நான் இதுபோன்ற வேலைநீக்க அநீதிகளை நேரில் சந்தித்திருக்கிறேன் என்பதாலே முதலாளி-தொழிலாளி என வரும் போது நான் தொழிலாளர்களின் பக்கமே நிற்பேன். உ.தா., பைலட் புரோஜெக்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மேலாளரின் கீழ் ரெண்டு மூன்று புரோஜெக்டுகள் ஓடுகின்றன என்றால் அவர் தற்காலிகமாக மூன்று அணிகளை வேலைக்கு எடுப்பார். ஆனால் அவர்களிடம் வேலை தற்காலிகம் என சொல்ல மாட்டார். எதிர்பார்த்தது போல புரோஜெக்ட் அமைய வில்லை என்றால் வேலைக்கு எடுத்தவர்களை ஒருநாள் அழைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இப்படித்தான் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் அவர்கள் உருப்படியான ஏதாவது வேலைக்கு சென்றிருப்பார்கள் தானே? இதற்கும் ஜேப்படித் திருட்டுக்கும் என்ன வித்தியாசம்?
என் நண்பர் ஒருவர் ஒரு வினோதமான நோக்கத்திற்காக ஒரு பத்திரிகையில் வேலைக்கு உதவி ஆசிரியராக எடுக்கப்பட்டார். அங்கு தலைமை ஆசிரியராக இருந்த பெண்மணிக்கும் பத்திரிகை நிறுவனருக்கும் பனிப்போர். இந்த பெண்மணி நிறுவனரின் மனைவியிடம் சென்று அவருக்கும் அங்கு வேலை செய்யும் சில இளம்பெண்களுக்கும் தவறான உறவு என கதையை புனைந்து விட்டார். நிறுவனருக்கு வீட்டில் செம அடி. அந்த இளம்பெண்களை ‘கண்காணிப்பதற்காக’ அந்த ஆசிரியர் வேலையில் நீடிக்க வேண்டும் என மனைவி விதித்த நிபந்தனையை நிறுவனர் ஏற்றுக்கொண்டார். ஆனால் முதலாளியோ இந்த பெண்மணிக்கு செக் வைப்பதற்காக புதிதாக ஒரு ஆளை - என் நண்பரை - உதவி ஆசிரியராக நியமித்தார். நியமிக்கும் போதே இன்னும் ஒரே மாதத்தில் நீங்களே ஆசிரியராகி விடுவீர்கள், அந்த பெண்மணியை பதவி நீக்கம் செய்துவிடுவேன் என உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இந்த இழுபறி சில மாதங்களாக நடக்க, அவரது அகங்காரம் சீண்டப்பட, முதலாளி இந்த ஆசிரியரை வேலை நீக்கம் செய்யும் முடிவை எடுக்கிறார். இதை மோப்பம் பிடித்தறிந்த அந்த பெண்மணியோ இரவோடு இரவாக முதலாளியின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் சென்று பேசி கடுமையாக அழுத்தம் கொடுத்து தன் பதவியைக் காப்பாற்றி, தன்னிடத்தில் வர வேண்டியவரை வேலை நீக்கம் செய்ய வைத்து விட்டார். இப்படி குடும்ப சச்சரவின் பொருட்டு ஒருவருக்கு வேலை தரப்பட்டு அவ்வேலையும் அதே காரணத்துக்காக பிடுங்கவும் பட்டது.
