Skip to main content

தொகுப்பாளர்கள்




டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை கவனித்திருப்பீர்கள் - அவர்களுக்கு எதைப் பற்றியும் ஒரு கருத்திருப்பதாய் காட்டிக் கொள்ள மாட்டார்கள்; எப்போதுமே ஒரு மிகையாக உற்சாகம், மிகையான நம்பிக்கை, மிகையான அறிமுகம், விவரிப்பு... அதில் உள்ள செயற்கைத்தனம் அது ஒருநிகழ்ச்சிஎனும் தோரணையை கொடுக்க உதவுகிறது. சூப்பர் சிங்ஙர் நிகழ்ச்சி தொகுப்பாளினி கீழ்ஸ்தாயில் பேசினால்பாடகர்கள் யாராவது இறந்து விட்டார்களா?” என நாம் பதறிப் போவோம். அவர்கள் கொண்டு வரும் தொனி, பிம்பம், மிகை எல்லாம் ஒருவித மனநிலையை வெளிப்படுத்துகிறது; அவர்களின் பேச்சு என்பது சாரமற்றது; அது அமேசான குரியர் பேக்கிங்கைப் போன்றது. அல்லது ஆப்பிள் கணினியுடன் வரும் பேக்கிங்கைப் போன்றது. தொகுப்புரையில் சொல்லப்படும் எதற்கும் நேரடியான அர்த்தமோ மதிப்போ இல்லை; ஆனால் ஒரு பேக்கிங்கைத் திறக்கையில் நமக்குக் கிடைக்கும் மனநிலையை இவர்கள் தருகிறார்கள். அதற்கு மேல் எதையும் உணர்த்த முயலக் கூடாது என்பதே அவர்களுக்குக் கிடைக்கும் பயிற்சி. அவர்கள் சாதாரணமாகப் பேசினால் அது சாதாரணமாகி நம்மை அவர்களின் சொற்களை கவனிக்கத் தூண்டி விடும். ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்நினைவிருக்கும் - உமா பிரபலமாகியிருந்த துவக்க காலத்தில் அவர் பேசுகிற விசயங்கள், மனித உணர்வுகளுக்கு மதிப்பிருந்தது; அவர்என்னசொல்கிறார் என ஓரளவுக்கு கவனித்தார்கள். ஆனால் இப்போது ‘’கலாட்டா’, ‘வேடிக்கை’, ‘குதூகலம்ஆகியவற்றை உணர்த்துவதே அவர்களின் பணி. தோற்றமே உள்ளீடாகிப் போன ஒரு காலத்தின் நிலை!


இப்போது கிரிக்கெட் வர்ணனைக்கு வருவோம் - ஹோல்டிங், பாய்காட், சேப்பல், கவாஸ்கர் மற்றும் பல மேதைகள் ஒன்றாக கோலோச்சிய காலத்தில் அவர்கள் பார்வையாளர்களுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்களை, விதிகளை, போக்குகளை பயிற்றுவித்தார்கள்; ரசிக்கக் கற்றுத் தந்தார்கள். ஒரு தடுப்பாட்ட ஷாட்டின் அழகைக் கூட கவனிக்கத் தூண்டினார்கள். ஸ்விங்குக்கும், சீம் அசைவுக்குமான வித்தியாசம் பற்றி, ஸ்பின்னில் லூப் பற்றி, பலவித பேட்டிங் கிரிப்புகள் பற்றி, பேட்ஸ்மேன் பந்தின் லைனுக்குப் பின்னால் நேர்த்தியாக வந்து நிற்க வேண்டிய அவசியம் பற்றி நீண்ட நேரம் பேசினார்கள். பின்னர் அவர்களுடனே உள்ளீடற்று உளறும் ரவி சாஸ்திரியும், தன்னுடைய வேடிக்கையான சரளமான சொற்பிரயோகங்களால் சிரிக்க வைத்த நவ்ஜோத் சித்துவும் இருந்தார்கள். ஆனால் மொத்தமாக கிரிக்கெட் வர்ணனை என்பது நுட்பமான அறிவார்ந்த ஒன்று எனும் நம்பிக்கை நிலவியது. குறுக்குமறுக்காய் 22 பேர் ஓடி பந்தை வீசி அதன் பின்னால் ஓடுகிற ஒரு விளையாட்டை ஒரு அலகிலா விளையாட்டாக உயர்த்த அவர்கள் உதவினார்கள். அவர்கள் இன்றி சச்சினின் லேட் கட்டின் நுணுக்கத்தை நாம் அங்குலம் அங்குலமாக ஸ்லோமோஷனில் ரசித்திருப்போமா? சச்சினையோ லாராவையோ ஒரு மேதை என அங்கீகரித்திருப்போமா என்பது ஐயமே. 24 மணிநேர நேரலை ஒளிபரப்புகளின் காலத்தில் இந்த ரசனையும் அறிவும் கலந்த கிரிக்கெட் அனுபவம் ஒரு முடிவுக்கு வந்தது - இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் 2012இல் கிரிக்கெட் வாரியம் எல்லா உள்ளூர், சர்வதேச ஆட்டங்களையும் தயாரிப்போம் எனும் முடிவை எடுத்தது; அத்துடன் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கும் வாரியமேமுதலாளிஆனது. இந்திய கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவுக்குள் பேசப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் தானேஉரிமையாளர்எனும் விநோத எண்ணத்துக்கு கிரிக்கெட் வாரியம் ஆளானது. ஊடகங்கள் ஒட்டுமொத்தமாய் இந்திய கிரிக்கெட்டை வானளாவப் புகழும் ஜால்ரா வேலையை ஏற்றுக்கொண்டன. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கிரிக்கெட் வாரியத்தை பிரநுத்துவப்படுத்துபவர் என்பதால் அவர் ஒரு இளவரசரைப் போல பார்க்கப்பட்டார்; தன்னிகரற்ற அதிகாரத்தை அவர் பெற்றார்

வாரியம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான போது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யாரும் அவை குறித்து கருத்து தெரிவிக்க முடியாது வாய்ப்பூட்டு இடப்பட்டார்கள். ஏனென்றால் முன்னாள், இந்நாள் வீரர் எவரும் ஏதோவொரு விதத்தில் வாரியத்தால் பலனடைந்தார்கள். சிறிய பொறுப்புகள், வேலைகள் என வருமானம் வரும் வழிகள் திறந்து விடப்பட்டன. வருடம் முழுக்க ஆட்டங்கள் நடப்பதால் தொடர்ச்சியாக வேலை கிடைத்தது. மன்னரின் அரண்மனை முன்பு பிச்சைக்காரர்கள் வரிசையில் நிற்பதைப் போல நமது முன்னாள் வீரர்கள் வாரியத்தின் முன் பழியாகக் கிடந்தார்கள். வாரியத்துக்கு அவர்களின் தேவை மொழியளவில் இருந்தது; கிரிக்கெட் என்பது ஆட்டம் அல்ல, அது ஒரு பிம்பம் என வாரியம் பெரும் கார்ப்பரேட் ஆகி விட்ட பின்பு புரிந்து கொண்டது; அந்த பிம்பத்தை பலமடங்கு பெருக்கினால் மட்டுமே அதைத் துண்டு போட்டு விற்க முடியும். அந்த பிம்பத்தைக் கட்டமைக்க சொற்களுக்கு ஒரு தனி இடம் உண்டு - அந்தப் பணியை செய்பவர்களே வர்ணனையாளர்கள்; அவர்கள் கூட்டத்தோடு கூவுகிறவர்கள் ஆனார்கள். அவர்கள் எந்த விவத்திலும் இந்த பிம்பத்தை உடைக்கிற பணியை செய்ய முடியாது. இங்கே இரண்டு விசயங்கள் நடந்தன:

1) வர்ணனையாளர்கள் விமர்சிக்கவும் வேண்டும்; அது கிரிக்கெட்டின் விழுமியங்களைப் பாதுகாக்கும் பணி. எப்படி ஊடகங்கள் ஆளும் அரசை விமர்சிக்க வேண்டுமோ அதே போன்று விமர்சகர்கள் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் தலைவரை விமர்சிக்க வேண்டும். அவர்கள் தவறிழைக்கும் போது, கடமையில் இருந்து வழுவும் போது சுட்டிக்காட்ட வேண்டும். முன்பு தனியார் ஒளிபரப்பாளர்களிடம் வேலை பார்த்த போது அது சாத்தியப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் ஊழியர்களாக வர்ணனையாளர்கள் மாறிய பின்னர் அது சாத்தியமாகவில்லை. வர்ணனையாளர்கள் ஒட்டுமொத்தமாக மௌனமானார்கள். ‘வர்ணிப்பதுமட்டுமே அவர்களின் பணி ஆனது. அதாவது விழுமியங்களே இல்லாத ஒரு முழு பொழுதுபோக்காக கிரிக்கெட் மாற்றப்பட்டது (அந்த பணி இன்னமும் முழுக்க வெற்றி பெறவில்லை என்றாலும்). அதற்கு வர்ணனையாளர்கள் துணைபோயினர்
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் அதைப் பற்றி பொதுவெளியில் எதிர்மறையாய் பேசக் கூடாது எனும் எழுதப்படாத விதி உண்டு. நீங்கள் அந்த நிறுவத்தின் மறைமுக அடிமையாகி விடுகிறீர்கள். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என வர்ணனையாளர்கள் சமூகவலைதளங்களிலும் பரபரப்பாக செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது போல இந்தியாவில் சாத்தியமாவதில்லை. அவர்கள் வால் நறுக்கப்பட்ட நாய்களைப் போல ஆகி விட்டார்கள்; இறகு கத்தரிக்கப்பட்ட கிளிகளைப் போல ஆனார்கள்.
எனக்குத் தெரிந்து இதற்கு விதிவிலக்காக இருந்தவர்கள் மெல்ல மெல்ல வாரியத்தின் கிரிக்கெட் பணிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள். தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகும் சஞ்சய் மஞ்சிரேக்கர் ஒரு உதாரணம். அவர் சற்று அவசரக்குடுக்கை தான். வாய் நீளம் தான். ஆனால் துணிச்சலாக கருத்துசொல்வதில், விமர்சிப்பதில் அவர் ஈடற்றவர். கடந்த உலகக்கோப்பையின் போது ரவீந்திர ஜடேஜாவை அவர் துண்டுதுக்கடா வீரர் (bits and pieces cricketer) என ட்வீட் ஒன்றில் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது; ஏனென்றால் அதற்கு ஜடேஜா கோபமாக எதிர்வினையாற்றினார்; அது மட்டுமல்ல நியுசிலாந்துக்கு எதிரான அரை இறுதியிலும் அபாரமாக ஆடி தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இது மஞ்சிரேக்கரின் கருத்தை தவறாக்குவதில்லை. ஜடேஜா இன்றும் துண்டு துக்கடா தான் - அவரால் மத்திய வரிசையில் தொடர்ந்து ஆடி ரன்களைக் குவிக்க முடியாது; அவரால் தனியாக விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டங்களின் போக்கை மாற்ற முடியாது. ஒரு காலிஸோ, ஸ்டோக்ஸோ பண்ணுவதை அவரால் ஒருநாளும் பண்ண முடியாது. ஆனால் ஜடேஜா ஆட ஆரம்பித்த இத்தனை நாட்களில் அனைவருமே அறிந்த ஆனால் எந்த வர்ணனையாளரும் வெளிப்படையாக சொல்லத் துணியாத ஒன்றை மஞ்சிரேக்கர் கூறினார். ஆனால் அதற்காக கிரிக்கெட் வாரியமும் இந்திய கிரிக்கெட் அணியும் அவர் மீது அழுத்தம் கொடுத்ததில் அவர் ஜடேஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். அண்மையில் அவர் இந்திய கிரிக்கெட்டின் world feed அணியில் (உலக அளவில் நடக்கும் ஆட்டங்களுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் வர்ணனையாளர்கள்) இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ஒரு தண்டனை; இது மற்ற வர்ணனையாளர்களுக்கான ஒரு எச்சரிக்கை
ஜடேஜாவுக்கு என்று அணியில் ஒரு தனித்த இடமுண்டு; ஆனால் ஒரு அசலான பந்துவீச்சாளரின் இடத்தை அவருக்குக் கொடுப்பது ஆபத்தானது என்பதே மஞ்சிரேக்கர் உள்ளிட்ட வேறு சில நிபுணர்களின் பார்வை. இது பந்து வீச்சை பலவீனமாக்கும். இதை சரியான நேரத்தில் ஒருவர் சுட்டிக்காட்டாமல் போனால் அதனால் மோசமான பாதிப்புகள் பிற்காலத்தில் ஏற்படலாம். குல்தீப் / சாஹல் போன்ற ஒரு இளம் கால்சுழலரின் தன்னம்பிக்கையை இது பாதிக்கலாம். முன்னேற்றம் வேண்டுமானால் எதிர்மறை விமர்சனங்களுக்கான ஒரு இடம் சமூகத்தில் இருக்க வேண்டும். கிரிக்கெட்டிலும் அது அவசியம். ஆனால் கிரிக்கெட் வாரியம் விளையாட்டை விழுமியங்களும் பாரம்பரியமும் படைத்த ஒரு முக்கிய கலையாக காண்பதில்லை; மாறாக அதை ஒரு விற்பனைப் பண்டமாக மட்டுமே பார்க்கிறது. பண்டமாகவும் கிரிக்கெட்டின் வெளித்தோற்றத்தை மட்டுமே தான் விற்று லாபம் சம்பாதிக்க முடியும் என வாரியத்தின் கார்ப்பரேட் நிர்வாகிகள் நம்புவதால் எந்தவிதத்திலும் பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என விரும்புகிறார்கள். மஞ்சிரேக்கர் நீக்கப்பட்டதும் அதை ஆதரித்து மஞ்சிரேக்கரை கலாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸின் ட்விட்டர் பக்கம் ஒரு பதிவிட்டது. சூப்பர் கிங்ஸுக்கு ஜடேஜா மீது தனிப்பட்ட அக்கறை ஏதும் இல்லை - ஆனால் அவர்களின் வணிக மதிப்பு அவர்களின் வீரர்களின் பிம்பத்துடன் இணைந்துள்ளது; ஆக ஜடேஜாவை விமர்சிப்பது தன்னையே நேரடியாக விமர்சிப்பது என ஒரு .பி.எல் அணி நினைக்கிறது. இதே ஜடேஜா நாளை இந்திய அணியில் இருந்து அகற்றப்பட்டால் அவர் சீந்துவாரின்றி கிடப்பார்; அவரை அப்போது மஞ்சிரேக்கர் தாராளமாக விமர்சிப்பார். வாரியமோ சூப்பர் கிங்ஸோ அவரது துணைக்கு வராது; கண்டிக்காது, தண்டிக்காது, ஜடேஜா மீது அவர்களுக்கு அசலாக எந்த அக்கறையும் இல்லை. கிரிக்கெட் எனும் ஆட்டத்தின் ஆரோக்கியம் மீது அவர்களுக்கு ஆர்வம் இல்லை
இதற்கு முன்பு இந்திய வாரியத்துக்கு விமர்சித்ததற்காக ஹர்ஷா போக்ளே சில வருடங்கள் வர்ணனையாளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இது சகிப்பின்மை குறித்த பிரச்சனை அல்ல - கிரிக்கெட்டை சாரமற்ற ஒரு செயல்பாடாக காண விரும்பும் சில கார்ப்பரேட் முதலைகளுக்கும் இன்னமும் கிரிக்கெட்டை சாரமுள்ள ஒரு கலை செயல்பாடாக நம்புகிற சில தனிநபர்களுக்குமான மோதல்

2) கிரிக்கெட் வர்ணனையில் தனித்துவம் மெல்ல மெல்ல காணாமல் போனது. Assemble line production ஆக வர்ணனை மாறியது. சச்சினுக்கும், லாராவுக்கும், அதற்கு முன்பு விவியன் ரிச்சர்ட்ஸுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட மேதை எனும் பட்டம் இப்போது சதம் அடிக்கிற ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் அளிக்கப்படுவதைக் காணலாம். ரோஹித் ஷர்மாவும், கோலியும், ஸ்மித்தும், வார்னரும் இன்றைய மேதைகள். ப்ரித்வி ஷா பேட்டிங் செய்வதைக் கண்டால் இவரிமும் சற்று மேதைமை இருக்கிறது என்கிறார்கள். ஷுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அடிக்குமுன்னரே கோலி அவரிடம் மேதைமையைக் கண்டார். .பி.எல்லில் இன்று சிக்ஸர் அடிப்பவர்கள் எல்லாரும் மேதைகள். பவுண்டரி அடிக்கப்பட்டால் a piece of genius என தவறாமல் புகழ்கிறார்கள். இப்படி தரையோடு தேய்த்து தேய்த்து இச்சொல்லின் பொருளையே மாற்றி விட்டார்கள். “சிறந்த”, “அற்புதமான”, “பிரமாதமானபோன்ற சொற்கள் எல்லாம் தொடர்ந்து கடுமையாக பலாத்காரம் பண்ணப்பட்டு தற்கொலை பண்ணி மாய்ந்து போயின.

 ஆம், கூர்மையான தொழில்நுட்ப அறிவுபடைத்தவர்களுக்கும் இன்று ஒரு இடம் இருக்கிறது - ஆகாஷ் சோப்ராவைக் குறிப்பிடலாம். பழமையின் சின்னமாக இன்னமும் கவாஸ்கர் இருக்கிறார். வளவளவெனப் பேசுவதற்கு லஷ்மண் சிவராமகிருஷ்ணன், லஷ்மண் போன்றோர் இருகிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் தாம் ஒரு ஆற்றல் படைத்த சிந்தனையாளன், தனித்த நம்பிக்கைகள் படைத்தவன் எனும் நம்பிக்கை இல்லை. ஒட்டுமொத்தமாக இவர்கள் சூப்பர் சிங்ஙர் ப்ரியங்கா போல மாறி விட்டார்கள். வர்ணனைக்கு நடுவே டான்ஸ் ஆடுகிறார்கள், ஊர் சுற்றி காண்பிக்கிறார்கள், தம்மை கோமாளி ஆக்குகிறார்கள். தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்களான ஶ்ரீகாந்த், ரமேஷ், பதானி போன்றோருக்கு இந்த தொந்தரவு கூட இல்லை - அவர்கள் துவக்கத்தில் இருந்தே ப்ரியங்காவைப் போலத் தான் இருக்கிறார்கள்; கிரேசி மோகன் சபா நாடகம் போல நிறைய தமாஷ் பண்ணி விட்டு அவ்வப்போது கிரிக்கெட்டைப் பற்றியும் சில பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார்கள். ஆட்டம் போரடிக்கும் போது இவர்கள் அடிக்கிற ஜோக்குகளைக் கேட்பதற்காகவே நான் தமிழ் வர்ணனைச் சானலுக்குப் போகிறேன். தாம் கிரிக்கெட் வர்ணனையாளர் எனும் நம்பிக்கைக்கும் தாம் வெறும் கேளிக்கையாளர் எனும் உண்மைக்கும் நடுவில் கிடந்து அவர்கள் அல்லாடுவதில்லை
நாங்க வெறும் கோமாளிகள் தாங்கஎனும் இடத்துக்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதால் எந்த பிரச்சனையும் இல்லை


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...