Skip to main content

வேலைநீக்கத்தை நியாயப்படுத்தும் முட்டாள்கள்


கொத்துக்கொத்தாய் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதை ஆதரித்து எழுதுபவர்களைக் கண்டால் மூஞ்சியில் காறி உமிழத் தோன்றுகிறது (முடிந்தால் கொரோனா கிருமிகளுடன் சேர்த்து). நிறுவனத்துக்கு போதிய லாபம் இல்லை என்பதெல்லாம் ஒரு நியாயமான காரணமா சொல்லுங்கள்? ஒருவருக்கு வேலைத்திறன் இல்லை அல்லது அவர் ஒரு பெரும் குற்றத்தை (திருட்டு, பாலியல் அத்துமீறல்) செய்து விட்டார் எனும் காரணங்களுக்காக மட்டுமே ஒருவரை வேலை நீக்கம் செய்ய வேண்டும் எனும் கடுமையான சட்டங்களை அரசு இயற்ற வேண்டும். ஏதோ ஜெஸ்ஸி கார்த்திக்கை கழற்றி விடுவதைப்போல ஒரு ஊழியரை வீட்டுக்கு அனுப்புவது மனித உழைப்பை மலினப்படுத்தும் செயல்.


சிலர் பணம் முதலீடு செய்கிறவருக்கு தனது தொழிலை தன் விருப்பப்படி நடத்தும் உரிமை வேண்டும் என்கிறார்கள். ஒருவேளை எந்திரமயப்பட்ட சில தொழிற்சாலைகளுக்கு இது பொருந்தலாம். பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் அதில் எழுதுகிறவர், நிருபர், எடிட் செய்கிறவர், பிழை திருத்துகிறவர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் உழைப்பு தான் அதை உருவாக்குகிறது. இன்று அச்சு ஊடகம் இன்றி முழுக்க இணையத்திலே நீங்கள் செய்திப் பத்திரிகையை, பொழுதுபோக்கு சேனல் ஒன்றை நடத்த முடியும். அங்கு வேலை செய்ய ஆள், அவருக்கான கணினி, படக்கருவி தவிர வேறென்ன பெரிதாய் வேண்டும்? விகடனை எடுத்துக் கொண்டால் அந்த பிராண்ட் தவிர அந்த நிறுவனத்தின் பங்களிப்பு என ஒன்றுமேயில்லை. ஒரு கணினினியையும் ஐபோனையும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட அவர்களின் எல்லா பணிகளையும் வீட்டிலிருந்தே ஒருவர் செய்ய முடியும் எனும் போது? விகடன் யுடியூப் தளத்தில் ஒரு காணொளியை பத்து லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்றால் அந்த காணொளி விகடன் நிர்வாகத்தின் மேலாளர்களாலா அல்லது சி..ஓவாலா உருவாகிறது? இல்லை, அதில் பேசுபவர்கள், நடிப்பவர்கள், அதை எடிட் செய்கிறவர்கள், அதை திட்டமிட்டு படம்பிடிப்பவர்களால். அந்த காணொளியின் விளம்பரத்தால் கிடைக்கும் லாபம் முழுக்க முழுக்க அதற்காக ஊழியர்களால் செலுத்தப்படும் உழைப்பினால் தோன்றுவதே. முதலீடு செய்கிற ஒரு நிறுவனத்தின் ஒரே பங்களிப்பு அவர்கள் லாபம் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் பெயரில் இவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் தருகிறார்கள் என்பதே. அது கூட முதலாளியின் பணம் அல்ல, நீங்கள் சம்பாதித்துக் கொடுக்கிற லாபத்துக்கான முன்பணத்தின் சிறுபகுதி மட்டுமே.
அந்த சம்பளமும் இப்போது நிரந்தரமில்லை எனும் போது முதலாளி எனும் பெயரே அர்த்தமிழக்கிறது - உழைப்பின் பலனை (உபரியை) முழுக்க அவர்கள் உறிஞ்சி ஏப்பம் விடுகிறார்கள், இடைத்தரகரைப் போல செயல்பட்டு உங்கள் கோமணத்தை உருவி இளிக்கிறார்கள் என்பது தவிர. ஆனால் இந்த மேலாண்மை கொள்கை படித்த முதலாளித்துவ கூலிகளால் நாம் எந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்றால் இது ஒரு பகற்கொள்ளை என்பதே நமக்குப் புரிவதில்லை. பகற்கொள்ளையை ஒரு மேம்பட்ட சமூகப்பங்களிப்பாய், வணிக மேதைமையாய் காணத் தலைப்படுகிறோம். வேலை நீக்கம் நடக்கும் போது ஐயோ பாவம் அந்த முதலாளி, எவ்வளவு நஷ்டமடைந்திருந்தால் அவர் இப்படி செய்திருப்பார், அவரைப் போன்றவர்கள் இல்லாவிடில் நம் பொருளாதாரம் சரிந்து விடாதா? என்றெல்லாம் விசனிக்கிறோம். அட, வெங்காயமே!  

இன்று ஊடகங்களில் என்ன நடக்கிறது? எடிட்டர்களும் நெறியாளர்களுமாக வலதுசாரிகளுக்கு எதிராக சமூகவலைதளங்களில் எழுதுகிறவர்களை குறிவைத்து சங்கிகள் நிர்வாகங்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்து அவர்களை வேலையில் இருந்து தூக்க செய்கின்றன. ஒரு ட்வீட்டுக்காக மக்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவது எல்லாம் நடப்பது இப்படித்தான். இதன் மூலம் சங்கிகளுக்கு ஆதரவாக இயங்கும்படி ஊடகங்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இப்படி, நான் அறிந்தவரையில், 90% வேலை நீக்கங்கள் ஒன்று நிர்வாகத்தின் தவறான முடிவுகளால் நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டத்துக்கு ஈடுகட்டவோ அல்லது அற்ப அரசியலுக்காகவோ தாம் நிகழ்கின்றன, ஒரு ஊழியருக்குத் திறனில்லை, அவர் ஒழுங்கீனமாக இருக்கிறார், நிறுவனம் லாபமின்றி அல்லாடுகிறது என்பதற்காக அல்ல.   

 எந்த நிறுவனமும் ஒரு சமூக இயக்கம். முதலீட்டினால் அல்ல உழைப்பினாலே ஒரு நிறுவனம் வளர்ந்து லாபம் கொழிக்கிறது எனும் போது அதை முதலில் அங்கீகரிக்க வேண்டும். வெளியில் இருந்து இதைப் பார்ப்பவர்களும் இது ஏதோ முதலாளி தன் வைப்பாட்டி குடும்பத்தை கையாள்வது போன்ற அந்தரங்க விசயம் என நோக்குவதை நிறுத்த வேண்டும். இது ஒரு சமூகப்பிரச்சனை. வேலை நீக்கம் என்பது உழைப்பாளியை அவனது உழைப்பிடம் இருந்து பிரிக்கிற விசயம், ஒரு தாயை தன் குழந்தையிடம் இருந்து பிரிப்பதைப் போல. ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு காரணத்துக்காக ஒரு ஊழியரை விலக்குவதை எப்போதுமே நாம் ஆதரிக்கக் கூடாது. தனியார் என்றாலே இப்படித்தான் என கண்டுகொள்ளாமல் விடவும் கூடாது. இந்த சமூகம் எப்படி இயங்குகிறது எனப் புரிந்து கொள்ளாத ஒரு முட்டாள் மட்டுமே இதை தாராளவாத பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ரிஸ்க் என சொல்லுவான்.
 ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அதை வைத்து எவ்வளவு பக்கங்கள் எழுதி பஞ்சாயத்து பண்ணுகிறோம். திரையரங்கில் எழுந்து நின்று கத்தி எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மீம்ஸ் போடுகிறோம். நியாயமற்று வேலையில் இருந்து ஒருவர் நீக்கப்படுவதை மட்டும் ஏன்தோசை ஆறிப்போய் விட்டதுஎனும் கணக்கில் விட்டு விடுகிறோம்? உன்னை ஒரு இயக்குநர் ஏமாற்றி விட்டார், உன் எதிர்பார்ப்பை அவர் நிவர்த்தி செய்யவில்லை, உன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பது உன் கோபம் என்றால், வேலை நீக்கத்தின் போது ஒரு சகமனிதனின் திறன், அவனது அந்தஸ்து, கடமையுணர்வு, உழைப்பு எல்லாமே ஏமாற்றப்படுகின்றன, அவமதிக்கப்படுகின்றன அல்லவா? அதற்குத் தானே நீ நியாயமா கோபப்பட வேண்டும்?  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...