“செக்ஷன் 375” கடந்த வருடம் வெளியான மிகச்சிறந்த இந்திப் படங்களில் ஒன்று. இதை
வழக்காடு மன்ற கருத்துமோதல் படம் (courtroom drama) என வகைப்படுத்தலாம். தொண்ணூறுகள் வரை இத்தகைய படங்களுக்கு தனி மார்க்கெட் இருந்தது. இப்படங்களுக்கு என ஒரு டெம்பிளேட் உண்டு - ஒரு பரபரப்பான குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதாவார். அவர் தான் அந்த குற்றத்தை செய்ததாய் பலத்த ஆதாரம் இருக்கும். முதல் அரைமணிநேரம் நமக்கே இவர் தான் குற்றவாளி எனத் தோன்றும். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் எனும் நிலை. நமக்கு சற்றே அவர் மீது பரிதாபம் ஏற்படும். அப்போது ஒரு வழக்கறிஞர் தோன்றுவார்; அவர் இந்த வழக்கில் ஆபத்பாந்தனாக ஆஜராகி யார் எதிர்பாராத கோணத்தில் குற்ற விசாரணையை அலசுவார்; விசாரணையிலும் அரசுத்தரப்பின் வாதங்களிலும் பிழைகளைக் கண்டறிவார். வழக்கை முற்றிலும் ஒரு மாறுப்பட கோணத்தில் காட்டி நிஜக்குற்றவாளியை அம்பலப்படுத்துவார்.
ஒரு மனிதனின் விதியை கையில் வைத்து ஆடும் ஒரு வழக்கறிஞர்-சூப்பர் மேன் போல இவர் தோன்றுவார். வழக்காடு மன்றம் மொத்த உலகமுமாக ஆக அங்கே அவர் ஒரு கடவுள் போல அனைவருக்கும் தோன்றுவார். கடவுள் வழங்காத நீதியை வழக்கறிஞர் வழங்கி விட்டதாக பாத்திரங்கள் அவரைப் பாராட்டுவார்கள். கடவுள், மதம், மற்றும் சிவில் அமைப்புகள் மீது நமக்கு நம்பிக்கை தளர்ந்து போன சுதந்திரத்துக்குப் பின்பான ஒரு காலத்தில் துப்பறிவாளர்கள், போலீஸ் இன்பெக்டர் மற்றும் வக்கீல் ஆகியோர் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதம் இப்படியான குற்றவழக்கு படங்களில் தோன்றினார்கள் என நினைக்கிறேன். இவர்களுக்குள் ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்கும் - போலீஸ் நாயகன் என்றால் துப்பறிவாளர்கள் சீனிலே இருக்க மாட்டார்கள், வக்கீல் வில்லனுக்கு கூஜா தூக்குபவராக இருப்பார். இதுவே வக்கீல் நாயகன் என்றால் போலீஸ் டம்மியாகி விடுவார்.
இந்த பாணி படங்களில் “செக்ஷன் 375” மிக வித்தியாசமானது. இப்படத்துக்கு என்று ஒரு தனித்த தத்துவச் சரடு இருக்கிறது, கச்சிதமான வடிவம் இருக்கிறது, எங்கு ஆரம்பிக்கிறதோ அங்கே போய் முடிகிறது. குற்றவாளி யார், வில்லன் எப்படி முறியடிக்கப்பட்டான் என எளிதாக படத்தை சுருக்காமல், நீதி என்றால் என்ன எனும் சிக்கலான கேள்வியை இது கேட்கிறது. குரசாவோவின் பிரபலமான படம் “ரோஷோமோனில்” வரும் அவதானிப்பு இருக்கிறதல்லவா - உண்மை என்பது அதை யார் பார்க்கிறார்களோ, யார் விவரிக்கிறார்களோ அதைப் பொறுத்து மாறும் - அதை இப்படம் நீதி மீது வைக்கிறது. அதுவே இப்படத்தின் சுவாரஸ்யம்.
படத்தின் கதையை ஒரு வரியில் இப்படி சொல்லலாம் - தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரான அஞ்சலியை பலாத்காரம் செய்ததாய் பொய்வழக்கில் மாட்டிக்கொண்ட ரோஹன் எனும் ஒரு இயக்குநர் இறுதியில் காப்பாற்றப்படுவாரா மாட்டாரா? இப்படத்தின் controlling idea இது - சட்டபடி தவறான ஒன்று ஒரு பாதிக்கப்பட்டவருக்கு நீதியைத் தருமானால் அது நியாயம் தானா? இந்த கேள்வியுடனே படம் ஆரம்பிக்கிறது, அதனோடே முடிகிறது. நேரடியாக எந்த போதனையோ அலப்பறையோ இல்லாமல் மிக நுணுக்கமாக பார்வையாளரையே விடையை யோசித்து முடிவு பண்ண விட்டு விடுகிறது.
படம் துவங்கும் போது ஒரு வழக்கறிஞர் அரங்கில் பேசும் வழக்கறிஞர் தருண் சலூஜா (அக்ஷய் கன்னா) சட்டமும் நீதியும் வேறுவேறு விசயங்கள்; இதை ஒரு வழக்கறிஞர் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார். இதற்கு உதாரணமாக அவர் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆகக்கொடூரமான சிறுவனைக் குறிப்பிடுகிறார். நியாயமாக அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டப்படி அவன் குற்றம் நடக்கும் போது சிறுவன் என்பதால் மூன்று வருடங்களில் சிறையில் இருந்து வெளிவந்து விடுகிறான். இங்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது, ஆனால் நீதி முறியடிக்கப்பட்டது. இப்போது தூக்குத்தண்டனைக்கு எதிராகப் பேசுகிற ஒருவர் நீதி என்றால் உயிரை எடுப்பது அல்ல என வாதிடலாம். பாதிக்கப்பட்டவர்கள் ஆம் அது மட்டுமே நீதி எனப் பேசலாம். மனதளவிலும் உடலளவிலும் முதிராத ஒருவன் செய்த குற்றத்தை முதிர்ந்தவர்களின் குற்றத்துடன் ஒப்பிடுவது அநீதியானது என ஒரு உளவியலாளர் கூறலாம். இப்படி நிர்பயா வழக்கின் தீர்ப்பை மட்டுமே எடுத்துக் கொண்டால் நீதி என்பது எவ்வளவு சிக்கலானது என விளங்கும்.
அடுத்து வழக்கு விசாரணையின் போது தருண் சலூஜா தன் கட்சிக்காரர் ரோஹன் பலாத்காரம் பண்ணவில்லை, அஞ்சலியுடன் அவருக்கு இருந்தது ஒரு “கள்ள உறவு” எனக் காட்டுகிறார். குரூரமாக மனிதநேயமின்றி அவர் அப்பெண்ணை நடத்தியதால் அவள் வெறுத்துப் போய் அவரைப் பழிவாங்கும் பொருட்டு திட்டமிட்டு பலாத்கார வழக்கில் அவரை மாட்டி விடுகிறாள். நீதிபதிகள் இரு தரப்பின் வாதங்களையும் மெச்சுகிறார்கள். அரசுத்தரப்பு குற்றம் நடந்ததற்காக சந்தர்ப்ப சூழல் சாத்தியங்களை நேர்த்தியாக அடுக்குகிறது. ஆனால் அஞ்சலியின் வாக்குமூலத்தில் உள்ள பொய்கள் போகப் போக அம்பலமாகின்றன. அவள் ஆரம்பத்தில் தனக்கு ரோஹனுடன் எந்த காதலுறவும் இல்லை எனக் கூறுகிறார்; பின்னர் இருவரும் காதலர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறாள். தன்னை ரோஹன் பலாத்காரத்தின் போது அடித்து காயப்படுத்தியதாக வாக்குமூலத்தில் சொன்னவள் பின்னர் தன்னை அடித்தது தன் அண்ணனே என ஒப்புக் கொள்கிறாள். ஆனால் பலாத்கார குற்றச்சாட்டை மட்டும் அவள் கடைசி வரை பின்வாங்குவதில்லை. அரசுத்தரப்பால் குற்றம் நிச்சயம் நடந்ததாய் நிரூபிக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பிலும் குற்றம் நடக்கவில்லை என நிரூபிக்க முடியவில்லை. இங்கு தான் சட்டப்பிரிவு 375 என்பது அரங்குக்கு வருகிறது - 375இன் படி ஒரு பலாத்கார வழக்கில் காதலர்கள் நடுவே கூட பாலுறவு நிகழ்கையில் அது பலாத்காரமாக நடந்தது என சம்மந்தப்பட்ட பெண் குற்றம் சாட்டினால் நீதிமன்றம் அப்பெண்ணையே ஆதரிக்கும். குற்றம் சாட்டப்பட்ட ஆண் தவறே செய்யவில்லை என்றாலும் தன் குற்றமின்மையை நிரூபிக்கும் பொறுப்பு அவனுக்கே. இதன்படி நீதிபதிகள் இருவரும் ரோஹனுக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனையை உறுதி செய்கிறார்கள் - ஆனால் குற்றம் நடந்தது எனும் உறுதிப்பாடு இன்றி, பெண்ணுரிமைப் போராளிகளின் போராட்டங்களும் அழுத்தமும் காரணமாய், சட்டப்பிரிவு 375இன் ஓட்டையை பயன்படுத்தி நீதிபதிகள் இத்தீர்ப்பை அளிக்கிறார்கள்.
இப்போது ஒரு கேள்வி: இத்தீர்ப்பு நியாயமானதா?
இதற்கு இரண்டு இடங்களில் தருண் சலூஜா பதிலளிக்கிறார்; தன் வாதத்தின் போது ரோஹன் அஞ்சலிக்கு இழைத்தது பலாத்காரத்தை விட மோசமான கொடுமை; அவர் அவளை ஏமாற்றி இருக்கிறார், அவமதித்திருக்கிறார், அவளது நம்பிக்கையை தரையில் இட்டு உடைத்திருக்கிறார், உணர்வுகளை காயப்படுத்தியிருக்கிறார், ஆனால் அவர் பலாத்காரம் பண்ணவில்லை என்கிறார். ஆம் உடலளவில் நிகழ்ந்த குற்றமெனும் பட்சத்தில் பலாத்காரமும் உணர்வளவில் ஒருவரை அவமதிதித்து கைவிடுவதும் ஒன்றல்ல. ஆனால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு அந்த மனக்காயம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனை மிக்கது என இப்படம் சித்தரிக்கிறது. அப்படித் தான் பழிவாங்கும் வெறி அவளுக்கு ஏற்படுகிறது.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின் தன்னுடைய வழக்கறிஞரிடம் பேசும் அஞ்சலி பலாத்கார குற்றச்சாட்டு பொய் தான் என ஒப்புக்கொள்கிறாள். இறுதிக்காட்சியில் இரு வழக்கறிஞர்களும் இரவுணவின் போது நட்பாகப் பேசும் போது அஞ்சலியின் வழக்கறிஞர் சலூஜாவிடம் வந்து “நான் ஜெயித்து விட்டேன், ஆனால் இவ்வழக்கில் நியாயம் வழங்கப்பட்டதாய் எனக்குத் தோன்றவில்லை” என்கிறாள். அவள் ஒரு பொய்க்கு உடன்பட்டதற்கு வருந்துகிறாள். மிகவும் உடைந்து போயிருக்கிறாள். அதற்கு சலூஜா “நீதி வேறு, சட்டம் வேறு” என்கிறார். இந்த முடிவை நான் மிகவும் ரசித்தேன். இந்த ஒரு வரி இக்குற்றத்தை இரு கோணங்களில் பார்க்க நமக்கு உதவுகிறது - அஞ்சலியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் அவளுக்கு மிகவும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் பலாத்கார குற்றச்சாட்டை பொய்யாக வைக்காமல் அவளுக்கு நீதி கிடைத்திருக்காது. ரோஹனைப் பொறுத்தவரையில் சட்டப்படி அவன் குற்றமற்றவன், ஆனால் மனசாட்சிப்படி குற்றவாளி; பெண்களை கருவேப்பிலை போன்று பயன்படுத்தும் அவனது இயல்புக்கு இந்த தண்டனை தேவை தான், சற்று அதிகமென்றாலும் கூட. இந்த அவதானிப்பை படம் போகிற போக்கில் உணர்த்தி சென்று விடுகிறது என்பதே அழகு.
திரைக்கதைத் தவிர, அக்ஷய் கன்னாவின் அபாரமான நடிப்பும் இப்படத்தின் பிளஸ். நிலா, எஸ்.ஜே சூர்யாவின் படங்களில் பொம்மை போலத் தோன்றி சென்ற அதே நிலா, இப்படத்தில் அவ்வளவு திறமையாக நடித்திருக்கிறார். தன் மீது கேமரா திரும்பாத இடங்களில் கூட அவரது சின்னச் சின்ன எதிர்வினைகள் அவ்வளவு இயல்பாக நுட்பமாக உள்ளன. இந்த நிலா ‘நிலாவைப்’ போன்றே இல்லை.
பார்க்க வேண்டிய படம்!
