பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான சாலைகளைப் பற்றி (மலைப்பகுதியில் உள்ள குறுகலான பாதைகள்) ஒரு காணொளியைப் பார்த்தேன். அடிக்கடி மண் இடிந்து விழும், கற்கள் உருண்டு விழும் இடுங்கலான பாதைகளில் ஒரு பேருந்தில் பயணித்து ஒரு கூட்டம் ஒரு கிராமத்துக்கு வருகிறது; அங்கிருந்து பயணித்து கல்லாலான மலைகளைக் குடைந்து உருவான தங்கச்சுரங்கம் ஒன்றுக்குப் போகிறார்கள். இதன் நடுவே முகாம்கள் எழுப்பி அமைக்கப்பட்ட ஒரு ஆன்மீகக் கூட்டத்துக்கு அவர்கள் செல்கிறார்கள். ஒரு கிறுத்துவ போதகர் அவர்கள் மத்தியில் நின்று பேசுகிறார். உடல் நலிவுற்றவர்கள், கர்பிணிப்பெண்கள், குழந்தைகள் எனப் பெருங்கூட்டம் அவரிடம் ஆசி பெற முந்தியடிக்கிறது. புனித நீர் எனச் சொல்லி கேனில் இருந்து தண்ணீரை மொண்டு மொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். தலையிலும் உடம்பிலும் ஊற்றுகிறார்கள்.