தமிழில் நண்பர்களுக்காக பதிப்பகம் ஆரம்பித்தவர்கள் இருக்கிறார்கள்; சொந்த நூல்களை வெளியிட, தன் சித்தாந்தத்துக்காக, ஒரு த்ரில்லுக்காக, சம்பாதிக்கலாம் எனும் நப்பாசைக்காக, புரட்சிக்காக, உலக இலக்கியத் தரத்துக்கு தமிழ் இலக்கியத்தை உயர்த்தலாம் எனும் கனவுக்காக என பல நோக்கங்களுக்காக பதிப்பகங்கள் ஆரம்பித்தபடியே இருக்கிறார்கள். நான் ஒரு புதிய பதிப்பக நூலைக் கண்டதும் அதன் பதிப்புத் தரத்தைத் தான் கவனிப்பேன் - அட்டையில் இருந்து, வடிவமைப்பு வரை உள்ள கற்பனை, சிந்தனையோட்டத்தை, தாள்களின் தரத்தை, புதிதாக எதையாவது முயற்சி பண்ணுகிறார்களா என. ஒரு புத்தகத்தைக் கொண்டு வருவது வெறுமனே பதிப்பிப்பது மட்டுமல்ல என்பதை சில புத்தகங்களையாவது POD முறையில் கொண்டு வந்தவன் என்கிற முறையில் அனுபவரீதியாக அறிவேன். ஒரு புத்தகத்துக்கும் பிரிண்ட் அவுட் எடுத்து ஸ்பைரல் அட்டை போட்ட பிரதிக்குமான வித்தியாசமே அதற்கு நாம் பதிப்பில் அளிக்கிற புதிய தோற்றம், வண்ணம், உணர்வில் தான் இருக்கிறது. அது கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் பெற்று குளிப்பாட்டி சிங்காரித்து ஆடை அணிவித்து உலகுக்குக் காட்டுவதைப் போல.
தலைப்புக்கான எழுத்துரு, எப்படியான வண்னங்களை அட்டையில் கொண்டு வர வேண்டும், அந்த வண்ணங்கள், shades, தோற்றத்தின் அரசியல் என்ன என்பதில் இருந்து முதல் பக்கத்தில் எதையாவது வித்தியாசமாகப் பண்ணுகிறோமா பின்னட்டையை எப்படி கொண்டு வருகிறோம், blurb எப்படி இருக்க வேண்டும் என்பது வரை ஒரு பதிப்பாளர் நிறைய மெனக்கெட வேண்டும். என்னுடைய Plop புத்தகத்தின் அட்டை வடிவமைப்பு நடந்த போது நீளத்தின் எந்த shade வர வேண்டும் என்பதை மாணவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் முழுக்க விவாதித்து பலரிடமும் காட்டி முடிவெடுத்தது நினைவுக்கு வர வருகிறது. நேற்று என்னுடைய புரூஸ் லீ புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்த போது சுமார் எட்டாண்டுகளுக்கு முன் அதன் எழுத்துரு, அதில் வரும் வண்ணம் எப்படி இருக்க வேண்டும் என நிறைய யோசித்து, மாதிரிகளை தரவிறக்கி மனுஷ்யபுத்திரனுக்கு அனுப்பி அவருடன் விவாதித்தது நினைவுக்கு வந்தது. அதனாலே இப்போது பார்த்தாலும் அதன் தோற்றத்தில் ஒரு புதுமை, தனித்துவம் இருக்கிறது. இதில் வடிவமைப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளனின் கூட்டணி எப்படி செயல்படுகிறது என்பது முக்கியம். ஒரு புதிய பதிப்பகம் தோன்றும் போது அதன் நூல்கள் வடிவமைக்கப்படுவதில் புதுமைகளைக் காட்ட வேண்டும்; அல்லாவிடில் அந்தப் பதிப்பகம் வெறும் ஜெராக்ஸ் கடையாக மட்டுமே செயல்படுகிறது என நினைப்பேன். இந்த புதுமைகள் உங்கள் பதிப்புக்குப் பின்னால் ஒரு தனி அரசியல், கருத்தியல், ஒரு நிலைப்பாடு, மனப்போக்கு இருக்கிறது என்பதைக் காட்டும். தமிழில் நிலைப்பட்ட ஒவ்வொரு நல்ல பதிப்பகமும் இதை செய்கிறது. கறுப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் லோகோவும் அவர்கள் ஷோபா சக்தியின் ஆரம்ப நாவல்களை புதுமையாகக் கொண்டு வந்த விதமும் உடனே நினைவுக்கு வருவது. உயிர்மையின் வெற்றிக்கும் அவர்கள் வடிவாக்கத்தில் காட்டிய மெனக்கெடலுக்கும் நிச்சயம் தொடர்புள்ளது (இதை மனுஷ் என் நண்பர் என்பதால் சொல்லவில்லை).
தோற்றத்தில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்பீர்களானால் ஒன்றை சொல்வேன் - ஒரு புத்தகம் வெறும் தாள்களும் அதனுள் உள்ள எழுத்துக்களும் மட்டும் அல்ல. அந்த எழுத்துப்பிரதி ஒரு கலை வடிவம்; பதிப்பு அதன் மீது உருவாக்கப்படும் மற்றொரு கலை வடிவம். ஒவ்வொரு புத்தகமும் இரட்டைக் கலை வடிவம். அதனால் தான் சில புத்தகங்களை கையிலெடுத்து ரசித்து தொட்டுப்பார்த்து உணர்வோம். அதை கணினியில் படிக்கும் அனுபவமும் புத்தகமாக படிக்கும் அனுபவமும் இருவேறாக இருக்கும்.
இதை எல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் எஸ். செந்தில்குமாரின் “கழுதைப்பாதை”நாவலை இன்று கையில் எடுத்த போது ஏற்பட்ட அந்த உணர்வு தான் - புத்தகம் அவ்வளவு ரசனையாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது! ஒரு கலைப்படைப்பை கையில் எடுத்துப் பார்ப்பதாக இருக்கிறதே என சிலாகித்தேன். அதன் அட்டைப்படத்தின் நவீன ஓவியத் தோற்றம், வித்தியாசமான வழவழ உணர்வு, லாமினேஷன், பதிப்பக லோகோவை முன்னட்டையில் போடாமல் ஸ்பைனில் மட்டும் போட்டிருப்பது, கிட்டத்தட்ட எடையற்றது போன்ற உணர்வு (300க்கு மேல் பக்கமுள்ள நாவல் ஏதோ காற்றைப் போல் கனக்கிறது; அதிக ஆங்கில பேப்பர் பேக் நாவல்களிலே நான் கண்டிருக்கிறேன்). யார் பதிப்பாளர் எனப் பார்த்தால் எழுத்து பிரசுரம். யார் இது புதிதாக இருக்கிறதே என்றால் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் தமிழ் பதிப்பின் பெயர்.
இந்த புத்தகக் கண்காட்சியில் அவர்களின் ஆங்கில மொழியாக்க நூல்களைப் பெற்று வாசித்து மிகவும் வியந்து போனேன். ஜீரோ டிகிரி பதிப்புக்கு என ஒரு தனியான feel இருக்கிறது என்பது என்னை மிகவும் கவர்கிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் அந்தளவுக்கு மெனக்கெட்டு உழைக்கிறார்கள். இந்த நாவலில் உள்ள நாட்டார் வழக்காறு சொல்களுக்கு என சொற்பொருள் பட்டியலை (glossary) இறுதியில் தந்துள்ளதை உ.தா சொல்லலாம். இது ஜெயமோகனின் கணிசமான நாவல்களுக்கு இருந்தால் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என உடனே தோன்றியது (ஆனால் அதுவே பல பக்கங்கள் செல்லுமே!). எத்தனை பதிப்பாளர்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்துகிறார்கள் சொல்லுங்கள்.
சாருவின் வாசகர் வட்டத்தை நான் ஆரம்பத்தில் நிறைய கலாய்த்திருக்கிறேன். அது ஒரு வெட்டி கும்பல் என்கிற மனப்பதிவு எனக்கு இருந்திருக்கிறது. ஒரு clique போல, ஒரு cult போல இருக்கிறார்கள் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது அங்கிருந்து தோன்றியுள்ள இந்த பதிப்பக முயற்சியை எண்ணி சாரு நிச்சயம் பெருமைப்படலாம். ஒரு புத்தகம் வந்ததும் அதை கவனம் பெற செய்கிறார்கள். குறிப்பாக தமிழ் நாவல்களை ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லும் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என சாருவை கண்காட்சியில் நேரில் கண்டு சொன்னேன். தஞ்சைப் பிரகாஷின் நாவலொன்றின் ஆங்கில மொழியாக்கத்தை பிரசித்த ஆங்கில இந்திய நாவலாசிரியர் அனிதா நாயர் வாசித்து விட்டுப் பாராட்டினார் என பதிப்பாளர் காயத்ரி சொல்லிக் கேட்ட போது மகிழ்ந்தேன். மலையாளிகள் தம் மொழிக்கு இத்தனை நாளாய் செய்ததை நாம் இப்போது தமிழுக்கு செய்து அதை ஒரு மலையாளி எழுத்தாளரைக் கொண்டே பாராட்ட செய்கிறோம் பாருங்கள்.
ராம் மற்றும் காயத்ரிக்கு என் வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு: 1) காலச்சுவடு கண்ணனின் முயற்சியில் நிறைய காலச்சுவடு படைப்பாளிகளின் நூல்கள் அண்மையில் மலையாளத்துக்கு செல்கின்றன. ஆங்கிலத்தில் செல்கிற அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் பாராட்டத்தக்கதே. பெருமாள் முருகனின் நாவல்கள் ஆங்கிலத்தில் மிக அழகாக வெளிவருவதையும் நாம் இப்போது பொறாமைப்படாமல் பெருமைப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
2) உயிர்மை வழியாக என்னுடைய ஆங்கில நூல்கள் இப்போது வெளிவரத் தொடங்கி உள்ளன. மனுஷ்யத்திரன் கவிதைகளின் என்னுடைய ஆங்கில மொழியாக்கமும் மார்ச் மாதம் வெளியாகிறது.
3) சாரு, இமயம் உள்ளிட்ட மேலும் பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் உதிரியாக ஆங்கில மொழியாக்கத்தில் வந்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாக அசோகமித்திரனின் கதைகளும் நாவல்களும் நல்ல மொழியாக்கத்தில் ஆங்கில வாசகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளன. அம்பையின் ஆங்கில புத்தகங்களைப் பற்றி குறிப்பிடவே தேவையில்லை.
அடுத்த கால் நூற்றாண்டில் தமிழ் நாவல்கள் பெருமளவில் ஆங்கிலத்துக்கு செல்லும் என்பது என் கணிப்பு. அதற்கான முதல் காலடிகளாக இவற்றைப் பார்க்கிறேன்.
