Skip to main content

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (2)

                                                   விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1)


சரி, நாம் எடுத்துக் கொண்ட நாவலுக்கு வருகிறேன் - மேலே சொன்ன அத்தனை சங்கதிகளும் (இழப்புணர்வு, மிகுபுனைவு, கவித்துவம், மனசஞ்சாரம், இல்லாத மனிதர்கள் இருப்பது, நடக்காத சம்பவங்கள் நடப்பது) இந்நாவலிலும் உண்டு - ஸ்குரு தஸாகி ஒரு ரயில்நிலைய பொறியாளன். முராகாமியின் பிற நாயகர்களைப் போல இவனும் எந்த தனித்திறனும் அற்ற, யாரும் பெரிதாய் பொருட்படுத்தாத, அதைக்குறித்த எந்த கவலையும் அற்ற சாதாரணன்; அன்றாட வாழ்வை எந்திரத்தனமாக வாழ்பவன். நாவல் துவங்கும் போது அவன் தன்னுடைய தற்கொலை விழைவைப் பற்றி, மரணத்தைக் குறித்து தியானிப்பதைப் பற்றி சொல்கிறான். அதற்குக் காரணம் அவனது நான்கு நண்பர்கள் - இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள். அவர்கள் அவனை ஒருநாள் அழைத்து நட்பைத் துண்டிக்கிறார்கள். அவர்கள் இன்றி அவன் தன் வாழ்க்கையை கற்பனை பண்ணினதே இல்லை. ஆகையால் மிகவும் தவித்துப் போகிறான். அவர்கள் அவனை விட்டு விலகுவதற்கு குறிப்பாக காரணமேதும் சொல்வதில்லை. அவனுக்கு ஒரு காரணம் தோன்றுகிறது - தனக்கு நிறம் இல்லை என்பதே அது.

 அவனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பப்பெயராக ஒரு நிறம் வருகிறது - ஷிரோ மற்றும் குரோ எனும் தோழிகளுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை; ஆவோ மற்றும் அகாவுக்கு நீலம் மற்றும் சிவப்பு. நிறமற்றவனாக இருப்பதே தன்னை நண்பர்களுக்கு பிடிக்காமல் போகக் காரணம் என அவன் நினைக்கிறான். பல வருடங்களுக்குப் பின்னர் அவனுக்கு சாரா எனும் ஒரு காதலி அமைகிறாள். அவளது தூண்டுதலின் பெயரில் அவன் தன் நண்பர்களை ஒவ்வொருவராக சந்தித்து தன்னை அவர்கள் முன்பு நட்பிலிருந்து விலக்கியதன் காரணத்தைக் கேட்டறிகிறான். அப்போது அவர்கள் சொல்லும் காரணத்தில் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது - குரோவை அவன் பலாத்காரம் பண்ணினதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்களால் அதை ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை; ஆனால் குரோ அப்படி வற்புறுத்தி சொல்கிறாள்; மற்றொரு தோழியான ஷிரோவும் வற்புறுத்துகிறாள். மற்ற இருவரும் வேறு வழியின்றி குரோவின் மனநலனைக் கருத்திற் கொண்டு ஸ்குருவை தம் குழுவிலிருந்து வெளியேற்றுகிறார்கள். இதைக் குறித்து ஸ்குரு குரோவிடம் விசாரிக்கலாம் என எண்ணினால் அவள் சில வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டதாய் தெரிய வருகிறது. இறுதியாக அவன் ஷிரோவை சந்திக்க முடிவெடுக்கிறான். அவளிடத்து மட்டுமே குரோ தன் ரகசியங்களை வெளிப்படுத்தி இருக்க முடியும். தான் குரோவை பலாத்காரம் செய்யவில்லை எனில் யார் அதை செய்தது? அவளைக் கொன்றது யார்? ஏன்? ஷிரோ திருமணத்துக்குப் பிறகு பின்லாந்தில் தன் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வாழ்கிறான். ஷிரோவை அவன் சந்திக்கிற காட்சிகளே நாவலின் இறுதிப் பகுதி.

பின்லாந்தில் ஷிரோ அவனிடம் மனம் விட்டுப் பேசுகிறாள் - தான் அவனை ஒரு காலத்தில் மனதுக்குள் காதலித்ததைப் பற்றி; ஒருவேளை குரோவுக்கும் அவனிடத்து ஈர்ப்பு இருந்திருக்கலாம், அந்த பொறாமை காரணமாய் அவள் இந்த பலாத்கார குற்றச்சாட்டை வைத்திருக்கலாம் என்பதை அவள் சொல்கிறாள். ஆனால் அவளுக்கு நடந்த அந்த தாக்குதல் உண்மை, அவள் கர்ப்பமுற்றிருந்தது உண்மை, அதன் பின்னர் கருக்கலைந்து அவள் தனிமையில் வாழ நேர்ந்ததும், உடல் நலிவுற்ற நிலையில் அவள் யாராலோ கொல்லப்பட்டதும் உண்மை என்கிறாள். அதன் பிறகு ஸ்குருவும் ஷிரோவும் தழுவிக் கொள்கிறார்கள். நீண்ட நேரம் அந்த நிலையில் நின்று இசை கேட்கிறார்கள்; தம்மால் அடைய முடியாது போன காதலை எண்ணி மனம் கசிகிறார்கள். பிரிகிறார்கள்

ஒரு மிகுபுனைவு த்ரில்லரைப் போலப் போகும் இந்த நாவலின் முடிவு தான் என்ன? குரோ ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதற்கு ஒரு விளக்கம் நமக்குத் தரப்படுகிறது. ஆனால் அது மட்டுமல்ல, அவளது துன்பங்களுக்கும் ஸ்குருவும் காரணமே என்பதை முராகாமி நுட்பமாக நமக்கு உணர்த்துகிறார். அது என்ன?

ஸ்குரு என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்றைக் கட்டமைப்பவன் எனப் பொருள். அவனது தொழிலும் கூட ரயில் நிலையங்களை அமைப்பது தானே. ஒன்றை கட்டமைக்கிறவன் ஒரு ஊடகமாக இருக்கிறான்; அண்ணாவின்செவ்வாழைகதையில் உற்பத்தி செய்கிறவனுக்கு அப்பண்டத்தைப் புசிக்க முடியவில்லை என்பதைப் போல. ரயில் நிலையம் இங்கு மற்றொரு உருவகம் - ரயில்கள் வந்து இளைப்பாறி, பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன, எல்லாரும் அந்த நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் யாரும் அதை தம் சொந்த இடமாகக் கருதி அதனுடன் உறவைப் பேண முடிவதில்லை. ஸ்குருவின் ஆளுமையும் இந்த ரயில் நிலையத்தைப் போன்றதே. அதனாலே அவன் தன்னை நிறமற்றவன் என்கிறான். அவனுடன் இருப்பவர்களின் நிறமே அவனது நிறமாகிறது.

முராகாமியின் மற்றொரு நாவலான Norwegian Wood இந்த நாவலைப் புரிந்து கொள்ள அவசியம் என நினைக்கிறேன் - குறிப்பாக அந்நாவலின் நாயகன் வத்தநாபேவின் பாத்திரம். வத்தநாபே தனக்கென நிலைப்பாடு / நம்பிக்கை / இச்சைகள் இல்லாதவன். அவன் ஒரு கண்ணாடிக்கோப்பையைப் போல. அவனுக்குள் ஊற்றப்படும் திரவமே அவனாகி விடுவான். ஆரம்பத்தில் வத்தநாபேயின் நெருங்கிய நண்பனான கிஸுக்கி தன் காதலியான நவோக்காவுடன் இருக்கையில் வத்தநாபே அவர்களுடன் இருப்பான். இருவருடைய காதலுக்கும் அவன் ஒரு மனத்திரையாக அமைவான். அதன் பிறகு கிஸுக்கி தற்கொலை பண்ணிக்கொள்ள, நவோக்காவுக்கு வத்தநாபேவின் துணை (ஒரு மாற்றுக்காதலனாக) அவசியமாகிறது. அதுவரை அவர்களின் காதலின் கண்ணாடியாக இருந்தவன் இப்போது காதலனாகிறான், கிட்டத்தட்ட ஒரு நாடகத்தில் பாத்திரம் ஒன்றை ஏற்பதைப் போல. ஒரு மனிதன் இவ்வாறு தானாக அல்லாமல் மற்றொருவனாக இருக்க நேரும் உளவியல் தேவையை ஜப்பானிய மரபில் இருந்து முராகாமி வரித்துக் கொள்கிறார் என நினைக்கிறேன். இப்படி ஆகும் போது ஒருவன் எதிர்கொள்ளும் மனநெருக்கடி தான் அவரது பல நாவல்களின் மையச்சிக்கல்.
 நவோக்காவும் இந்த நெருக்கடியினால் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஒரு சானிடோரியம் செல்கிறாள். வத்தநாபே இதனால் உடைந்து போகிறான். அவன் வாழ்வில் அடுத்து மற்றொரு பெண் வருகிறாள் - மிதோரி. இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் கிஸுக்கியிடம் ஒரு மாற்றுக்காதலனாக இருக்க முடியாமல், மிதோரியின் அசல் காதலனாக இருக்க இயலாமல் அவன் தவிக்கிறான். கிஸுக்கி பின்னர் தற்கொலை பண்ணிக்கொள்ள வத்தநாபே ஒரு பித்தனைப் போல ஜப்பான் முழுக்க அலைகிறான். இப்போது கிஸுக்கியுடன் மனநலக் காப்பகத்தில் இருந்த ரெயிக்கோ எனும் மத்திய வயதுப்பெண்ணின் உதவியால் அவன் மிதோரியைப் புரிந்து கொள்கிறான் - அவளிடமும் உடலுறவு கொள்கிறான்; அதுவே அவனைக் காப்பாற்றுகிறது. இறுதியில் அவன் மிதோரியிடம் வந்து சேர்கிறான். அவள் கேட்கிறாள், “நீ இப்போது எங்கிருக்கிறாய்?” (இடம் இங்கு மனத்தின் ஒரு உருவகம்). வத்தநாபே இதைக் குறித்து சிந்திப்பதுடன் நாவல் முடிகிறது. ஒருவர் மற்றொருவரிடன் இடத்தை வாழ்வில் எடுத்துக் கொள்வதை ஒரு தவிர்க்க இயலாத நெருக்கடியாக முராகாமி காண்கிறார். இதை எப்படிப் புரிந்து கொள்ள?

லக்கான் எனும் உளவியலாளர் ஒரு குழந்தை தன் அப்பாவை முதலில் காண்கிறது, ஆனால் சற்று வளர்ந்த பின் அது உலகில் தன் அப்பாவை நிகர்த்த வேறு பலரையும் காண்கிறது, அப்போது அப்பா குறித்த அதன் மனச்சித்திரம் விரிவடைகிறது, தான் காணும் ஒவ்வொரு அதிகார மையத்தையும், வசீகரமான, ஆதிக்கமான, ஆர்வமூட்டும் மனிதர்களையும் அப்பாவைக் காணும் ஒரு கண்ணாடியாக அக்குழந்தை பயன்படுத்துகிறது, உலகம் முழுக்க தன் இறுதி மூச்சு வரை அது தன் அப்பாவையே காண்கிறது என்கிறார். இதனாலே நாம் ஒரே சமயம் அதிகாரத்தை வெறுத்தபடியே அதனிடத்து ஒரு ஈர்ப்பையும் கொண்டிருக்கிறோம். (இப்படி லக்கான் பிராயிடின் ஈடிபல் காம்பிளக்ஸை மறுவரையறை பண்ணினார்) உறவுகளில் மொழி இப்படி ஒரு கண்ணாடியாக ஒருவரை மற்றொருவராக பிரதிபலிக்கிறது; மொழியில் புழங்கும் போது நம் வழி ஒருவர் மூன்றாவதொருவரைக் காண்கிறார். யாரும் யாரிடத்தும் இல்லாமல், எல்லாரும் எல்லாரிடத்தும் இருக்க முடிவது இப்படித்தான்.
 வத்தநாபேவும் ஸ்குருவும் இத்தகைய கண்ணாடிகள்; அவர்களின் துயரமே தம்மை அடுத்தவர் பயன்படுத்துவதைப் போல தம்மால் அடுத்தவர்களைக் கொண்டு உலகை பிரதிபலித்து அறிய முடியாது என்பது. அவர்கள் தாம் நிறமற்றவர் என உணர்வதை, அப்படி இருப்பது குற்றமில்லை என தெளிவை, உறவாடலில் பிறரை ஒரு கண்ணாடியாகக் கொண்டு உலகைக் காண தாமும் கற்பதை முராகாமி இந்த நாவல்களில் சித்தரிக்கிறார். (ஒருவர் மற்றொருவரை கண்ணாடியாக பயன்படுத்துவதை முராகாமி தன் நாவல்களில் உடலுறவு சித்தரிப்புகள் வழி காட்டுகிறார்.)

Colorless Tsukuru நாவலின் பலவீனம் அதன் இறுதிப் பகுதி தான் - ஸ்குருவால் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு கண்டடையும் ஒரு தீர்வை முராகாமி (“நார்வேஜியன் வுட்நாவலில் போல) கிளைமேக்ஸில் தீவிரமாக காத்திரமாக உருவாக்கித் தருவதில்லை

மற்றபடி, ஒரு தீவிரமான கவித்துமான வாசிப்பு சஞ்சாரத்துக்கு இந்த நாவல் ஒரு கச்சிதமான பயணச்சீட்டு.   


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...