164 டெஸ்ட் ஆட்டங்களில் 13, 288 ரன்கள். 36 சதங்கள். 63 அரை சதங்கள். ஆட்ட சராசரி 52.31. இந்த நம்ப முடியாத சாதனை மட்டுமே திராவிடா என்று கேட்டால் இல்லை. 96இல் துவங்கி 2012 வரை எண்ணற்ற முறை வெளிநாட்டு மண்ணில் அசுர வேக பவுலர்களிடம் இருந்தும் முரளிதரண், வார்ன் போன்ற ஸ்பின்னர்களிடம் இருந்தும் இந்திய பேட்டிங் வரிசையின் பிற வீரர்களை பாதுகாத்திருக்கிறார். ஒருவேளை திராவிட் இல்லாவிட்டால் ல்ஷ்மணால் கொல்கொத்தாவில் தனது சாதனை இன்னிங்ஸான 281 அடித்திருக்க முடியாது. திராவிட் எனும் சாரதி இல்லாமல் மேற்கிந்திய தீவுகளிலும் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திலும் சச்சின் அசாத்தியமாய் பவுலர்களை துவம்சம் செய்திருக்க முடியாது.
அசருதீன், சச்சின். கங்குலி, லஷ்மண் ஆகியோரின் பின்னணியில் அவர் ஒரு நிழலைப் போல, ஒரு துணை நடிகனைப் போல் பதினாறு ஆண்டுகள் அற்புதமாய், நிதானமாய், தொடர்ச்சியான தரத்துடன் ஆடினார். இயல்பாகவே திராவிடை நாம் கொஞ்சம் திறமை குறைந்த, நன்றாய் தடுத்தாடுகிற, எல்லையில் போர் புரிகிற ராணுவ வீரரை போன்று மதிப்பிட்டோம். கொல்கத்தாவில் லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 அடித்த டெஸ்ட் ஆட்டத்தில் திராவின் அபார சதம் சற்றே மங்கிப் போனது. அவருக்கு எப்போதுமே இது நடந்தது. ஆனால் தடுப்பாட்டமும் நிதானமும் மட்டுமே அல்ல ராகுல் திராவிட். அவர் ஒரு அபாரமான ஸ்டைலிஸ்ட். வந்த புதிதில் சச்சினை விட அதிகமான பெண் விசிறிகள் அவருக்கு இருந்தனர்.
பேட்டிங் எனும் தியானம்
ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் மிகவும் கூலாக ஆடுவதில் திராவிட் சச்சினை விடவும் மேல். தான் சந்திக்கும் ஒவ்வொரு ஓவருக்குள்ளும் அவர் முழுமையான தியான நிலையில் மனதை குவித்தார். தடுத்தாடும் ஒவ்வொரு பந்திலும் தன் மனதை குவித்தார். அதில் ஆழ்ந்து தன்னை இழந்தார். ஜென் தத்துவத்தில் இதனை mindfulness என்பார்கள். இதனை கிரிக்கெட் பேட்டிங்கில் அற்புதமாய் செயல்படுத்தியவர் திராவிட் மட்டுமே.
ஸ்டைலும் டெக்னிக்கும்
திராவிட் ஒரு பிரமாதமான ஸ்டைலிஸ்டும் கூட. திராவிட் பந்தை ஆடும் முன்பு அவரது மட்டை, முழங்கை, இடது கால் மற்றும் தலை எவ்வளவு நேர் கோட்டில் வருகிறது எனப் பாருங்கள். ஒரு கோட்டை வரைந்தால் துல்லியமாய் பிசிறின்றி நேராய் வரும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் தான் திராவிடை பவுல்ட் ஆக்குவதோ ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைப்பதோ மிகவும் சிரமம். தலை-முழங்கை-மட்டை-இடதுகால் அவ்வளவு நேராய் இருக்கும் போது பந்தின் லைனை கணிப்பது சுலபமாகிறது. கிரிக்கெட் பக்கவாட்டில் ஆடப்படுகிற ஆட்டம். பேட்ஸ்மேன் பக்கவாட்டில் நின்று பவுலர் பக்கவாட்டில் வீசும் பந்தை ஆடுகிறான். ஆனால் மனிதனின் பார்வை பக்கவாட்டில் சரியாய் வேலை செய்யாது. நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் தலையை திருப்பாமல் வலது பக்கம் அசைகிற பொருளை கவித்துப் பாருங்கள். எவ்வளவு சிரமம் எனப் புரியும். சுவரில் நடக்கும் போது பக்கவாட்டில் பார்த்தால் பேலன்ஸ் இழந்து தவறி விடுவீர்கள். கிரிக்கெட்டில் பல பேட்ஸ்மேன்கள் அவுட்ஸ்விங்கர் பந்துகளுக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆவது இப்படி உடம்புக்கு வெளியே பார்வைக்கு மறுபக்கம் போகிற பந்தை சரியாய் கணிக்க முடியாததானால் தான். திராவிட் ஆடும் போது அவரது தலை முதல் கால் வரை ஒரே நேர்கொட்டில் வருவது தான் கட்டுறுதியான தடுப்பாட்டத்துக்கு காரணம். திராவிடை என்னால் தொடர்ந்து இருமுறைக்கு மேல் ‘பீட்’ செய்ய முடிந்ததில்லை என ஆஸ்திரேலியாவின் சிறந்த வேகவீச்சாளர்களில் ஒருவரான கிலெஸ்பி கூறுகிறார். ஸ்வீவ் வாஹ் கூறுகிறார்: “திராவிட் ஆட வந்து 15 நிமிடங்களுக்குள் அவுட் ஆக்கி விட வேண்டும். இல்லாவிட்டால் அவரை அவுட் ஆக்குவதை மறந்து விட்டு மற்ற வீரர்களை அவுட் ஆக்க வேண்டும்”
பேக் லிப்ட் (back lift) மற்றும் பேட் புளோ (bat flow)
பேக் லிப்ட் என்பது ஒருவர் பந்தை எதிர்கொள்ளும் முன் பேட்டை எந்தளவுக்கு மேலே தூக்கி வைத்திருக்கிறார் என்பது. அங்கிருந்து பேட்டை கீழே கொண்டு வருகிற அரைவட்ட அசைவு பேட் புளோ. இரண்டுமே எவ்வளவு அதிகமாய் இருக்குமோ அந்தளவு பேட்ஸ்மேன் பந்தை அட்டகாசமாய் டைமிங் செய்யவும் வலுவாய் அடிக்கவும் முடியும். கேரி சோபர்ஸ், லாரா, சச்சின், காம்பிளி, சயித் அன்வர், கெவின் பீட்டர்ஸன், யுவ்ராஜ் சிங், ரெய்னா, ஷிக்கர் தவன் என பலரையும் உதாரணம் காட்டலாம். பொதுவாக நன்றாய் தடுத்தாடுகிறவர்கள் குறைவான பேக் லிப்ட் மற்றும் பேட் புளோ கொண்டிருப்பார்கள். ஆனால் திராவிட் மாறாக ஆர்ப்பாட்டமான பேக் லிப்ட் கொண்டவர். “நான் ஆணையிட்டால்” பாடலில் எம்.ஜி.ஆர் சாட்டையை வலது கோடியில் இருந்து சுழற்றி நம்பியாரை விளாசுவது போலத் தான் திராவின் தன் பேட்டை சுழற்றி கீழே கொண்டுவது இருக்கும். இப்படியான பேக் லிப்ட் இருந்தால் பந்தை சந்திக்க சற்று தாமதமாகும். ஆனால் திராவிட் இந்த டெக்னிக்கை கொண்டே சிறப்பாய் தடுத்தாடினார் என்பதே ஒரு பெரும் சாதனை.
பின்னங்கால் ஆட்டம்
திராவிட் வெளிநாடுகளில் அபாரமாய் ஆடியதற்கு அவர் இயல்பில் நன்றாய் பின்னங்காலில் ஆடக் கூடியவர் என்பது முக்கிய காரணம். ஆனால் பந்து ஸ்விங் ஆகும் போது பின்னங்கால் ஆட்டம் மட்டும் இருந்தால் அவுட் ஆக வேண்டியது தான். அதனாலே அவர் ஒவ்வொரு முறை பந்து வீசப்படும் போதும் வேண்டுமென்றே முன்னங்காலுக்கு சென்று சந்திக்க தலைப்பட்டார். ஆனால் பந்து ஷார்ட் லெங்தில் விழுந்தால் முன்னங்காலுக்கு வந்து பிறகு பின்னங்காலுக்கு ஆடுவார். இந்த back and forth அசைவு பார்க்க அம்மா குருவிக்காய் குஞ்சுகள் கூட்டிலிருந்து எட்டி எட்டிப் பார்த்து தலையை உள்ளிழுப்பது போல இருக்கும். ஏற்கனவே நான் குறிப்பிட்ட பேக் லிப்டோடு இந்த காலாட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவதாய் அவர் ஸ்டம்புகளை பாதுகாக்கவும் நகர்வார். பந்து பிட்ச் ஆகும் முன் திராவிட் ஒரு நர்த்தனமே ஆடி முடித்திருப்பார். இப்படி தயாராக அவருக்கு மற்ற பேட்ஸ்மென்களை விட கூடுதலாய் ஒரு நொடி ஆகும். அதனால் தான் சச்சின், லஷ்மண், கங்குலி போல் அவரால் ஒவ்வொரு பந்தையும் வெண்ணெய் போல் டைமிங் செய்ய முடிந்ததில்லை.
சிறந்த டெக்னிஷியன்
திராவிடின் டெக்னிக் குறைகொண்டது தான். அவரது பேட் முன் பந்தை சந்திக்கும் முன் (விராத் கோலியைப் போல்) முதல் ஸ்லிப்பை நோக்கி இருக்கும். ஆனால் இந்த குறையையும் மீறி அவர் உலகின் சிறந்த டெக்னிஷியனாக உயர்ந்தது மற்றொரு பிரம்மாண்ட சாதனை.
துவக்கம்
பலரும் கருதுவது போல் திராவிட் கன்னடியர் அல்ல. அவர் (ரஜினியைப் போல) கர்நாடகத்தில் வளர்ந்த மராட்டியர். அவரது அப்பா ஒரு ஜாம் கம்பெனியில் வேலை செய்தார். அதனாலே சின்ன வயதில் அவரது ஜாமி என வட்டப்பெயர் இருந்தது. கராறான மத்திய வர்க்க குடும்ப வளர்ப்பு. அப்போது தனது வீட்டைச் சுற்றி நிறைய காலி இடம் இருந்தது, மாலையில் அங்கு குழந்தைகள் கூடி அங்கு கிரிக்கெட் ஆடுவார்கள் என்றும், அவ்வாறு ஆடியே தனக்கு கிரிக்கெட் மீது பெரும் காதல் ஏற்பட்டது என்றும் திராவிட் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். பள்ளி அளவில் ஆடி நிறைய ரன்கள் அடித்த பின் அவருக்கு under-15, under 19 என சிறுவர்களுக்கான மாநில அணிகளில் வாய்ப்பு கிடைக்கிறது. சின்ன வயதில் திராவிட் கவாஸ்கர் மற்றும் குண்டப்பா விஷ்வநாத்தின் விசிறி. பிற்காலத்தில் அவரது கட் மற்றும் கவர் டிரைவ் ஷாட்களில் விஷ்வநாத்தின் தாக்கம் பளிச்சென தெரிய வந்தது. விரைவில் திராவிட்டுக்கு ரஞ்சி அணியில் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய மற்றொரு ஊக்கமான சச்சின் தான் அதற்கு காரணம் என்கிறார் திராவிட். சச்சின் 16 வயதில் இந்திய அணிக்காய் ஆட மாநில அணிகளில் இருபது வயதுக்குள் ஆட திராவிட் போன்றோருக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. சிறுவயதில் சச்சினை போல் தன்னாலும் ஆட முடியும் என நம்பிக்கை பிறந்தது.
1996இல் இங்கிலாந்துக்கு பயணமான இந்திய அணியில் திராவிட் இடம்பெற்றார். இரண்டாவது டெஸ்டில் லார்ட்ஸ் மைதானத்தில் மூத்த வீரர் மஞ்சிரேக்கர் காயம் காரணமாய் விலக திராவிட் 95 அடித்தார். அதன் பிறகு திராவிட் எனும் ரன் எந்திரம் 16 வருடங்கள் இந்தியாவுக்காக டன் கணக்கில் ரன்களை உற்பத்தி செய்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மே.இ தீவுகள், பாகிஸ்தான் என திராவிட் சோபிக்காத நாடுகளே இல்லை. அவர் எப்போதுமே பந்தை சற்றே தாமதித்து அடிக்கக் கூடியவர் என்பதால் எப்போதுமே ஸ்விங் ஆகும் இங்கிலாந்தின் ஆடுதளங்கள் அவருக்கு பெரும் அறுவடைக் களமாகியது.
ஒருநாள் ஆட்டம் திராவிட்டுக்கு பழக சற்று காலம் பிடித்தாலும் 12 சதங்கள் 83 அரைசதங்கள் அடித்து முக்கியமான வீரராய் தன் தடத்தை அங்கும் பதித்தார். அவரது தலைமையின் கீழ் இந்தியா மே.இ தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தானில் தொடர்கள் வென்றது. 14 ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ந்து இரண்டாவதாய் மட்டையாடி வென்ற சாதனையையும் படைத்தது. ஐ.பி.எல்லிலும் அவர் சிறந்த கேப்டன் எனும் பெருமையை பெற்றார்.
பெட்டி செய்தி
திராவிடின் சிறந்த டெஸ்ட் சதங்கள்
2001இல் கொல்கொத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அவர் அடித்த 180 இந்தியா தோல்வியில் இருந்து மீண்டு அசாத்திய வெற்றி பெற உதவியது
2002இல் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராய் அடித்த 148 மிக சிரமான ஆடுதளத்தில் இந்தியா வெல்ல காரணமாகியது
2003இல் அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் 233 மற்றும் 72 நாட் அவுட் 20 அடித்து வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றளித்தார். கேப்டன் கங்குலி “திராவிட் கடவுளை போல் ஆடினார்” என வர்ணித்தார்.
2004இல் பாகிஸ்தானில் ராவில்பண்டி மைதானத்தில் அவர் எதிராய் அடித்த 270 வரலாற்றில் முதன்முதலாய் இந்தியா பாகிஸ்தானில் டெஸ்ட் தொடர் வெல்ல காரணமாகியது.
2006இல் கிங்ஸ்டன் மைதானத்தின் நான்காவது டெஸ்டில் மிகவும் சிரமான ஆடுதளத்தில் அவர் அடித்த 81 மற்றும் 68 இந்தியா 35 வருடங்களுக்கு பிறகு மே.இ தீவுகளில் டெஸ்டு தொடரை வெல்ல உதவின.
