Skip to main content

எது ஆபாசம், தமிழச்சி?


பிரான்ஸ் தமிழச்சியின் சமீபத்தைய சர்ச்சையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் - அவர் மிக அருவருப்பான காரியம் ஒன்றைப் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதற்குத் துணையாக பெரியாரையும் பெண்ணியத்தையும் வேறு இழுத்துக் கொள்கிறார். முதலில் விசயம் தெரியாதவர்களுக்கு ஒரு விளக்கம்: லூலுவின் தோழிகள் ஒரு பேஸ்புக் குழு அமைத்து சில அந்தரங்க சமாச்சாரங்களை பகிர்கிறார்கள். அக்குழுவில் இருந்து ஒருவர் ஏதோ உடன்பாடின்மை காரணமாய் வெளியேறி உள்விவகாரங்களை தமிழச்சி மூலமாய் அம்பலபடுத்த முயல்கிறார். தமிழச்சியும் வெட்கமின்றி தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஏதோ சமூக சேவை எனும் பாவனையில் வெளியிடுகிறார். பாலியல் பஞ்சாயத்துகளில் இறுதித் தீர்ப்பு எழுதும் உரிமையை அவருக்கு யார் அளித்தார் எனத் தெரியவில்லை. ஆனால் பெண்ணியவாதி என தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒருவர் பாலியல் உரிமையை விட, ஒரு பெண்ணுக்கான கண்ணியத்தை விட, சுயமரியாதையை பேணும் சுதந்திரத்தை விட குடும்ப அமைப்பை பாதுகாப்பதே மேல் எனும் இடத்தில் நின்று பேசுவது அதிர்ச்சியாகவும் கசப்பாகவும் உள்ளது. “உடல் அரசியல்போன்ற ஆழமான சொல்லாடல்களை போகிற போக்கில் பயன்படுத்தும் அவருக்கு திறந்தநிலை பாலுறவில் ஈடுபடும் பெண்களை பாலியல் தொழிலாளிகளாக சித்தரிப்பது பெண்ணுடலை மலினப்படுத்தும் ஒரு காரியம் எனப் புரியவில்லை. நம்முடைய சங்கிகளின், சனாதனவாதிகளின் அதே ஒழுக்கவாத மொழியை பெரியாரியவாதி எனக் கோரிக்கொள்ளும் ஒருவர் பயன்படுத்துகிறார்; பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கோரும் ஒருவர் தொடர்ந்து பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் காரியத்தைப் பண்ணுகிறார். ஆண்களை விட மோசமான ஆணாதிக்கவாதியாக ஒரு பெண்ணியவாதி இருக்கிறார். நாம் வாழும் காலம் எவ்வளவு ஆபத்தானது பாருங்கள்!


நான் இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசும் போது அவர் ஏன் தமிழச்சி இந்த partner swappingஇல் ஈடுபடுவதாய் சொல்லப்படும் ஆண்களைத் தவிர்த்து பெண்களை அம்பலப்படுத்துகிறார் எனக் கேட்டார் - இதற்கான பதில் எளிமையானது: அவர் ஒரு ஆணின் படத்தைப் பிரசுரித்து அவர் ஒழுக்கங்கெட்டவர் என முத்திரை குத்தினால் அது சர்ச்சையாகாது; அது ருசிகரமான செய்தியாகாது. சம்மந்தப்பட்ட ஆண் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் அது சிக்கலாகாது. ஆணுடலுக்கு நம் சமூகத்தில் எந்த பாலியல் மதிப்பும் இல்லை. ஆனால் பெண்ணுடலோ எப்போதும் ஒரு பொதுச்சொத்தாகப் பார்க்கப்படுகிறது. அவளுடைய பாலியல் தேர்வுகள் சமூகத்தை பாதிப்பது என நம்பப்படுகிறது. இந்த கருதுகோள் தான் ஆணாதிக்கவாதம், ஆண்வழி மரபு ஆகியவற்றை உற்பத்தி பண்ணுகிறது. எதார்த்தத்தில் செக்ஸ் என்பது தேநீர் அருந்துவதைப் போன்ற ஒரு சாதாரண அன்றாட செயல் தான். அதனளவில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. செக்ஸ் ஒழுக்கவாதம் முழுக்க பெண்ணுடலுக்கு தமிழச்சி போன்றவர்கள் கொடுக்கும் மிகுதியான சமூக மதிப்பினாலே தோன்றுகிறது. .தா., திருமணமான ஒரு பெண் தன் கணவன் அல்லாத மற்றொரு ஆணிடம் தொடர்பு கொள்ளும் போது அது சமூக மீறல் மற்றும் அந்தரங்க உறவில் உள்ள பரஸ்பர நம்பிக்கை மீறல் என தமிழச்சி பார்க்கிறார். நாம் இந்த இரண்டையும் சற்று பரிசீலிப்போம்.

முதலில், ஒரு ஆணோ பெண்ணை தாம்பத்ய பந்தத்தை மீறி பாலுறவு கொள்ளும் போது அதனால் சமூகம் பாதிக்கப்படுகிறதா? ஊழல் எனும் சீர்கேடு பொருளாதார அமைப்பை, சமூக நீதியை பாதிப்பதைப் போலகள்ள உறவுசமூகத்தை சீரழிக்குமா? இல்லை. ஒரு சமூகத்தில் இந்த நிமிடத்தில் ஒரு கோடி மனிதர்கள் பாலுறவில் சோரம் போகிறார்கள் என வையுங்கள். அது எந்த சலனமும் இல்லாமல், ஒரு இலை உதிர்வதைப் போல, கடந்து போகும். இங்கு கற்பு என்பதை நாம் எப்படி பிரத்யேகமாய் புரிந்து கொள்கிறோம் என்பதையும் விளக்க வேண்டும். நாம் மேற்கத்தினரைப் போல கற்பைப் பார்ப்பதில்லை.

 “கற்புஎன்பதை தமிழ்ப் பண்பாடு மனரீதியானதாகப் பார்ப்பதில்லை. தமிழ்க் கலாச்சாரத்தில் உடலால் மட்டுமே காதலை உணர்கிறோம். அதனாலே மனம் வாடும் காதலியின் உடல் மெலிகிறது, காதலில் நெகிழும் போது அவளது மேகலை கழன்று போகிறது, மோதிரம் நழுவிப் போகிறது. இதனாலே தான் தமிழ்க் காதலில் சரி-தப்பு எனும் இருமை இருப்பதில்லை. அதனாலே கோவலன் கண்ணகிக்கு துரோகம் செய்தாலும் அவள் அவனுக்காக மதுரையை எரிக்கிறாள். மாதவி ஒரு விலைமகளாக இருந்தாலும் அவளுக்கும் கற்பு உண்டு என்றதே நமது பண்பாடு. ஏனென்றால் கற்பு என்பது எத்தனை பேருடன் உறவு கொள்கிறோம், கொள்ளாமல் இருக்கிறோம் என்பதல்ல; கற்பு என்றால் ஒருவரை உடலாலும் மனதாலும் ஒரே சமயம் நேசிப்பது. ஒரு மெழுகுவர்த்தி நெருப்புக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதைப் போல ஒரு உறவுக்கு தன் உடலைக் கொடுப்பவளே கற்புத்திறம் கொண்டவள். ஆனால் மேற்கத்திய மரபு கற்பை ஒரு அரூபமான விதிமுறையாகக் கண்டது; அங்கு ஒழுக்கமே கற்பு. ஐரோப்பாவில் virginity belt போன்ற கருவிகள் தோன்றினது இதனாலே. அங்கு ஒரு ஆணும் பெண்ணும் மணக்கும் போது அது ஒரு ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. வணிக ஒப்பந்தமாக அவர்கள் மண உறவைக் கண்டதனாலே விவாகரத்தையும்ஒப்பந்தமுடிவாகப் பார்த்தார்கள். நம்முடைய பல படங்களில் விவாகரத்துக்குப் பிறகு தம்பதியினர் ஒன்று சேர்வதைக் காட்டுவார்கள். ஏனென்றால் நாம் தமிழர்களின் கூட்டுமனம் இதை ஒரு வணிக ஒப்பந்தமாகப் பார்ப்பதில்லை. தமிழச்சி கற்பை ஐரோப்பிய பண்பாட்டில் இருந்து நோக்குகிறார்; அதனாலே அவரால் இதை சகித்துக் கொள்ள முடிவதில்லை. திருமணத்துக்குப் பிறகு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் சொந்தம். கணவன் மனைவியைவாங்குகிறான்”, மனைவி கணவனைவாங்குகிறான்”. இப்படி ஒருவர் மற்றவரின் உடைமை ஆகி விட்ட பின்கள்ள உறவுஇந்த ஒப்பந்தத்தை மீறுவதாகிறது என்கிறார். கணவன் அல்லாத ஒருவரைப் பிடித்திருந்தால் விவாகரத்து பண்ணி விட்டு அவரிடம் உறவு கொள்ள வேண்டியது தானே என்கிறார். ஆனால் இச்சையை நாம் அப்படி சரி-தவறு என வகுத்து விட முடியுமா? கோடு கிழித்து பிசிறின்றி வாழ முடியுமா? வாழ்க்கை என்பது வணிகம் அல்லவென்பதால் அது முடியாது. இங்கு யாரும் யாருக்கும் சொந்தமில்லை. இங்கு காதலிக்கும் ஆளுக்கு நம் உடல் சொந்தம். தாலி கட்டியவனுக்கு அல்ல.

தமிழச்சி கேட்கிறார்: “ஒரு பெண் மற்றொரு பெண்ணின் கணவனைக்கவர்ந்துவிட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவதில்லையா?” இல்லை, ஏனெனில் உறவு என்பது வர்த்தகம் அல்ல. கணவன் ஐபோன் அல்ல. ஐபோன் திருட்டுப் போகலாம், ஆனால் ஒரு மனிதனைத் திருட முடியாது. அந்த இடத்தில் அப்பெண் (கண்ணகியைப் போல) ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க வேண்டும்: “என் கணவன் என்னிடம் விசுவாசமாக இல்லைதான். ஆனால் நான் இப்போது அவனை காதலிக்கிறேனா?” இதன் பதில் ஆம் எனில் அவள் அவனிடம் உறவைத் தொடர வேண்டும். இல்லையெனில் பிரிந்திட வேண்டும். இவ்வளவு தான் விசயம் - இந்த நிலத்தில் காலங்காலமாய் தாம்பத்ய மீறல்கள் நடந்து வருகின்றன. காலங்காலமாய் இங்கு அது ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்க்கை தொடர்கிறது. யாரும் கடிவாளம் போட்டு வாழ முடியாது.
 நீங்கள் தெருவில் ஒரு அழகான வாலிபனை / பெண்ணைப் பார்க்கிறீர்கள். உங்கள் மனம் சஞ்சலப்படுகிறது. அது நிகழ்வதன் சில நொடிகள் முன்பு அவசரமாய் உங்கள் கணவன் / மனைவியை தொடர்ந்து கொண்டுஐயோ என் மனம் சலனப்படுகிறதே, அதற்கு நீ உத்தரவு கொடுப்பாயா?” எனக் கேட்டு கையெழுத்துப் பெறுவீர்களா? அடுத்து அந்த ஆண் / பெண் உங்கள் கனவில் வருகிறார். நடு இரவில் உங்கள் இணையை தட்டி எழுப்பி இச்சேதியை சொல்லிநான் தொடர்ந்து கனவு காணலாமா? அதற்கு உங்க அனுமதி உண்டுமா?” எனக் கேட்டு சம்மதம் பெறுவீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் இச்சை என்பது உடலுறவில் மட்டுமல்ல, அது பார்வையில் இருக்கிறது, மனத்தில் இருக்கிறது, கனவில் இருக்கிறது, மொழியில் இருக்கிறது. ஒவ்வொன்றுமே தாம்பத்யத்துக்கான துரோகம் தானே. மனதுக்குள் ஒருவரை ஆயிரம் முறை புணர்ந்து விட்டு நேரில் சந்திக்கும் போது நட்பாக கண்ணியமாகப் பேசினால் அது கணவனுக்கு / மனைவிக்கு செய்யும் துரோகம் அல்லவா? போர்ன் வீடியோ பார்ப்பது துரோகம் அல்லவா? தமிழச்சியைப் போல கற்பை தவறாக, விக்டோரிய ஒழுக்க விழுமியப்படி, புரிந்து கொண்டிருப்போர் தான் இப்படி துரோகப் பட்டியலை வைத்து மல்லாடுவார்கள்

ஒரு இணை நிச்சயமாக possessive ஆக இருக்க வேண்டும், ஆனால் அது உடைமை என்னும் உணர்வில் வரும் possessiveness ஆக இருக்கக் கூடாது. அது காமத்தின், காதலின் அடிப்படையில் இருக்க வேண்டும். நீ என்னை நேசிக்கிறாய் எனில் மற்றொருவரிடம் உறவு கொள்ளக் கூடாது என ஒரு ஆணோ பெண்ணோ கேட்கலாம். அவர்களிடம் அவ்வாறு ஒரு புரிந்துணர்வு வரலாம். அந்தகாதல் ஒப்பந்தம்மீறப்பட்டால் உறவைத் துண்டிக்கலாம். தாலி செண்டிமெண்டுக்காக ஒப்பந்தத்தைப் பின்பற்றுவோரைப் போல பைத்தியங்கள் வேறில்லை என்பேன்.

தமிழச்சி தனது பேஸ்புக் லைவ்வில் திறந்த நிலைப் பாலுறவுகளின் ஆபத்தை குறிப்பிடும் இடத்தில் நான் வாய்விட்டு சிரித்தேன். Free sex போதைப் பழக்கத்துக்கு, கூட்டுப் பாலுறவுக்கு இட்டுச் செல்லும். அத்தகையோர் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் 45 வயதுக்குள்ளால் இறந்து போவார்கள் என்கிறார். பாலுறவில் கடிவாளம் போட்டு வாழ்கிறவர்கள் இளமையில் சாவதில்லையா, குடி மற்றும் பிற போதைப்பழக்கங்களுக்கு ஆளாவதில்லையா? அதைக் கூட விடுங்கள். உங்கள் லாஜிக்குக்கே வருகிறேன். நீங்கள் குறிப்பிடுகிற கட்டற்ற பாலுறவை முன்னெடுத்த பிரசித்த ஜோடியான சார்த் மற்றும் சிமன் டெ போவர் இருவரும் பிரான்ஸை சேர்ந்தவர்கள். தமிழச்சி, நீங்கள் அவர்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கள் என்ன 45 வயதில் சீரழிந்து இறந்து போனார்களா? இருவரும் 75, 78 வயது வரை வாழ்ந்தார்கள். நிறைய எழுதினார்கள், நிறைய சாதித்தார்கள். உங்களுக்கு அவர்களுடைய பெயரை உச்சரிக்கிற தகுதியாவது இருக்கிறதா தமிழச்சி? ஒழுக்கவாதம் பேசி வரும் நீங்கள் சார்த்தைப் போல ஒரு பக்கமாவது எழுத முடியுமா? போவரின் செகண்ட் செக்ஸ் போன்ற ஒரு புத்தகத்தை கற்பனை பண்ணவாவது முடியுமா? சிறுபத்திரிகையாளர்களை வெகுஜனப் பத்திரிகைகள் ஜோல்னாப் பை குடிகாரர்கள் என சித்தரித்ததைப் போல நீங்கள் சுதந்திர சிந்தனையாளர்களை போதைப்பழக்கம் கொண்டவர்களாக கற்பிதம் பண்ணிக்கொள்கிறார்கள். சுத்த முட்டாள் நீங்கள்!

இதே லைவில் மற்றொரு அபத்தமும் வருகிறது: பிரான்ஸில் மக்கள் சுதந்திரமாக தம் இணையைத் தேர்ந்தெடுக்கலாம், இந்த ஊர் சட்டம் அதை அனுமதிக்கிறது, ஆனால் இந்தியாவில் அதை அனுமதிக்க மாட்டார்கள், ஆகையால் இந்தியாவில் அது தவறு என்கிறார். ஒரு நாட்டின் சட்டமும், பொதுமக்களின் நம்பிக்கைகள் மாறியபடியே இருக்கும். அதற்காக மனித விழுமியங்கள், நம்பிக்கைகள் மாற வேண்டுமா? இந்த ஊரில் மக்கள் இன்னமும் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். இன்னமும் மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக அப்பாவி ஒருவரை அடித்துக் கொல்கிறார்கள். மக்கள் இதையெல்லாம் செய்வதால் அவை எல்லாரும் ஏற்று நடக்க வேண்டியதாகிடுமா? மோடி குடியுரிமை சட்டம் ஒன்றை இயற்றுகிறார். நாம் இனி அதன் படி இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள் என நம்ப வேண்டுமா? பொது நீரோட்ட சிந்தனையோ சட்டமோ அல்ல அறம் மட்டுமே நம் நடத்தையை தீர்மானிக்க வேண்டும். இது கூட உங்களுக்குப் புரியவில்லையா? நான் இன்று பிரெஞ்சு குடியுரிமை பெற்று ஒரு விமானம் பிடித்து பிரான்ஸுக்கு சென்று ஒரு பெண்ணுடன் பாலுறவு கொண்டு விட்டு திரும்ப அந்த குடியுரிமையை ரத்து செய்து மீண்டும் இந்திய குடிமகனாகிறேன். இப்போது நான் செய்தது தப்பா சரியா? என்ன கிறுக்குத்தனம் இது?

பலரும் குறிப்பிடுவது போல தற்காலிக பிரபல்யத்துக்காக அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சில பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது தான் தமிழச்சி நீங்கள் செய்துள்ளசமூக சேவை”. யாருடைய படுக்கறைக்குள்ளும் இப்படி எட்டிப் பார்க்காதீர்கள்! எது ஆபாசம் தமிழச்சி? லூலு குழுவினர் செய்ததா? இல்லை, சந்தேகமேயின்றி நீங்கள் செய்தது தான்.
 இந்தியாவில் உங்களைப் பார்க்க நேர்ந்தால் செருப்பால் அடிப்பேன்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...