Theprint இணையதளத்தில் வந்துள்ள இந்த கட்டுரை (https://www.firstpost.com/india/after-suspending-labour-laws-up-okays-migration-commission-adityanath-govts-move-can-leave-workers-at-mercy-of-predatory-capitalists-8420011.html) ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகிறது: தற்போது உத்தர பிரதேச /அரசு புலம்பெயர்வு கமிஷன் ஒன்றை அமைத்து அதன் மூலம் தொழிலாளர்கள் தம் மாநிலத்தை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், உள்ளூரில் உள்ள தொழிலாளர் அடிப்படை நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வதற்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளது; ஒரு சதித்திட்டம் இதன் பின்னால் உள்ளது. இனிமேல் குறைவான சம்பளத்துக்கு அதிகமான நேரம் தொழிலாளிகளை அங்கு வேலை வாங்கலாம். மாநில எல்லையை கடக்க முடியாது என்பதால் அவர்கள் புதிய வேலையை வெளியே தேட முடியாது. அவர்கள் அங்கேயே சிறைவைக்கப்படுகிறார்கள். அதிகமான தொழிலாளிகள் ஒரே இடத்தில் வேலை தேடும் போது முதலாளிகள் அதைக்காட்டி ஊதியத்தைக் குறைக்கவும் கூடுதலாய் வேலைவாங்கி பிழியவும் முடியும். அதை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது என்பதற்காகவே ஆதித்யநாத் தொழிலாளர் உரிமை சட்டங்களை ரத்து செய்கிறார்.
யோசித்துப் பாருங்கள். கொரோனா சமயத்தில் பல மாநிலங்களில் வேலை செய்து வந்த ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்பவர்கள் ஊருக்குத் திரும்புகிறார்கள். அரசு ஒரு சட்டமியற்றி அவர்கள் இனி சுலபத்தில் சொந்த ஊரை விட்டு வேலை தேடி வெளியேற முடியாத நிலைமையை ஏற்படுத்துகிறது. அவர்கள் வேலை கேட்டு செல்லும் போது ஒரு இடத்துக்கு ஆயிரம் பேர் போட்டியிடும் சூழல் ஏற்படும். அப்போது ஒரு லட்சம் சம்பளம் கொடுப்பதற்குப் பதில் ஒரு திறமையும் அனுபவமும் மிக்க மென்பொருள் பொறியாளருக்கோ, மருத்துவருக்கோ நீங்கள் 25,000 கொடுத்தால் போதும் எனும் நிலைமை ஏற்படும். அவர்களால் எதிர்க்க முடியாது. படித்த இவர்களுக்கே இப்படி எனில் கூலிவேலை செய்பவர்களுக்கு ஒருவர் இடத்தில் பத்தாயிரம் பேர் போட்டியிடும் நிலைமை ஏற்படும். இப்படி செயற்கையாக வேலைத்தட்டுப்பாட்டை உண்டு பண்ணி மக்களை ஒரே இடத்தில் சிறைவைப்பது மிக அபாசமான ஒரு செயல். இதனோடு ஒப்பிடுவதென்றால் இளம்பெண்களை கடத்தி வந்து சோனாகாச்சியில் பூட்டிவைத்து வேலைவாங்குவதுடன் தான் ஒப்பிடத் தோன்றுகிறது.
