இந்த மெக்கபின் என்பது காலங்காலமாக கதைசொல்லலில் உள்ளதே - ஆர்தர் மன்னரின் கதைகளில் தேடப்படும் ஹோலி கிரெயில் இதற்கான துவக்கமாக இருக்கலாம் என்கிறார்கள். கதையை ஆரம்பிக்க இந்த கிரெயில் பயன்படுகிறது, ஆனால் கதையின் போக்கில் இதை கண்டுபிடிப்பது முக்கியமல்லாமல் ஆகிறது. ஆயிரத்தோரு அரபிய இரவுகளில் ஷெஹரசாத் தன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு மன்னருக்கு ஒவ்வொரு இரவும் ஒரு சுவாரஸ்யமான கதையை ஆரம்பித்து அதை முடிக்காமல் பாதியில் விட்டு விடுகிறாள்; மறுநாள் அக்கதை முடிந்தாலும் மற்றொரு கதை பாதியில் விடப்படுகிறது. இப்படி ஆயிரத்தோரு இரவுகள் அவள் கதை சொல்கிறாள். கதைக்குள் கதை, அக்கதைக்குள் மற்றொரு கதை எனப் போகும் போது அதைப் படிப்போருக்கு முதல் கதை என்ன, அதன் முடிவு என்ன எனும் கேள்வியே சுவாரஸ்யத்தில் எழாது. அந்த முடிவை அறிய நேரும் போதும் அது முக்கியமாக இருக்காது; அடுத்த கதையின் முடிவு என்ன என்பதே ஆவலூட்டும் விசயமாக இருக்கும். இப்படி முழுக்க சொல்லாமல் விடப்படும் கதையின் முடிவு இங்கு மெக்கபின் ஆகிறது. துப்பறியும் நாவல்களில் “குற்றவாளி யார்?” என்பதே மெக்கபின் என்றாலும் நாம் அதை அறியாதிருக்கும் பொருட்டே நாவலை ஆர்வமாய்ப் படிக்கிறோம். இதை கதையின் திகிலுணர்வு என்கிறோம். ஆனால் இதெல்லாம் மேம்போக்கான பயன்பாடுகள் மட்டுமே. இலக்கியத்திலோ சினிமாவோ நாடகத்திலோ நாவல் சிறுகதையிலோ ஓவியத்திலோ நடனத்திலோ மெக்கபின் இன்னும் ஆழமாக கலையுணர்வுடன் பயன்படுத்தப்படுகிறது.
கலையாழத்துடன் மெக்கபின் வெளிப்படும் போது தான் அடிப்படையான திகைப்புணர்வையோ கதையில் இருந்து விடுதலை அடைந்து விட்டது போன்ற ஒரு சுகானுபவத்தை சில நொடிகள் வாசகனுக்கு / பார்வையாளனுக்கு அது தருகிறது. இது மிக ஆழமான ஒரு தளத்தில் நிகழ்கிறது. நகைச்சுவையிலும் மெக்கபின் உள்ளது - நாம் விழுந்து விழுந்து சிரிப்பது எதைப் பற்றி சிரிக்கிறோம் என அறியாமலே; அப்போது தான் நாம் நமது இருப்பை துல்லியமாக உணர்கிறோம் என மார்ட்டின் ஹைடெக்கர் சொல்கிறார். நான் மேலே குறிப்பிட்ட ரசானுபவத்தின் போதும் இதுவே நிகழ்கிறது. ஒரு நல்ல கதையில் கதை தன்னையே அழிக்கிற ஒரு தருணம் உண்டு - அப்போது அது அபாரமான அனுபூதியை அளிக்கிறது, ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயம் விழித்தது போன்ற பெரும் வெளிச்சத்தை நம் மீது இறக்குகிறது.
அதாவது திரைக்கதையில் ஒரு மோசமான வணிக உத்தியாகவும் அதே சமயம் தீவிர கலைகளில் ஆழமான கதைகூறல் முறைமையாகவும் மெக்கபின் ஒரே சமயம் செயல்படுகிறது. இரண்டாவது விதமாக அது செயல்படும் போது மட்டுமே நாம் ஒரு படத்தை திரும்பத் திரும்பப் பார்க்கிறோம் - அடுத்து, நாம் தமிழ் சினிமாவில் எப்படி மெக்கபின் செயல்படுகிறது என்பதைப் பார்க்க பாலசந்தரின் “புன்னகை மன்னனுக்கு” வருவோம்.
“புன்னகை மன்னனில்” காதலர்கள் இருவரும் தற்கொலை பண்ணுவார்களா (“ஏக் துஜே கேலியே” போல) எனும் கேள்வியில் ஆரம்பித்து தப்பித்துக் கொண்ட காதலன் கமல் தான் நேசிக்கும் கலைக்காக, நடனப்பள்ளிக்காக, ரேவதிக்காக, அவளைக் கைப்பிடித்து “காலகாலமாக வாழும் காதலுக்கு” சமர்ப்பிப்பானா என சென்று காதலர்களை மீண்டும் முதல் காதலியான ரேகாவின் அப்பா பிரித்து பழிவாங்க நினைப்பது நடக்குமா என்று போய் முடிகிறது - கிளைமேக்ஸில் கமலும் ரேவதியும் காரில் குண்டுவெடித்து செத்துப் போக என்னடா கதை இப்படி நட்டநடுவில் போய் தொங்கிக் கொள்கிறதே என நமக்குத் தோன்ற பாலசந்தர் ஒரு சிறிய திருப்பத்தைக் கொண்டு வருகிறார். அதைப் பற்றி சற்று விரிவாகப் பேசுவோம்:
கமலைப் பழிவாங்க ரேகாவின் அப்பா அவருக்குப் பரிசாக ஒரு பழக்கூடையை அளிக்கிறார்; அதனுள் ஒரு டைம் பாம் துடிக்கிறது. கமலின் மாமா சாப்ளின் செல்லப்பாவின் காரில் அவர்கள் ஜாலியாக தேனிலவு கொண்டாட கிளம்புகிறார்கள். கமலின் அப்பா இந்த காரின் டிக்கியில் கொண்டு போய் அந்த பழக்கூடையை வைக்கிறார் (அவருக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா?). கமலும் ரேவதியும் ஜாலியாக பாடிக் கொண்டு செல்கையில் கார் வெடித்து மரணமடைகிறார்கள். அவர்கள் மரணிப்பது ஏற்கனவே இருவரும் தற்கொலைக்கு முயன்று தோற்கும் அதே மலையுச்சியில். இங்கு மற்றொரு திருப்பம் வருகிறது - படத்தில் துவக்கத்தில் தற்கொலை முயற்சிக்காக சிறை சென்று திரும்பும் கமல் தற்கொலை வியர்த்தமானது என தெளிவு ஏற்பட்ட பிறகு தன் காதலியின் சமாதியாகக் கருதும் அந்த மலையுச்சியில் தான் ரேவதியை முதலில் சந்திக்கிறார் (அவர் அங்கே ஒரு அற்பக் காரணத்துக்காக தற்கொலை பண்ண வந்திருக்கிறார்). ரேவதியை அங்கே கொண்டு சேர்ப்பிப்பதே ரேகவின் ஆவி தான் என நினைக்க சாத்தியமுண்டு; அதற்கான குறிப்பான்களை இயக்குநர் அங்கங்கே விட்டு வைக்கிறார் (“ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” பாடல், அந்த மலையுச்சி அடிக்கடி படத்தில் காட்டப்படுவது - இவ்விசயத்தில் இப்படம் நமக்கு Vertigoவை நினைவுபடுத்துகிறது.) ஆக காதல் நிறைவுறாததால் அதை தற்கொலை மூலம் நிறைவேற்ற முயலும் காதலர்களில் ஒருவர் மட்டும் மீதமாக தோல்வியுணர்வில் விரக்தியில் வாழ அவரை மிஸ் பண்ணும் காதலியின் ஆவி தன்னுடன் அவரை இறுதியில் அழைத்துச் செல்வதாக இந்த கிளைமேக்ஸ் காட்சியை நாம் காண்போமானால் (Vertigoவில் போன்று) படத்தின் துவக்கத்தில் வரும் முதல் கேள்வியுடனே இது முடிந்து மிச்ச மெக்கபின்கள் எல்லாம் காலியாகி விடுகின்றன. அதாவது காதலர்கள் தற்கொலைப் பண்ணப் போகிறார்களே என்னவாகும் எனும் நம் முதல் பதைப்புக்கான விடையை பாலசந்தர் இறுதியில் தந்து விடுகிறார்; அவர்கள் ஆகவில்லை, மரணத்தில் ஆவியுருவில் இணைந்து விட்டார்கள் - இடையே நடப்பதெல்லாம் “வெறும் அற்ப மானுட கனவு”.
“பேசும் படத்தில்” ஒரு குடிகாரப் பணக்காரனை எதேச்சையாக காண நேரும் ஏழை இளைஞனான கமலுக்கு அவனது ஐந்து நட்சத்திர விடுதி அறையின் சாவியைக் காணக் கிடைப்பதும் சில நாட்களாவது பணக்கார வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் என்ன எனும் சபலத்துக்கு வாய்ப்பு ஒன்று அமைவதுமே மெக்கபின். ஆனால் இதை அடைவதற்கான அவனது ஒவ்வொரு சவாலும் புதுப்புது மெக்கபின்கள் ஆகின்றன (ஒரு மொபைல் விளையாட்டில் வருவதைப் போல). ஒவ்வொன்றாக சமாளித்து அவன் ஒரு இரவல் பணக்கார உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கிறான். தான் தங்கி இருக்கும் நட்சத்திர விடுதிக்கு வரும் அழகிய இளம் பெண் ஒருத்தியும் அவனைக் காதலிக்கிறாள் (அமலா). ஒரு கட்டத்தில் தான் சிறை வைத்திருக்கும் பணக்காரன் உண்மையில் ஒரு அப்பாவி, அவனை எல்லாரும் ஏமாற்றுகிறார்கள், அவனது மனைவி உட்பட, என அறிய வரும் போது தானும் அவனும் ஒன்று தான் என அவனுக்கு புரிகிறது. அவன் பணக்காரனை விடுதலை செய்கிறான்; காதலியிடமும் உண்மையை வெளிப்படுத்துகிறான்; அவள் அவனை மன்னிக்கிறாள்; தன்னை அடுத்து சந்திப்பதற்கான குறிப்பையோ என்னவோ அவள் ஒரு டிஷ்யூ பேப்பரில் எழுதிக் கொடுக்கிறாள்; இந்த திருப்பமும் வீணாகிறது - அவன் அதையும் தொலைக்கிறான். சரி பணக்கார வாழ்க்கையும் போச்சு, காதலியும் இனி இல்லை எனும் நிலையில் அவன் மீண்டும் (படத்தின் துவக்கத்தில் வருவதைப் போல) நேர்முகத் தேர்வுக்கான நீண்ட வரிசையில் நிற்கிறான். சுவாரஸ்யமாக அவனுக்கு வேலை கிடைப்பதாக படம் முடிவதில்லை. அதுவே இத்திரைக்கதையின் சிறப்பு - ஒவ்வொரு மெக்கபினாகக் கடந்து நாம் முதல் மெக்கபினுடனே படத்தின் நிறைவுக்கு வருகிறோம் - அவனுக்கு வேலை கிடைக்குமா எனும் கேள்வி அல்ல மெக்கப்பின்; அவனுக்கு பணக்கார வாழ்க்கை வாழ வாய்ப்பு அமைந்தால் என்னவாகும் என்பதே மெக்கபின். அந்த கனவுப் பாதையில் அவன் அடியெடுத்து ஒவ்வொரு சவாலாக சமாளிப்பதுடன் கனவு கலைந்து விட வேண்டும். கனவுக்குள் இருப்பதே நல்லதொரு கதை அன்றி “இலக்கை” (பணக்காரனாவது) அடைவது அல்ல.
இதற்கு நேர்மாறான கதையமைப்பைக் கொண்ட “குரு” (மணிரத்னம்) படத்துடன் ஒப்பிட்டால் நான் சொல்ல வருவது உங்களுக்கு இன்னும் தெளிவாகும் - “குருவில்” நாயகன் ஏழ்மையில் இருந்து உழைப்பால் முன்னேறி பெரும்பணக்காரன் ஆகிறான்; (முன்னையது மார்க்ஸிய கனவு மீதான பகடி என்றால் பின்னையது கார்ப்பரேட் கனவுக்கான கொண்டாட்டம் மற்றும் பரிவுப்பார்வை.) இரண்டிலும் நாயகனின் இலக்கு ஒன்றே; இருந்தும், நாயகன் பெரும் செல்வத்தை அடைவதுடன் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவதில்லை; பார்வையாளர்களுக்கு அம்பானியின் கதை ஏற்கனவே தெரியும் என்பதால் அவர்கள் நாடுவது படத்தில் வேறு விசயங்களையே. அவனது வெற்றிக்குக் காரணமான இயல்பு என்ன எனப் படம் காட்டுகிறது, அதே இயல்பு அவன் வாழ்வை பல தளங்களில் சிக்கலாக்குவதையும் காட்டுகிறது. அவன் எதிர்கொள்ளும் சவால்களும் வீழ்ச்சிகளும் எழுச்சிகளுமே இங்கு படத்தின் மெக்கபின் (அவனுடையது அல்ல). அவன் சவால்களை வெல்வதையோ அவற்றின் முன் மண்டியிடுவதையோ காண்பதற்காக நாம் அரங்குக்கு செல்லவில்லை; அவை எப்படி நிகழ்கிறது எனப் பார்க்க செல்கிறோம். பார்வையாளனான நமக்கு அவன் எதிர்கொள்பவை அத்தனையும் மெக்கபினே. பொருளாதாரத்தில் எழும் போது அவன் காதலில் வீழ்கிறான். ஒரு பெரும் வணிகக் கட்டமைப்பை உருவாக்கும் போது தன் கனவு தன் கண்முன்னே சரிவதை அவன் காண்கிறான். படத்தின் முடிவில் “ஒரே கனா என வாழ்விலே” என பாடல் ஒலிப்பது இந்த கனவு அவனைக் கைவிடுகிறது எனக் காட்டவே. அதாவது அவன் தன் கனவை அடைகிறான், தொலைக்கவும் செய்கிறான் - இதைப் பார்க்கவா போனோம் என நாம் கோபம் கொள்வதில்லை; ஏனென்றால் நமக்கு “அது” என்னவென்பது அல்ல, “அது” எப்படியானது, எப்படி நடக்கிறது என்பதே சுவாரஸ்யம்.
இதே மணிரத்னத்தின் “அஞ்சலி” படம் துவங்கும் போது நிறைமாத கர்பிணியான ரேவதிக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என எதிர்பார்க்கிறோம், ஆனால் அது நடந்ததா என பிற்பாதி படம் வரை நாம் கவலைப்படுவதில்லை; பின்னர் அஞ்சலிப்பாப்பா காட்டப்பட்டதும், அவள் யாரெனத் தெரிய வந்ததும் அவள் பிறரால் ஏற்கப்பட வேண்டும், அவளது அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்; ஆனால் பாருங்கள் அஞ்சலி இறந்து போகிறாள். படத்தின் துவக்கத்தில் ஏற்பட்ட வினாவுக்கு கிளைமேக்ஸில் விடைகிடைக்கிறது; அந்த வினாவுக்கான பதில் எவ்வளவு துயரம் பொருந்தியது என்றாலும் மக்கள் பொருட்படுத்தவில்லை; படம் பெருவெற்றி பெறுகிறது. ஏனென்றால் அஞ்சலியைக் காப்பாற்ற வேண்டும் என்பது நிஜத்தில் யாருக்கும் பொருட்டில்லை, ஆனால் அவள் காப்பாற்றப்பட மாட்டாளா, அது எப்படி நடக்கும் எனும் கேள்வியே படத்தை செலுத்தும், வெற்றிப்படமாக்கிய, மெக்கபின்.
“விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தில் ஜெஸ்ஸியை கார்த்திக் அடைவானா என்பதல்ல கதை - எவ்வளவோ பெண்கள் இருந்தும் ஏன் ஜெஸ்ஸியைப் போய் கார்த்திக் காதலிக்க வேண்டும் என்பதே கதை. இந்த கேள்வியுடன் தான் கௌதம் படத்தை அழகாகத் துவக்குகிறார். இந்த கேள்வியிலேயே ஜெஸ்ஸி அவனுக்குக் கிடைக்க மாட்டாள் என நமக்குத் தெரிந்து விட வேண்டும். ஆனால் ஒருவேளை கிடைத்து விட்டால் என ஒரு உப கேள்வியை சாமர்த்தியமாக கௌதம் இதனுடன் தொக்கி வைக்கிறார்; அங்கு தான் சுவாரஸ்யம் பற்றிக் கொள்கிறது. ஜெஸ்ஸி தனக்கு நிகழவிருக்கும் திருமணத்தில் விருப்பமில்லை என வெளிப்படையாக அறிவிக்கிறாள் - அதற்குக் காரணம் தான் அந்த தேவாலயத்தில் உள்ளதை அவள் அறிந்ததை ஜெஸ்ஸி உணர்ந்ததே என கார்த்திக் நம்புகிறான். அவனுடன் நாமும் அரைகுறையாக அதை நம்புகிறோம் - அரைகுறையாக, முழுமையாக அல்ல, நம்புகிறோம் என்பதே இப்படத்தின் மெக்கபின். அப்படி நம்பினால் என்னவாகும் என்பதே இந்த படத்தின் சாகச உணர்வு. ஜெஸ்ஸி பின்னர் மெல்ல மெல்ல கார்த்திக்கை காதலிக்கத் தொடங்குகிறாள் (முழுக்க அல்ல என்பதை கவனியுங்கள்; முழுக்க என்றால் இங்கு கதையே இலை); அவர்களின் காதலை பல்வேறு சந்தர்பங்கள் இட்டுச் செல்கின்றன; பின்னர் அதே சந்தர்பங்கள் மாறுகின்றன. அப்போது நாம் கவலைப்படத் தொடங்குகிறோம். ஏனென்றால் இந்த காதலின் விரோதி பெற்றோர்கள் அல்ல (அவ்வாறு தெரிந்தாலும்) என நாம் அறிவோம். ஒவ்வொரு சிறிய சந்தர்ப்பமும் இந்த காதலை நிர்மூலமாக்க வல்லது. இறுதியில் மிக மிக அபத்தமான ஒரு காரணம் பாதியில் தொங்கிக் கொண்டிருந்த இந்த காதலை வீழ்த்துகிறது. அந்த உண்மையை கார்த்திக் உணர்ந்து அதனுடன் சமாதானம் பண்ணிக் கொள்வதுடன் படம் முடிகிறது - இந்த உண்மை தான் இப்படத்தின் மெக்கப்பின்: ஆம், காற்றடித்தால் கூட தடுமாறி விடுகிறவள் தான் ஜெஸ்ஸி; ஒவ்வொரு முறை காற்றடிக்கும் போது ஒரு புது மெக்கபின் பிறக்கிறது; அது படத்தை புதுப்புது திசைகளுக்கு அழைத்து செல்கிறது. அவளால் அப்படித் தான் முடியும், அவளுக்கு வேறு வழியில்லை, சூழல் அப்படி, இருந்தும் அவளைப் போய் ஏன் கார்த்திக் இப்படி பைத்தியமாக நேசித்தான்? இந்த கேள்வியுடன் படத்தை ஆரம்பித்து முடித்ததே (“புன்னகை மன்னன்”, “பேசும் படம்” போன்றே) இந்த திரைக்கதையின் புத்திசாலித்தனம் மற்றும் தெளிவு.
ரெட்டைவால் குருவியின் வாலின் இரு இறகுப்பிரிவுகளும் இருவேறு திசைகளாக நோக்கித் துடித்தபடி பறக்கின்றன, ஆனால் குருவி செல்வதோ அதற்கு சம்மந்தமில்லாத நேர்த்திசையொன்றை நோக்கி. ரெட்டை வால்கள் இருந்தும் எந்த குழப்பமும் இன்றி குருவி எப்படி நேராக பிசிறில்லாமல் செல்கிறது? அந்த ரெட்டை வால் தான் அதற்குக் காரணம். (அதில்லாமல் இருந்தால் குருவி சீராக பறக்காமல் கீழே விழுந்து விடும்.) அந்த ரெட்டை வால் தான் அதன் பறத்தலுக்கான மெக்கபின். ஒரு விமானம் பறக்கும் போது இடம் வலமென நீளும் அதன் இறக்கைகளே அதன் மெக்கபின். மனிதன் ஓடும் போது அவனது இடது வலது கால்களே அவனது மெக்கபின். மெய்க்காதலின் போது காதலனும் காதலியுமே காதலின் மெக்கபின். (சிலர் செக்ஸ் என்கிறார்கள். அவர்களை நம்பாதீர்கள்.) ஒரு பூங்காவில் தத்தித்தத்தி நடந்து வரும் குழந்தையின் இரு கைகளையும் பற்றி நடைபழக்கும் இரு பெற்றோருமே அக்குழந்தையின் மெக்கபின். கீதையில் பகவான் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் “கிருஷ்ணா நீ யார்?” எனக் கேட்க கிருஷ்ணன் ஒரு நீண்ட பட்டியலை அளித்து “இதில் எதுவும் நான் அல்ல” என்கிறான். “எதுவெல்லாம் நான் அல்லாமல் இருக்கிறேனோ அதுவே நான்” என்கிறான். அதுவே இறைவன் எனும் மெக்கபின். இப்போது இதை நான் எழுத நீங்கள் படிக்க இக்கட்டுரையின் முதல் வரியே இதன் மெக்கபின்.
(முடிவுற்றது)
