Skip to main content

ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?





எனக்கு ஒரு நீண்ட கால நண்பர் இருக்கிறார். அவருடன் தற்காலிக நட்பை பேணினவர்கள், அற்ப நோக்கிற்காக உறவை முறித்தவர்கள் அடிக்கடி என் வாசல் கதவைத் தட்டி நண்பருடனான நட்பை கேள்வி கேட்பார்கள், அவரைப் பற்றி தவறாகப் பேசுவார்கள், அவர் என்னைப் பற்றி தவறாகப் பேசியதாக போட்டுக் கொடுப்பார்கள். அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்று தான்: நண்பரிடம் இருந்து என்னைப் பிரிப்பது. இவர்கள் தம் உறவை முறித்தபின் ஏன் என்னுடய நட்பை கலைக்க இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என நான் மண்டயைப் போட்டுக் குழப்புவேன்.
 நட்புக்கும் நட்பு முறிவுக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம் எனக்கு புலப்பட்டது அப்போது தான் - ஒருவருடன் இணக்கமான நட்பில் இருக்கும் போது அவரைப் பற்றி நாம் பிறரிடம் அதிகம் பேச முனைவதில்லை; அது வெகு அந்தரங்கமாக, கிட்டத்தட்ட காதலைப் போல, பிரகடம் செய்யாமலே மதிப்பு மிக்கதாக இருக்கிறது. ஆனால் விரோதம் எப்போதுமே பிரகடனம் செய்ய ஒருவரைத் தூண்டுகிறது - தான் ஏமாற்றப்பட்டத்தை, கைவிடப்பட்டதை, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை திரும்பத் திரும்ப அவர் ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார். ஒரே உறவு இனிக்கையில் அந்தரங்கமாகவும் கசக்கையில் பகிங்கரமாவதும் ஏன்? கசந்த பின் ஏன் தன் முன்னாள் நண்பனின் நண்பர்களை பிரித்து நண்பனின் விரோதியாகவும் தன் நண்பனாகவும் ஏன் மாற்ற விழைகிறோம்? நட்பில் தேவைப்படாத அணிசேர்க்கை விரோதத்தில் ஏன் தேவையாகிறது? விரோதம் ஏற்பட்ட பின்னர் ஒருவர் தனியாக உணர்கிறார் என்பது பதில் எனில் அவர் நட்பில் இருக்கையில் தனிமை ஏற்படவில்லையா? தனிமை என்பது ஒருவர் ஆட்கள் மத்தியில் இல்லாமல் இருப்பதா அல்லது தனியாக உணர்வதா? நட்பு முறிகையில் ஒருவர் தனியாக உணர்கிறார் எனில் நட்பில் இருக்கையில் அவர் அப்படி உணர்வதில்லையா? அப்படி உணராதபடிக்கு நட்பு செய்கிற மாயம் என்ன


இன்னொரு பக்கம், முன்னாள் நண்பர்கள் விரோதம் பாராட்டுகையில் கடுமையான குரோதங்களுக்கு நடுவிலும் தம் ஆரம்ப கால நட்பின் தடயங்களைக் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். .தா., ஒரு படைப்பாளியை அவரது முன்னாள் எழுத்தாள நண்பர் சாடுகிறார் என்றால்அவர் ஒரு காலத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி, ஆனால் இப்போது சீரழிந்து விட்டார்எனக் கோருவது வழமை. ஏன் அந்த முன்பகுதி வாக்கியத்தில் பாராட்டு ஒளிந்திருக்கிறது? ஏன் அவர் ஒரு மட்டமான படைப்பாளி என நேரடியாக ஒரேயடியாக சபித்து மண்ணையிட்டு மூட முடியவில்லை? ஏனெனில் அது ஒரு மதிப்பீடு அல்ல, அது தன் நட்பின் மீது அவர் எழுதும் இரங்கல் சேதி. அவர் ஒரு காலத்தில் என் நண்பராக இருந்தார் என்பதையேஅவர் ஒரு காலத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளிஎன இவர் மறைமுகமாய் சொல்கிறார். அந்த முன்கூறல் இன்றி தன் வெறுப்பை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு எப்படி நட்பு ஒரு பிரத்யேக நிறத்தை அவரது விரோதத்துக்கு அளிக்கிறது?
இந்த கேள்விகளை நாம்நண்பன் ஒருவன் உங்களுக்கு விரோதியான பின்னரும் ஏன்நண்பனாகவேதொடர்கிறான்?’ என சுருக்கலாம். இதற்கு விடை காண நாம் மற்றொரு அடிப்படை கேள்வியை எழுப்ப வேண்டும்.
 ‘நட்பு என்றால் என்ன ?’  இதன் பிறகு ஒவ்வொரு துணைக்கேள்வியாக விடை காண முயலலாம். முதலில் வள்ளுவப்பெருந்தகை நட்பை எப்படி விளக்குகிறார் எனப் பார்ப்போம்.

உடுக்கை இழந்தவன் கைபோலஎன ஆரம்பிக்கும் குறளில் வள்ளுவர் நட்பின் அடிப்படையான இயல்பு குறித்து ஒரு அழகிய உவமை தருகிறார் - என் வேட்டி அவிழும் போது என் கை உடனே அதைப் பிடித்து திரும்பக் கட்ட முயலும். எந்தளவுக்கு கை அப்போது உடனே செயல்படும் என்றால் அவிழ்வதும் அதைப் பிடிப்பதும் ஒரே சமயத்தில் நிகழும். நட்புறவில் ஒருவன் அடுத்தவனின் துயரத்தை போக்குவது இப்படியான நிகழ்வுக்கும் அதன் துணை நிகழ்வுக்கும் கால இடைவெளியே இல்லாத வகையில் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட சிந்திக்கவே நேரம் கொடுக்காமல்.
 நான் வருத்தத்தில் இருக்கையில் என்னை நோக்கி வரும் என் நண்பனிடம் நான் என் துயரத்தை பகிர்ந்து கொள்ள எண்ணலாம், அல்லது அவனிடம் சொல்ல வேண்டுமா வேண்டாமா என குழப்பத்தில் ஆழலாம். அல்லது அதைப் பகிர நினைத்து பின்னர் முடிவை மாற்றலாம். அல்லது நண்பனைப் பார்த்ததும் அவன் பேச ஆரம்பிக்கிற ஒரு விசயம் எனது அந்தரங்க விசயத்துக்கு தொடர்பற்றதாக இருப்பதால் உரையாடலின் தொனியே மாறி விடும், ஆகையால் நான் சொல்ல நினைத்ததை சொல்லாமலே போய் விடலாம். ஆனால் ஒன்று, நண்பன் வந்ததும் எனக்கு ஆறுதல் கிடைக்கிறது, துயரத்தை மறந்து இன்பத்தில் திளைக்கிறேன், கண்ணீர் அரும்பிய கண்களில் சிரிப்பு வழிகிறது, உள்ளுக்குள் விம்மிக் கொண்டிருக்க வெளியே சிரித்து தளும்பிக் கொண்டிருக்கிறேன். அவன் போனதும் மீண்டும் என் மனம் வாடுகிறது; சோர்ந்து போகிறேன். மழையில் உயிர்பெற்று எழுந்து கொள்ளும் ஒரு சிறு தாவரத்தைப் போல நண்பன் வந்ததும் நான் உயிர்கொள்கிறேன். என் நண்பனின் துணை மற்றும் அவனது இருப்பு நினைக்காத வேகத்தில் என் துயரத்தை துடைத்து நீக்குகிறது.
 இது தற்காலிகமானதா என்றால் ஆம் தற்காலிகமானதே. வள்ளுவன் அதனாலேஇடுக்கண் களைவதாம் நட்புஎன்று சொல்லி விட்டு அதை ஒரு புண்ணுக்கு இடப்படும் மருந்துடன் ஒப்பிடுவதில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். துணி நழுவிடுகையில் நம் அம்மணமே அங்குஇடுக்கண்”. அம்மணம் என்றும் இருப்பது. துக்கம் என்பதும் கூட நிதமும் இருப்பதே. அது ஒரு நிரந்தர மானுட நிலை (human condition).
பற்றில்லாமல் இருக்கும் ஒருவர் தனது துக்கத்தை பற்றிக் கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் யாராலும் துக்கத்தை அழிக்க முடியாது (இந்த குறளினுள் இருக்கும் பௌத்த தாக்கத்தை கவனியுங்கள்). இந்ததற்காலிகம்குறளின் இந்த உவமைக்குள்ளே மறைந்திருக்கிறது - அந்த கணம் ஆடை அவிழாமல் அவன் பற்றிக் கொள்கிறானே ஒழிய அவன் நிரந்தரமாய் இடுப்பில் ஒரு பெல்டாய் இருந்து உத்தரவாதம் தருவதில்லை.
 இங்கு மற்றொரு கெள்வி வருகிறது - இயல்பு நிலையில் நமதுஉடுக்கைஅவிழ்வதில்லை. எப்போதெல்லாம் அவிழும்? தன்னை மறந்து ஒருவன் விளையாடும் போதோ கள்ளுண்டு அதிக போதையில் இருக்கும் போதோ அது நடக்கும். சமநிலையை ஒருவன் இழக்கும் போது அது துக்கத்தை (இடுக்கையை) கொண்டு வருகிறது. அப்போது நண்பன் அங்கு தோன்றி சமநிலையை மீட்டளிக்கிறான். எப்படி?
 அவன் உங்கள் கையாக மாறுகிறான். அவன் உங்கள் உடம்பின் ஒரு உறுப்பாகிறான். அவன் உங்கள் உடல் அளவுக்கு உங்கள்  இருப்பின் நீட்சியாகிறான். அவன் நீங்களாகிறான். இங்கு சமநிலை இழப்பை பிரக்ஞையில் நிகழும் சமநிலையின்மையாக நாம் பார்ப்போமெனில் கள்ளுண்ட நிலையும் ஒரு உருவகம் என்பதை அறிவோம். நீங்கள்தான்எனும், “சுயம்எனும் கள்ளை மிதமிஞ்சி உண்டு தடுமாறுகிறீர்கள், அப்போது நண்பன் அங்கு தோன்றி உங்களிடத்தை எடுத்துக் கொள்கிறான், நீங்கள் நண்பனின் முகத்தை எடுத்து அணிகிறீர்கள். நீங்கள் அவன் வழி உங்களிடத்தும், அவன் உங்கள் வழி அவனிடத்து பேச வாய்ப்பு அமைகிறது. அவன் கண்களின் ஊடாக உங்கள் முகத்தை நோக்குகிறீர்கள், அவன் உங்கள் கண்கள் வழி தன்னையே நோக்கிக் கொள்கிறான். அப்போது அவன் சற்று நேரம் அவன் அல்லாமல் ஆகிறான், நீங்கள் சற்று நேரம் நீங்கள் அல்லாமல் ஆகிறீர்கள். சுயத்தின் / அகங்காரத்தின் போதை குறைந்து நிதானமாகிறீர்கள். பிறகு தத்தமது முகங்களை அணிந்து விடைபெறுகிறீர்கள்

கிட்டத்தட்ட இதே கோணத்தில் நட்பை நோக்கியவர் என பிரஞ்சு தத்துவவியலாளர் ழாக் தெரிதாவைச் சொல்லலாம். அதைப் பற்றி அடுத்த பத்தியில் நாம் காணலாம்.

நன்றி: “அங்கே என்ன சத்தம் - 5”, உயிர்மை.காம்


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...