற்று (hair transplant) அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்; வாரம் ஒருமுறை டயமண்ட் பேஷியல் கட்டாயம் அவருக்கு. தன்னுடைய சருமத்தை பளபளவென வைத்துக் கொள்ள விலைமதிப்பான காளான்களை உண்கிறாராம்.மோடியின் கண்ணசைவை எதிர்பார்த்து எப்போதும் அவரைச் சுற்றி அழகுக்கலை நிபுணர்கள், எலைட் தையல்காரர்கள், முடிதிருத்துநர்கள் காத்திருக்கிறார்கள்.

 ஒரு காலத்தில் எளிய மத்திய வர்க்க ஆரம்ப நிலை வியாபாரியாக இருந்த அதானி குஜராத்தில் எப்படி எஸ்.பி. போன்ற வங்கிகளிடம் இருந்து கடன் என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுருட்டி பெரும் முதலீடுகளை செய்து 1350 கோடி டாலர்கள் மதிப்புள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஆனார், அந்த கடன்களை ஜி தள்ளுபடி செய்து தன் நண்பருக்கு உதவினார், எப்படி ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் போது ஜி தன் நண்பருக்கு பிரம்மாண்டமான தொழில் உடன்படிக்கைகளுக்கு வழிவகுக்கிறார், எப்படி ஜி பிரதமர் ஆன பின்னர் அதானி வரலாறு காணாத வளர்ச்சி கண்டுள்ளார், அவர் இன்று எப்படி முகேஷ் அம்பானிக்கு அடுத்த பெரும் பணக்காரராக, இந்தியாவின் நிழல் பிரதமராக செயல்படுகிறார் என நாம் அறிவோம். ஆனால் ஜியை ஊழல்வாதி என்றால் எந்த இந்திய குடிமகனும் நம்ப மாட்டான். ரபேல் ஊழல் குற்றச்சாட்டை அவர் கொசுவைப் போல ஊதி விட்டு ஜாலியாகமித்ரோஎன உரையாற்ற கிளம்பினார். மக்களும் கைதட்டினார்கள். பால்கனியில் நின்று ஒளியேற்றினார்கள், பாத்திரங்களைத் தட்டி ஒலியெழுப்பினார்கள். ஏன்


ஜியின் இந்த பளபள நட்சத்திர வாழ்க்கை, ஜெட்டில் பறக்கும் செல்வச்செழிப்பு, அதை அவர் கூச்சமில்லாமல் உலகுக்கு பறைசாற்றும் விதம் ஏன் எதிர்மறையாக பார்க்கப்படுவதில்லை? ஜி தன்னை எளிய பின்னணியில் இருந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு டீக்கடைக்காரர் என சொல்லிக் கொண்ட போது ஏன் அவரது பகட்டான படோபமான வாழ்க்கையுடன் அது முரண்படுகிறது என மக்கள் எண்ணவில்லை? கோடிக்கணக்கான மத்திய வர்க்கத்தினர் தாம் வாழ முடியாத வாழ்வை, அனுபவிக்க இயலாத வசதிகளை ஜி அனுபவிப்பதை உள்ளூர ரசிக்கிறார்கள், அவரது இந்த மேற்தட்டு லைப் ஸ்டைல் பிரஸ்தாபம் இன்றைய ஜெனரேஷன் Y என சொல்லப்படுகிற நவதாராளவாத இளந்தலைமுறையிருக்கு மனதளவில் நெருக்கமாக தோன்றுகிறது, அவரைத் தமது பிரதிநிதியாக இரு தட்டினரும் கருதுகிறார்கள் என ஒரு புறம் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையெனில் ஜியைப் போன்றே எளிய பின்னணியில் இருந்து வந்து பெரும் பணம், அதிகாரத்தைப் பெற்ற பிற தலைவர்களுக்கு (கலைஞர்?) ஏன் இந்த அனுகூலம் கிடைப்பதில்லை? அவர்களின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு மக்கள் ஏன் பெருமிதம் கொள்வதில்லை?


 தொண்ணூறுகளுக்குப் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் மற்றும் கோடானு கோடி என கணக்கிடவே முடியாத அளவுக்கு ஊழல் இங்கு வளர்ந்து கொண்டே போனது. சில அரசியல் குடும்பங்கள் சரியான நிர்வாகம் வழங்கினாலும் ஊழல் கறையினால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு நிழலோடு நிழலானானார்கள். சில ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட போதும் மக்கள் அத்தலைவர்களை மீண்டும் வாக்களித்து முதல்வர் பதவிக்கு கொண்டு வந்ததுண்டு. சில நேரங்களில் மக்கள் இந்த ஊழல் பெருச்சாளிகளை மன்னித்து பேரன்போடு ஏற்றதும் உண்டு. தமிழகத்தில் ஜெயலலிதாவும் கலைஞரும் ஒரே சமயம் இந்த ஊழல் குற்றச்சாட்டில் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் இதன் பொருள் மக்கள் அளவுக்கு அதிகமாய் அநீதியாய் சொத்து சேர்க்கிறவர்களை எதிர்க்கிறார்கள், கண்டிக்கிறார்கள் என்பதல்ல. ஊழல் என்பதை சட்டத்தை ஏமாற்றி ஒரு ஆட்சியாளர் சொத்து சேர்க்கும் குற்றம் என நாம் பொதுவாகப் பார்த்தோமானால் அனைத்து திருடர்களையும் மக்கள் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதில்லை என்பதையும் காணலாம். நீங்கள் தனியாகக் கொள்ளையடிக்கிறீர்களா அல்லது குடும்பமாக சேர்ந்து அடிக்கிறீர்களா என்பதே இந்த வித்தியாசம்.

 ஜெயலலிதாவை எடுத்துக் கொள்ளுங்கள் - வளர்ப்பு மகன் திருமணத்தில் அவர் காட்டிய படோடாபம், மக்களின் உணர்ச்சிகள் மீது காட்டிய அலட்சியம் தான் அவர் அடுத்த தேர்தலில் தோற்க காரணமாகியதுஒருவேளை சசிகலா என ஒருவர் இல்லையெனில் மக்கள் ஜெயலலிதாவின் சொத்து சேர்க்கும் ஆவேசத்தை, அதைக் கொண்டு தன் பேராசைகளை நிறைவேற்றும் ஆசையை, கட்சியை பணரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்தை மன்னித்திருப்பார்கள். ஜெயலலிதா அதை உணர்ந்து கொண்டே சசிகலாவை தள்ளி வைத்தார். உடனே மக்கள் அதற்கு அடுத்த தேர்தலில் அவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துஅழகுபார்த்தார்கள். ஜெயலலிதா தாமாக ஊழல் செய்திருக்க மாட்டார், தவறான சேர்க்கையே அவரை சீரழிய வைத்தது என மக்கள் நம்பினர். ஆனால் கலைஞர் விசயத்தில் இந்தமறப்போம்-மன்னிப்போம்அணுகுமுறையை மக்கள் பின்பற்றவில்லை. ஏன்? அதுதான் ஒரு தலைவர் தனியாளாக இருப்பதற்கும் குடும்ப சகிதம் தோன்றுவதற்குமான வித்தியாசம்


நமது சமூகத்தில் குடும்ப அமைப்புக்கு மிகுந்த மரியாதை உள்ளது, ஆனால் அரசியலில் இது தலைகீழ். சட்டவிரோதமாக சொத்து சேர்ப்பதை அல்ல, அச்சொத்தை குடும்பமாக ஒருவர் ஆள்வதை மக்கள் கடுமையாக வெறுக்கிறார்கள். கனிமொழி, தயாநிதி மாறன் மீது ஏற்பட்ட குற்றச்சாட்டுகள் இந்தளவுக்கு பேசப்பட்டது அந்த ஊழலின் அளவினால் அல்ல, அவர்கள் கலைஞர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே. அதே நேரம் இங்கு ஒருவர் அரசியல் வாரிசாக இருப்பதை மக்கள் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பார்கள். ஆனால் அதே வாரிசு தன் குடும்பத்துக்காக கொள்ளையடிக்கிறார் எனத் தெரிந்தால் அதை சாடுவார்கள். அவர் தனியாக கொள்ளையடித்து தனியாக செல்வாக்கோடு வாழ்ந்தால் அந்தளவுக்கு பொருட்படுத்த மாட்டார்கள். இந்த முரணான உளவியல் நமக்குத் தெளிவாக விளங்க வேண்டுமெனில் நாம் இந்தியர்கள் பணத்தை செலவழிக்கிற ஒன்றாக (நவதாராளவாத பொருளாதாரம் கேட்பதைப் போல) அல்ல எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைக்கிற ஒன்றாக (நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டின் படி) பார்க்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது என்னிடம் நிறைய பணமிருக்கிறது, ஆனால் எனக்கு குடும்பம் இல்லை என்றால் அதை ஒரு சொத்தாகவே மக்கள் பார்ப்பதில்லை. இந்த குடும்பம் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர் / தோழி, அவரது குடும்பம் என்றும் இருக்கலாம். இப்படி எந்த பந்தமும் இல்லாதவராக காட்டிக் கொள்கிறவர்களை இந்த நாடு தெய்வமாக வணங்குகிறது, அவர் நாட்டின் மொத்த வளத்தையும் சுருட்டிக் கொண்டாலும் அதை ஒரு தற்காலிகப் பிரச்சனையாகப் பார்க்கிறோம் - எங்கே கொண்டு போய் விடுவார் இந்த சொத்தையெல்லாம் என இந்திய மனம் சிந்திக்கிறது.

மற்றொரு முரண்: நமக்கு தனிமனிதரும் குடும்பமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதனாலே நாம் ஒரு தனிமனிதரானகாட்டில் தனித்தலையும் ஒற்றை யானைபோன்ற தலைவரை சுயநலமான ஒரு தனியாளாகப் பார்ப்பதில்லை. இங்கு அப்படி ஒரு தனித்த இருப்பே சாத்தியமில்லை. ஆக, அப்படி ஒருவர் தனியாக பணத்தை மலைமலையாகக் குவித்தாலும் அவர் தன் சொத்துக்களின் வாரிசாக சமூகத்தை, தனக்கு வாக்களிக்கும் ஜனங்கள் அனைவரையும் கருதுகிறார் என மக்களின் பொது உளவியல் பார்க்கிறது. ஆனால் எதார்த்தத்தில் இது உண்மையல்ல - ஜெயலலிதா முறைகேடாக சம்பாதித்த சொத்து இப்போது அவர் வாழும் போது பொருட்படுத்தாத உறவினர் வசம். கணக்குக்கு வராத பணம் மன்னார்குடி மாபியாவின் வசம். மோடிக்கும் இதுவே நிகழும். ஆனால் மக்கள் இதை சொத்து நேரடியான குடும்பத்துக்கு வழிவழியாக கைமாற்றப்படுவதாகப் பார்ப்பதில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...