பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான சாலைகளைப் பற்றி (மலைப்பகுதியில் உள்ள குறுகலான பாதைகள்) ஒரு காணொளியைப் பார்த்தேன். அடிக்கடி மண் இடிந்து விழும், கற்கள் உருண்டு விழும் இடுங்கலான பாதைகளில் ஒரு பேருந்தில் பயணித்து ஒரு கூட்டம் ஒரு கிராமத்துக்கு வருகிறது; அங்கிருந்து பயணித்து கல்லாலான மலைகளைக் குடைந்து உருவான தங்கச்சுரங்கம் ஒன்றுக்குப் போகிறார்கள். இதன் நடுவே முகாம்கள் எழுப்பி அமைக்கப்பட்ட ஒரு ஆன்மீகக் கூட்டத்துக்கு அவர்கள் செல்கிறார்கள். ஒரு கிறுத்துவ போதகர் அவர்கள் மத்தியில் நின்று பேசுகிறார். உடல் நலிவுற்றவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள் எனப் பெருங்கூட்டம் அவரிடம் ஆசி பெற முந்தியடிக்கிறது. புனித நீர் எனச் சொல்லி கேனில் இருந்து தண்ணீரை மொண்டு மொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். தலையிலும் உடம்பிலும் ஊற்றுகிறார்கள்.
போதகர் பெண்களுக்கு மட்டும் தனி கவனிப்பை அளிக்கிறார் - அவர்களின் மார்பகங்களுக்கு நடுவே தண்ணீரை ஊற்றுகிறார். கன்னத்தைத் தடவுகிறார். ஒரு கர்பிணியின் மார்புகளை ஆசீர்வதிக்கிற பாவனையில் நீரை ஊற்றித் தடவுகிறார். அவர்கள் தேமேவென பார்க்கிறார்கள். இதை அடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு புஷ்டியான பெண்ணை நடக்க வைக்கிறார். அவரும் எழுந்து பெங்குயின் போல நடந்து விட்டு சீராக நடக்கத் தொடங்குகிறார். முடவரை குணமாக்கி விட்டாராம். இது போன்ற ‘செட் அப்’ அதிசயங்களுக்குப் பிறகு அவர் பேட்டியளிக்கிறார். “நான் செய்வது அறிவியல் அடிப்படையற்றது, எப்படி வெறும் தண்ணீரால் நோயை குணப்படுத்த முடியும் எனக் கேட்கிறார்கள். இறை நம்பிக்கை இருந்தால் தண்ணீராலும் ரோகங்களை தீர்க்கலாம். என் வழி ஆண்டவள் இவர்கள் உடம்பில் அருள் பாலிக்கிறார்.”
எல்லா ஊர்களிலும் சாமியார்கள் ஒரே போலத்தான் இருக்கிறார்கள்; இங்கே விபூதி, குங்குமம், வாயிலிருந்து சிறிய விக்கிரகம் என்றால் அங்கே புனித நீர். இங்கே பெரும் பணக்கார பக்தைகளை, மத்திய வர்க்க அப்பாவிப் பெண்களை இவர்கள் சீரழித்தால், அங்கே பரம ஏழைப்பெண்கள் தம் உடலை ஒப்புக்கொடுக்கிறார்கள். அனைவரும் பணத்தை சாமியாரின் காலடியில் அள்ளிக்கொட்டுகிறார்கள். எங்காவது மீ டூவில் ஒரு சாமியார் மாட்டினாரா? ம்ஹும், அவர்கள் அத்துமீறல்களை ரகசியமாக அல்ல அடாவடியாக பொதுவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் செய்வார்கள். ஒரு யூடியூப் பேட்டியில் சாரா என்கிற முன்னாள் சிஷ்யை நித்தியின் சத்சங் கூட்டம் நடக்கும் போது தான் நித்தியானந்தாவுக்கு பிறர் முன்னிலையில் ஹேண்ட் ஜாப் செய்து விட்டதாய் சொல்கிறார். அது யாருக்கும் தெரியாதா என்றால் தெரியும், ஆனால் கேட்க முடியாது. பெரும்பணக்காரர்களை, நட்சத்திரங்களை மீ டூவில் மாட்ட வைத்து நடவடிக்கை எடுத்த போது இவர்களை சீண்ட முடியாததன் காரணம் இது தான் - இவர்களை எல்லாம் கைது பண்ணவோ தண்டனை கொடுக்கவோ முடியாது. பெண்ணியவாதிகள் அவர்களைப் பற்றிப் பேசவே தயங்குவார்கள். அவர்கள் கடவுள்; எல்லா மானுடக் கட்டுப்பாடுகளையும் மீறியவர்கள். அவர்கள் உளறலாம், யாரும் சிரிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாது. அவர்கள் திருடலாம், கொலை செய்யலாம், நாடே வேடிக்கை பார்க்கும். ஒரு நாட்டின் பிரதமர் கூட இவ்வளவு வெளிப்படையாக துணிச்சலாக குற்றங்களை செய்ய முடியாது.
எல்லா ஊர்களிலும் அவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள்.
