Skip to main content

அரவிந்த டி சில்வா – இலங்கையின் ஜீனியஸ்



அரவிந்த டி சில்வா தான் நான் பந்து வீசி உள்ள பேட்ஸ்மேன்களிலேயே மிகவும் சிரமமானவர். வேகப்பந்தை ஆடுவது அவருக்கு தண்ணீர் குடிப்பது போல”, என்றார் இந்தியாவின் சிறந்த வேகவீச்சாளர்களில் ஒருவரான ஜவகல் ஸ்ரீனாத். தொண்ணூறுகளுக்கு பிறகு இலங்கையில் பல அட்டகாசமான பேட்ஸ்மென்கள் தோன்றினார்கள். ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்கக்காராஇவர்களில் ஆகச்சிறந்தவர் டி சில்வா தான். இலங்கை கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் அவர்.

1996 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஜெயசூரியா, கலுவர்த்தனாவை இழந்து சொற்ப ரன்களுடன் தடுமாறி நின்றது. அந்த பிட்ச் ரொம்ப மெத்தனம். பேட்டிங் மிக சிரமம். இந்திய பந்து வீச்சாளர்கள் 150க்குள் இலங்கையை சுருட்டலாம் என நம்பினார்கள். எல்லாம் கட்டுக்குள் இருந்தது. ஆனால் டி சில்வா வந்து ஒவ்வொரு பந்தையும் சிதறடித்தார். டி சில்வா வேறு ஏதோ பிட்சில் ஆடுவது போல் தோன்றியது. ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து ஒரேயடியாய் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 47 பந்துகளில் 67 அடித்து அவர் வெளியேறும் போது 14 ஓவர்களில் ஸ்கோர் 85 எட்டியிருந்தது. இலங்கைக்காய் மற்றொரு அரை சதம் அடித்த மகானாமா 100 பந்துகளுக்கு மேல் எடுத்துக் கொண்டார். இந்தியாவுக்காய் அரை சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் டெண்டுல்கர் 88 பந்துகளில் தான் 65 அடித்தார். டி சில்வாவின் 140 ஸ்டிரைக் ரேட் அந்த சூழலில் எவ்வளவு அபாரமான சாதனை என்பதை இதுவே காட்டும். டி சில்வா எனும் டைனமைட் வெடித்த அதிர்ச்சியில் இருந்து இந்தியர்கள் அதன் பிறகு மீளவில்லை. இலங்கை 251 எடுத்தது. இந்தியா 120க்கு சுருண்டது. மொத்த இந்தியாவும் கண்ணீர் விட்டது. இலங்கை கொண்டாடியது. இரு அணிகளையும் அன்று வேறுபடுத்தியது அரவிந்த டி சில்வா எனும் மேதையின் ஆட்டம்.

1996 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டி சில்வா ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் 107 அடித்து ஆட்டத்தை வென்று கொடுத்தார். அவர் பந்து வீசி மூன்று விக்கேட்டுகளையும் வீழ்த்தினார். இன்று வரை உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதமடித்து மூன்று விக்கேட்டுகளும் வீழ்த்தின ஒரே வீரர் எனும் அவரது சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. அந்த ஆட்டத்தில் டி சில்வாவின் ஒரு ஷாட்டை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஷேன் வார்ன் குறைநீளத்தில் (short of the length) ஆப் ஸ்டம்புக்கு வெளியே போடுகிறார். டி சில்வா அதை நான்கு ரன்களுக்கு வெட்டுகிறார். உடனே கவர் பகுதியில் இருந்து ஒரு பீல்டரை வார்ன் ஸ்கொயர் பகுதிக்கு அனுப்புகிறார். இதன் மூலம் கட் ஷாட்டை தடுக்க நினைக்கிறார். அடுத்த பந்தை வார்ன் முழுநீளத்தில் (full length) வீசுகிறார். வார்னின் புத்திசாலித்தனத்தை இங்கு கவனிக்க வேண்டும். எப்படியும் மற்றொரு குறைநீளப் பந்தை எதிர்பார்த்து பேட்ஸ்மேன் பின்னங்காலில் இருக்கும் போது full lengthஇல் வீசி ஏமாற்றி தவறான ஷாட் ஆட வைப்பது அவர் திட்டம். எதிர்பார்த்தது போல் டி சில்வா பின்னங்காலில் தான் நிற்கிறார். ஆனால் வார்ன் எதிர்பார்த்தது போல் அவர் ஏமாறவில்லை. Full length பந்தை அவர் கவர் பகுதிக்கு விரட்டி மீண்டும் நான்கு அடிக்கிறார். அந்த ஷாட்டை முன்னங்காலில் மட்டுமே ஆட முடியும். அதையே பின்னங்காலில் அப்படி அடிப்பது அசாத்தியமானது (சச்சின், டி வில்லியர்ஸால் மட்டுமே முடிவது). அது மட்டுமல்ல போன பந்தில் வார்ன் பீல்டரை எங்கிருந்து நகர்த்தினாரோ அங்கேயே தான் டி சில்வா இம்முறை அடிக்கிறார். இது தான் மேதைமை. பூனை எலியை வைத்து விளையாடுவது போல் டி சில்வா அன்று வார்னை வைத்துவிளையாட்டு காட்டினார்’.
குறையை நிறையாக்கினவர்
டி சில்வாவின் முழுப்பெயர் பின்னடுவாகெ அரவிந்த டி சில்வா. அந்த முதற்பெயரை அவர் பெற்றோர் தெரிந்தே வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் பின்னங்காலில் ஆடுவதில் சமர்த்தர். இது குறித்து கிரிக்கெட் பயிற்சியாளரும் மருத்துவருமான கிரியிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியமான தகவலை என்னிடம் கூறினார். டி சில்வாவின் வலது கால் இடது காலை விட சற்றே குள்ளம். அதனாலே அவர் நடக்கும் போது ஒரு சின்ன சாய்வை, விந்தலை நீங்கள் கவனிக்கலாம். ஆனால் இந்த குறையே பிற்பாடு அவருக்கு நிறையானது. அவர் நிலையமைதியின் (stance) பின்னங்கால் (குட்டையான வலதுகால்) மண்ணில் முழுக்க பதியாமல் இருக்கும். இதனால் சுலபத்தில் முன்னங்காலில் சாய்ந்து போய் பந்தை விரட்டவோ பின்னங்காலில் வந்து வெட்டி ஆடவோ அவருக்கு முடிந்தது.
டி சில்வா 1965இல் இலங்கையின் கொலொம்போவில் பிறந்தார். லாராவை போல் டி சில்வாவும் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னை விட அதிக வயதுள்ளவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடி பழகினார். அவரது ஆதர்ச நாயகன் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ். ஆப் ஸ்டம்பில் விழுகிற பந்தை ரிச்சர்ட்ஸ் துச்சமாய் மிட் ஆன் பகுதிக்கு தூக்கி அடிப்பார். அந்த ஷாட்டை இன்னும் கொஞ்சம் கவனமாய் டி சில்வா பின்னர் அடிக்க ஆரம்பித்தார். சிறுவனாய் இருக்கையில் இருந்தே அவரது அதித திறமை பரவலாய் கவனம் பெற்றது. பள்ளி, கல்லூரி, உள்ளூர் அணிகள் என விரைவில் பல நிலைகளைக் கடந்து 1984இல் 19 வயதில் இலங்கை தேசிய அணிக்காக இங்கிலாந்துக்கு எதிராய் முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினார். அப்போது இலங்கை மிகவும் பலவீனமான அட்டைக்கத்தி அணி. டி சில்வா ஒவ்வொரு பந்தையும் மைதானத்துக்கு வெளியே அடிக்க ஏங்கிய சேவாக் போன்ற பேட்ஸ்மேன். அதனாலே ஆரம்ப பத்து வருடங்களும் டி சில்வா தொடர்ச்சியாக நிறைய ரன்கள் அடிக்கவில்லை. நிறைய தோட்டாக்கள் கொண்ட ஆனால் அவ்வப்போது மட்டுமே வெடிக்கும் ஏகெ 47 போல் ஆடினார்.
1996 உலகக்கோப்பைக்கு முன்னர் அவர் இங்கிலாந்தின் கெண்ட் எனும் உள்ளூர் கவுண்டி அணிக்காக ஆடினார். அந்த பருவத்தில் டி சில்வா வெகுவாக முதிர்ந்தார். அவரது டெக்னிக் நேர்த்தியானது. மனம் அமைதி கொண்டது. கட்டுப்பாடாய் தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த கற்றார். அந்த மாற்றத்தின் உச்சத்தை தான் நாம் 1996 உலகக்கோப்பை ஆட்டங்களில் கண்டோம். அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு இலங்கை ஒருநாள் அணி புல்டோசர் போல் எதிரில் வரும் எல்லா அணிகளையும் தகர்த்தபடி ஓடியது. டி சில்வாவின் அற்புத ஆட்டம் அதற்கு காரணம். 34 வயது கடந்ததும் அவர் ஆட்டமும் தொய்வடைந்தது. அதோடு இலங்கையும் தளர்ந்து நின்றது
டி சில்வா தன் பேட்டை சற்று சாய்வான கோணத்தில் பிடித்திருப்பார். பவுலர் ஓடி வரும் போதே பந்தின் லைனை கணித்து விடுவார். உள்ளே வரும் பந்து என்றார் சாய்வான பேட்டை சற்று திருப்பி பிடித்துக் கொள்வார். இதன் மூலம் எந்த பந்தை அடித்தாலும் அது முழுசாய் பேட்டில் பட்டு பறந்து செல்லும். இதே பாணியில் தான் அவர் off ஸ்டம்பில் விழும் பந்துகளையும் தன் பேட்டை பிடிக்கும் முறையில் சிறு சிறு திருப்பல்கள் செய்வதன் மூலம் அவரால் எந்த லைனில் விழும் பந்தையும் விருப்பபடி அடிக்க முடிந்தது. 360 டிகிரியில் எங்கு வேண்டுமானாலும் ஒரே பந்தை அவரால் அடிக்க முடிந்தது இப்படித் தான். பந்தை அடிக்கும் போது அவரது இடது முழங்கை எப்போதும் தோளுக்கு மேல் உயர்ந்து இருப்பதால் பந்தை தரையோடு தரையாய் நேராய் அவரால் அடிக்க முடிந்தது. இதனால் தான் அவர் நமக்கு விராத் கோலியை நினைவுபடுத்துகிறார்.
BOX
அரவிந்த டி சில்வாவின் பட்டப்பெயர் Mad Max. 1979இல் வெளியான ஆஸ்திரேலிய படம் தான் Mad Max. இதில் நிறைய கார் ரேஸ் காட்சிகளும் அதிரடி ஆக்‌ஷனும் இருக்கும். அரவிந்த டி சில்வா இளமையில் இது போல் வெறித்தனமாய் ஆடியதால் தான் அவருக்கு இப்பெயர் வந்தது.
டி சில் வாவுக்கு அஜித் குமார் போல மோட்டார் கார் ரேஸ் மீது தனி பித்து.
டி சில்வாவுக்கு அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் பீட் சாம்பிராஸை மிகவும் பிடிக்கும். அதனால் தன் மகனுக்கு பீட் சாம்பிராஸ் என பெயரிட்டார்.
டி சில்வாவுக்கும் அனில் கும்பிளேவுக்கும் ஒரே பிறந்த நாள்: 17 அக்டோபர்
சச்சின் டெண்டுல்கரைப் போல் டிசில்வாவும் குழந்தையாய் இருக்கும் போது டென்னிஸ் பந்தால் கிரிக்கெட் அதிகம் ஆடினார். டென்னிஸ் பந்தை வலுவாய் அடித்தால் தான் பாதி வேகத்தில் செல்லும் என்பதால் அவர் மிகுந்த ஆற்றலுடன் வெறித்தனமாய் அடித்தாட பழகினார். சச்சினும் இதே போல் பந்தை மிகுந்த பவருடன் அடிக்க கூடியவர்.
டி சில்வா பாகிஸ்தானுக்கு எதிராய் 8 டெஸ்ட் சதங்கள் அடித்தார். இன்னும் முறியடிக்கப்படாத சாதனை இது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவரது சதம் Wisdenஆல் உலகின் மிகச்சிறந்த பேட்டிங் சாதனைகளில் எட்டாவதாய் கௌரவிக்கப்பட்டது.
டி சில்வா டெஸ்ட் ஆட்டங்களில் 20 சதங்களும் ஒருநாள் ஆட்டங்களில் 11 சதங்களும் அடித்தார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...