லாராவா சச்சினா? யார் சிறந்த ஜீனியஸ்? தொண்ணூறுகளில் இதை விவாதிக்காத ஊடகங்களோ ரசிகர்களோ இல்லை. ரெண்டாயிரத்துக்கு பிறகு சச்சின் நூறு சதங்களும் முப்பதினாயிரத்துக்கு மேல் ரன்களும் அடித்து கிரிக்கெட்டின் கடவுள் ஆகி விட்டார். ஆனாலும் இன்னமும் நிபுணர்கள் மத்தியில் இச்சர்ச்சை ஓயவில்லை. நாம் இந்த கேள்விக்கான விடையை கடைசியில் காண்போம்.
இந்திய அணி டாஸ் வெல்கிறது. பேட்டிங் செய்கிறது. எவ்வளவு ஸ்கோர் அடித்தால் நன்றாய் இருக்கும்? 400? இந்த நானூறை ஒரு தனிமனிதரே ஒரு இன்னிங்ஸில் அடித்தால் எப்படி இருக்கும்? அது தான் லாரா. இந்த 400க்கு முன்பு லாரா 1994இல் இங்கிலாந்துக்கு எதிராய் 375 அடித்தார். அப்போது உலகில் மிக உயர்ந்த டெஸ்ட் ஸ்கோர் எனும் சாதனையை படைத்தார். ஒன்பது வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன் ஜிம்பாப்வேவுக்கு எதிராய் 380 அடித்து லாராவின் சாதனையை முறியடித்தார். லாரா உடனே விழித்துக் கொண்டார். மீண்டும் அதே பாவம் இங்கிலாந்துக்கு எதிராய் 400 அடித்தார். சரி நல்ல வேளை யாரும் 400 முறியடிக்கவில்லை, இல்லாவிட்டால் லாரா ஐநூறு அடித்திருப்பார் என நினைக்கிறீர்களா? 1994இல் இங்கிலாந்தின் கவுண்டி ஆட்டம் ஒன்றில் டர்ஹமுக்கு எதிராய் லாரா 427 பந்துகளில் 501 ’நாட் அவுட்’ அடித்தார். இந்த சாதனைகளுக்கு பக்கத்தில் கூட யாரும் இன்னும் போகவில்லை.
10 அண்ணன், அக்காக்களும் ஒரு குட்டித் தம்பியும்
லாரா 11 குழந்தைகளில் கடைக்குட்டி. கீழ்மத்திய வர்க்க குடும்பம். ரொம்ப கண்டிப்பான அப்பா. அதை விட கண்டிப்பான நிறைய அண்ணன்கள். அப்பா கிரிக்கெட் பித்து கொண்டவர். ஆனால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காய் கிரிக்கெட்டை கைவிட்டு வேலைக்கு சென்றார். ஓய்வு நேரத்தில் பிள்ளைகள் விளையாடுவதென்றால் அணியை உருவாக்க வெளியே ஆள் தேட தேவையில்லை. 11 பிள்ளைகளும் சேர்ந்தால் ஒரு டீம் ஆகி விடும். தென்னமட்டை தான் பேட். இருப்பதிலேயே பொடியனான லாராவுக்கு கிரிக்கெட் என்றால் வெல்லக்கட்டி. ஆனால் அவனுக்கு பெரும்பாலும் ஆட வாய்ப்பு கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் பெரிய அண்ணன்களின் வேகமான பந்துகளை சமாளித்து ஆட வேண்டும். சுற்றி நிற்கும் சகோதர சகோதரிகளை தாண்டி பந்தை அடிக்க வேண்டும். அது போக மேட்ச் முடிவதற்கு சில ஓவர்கள் முந்தி தான் அவருக்கு ஆட வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதால் ஆட்டம் கலைவதற்கும் கூடியமட்டில் ரன்கள் அடிக்க வேண்டும். அதனால் தடுத்தாட முடியாது. முதல் பந்தில் இருந்தே விளாசல் தான். இந்த சின்ன வயது விளையாட்டு அனுபவம் தான் வளர்ந்த லாராவின் முக்கியமான திறன்களுக்கு புடம் போட்டது.
இரண்டு களத்தடுப்பாளர்கள் அருகருகே நிற்கும் போது அவர்களுக்கு இடையில் துல்லியமாய் பந்தை செலுத்து லாராவால் முடியும். அவருக்கு களத்தடுப்பு அமைத்து ரன்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட அசாத்தியம். சில நேரம் லாராவுக்கு ஒரு பந்தை கட் செய்ய தேவையிருக்கும். ஆனால் அந்த பகுதியில் ஒரு பீல்டர் இருப்பார். அவரை அங்கிருந்து அகற்ற லாரா கட் செய்ய வேண்டிய பந்தை சற்று தாமதமாய் பாயிண்டுக்கு மேலாய் பவுண்டரி அடிப்பார். உடனே அணித்தலைவர் அந்த பகுதியை பாதுகாப்பதற்காய் கவர் பகுதி பீல்டரை இங்கு நகர்த்துவார். லாரா உடனே எதிரணித் தலைவர் காதில் போய் “தப்பு பண்ணிட்டீங்களே” என்பார். இவர் என்ன சொல்கிறார் என அவர் குழம்பும் போது லாரா ஆள் இல்லாத கவர் பகுதிக்கு அடுத்த பந்தை கட் செய்து பவுண்டரி அடிப்பார். இந்த திறனையும் புத்திசாலித்தனத்தையும் சிறு வயதில் அண்ணன்கள் சுற்றி நின்று பீல்டிங் செய்கையில் அவர்கள் இடையே பந்தை அடித்து அடித்து தான் லாரா வளர்த்துக் கொண்டார்.
அதே போல் சிறு வயதிலேயே பெரியவர்களின் பந்து வீச்சை ஆடிப் பழகியது அவரை வேகப்பந்தை நன்றாக ஆடுபவராக்கியது. ஆட்டம் முடியும் முன் அவசரமாய் அடிக்க வேண்டிய கட்டாயம் அவரை அட்டகாசமான ஸ்டுரோக் பிளேயர் ஆக்கியது.
லாராவுக்கு ஆறு வயது இருக்கும் போது அவரது அக்கா அவரை ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார். சின்ன வயதில் இருந்தே அவருக்கு இவ்வாறு நல்ல டெக்னிக்கல் பயிற்சியும் கிடைத்தது. சச்சினைப் போன்றே லாராவுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் ஆடும் அபாரமான இயல்பான மேதைமை இருந்தது. அது மலர காரணமாக சச்சினைப் போலவே அவருக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே கூட ஆட அண்ணன்களும் வழிநடத்த நல்ல பயிற்சியாளரும் இருந்தனர்.
பள்ளி, under 15, under 19 ஆட்டங்களில் லாரா ஒவ்வொரு ஆட்டத்திலும் பெரும்பாலும் சதம் அடித்தார். சுலபமாய் டிரினிடேட் ஆண்டு டொபாகோ மாநில அணியில் இடம்பெற்றார். தன் முதல் ஆட்டத்தில் உலகின் மிக வேகமான வீச்சாளர்களான மால்கம் மார்ஷல் மற்றும் ஜோயல் கார்னரை எதிர்கொண்டு 92 அடித்தார். அதன் பிறகு விரைவில் மே.இ தீவுகள் அணியில் இடம்பெற்றாலும் அவரது அப்பா காலமானதைத் தொடர்ந்து அவர் அணியில் இருந்து விலகிக் கொண்டார். தன் வாழ்வின் மிகப்பெரிய இழப்பு தான் சர்வதேச ஆட்டங்களில் ஆடுவதை அப்பாவால் பார்க்க முடியவில்லை என்பது என்கிறார் லாரா. ஏனென்றால் லாரா சிறுவனாய் ஆடத் துவங்கியது முதற்கொண்டே அவரது ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அப்பா கூடவே சென்று ஆதரவு கொடுத்தார். கடுமையாய் உழைத்து பணம் சேர்த்து தன் மகனின் கிரிக்கெட் செலவுகளை கவனித்துக் கொண்டார்.
அப்பாவின் இழப்பின் கடும் வலியை தாங்கி லாரா மீண்டு வந்தார். 1990இல் பாகிஸ்தானுக்கு எதிராய் முதல் டெஸ்டை ஆடினார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பழகவும், ரிச்சர்ட்ஸ் போன்ற மேதைகள் கொன்ட அணியில் இடம்பிடிக்கவும் லாராவுக்கு மூன்று வருடங்கள் ஆயின. 1993இல் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அவர் முதல் சதம் அடித்த போது இனி தானே ரிச்சர்ட்ஸின் வாரிசு என நிரூபிக்கும் வண்ணம் அதை இரட்டை சதமாக்கினார் (277). அப்போதிருந்தே நீண்ட காலம் தொடர்ந்து கவனம் இழக்காமல் ஆட்ட வேகம் துவளாமல் பெரும் இரட்டை முச்சதங்கள் அடிக்கும் திறன் அவரிடம் வெளிப்பட ஆரம்பித்தது. தன் ஆதர்ச நாயகர்களான ரிச்சர்ட்ஸ், கிரீனிட்ஜ் போன்றோருக்கு இணையாய் மக்கள் தன்னை பார்க்க வேண்டும் எனும் தீரா வேட்கை அவருக்குள் எரிந்தது. அதனால் சதத்திற்கு பின் இரட்டை சதம் அதன் பின் முச்சதம் என அவர் நீட்டித்துக் கொண்டே போனார். மலை மலையாய் தான் குவிக்கும் ரன்கள் மூலம் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட வேண்டும் என ஆசைப்பட்டார்.
லாராவின் உன்னதம்
1998-1999 வரை லாரா அணித்தலைவராய் செயல்பட்ட காலத்தில் தான் அவரது ஆகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டது. 1999 ஆட்டத்தொடரில் அவர் ஒன் மேன் ஆர்மியாய் ஆஸ்திரேலியாவிடம் மோதி தன் அணியை வெற்றியடைய செய்ய ஒவ்வொரு முறையும் கடுமையாய் முயன்றார். நான்கு டெஸ்டுகளில் மூன்று சதங்களும் ஒரு இரட்டை சதமும் அடித்தார். குறிப்பாய் மூன்றாவது டெஸ்டில் 311 ரன்கள் எனும் இலக்கை விரட்டி சென்ற மே.இ தீவுகள் அணி ஒவ்வொரு மட்டையாளராய் தொடர்ந்து வெளியேற தள்ளாடியது. லாரா மட்டும் தனியாய் அடித்துக் கொண்டே இருந்தார். கடைசியில் ஒரே ஒரு விக்கெட் மீதமிருக்க வால்ஷின் துணையுடன் அவர் 153 அடித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார். அந்த ஆட்டத்தை பார்த்தால் அவரைப் படைத்த கடவுளே கூட பெருமையடைவார். இப்போது அந்த சதத்தை பார்த்தாலும் உங்கள் இதயத் துடிப்பு எகிறும்.
லாராவின் நீண்ட நேரம் ஆடும் திறன், நினைத்த இடத்தில் பந்தை அடிக்கும் சாமர்த்தியம் பற்றி பார்த்தோம். ஆனால் அவரை உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக்குவது அவர் பிறரை விட ஒரு கால் நொடி தாமதமாய் பந்தை அடிப்பது தான். இந்த இறுதி 0.25 நொடியில் அவர் பந்தை கிட்டத்தட்ட வெண்ணையை போல் வெட்டுகிறார். 360 கோணத்தில் பந்தை அடிக்கிறார்.
சரி சச்சினா லாராவா? டெக்னீக், நீட்சி மற்றும் ரன்களை பொறுத்த மட்டில் சச்சின். ஆனால் தொடர்ந்து ஆக்ரோசமாய் ஆடுவது, பெரிய சதங்களை அடித்து தனியாய் ஆட்டத்தை வெல்லும் திறனை பார்த்தோமானால் லாரா தான் உண்மையான கடவுள்!
கூடுதல் தகவல்கள்:
பிறந்த தேதி: 2 மே 1969
இப்போதைய வயது: 46
பிறந்த ஊர்: டிரினிடெட் ஆண்ட் டொபாகொ
பட்டப்பெயர்: பிரின்ஸி
பேட்டிங் ஸ்டைல்: இடது கை ஆட்டம்
டெஸ்ட் ஓய்வு: 2006
முதல் ஒருநாள் ஆட்டம்: 1990
ஒருநாள் ஓய்வு: 2007
டெஸ்ட் மொத்த ஓட்டங்கள்: 11,953
டெஸ்ட் சதங்கள்: 34
ஒருநாள் மொத்த ஓட்டங்கள்: 10,405
ஒருநாள் சதங்கள்: 19
டெஸ்ட் பேட்டிங் சராசரி: 52.88
ஒருநாள் பேட்டிங் சராசரி: 40.48
