தில்லியில் நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் கண்ணீரை வரவழைப்பவை. பாஜகவின் குண்டர்கள் எளிய மக்கள் மீது நடத்தும் இத்தாக்குதல்களின் நோக்கம் CAA, NRCக்கு எதிரான போராட்ட களங்களை உடனடியாய் கலைப்பது, போராளிகளிடத்து அச்சத்தை விதைப்பது என்பது தெளிவானது. எனக்கு இது ஈழத்தில் எண்பதுகளில் சிங்களப்பெரும்பான்மை அரசு தமிழக குடியிருப்புகள் மீது அவிழ்த்து விட்ட கலவரங்களை, யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவுபடுத்துகிறது. குஜராத் படுகொலைகளையும் தாம். வன்முறை மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் எனும் யுத்தி வெற்றி பெறாது என வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. தில்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு பளாரென ஒரு அறை கொடுத்தது. இருந்தும் ஏன் பாஜக அதே ஆயுதத்தை தூக்குகிறது என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை! இப்போது மெல்ல மெல்ல உண்மை புலப்படுகிறது!
அமித் ஷா அவசரத்தில், பதற்றத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன். அவர் இந்த மாதம், இந்த தேதி இன்னின்ன விசயங்கள் இந்தியாவில் நிழக வேண்டும் என ஒரு செக் லிஸ்ட் வைத்திருப்பார். ஒவ்வொரு இலக்கு நிகழாமல் அல்லது தள்ளிப் போகும் போது அவர் பதற்றம் கொள்கிறார். குடியுரிமை மசோதா அவரது பட்டியலில் முன்னுரிமை உள்ள ஒன்று. அதை வைத்து தான் அடுத்த தேர்தலில் அவர் தன்னை ஒரு வலுவான பிரதமர் வேட்பாளராக, அடுத்த இரும்பு மனிதராக, அடுத்த வல்லபாய் படேலாக முன்னிறுத்த உத்தேசிக்கிறார். தொடர்ந்து இந்தியாவெங்கும் நிகழும் போராட்டங்களில் பொதுமக்கள் நேரடியாக பங்குபெறுவது, இப்போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தவில்லை என்பது பாஜகவை, அமித் ஷாவை மிகவும் தொந்தரவு பண்ணுகிறது.
இப்போராட்டங்களை முழுக்க அழித்தொழிக்காமல் பாஜகவால் குடியுரிமை மசோதாவை வெற்றிகரமாக களமிறக்க முடியாது. அதைக் கொண்டு பிரம்மாண்டமான இனவெறிப் பிரச்சாரத்தை எடுத்து செல்லவும் அமித் ஷாவே நமது இந்துக்களின் சூப்பர் மேன் எனும் பதாகையை இந்தியா முழுக்க மேலெடுக்க முடியாது. ஜெ.என்.யுவில் காவல்துறையினரும் பாஜகவின் குண்டர்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களைத் தாக்கியது இதற்கான ஒரு முன்னோட்டம். காவல்துறையைக் கொண்டு பொதுமக்களைத் தாக்குவது மோசமான எதிர்வினையை பாஜக அரசுக்குத் தந்தது. தில்லி தேர்தல் முடிவுகள் எனும் செருப்படிக்குப் பிறகு இப்போது அமித் ஷா மற்றொரு வியூகத்தை வகுத்துள்ளார்:
ஜல்லிக்கட்டு போராட்டங்களை, கூடங்குளம் போராட்டங்களை காவல்துறை கடுமையான வன்முறை மூலம் ஒடுக்கியதைப் போல இப்போது குண்டர்களைக் கொண்டு போராட்டக்காரர்களைக் கொன்று அச்சத்தை விதைக்கலாம் என நினைக்கிறார். இந்த குண்டர்களை நீங்கள் பாஜகவினர் என்று நேரடியாக அடையாளப்படுத்தவும் முடியாது, காவல்துறையினர் என குற்றம் சாட்டவும் முடியாது. இந்து-முஸ்லீம் கலவரம் என இத்தாக்குதல்களை அவர்களை சித்தரிப்பதும் எளிது. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இப்போதைக்கு 32ஐ எட்டியுள்ளது என சில செய்திகள் தெரிவிக்கின்றன்.
ஜனநாயகத்தைக் கொல்வதே இந்த அரசின் நோக்கம். ஜனநாயகம் பலிகொடுக்கப்படுவதை ஒரு பெரும் ரத்தக்களறியாக ஊடகம் மூலம் சித்தரிப்பதை, அதன் மூலம் தன் ஆற்றலை நிரூபிப்பது இவர்களின் நோக்கம், மக்கள் பலியாவது அதன் விளைவு மட்டுமே என்றால் உங்களுக்கு விநோதமாகத் தெரியும். ஆனால் இவர்கள் வினோதமானவர்கள். இப்படித் தான் இருப்பார்கள்... இவர்கள் நாம் இதுவரைக் கண்ட வகையான அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் ஹிட்லர், முசோலினியின் வழித்தோன்றல்கள்! இப்படித் தான் இருப்பார்கள் ...
